12 ஜூன், 2017

முன்னொரு காலத்தில் இறைநம்பிக்கையில் நாட்டம் இல்லாத விஜயபாலன் என்னும் இளைஞன் ஒருவன் வாழ்ந்து வந்தான். எந்த வேலைக்கும் செல்லாமல் ஊரைச் சுற்றுவதையே முழுநேரப் பணியாகச் செய்துவந்தான். அவன் வசிக்கும் கிராமத்தில் உள்ள கிருஷ்ணன் கோயிலில் ஒருநாள் திருவிழா நடைபெற்றது.
ஊர் சுற்றிய களைப்பில் அந்த வழியாக பசியோடு வந்து கொண்டிருந்தான் விஜயபாலன் . திருவிழாவுக்கு வந்திருந்த கிருஷ்ண பக்தர்கள் அனைவரும் கிருஷ்ண நாமத்தை ஜபித்துக் கொண்டிருப்பதைக் கண்டான். அதனைக் கண்டு மிகுந்த எரிச்சல் அடைந்தான்.
நேராக அவர்களிடம் சென்று, 'ஏன் எல்லோரும் 'கிருஷ்ணா ' 'கிருஷ்ணா' என்று ஒரே வார்த்தையையே திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். இப்படியே நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பதால், இங்கே என்ன நிகழ்ந்து விடப் போகிறது என்று கோபத்தோடு கேட்டான்.
மேலும், 'உங்கள் கிருஷ்ணனால் என் பசியைப் போக்க முடியுமா?' என்றான் ஆத்திரத்துடன்.
அப்போது அந்தக் கூட்டத்தில் இருந்த பெரியவர் ஒருவர் 'தம்பி எங்களைப் போன்று நீயும் கிருஷ்ண நாமத்தை ஜபித்தால், உனக்குத் தேவையான உணவு மட்டும் அல்ல, உன் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் கிடைக்கும்' என்றார்.
பெரியவரின் பேச்சில் நம்பிக்கை இல்லாவிட்டாலும், பசியின் கொடுமையால் கிருஷ்ண நாமத்தைச் சொல்லித்தான் பார்ப்போம் என்று முடிவெடுத்தான். அதற்காக ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதிக்குச் சென்றான். அங்கே ஒரு மரத்தின் மீது ஏறி, அமர்ந்து அமைதியாக, 'கிருஷ்ணா' 'கிருஷ்ணா' என்று ஜபிக்க ஆரம்பித்தான்.
அப்போது அந்தவழியாக வழிப்போக்கன் ஒருவன் வந்தான். வந்தவன் விஜயபாலன் அமர்ந்திருக்கும் மரத்துக்கு கீழே அமர்ந்து உணவருந்தினான். பின்பு அங்கேயே உறங்கவும் ஆரம்பித்தான். விஜயபாலனும் மரத்தின் மீது அமர்ந்தபடியே கிருஷ்ண நாமத்தை ஜபித்துக்கொண்டே தன்னை மறந்து உறங்க ஆரம்பித்தான்.
சிறிது நேரத்தில் விழிப்பு வரவே கண்விழித்தான். அப்போது மரத்துக்கு கீழே ஒரு உணவுப் பொட்டலம் இருப்பதைக் கண்டான். வழிப்போக்கன்தான் உணவுப் பொட்டலத்தை அங்கே மறந்து விட்டுச் சென்றிருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான்.
நாம் ஜபித்த கிருஷ்ணநாமம் நம்மைக் கைவிடவில்லை என்று நினைத்துக்கொண்டே கீழே இறங்கினான். இறங்கிய பின் அவனுக்குள் ஒரு தயக்கம் உண்டானது. கிருஷ்ண நாமத்தின் மகிமையால் நமக்கு இது கிடைத்தது என்றால் நமக்கே நேரடியாக கிடைத்திருக்கவேண்டும். ஒருவன் மறந்து வைத்துவிட்டு போன உணவு எப்படி நமக்கானதாக இருக்கும் என்றெண்ணி உணவுப் பொட்டலத்தை தொடாமல் மீண்டும் மரத்தின் மீது ஏறி அமர்ந்துகொண்டான்.
