21 ஆகஸ்ட், 2012

தமிழ்நாட்டில் காந்தி

காந்தியின் போராட்டத்தில் தமிழர்கள்

காந்திக்கும் தமிழகத்திற்குமான தொடர்பு, அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது. தென்னாப்ரிக்காவில் இந்தியர்களுக்காக அவர் நடத்திய போராட்டத்தில் பெருமளவு பங்கெடுத்தவர்கள் தமிழர்களே. 
 
1896ஆம் ஆண்டு தென்னாப்ரிக்கத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முதன்முறையாகத் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காந்தி. 
 
தென்னாப்ரிக்காவில் காந்திக்கு உதவியாளராகப் பணியாற்றியவர் வின்சென்ட் லாரன்ஸ் என்ற தமிழர்தான். 
  
இருபத்தொரு ஆண்டு கால தென்னாப்ரிக்கப் போராட்டத்தில் மகாத்மாவுக்குப் பக்கபலமாக இருந்த தென்னாப்ரிக்கத் தமிழர்களுக்கு சென்னை மாகாண மக்கள் ஆதரவு அளித்தனர். எனவே, தமது போராட்டத்திற்கு ஆதரவு அளித்த சென்னை மாகாணத்தில் கண்டிப்பாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என காந்தி நினைத்திருந்தார். அதுவே அவர் தமிழகத்திற்கு அதிகமுறை வருகை புரிய காரணம்.
  
 1896 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில், இருபதுமுறை தமிழகத்திற்கு காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காந்தியின் ஒவ்வொரு தமிழகப் பயணங்களும் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஆதரவாளர்கள் மட்டுமன்றி, தம் கருத்திற்கு எதிரானவர்களையும் நேரடியாகச் சந்தித்து, தம் கருத்தை வலியுறுத்துவதை தமது வழக்கமாக வைத்திருந்தார் காந்தி. இதுவே அவரின் வெற்றிக்குக் காரணம் எனக் கூறலாம்.
 
அரிஜன ஆலயப் பிரவேசம்
 
மற்ற மாநில மக்களைவிட தமிழக மக்கள் மிக விரைவாகவே காந்தியின் கருத்துக்களை உள்வாங்கினர். முதன்முறையாக அரிஜன மக்கள் ஆலயப் பிரவேசம் செய்யும் நிகழ்வு - வைத்தியநாத அய்யர் தலைமையில் மதுரையில் நடந்தது. இதன்மூலம் அரிஜன மக்களின் ஆதரவும் காந்திக்குக் கிடைத்தது. 
 
தமிழகத்தில் கதர் உற்பத்தியும், விற்பனையும் மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருந்ததற்குத் தமிழர்களின் ஆதரவுதான் காரணம். கதர் உற்பத்தியின் பயிற்சிக் களமாகவே தமிழகம் திகழ்ந்தது எனலாம். இன்றுவரை திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் கதராடைக்கு வரவேற்பு இருந்துகொண்டுதான் உள்ளது.

அரை நிர்வாணப் பக்கிரி

காந்தியின் உடைமாற்றம் நடந்தது இருமுறை. தென்னாப்ரிக்காவில் ஆங்கிலேயர் பாணி உடைகளை அணிந்துகொண்டிருந்த காந்தி, பின்னர் வேட்டி ஜிப்பா என்ற சாதாரண உடையை உடுத்த ஆரம்பித்தார். இந்த உடை தென்னாப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் அணியக்கூடிய உடை.

மதுரையில் ஏழை மக்கள் ஒரே ஒரு வேட்டியை மட்டும் உடையாய் அணிவதைக் கவனித்த காந்தி, மீண்டும் தமது உடையில் மாற்றத்தை மேற்கொண்டார். அவர் எடுத்த பல முக்கியமான முடிவுகளுக்குக் காரணமாக இருந்தது தமிழர்களும் தமிழ்நாடும் என்பதற்கு இதுவே ஓர் சிறந்த உதாரணம். ‘அரை நிர்வாணப் பக்கிரி’யாகக் காந்தி மாறிய இடம் மதுரை. ஒரு புதிய காந்தி அங்கு பிறந்தார் என்றே சொல்ல வேண்டும்.