சூரியனும் மறையத் தொடங்கியது. திடீரென்று யாரோ சிலர் வரும் சத்தம் கேட்கவே விஜயபாலனின் கவனம் அவர்களின் மீது திரும்பியது. வந்தவர்கள் அனைவரும் திருடர்கள் கூட்டம் எங்கேயோ திருடிவிட்டு, மர நிழலில் அமர்ந்து பங்கு பிரித்துக் கொண்டிருந்தனர். இந்த மரமே அவர்கள் எப்போதும் திருடிய பொருட்களைப் பங்கு பிரிக்கும் இடமாகும்.
அப்போது எதிர்பாராதவிதமாக விஜயபாலன் அமர்ந்திருக்கும் மரத்தின் கிளை ஒன்று முறிந்து கீழே விழுந்தது. கள்வர்கள் கூட்டம் அனைவரும் மரத்தில் அமர்ந்திருந்த விஜயபாலனை பார்த்துவிட்டனர். கள்வர்கள் கூட்டதின் தலைவனோ " இவன் கண்டிப்பாக நம்மை வேவு பார்க்க வந்தவனாகத்தான் இருப்பான். நாம் தினமும் இங்குதான் பங்கு பிரிப்போம் என்பதைத் தெரிந்து கொண்டு மரத்தின் மீது அமர்ந்து இருக்கிறான். இவனை அப்படியே இறக்கி மரத்தில் கட்டி வையுங்கள் என்று கட்டளைடயிட்டான். தலைவனின் பேச்சைக் கேட்ட திருடர்களிம் அப்படியே செய்தனர்.
சிறிது நேரத்தில் கூட்டத்தில் ஒருவனுக்கு அதிகமான பசி ஏற்படவே எதாவது உணவு இருக்கிறதா என்று தேடினான். சரியாக வழிப்போக்கன் வைத்து விட்டுச் சென்ற உணவு அவன் கண்ணில் பட்டது. உடனடியாக மிகுந்த மகிழ்ச்சியோடு பொட்டலத்தைப் பிரித்து உண்ண முற்பட்டான். ஆனால் கள்வர்கள் கூட்டத் தலைவன் அவனைத் தடுத்தான். மேலும் இந்த உணவை இவன்தான் விஷம் கலந்து இங்கு வைத்திருப்பான், இதை உண்ணாதே, இதை இவனுக்கே கொடு என்று விஜயபாலனுக்குக் கொடுக்கச் சொன்னான். விஜயபாலனும் வேறு வழியின்றி உணவை உண்ண ஆரம்பித்தான். சிறிது நேரம் ஆன பின்பு உணவில் விஷம் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டனர் திருடர்கள்.
இவன் நம்மை வேவு பார்க்க வந்தவன் அல்ல என்பதை உணர்ந்து கொண்டு விஜயபாலனை கட்டவிழ்த்துவிட்டனர். விஜயபாலனைப் பற்றி விசாரித்தான் கள்வர் கூட்டத் தலைவன். விஜயபாலனின் நிலைமையைப் புரிந்து கொண்ட கள்வர் கூட்டத் தலைவன் ' நீ மிகவும் கஷ்டப்படுகிறாய். இந்தா பணம், இதை நீ வைத்துக்கொள் 'என்று கொஞ்சம் பணத்தைக் கொடுத்தான்.
ஆனால், விஜயபாலனோ 'நான் நம்பிக்கையே இல்லாமல், 'கிருஷ்ண நாமம்' சொன்னதற்கே எனக்கு உணவு, பணம் எல்லாம் கிடைக்கிறது. நான் இறைவனின் மீதும், அவர் நாமத்தின் மீதும் முழு நம்பிக்கையோடு இருந்து உழைத்து, இதை விடச் சிறப்பாக வாழப் போகிறேன்' என்று கூறி அங்கிருந்து மகிழ்ச்சியோடு விடைபெற்றான்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அதிசயங்கள்... ரகசியங்கள்! வைணவர்களின் திருத்தலமான ஸ்ரீரங்கம் ஆன்மிகக் கோயிலாகத் திகழ்கின்றது இதன் ரகசியங்கள் அதிசயங்களின் தொகுப்பு.
* திருச்சி, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ‘பூலோக வைகுண்டம்' என்ற பெருமை பெற்றது. வைணவர்களின் 108 வைணவ திருத்தலங்களில் தலைமைச் செயலகம் போல் செயல்படுகின்றது.
* பன்னிரு ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள், 'மங்களாசாசனம்' பெற்று பாடிய திருத்தலமாகும். 108 வைணவத் திருத்தலங்களில் இரண்டு திருத்தலங்கள், பூமியில் இல்லை. ஒன்று பரமபதம். மற்றொன்று திருப்பாற்கடல்.
* இந்தியாவிலேயே ஸ்ரீரங்கம் கோயில்தான் ஏழு பிரகாரங்களுடன் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி 21 கோபுரங்கள் உள்ளன.
* 1961-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கின்படி இங்கு 42 ஆயிரம் மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். தற்போது, இதன் மக்கள் தொகை 3 லட்சத்தை தாண்டி விட்டது.
* கோயில், 'நாழிக்கேட்டான் வாயில்' வெளிப்புற முகப்பின் இருபக்கங்களிலும் உள்ள மாடங்களில் பத்திரர், சுபத்திரர் ஆகிய துவார பாலகர்கள் உள்ளனர்.
* கோயிலின் உட்புற முகப்பில் பெரியபெருமாள் மூலஸ்தானத்தை நோக்கி, மகாவிஷ்ணுவுக்கு உரியவராக முறையே சங்கு, தாமரை வடிவங்களில், 'சங்க நிதி', 'பதும நிதி' உருவங்களுடன் இருக்கின்றனர்.
* விஜயரங்க சொக்கநாத நாயக்கர், அவரது மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் உருவங்கள் தந்தத்தால் இயற்கை முறையில், வண்ணம்தீட்டி வைக்கப்பட்டுள்ளன.
* மூலவர், உற்சவர், தாயாருக்கு அணிவிக்கப்படும் மாலைகள் அனைத்தும் அம்மா மண்டபம் ரோட்டில் உள்ள மதுரகவி நந்தவனத்தில் பூக்கள் பறிக்கப்பட்டு, மாலை கட்டப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது.
* மூலவர் சுதையினால் இருப்பதால் திருமஞ்சனம் செய்யப்படுவதில்லை. அதற்கு பதில் கோயில் பணியாளரைக் கொண்டு இயற்கை மூலிகைகளினால் தயாரிக்கப்பட்டதைலக்காப்புடன் மெருகூட்டப்படுகிறது.
* கோயில் கருவறையின்மேல் தங்கத் தகடுகளால் வேயப்பட்ட விமானம் உள்ளது. விமானத்தில் மேல் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு தங்கக்கலசங்கள் உள்ளன.
* இந்தத் திருத்தலத்துக்கு வந்து ஆண்டாள், திருப்பாணாழ்வார், துலுக்க நாச்சியார் ஆகியோர் அரங்கனின் திருவடியை அடைந்து உள்ளனர்.
* வருடத்துகொருமுறை,பங்குனி உத்திர நாளில் பெருமாளும், தாயாரும். தாயார் சன்னதியில் இருக்கும் சேர்த்தி சேவை மண்டபத்தில் சேர்ந்து பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
* கோயிலில் உள்ள நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் இருக்கும். பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான திருமங்கையாழ்வாரால் கட்டமைக்கப்பட்ட ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள 1,000 தூண்களும் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் போய்விட்டது. 951 தூண்கள் மட்டுமே கட்டப்பட்டுள்ளன. மீதமிருக்கும் 49 தூண்கள், வைகுண்ட ஏகாதசி விழா நடை பெறும் காலத்தில் மணல்வெளியில் 49 மரத்தூண்கள் நடப்பட்டு ஆயிரம் தூண்களுடன் விழா நடைபெறுகிறது.
கோயில் தீர்த்தங்கள்:  சந்திர புஷ்கரணி, சூர்ய புஷ்கரணி, வகுள தீர்த்தம், சம்பு தீர்த்தம், அசுவத்த தீர்த்தம், பலாச தீர்த்தம், புன்னாக தீர்த்தம், பில்வ தீர்த்தம், கதம்ப தீர்த்தம், ஆம்பர தீர்த்தம், தென்திருக்காவிரி, வட திருக்காவிரி கோயிலில் நிர்வாக முறையை ஏற்படுத்திய ராமானுஜர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார்.
ராமானுஜரது திருமேனி 5 வது 'திருச்சுற்று' எனப்படும் அகளங்கன் திருச்சுற்றில் வசந்தமண்டபத்தில் புதைக்கப்பட்டது. பிறகு தானாகவே அவரது திருமேனி பூமிக்கு வெளியே தோன்றியது. அதுவே தற்போது ராமானுஜர் சந்நிதி மூலஸ்தானமாக உள்ளது. தான் ஏற்படுத்திய நிர்வாகங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதைக் கண்காணித்து வருகிறார் ராமானுஜர் என்பது ஐதீகம்.