மகாத்மாவின் தமிழாசை

1937ஆம் ஆண்டு சென்னையிலுள்ள இந்தி பிரச்சார சபாவிற்கு வருகை புரிந்த மகாத்மா காந்தி,  ‘‘எனக்கு தென்னிந்திய மொழிகள் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதில்லை. தென்னாப்ரிக்க சிறை வாழ்க்கையின்போது, தமிழ் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஜி.யு. போப்பினுடைய தமிழ் கையேடு என்னை மிகவும் கவர்ந்தது. சிறையில் இருந்து விடுதலை பெற்றதும் தமிழ் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது’’ எனத் தமிழ் மொழி மீது தமக்கிருந்த ஆசையை வெளியிட்டார்.
 
தென்னாப்ரிக்காவில், ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கிய காந்தியடிகள் அதை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட்டார். இது தமிழுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம்.
 
காந்தி தமிழுக்குக் கொடுத்த முக்கியத்துவம் வேறு எந்த மொழி மக்களுக்கும் கிடைக்காதது. தம்முடைய ஒவ்வொரு முடிவுக்கும் முக்கியக் காரணியாக அமைந்தது தமிழ்நாடு என்றே அவர் கருதினார். இது கண்டிப்பாக ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்த பெருமை.
 
மகாத்மாவின் தமிழ்நாடு சுற்றுப்பயண நிகழ்வுகள்
 
ஈரோட்டிலுள்ள வ.உ.சி. பூங்கா அமைந்துள்ள இடத்திற்குக் காந்தி வருகை புரிந்ததன் அடையாளமாக அங்கு காந்தியின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 1927ஆம் ஆண்டு காந்தி உயிரோடு இருக்கும்பொழுது அமைக்கப்பட்ட அந்தச் சிலையை வைஸ்கவுண்ட் கோஷன் என்ற வெள்ளைக்கார ஆளுநர் திறந்து வைத்தார். காந்தி இளம்வயதில் எப்படி இருந்தார் என்பதைச் சித்தரிக்கும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது   என்பது குறிப்பிடத்தக்கது.
 
காந்தி தமது மனசாட்சிக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுப்பவர். மேலும் தம்முடைய முடிவுகளைத் தமது மனசாட்சி கூறியபடியே எடுத்ததாகவும் கூறுவார். ஆனால், அதனைச் சோதித்துப் பார்க்க இரண்டு மனசாட்சிக் காவலர்களை வைத்திருந்தார்.  ராஜாஜி மற்றும் சீனிவாச சாஸ்திரிதான் அவ்விருவர். இந்த இருவரும் தமிழர்கள் என்பது நாம் பெருமை கொள்ளவேண்டிய  விஷயம். காந்தியடிகள் சில சமயங்களில் தாம் எழுதிய ஆங்கிலத்தை சீனிவாச சாஸ்திரியிடம் கொடுத்து திருத்திக் கொள்வாராம்.

சென்னை இந்தி பிரச்சார சபா வெள்ளி விழா நிகழ்ச்சியில் காந்திஜியைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில் மூலம் தியாகராய நகருக்குப் படையெடுத்துள்ளனர். இரண்டரை மணி நேரத்தில் சுமார் இருபது ஆயிரம்பேர் ரயில் பயணம் செய்திருக்கின்றனர். கூட்டம் மிகமிக அதிகமாகவே, தியாகராய நகர் ரயில் நிலைய டிக்கெட் வழங்கும் அலுவலகத்தார், காந்தி பேசும் விழா பந்தலுக்கே அலுவலகத்தை இடம் மாற்றிக் கொண்டுவந்து, பயணச்சீட்டு வழங்க ஆரம்பித்து விட்டாராம். 

மகாத்மா காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு குக்கிராம மக்களும் தங்கள் ஊருக்கு வரவேண்டும் என விரும்பினர். பழனிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் வன்னியர் வலசு. இந்தக் கிராமத்தில் சாலை வசதி இல்லை. தங்கள் கிராமத்திற்குக் காந்தி வரவேண்டும் என அந்தக் கிராம மக்கள் வலியிறுத்த, சாலை வசதியைக் காரணம் காட்டி காந்தி வரமாட்டார் என அறிவிக்கப்பட்டது.  ஆனால், பொழுது விடிந்ததும் அனைவருக்கும் ஆச்சரியம். எந்தக் கிராமம் சாலை வசதி இல்லை எனக் காந்தியின் பயணத்தில் புறக்கணிக்கப்பட்டதோ, அந்தக் கிராம மக்கள் இரவோடு இரவாகக் காந்தியின் வருகைக்காகச் சாலையை அமைத்திருந்தனர். பின்னர், காந்தி வன்னியர் வலசு கிராமத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். காந்தியின் மீது தமிழர்கள் வைத்திருந்த பற்றுதலுக்கு இதுவே சிறந்த சான்று.

 (நன்றி : புதிய தலைமுறை)