ஒவ்வொரு கலவியையும் கர்ப்பத்தில் முடித்து, வதவதவெனப் பிள்ளைகளைப் போடுவது சாதாரண விஷயமாக இருந்த காலம் ஒன்றிருந்தது. கல்வியும் வேலை வாய்ப்புகளும் பெருகிய காலத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் முழக்கம் வெற்றியடைந்தது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது. எண்ணிக்கை குறையக் குறையக் குழந்தைகள் மீதான பெற்றோரின் உரிமையும் அதிகாரமும் பயமும் கட்டுக்கடங்காதவையாகப் போய்விட்டன.
பிள்ளைகள் நிறைய இருந்தபோது தாம் செய்ய வேண்டிய வேலைகளைத்தாமே செய்து அவை தாமாகவே வளர்ந்தன. தாமே அனுமதிக்கப்பட்டதால் அவற்றுக்குப் பொறுப்புகளும் கடமைகளும் கற்பிக்கப்பட்டன. ஆனால், இன்று பத்து மாத கர்ப்ப காலத்துக்குப் பின்னரும் வயிற்றில் சுமப்பதைப் போலவே அங்கே இங்கே அசையவிடாமல் இறுக்கிப் பிடிக்கிறோம். தலையை ஒருவரும் கால்களை ஒருவருமாகப் பிடித்து இழுத்து வதைப்பதைத் தான் வளர்ச்சி என நினைத்துக்கொள்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால், அதுதான் பாசம், பற்று, அன்பு என்றும் நம்புகிறோம்.
எனக்குக் குழந்தை பிறந்திருந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. கவனித்துக்கொள்ளப் பெரியவர்கள் யாரும் இல்லை. குழந்தை தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் மாறி மாறித் தூக்கி வைத்துக்கொள்வோம். சில மாதங்கள் கடந்திருந்த போது, இரண்டு நாள்களாக யூரின், மோஷன் போகாமல் குழந்தை அழத்தொடங்கியது. நாங்களும் என்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டு மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துப் போனோம். அவர் வயதான ஆண். மகப்பேறு மருத்துவராக ஓர் ஆண் இருப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.
பிரச்னையைச் சொன்னபோது, அவர் முன் இருந்த மர டேபிளில் குழந்தையைக் கிடத்தச் சொன்னார். எதுவும் பேசாமல் குழந்தையைக் கவனியுங்கள் என்றார். ஒரு சில நிமிடங்கள், அங்கே அமைதி நிலவியது. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. குழந்தை கைகால்களை ஆட்டி ஆட்டி உதைக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் சிறுநீரும் மலமும் வெளியேறி `ஈஈஈ’ எனச் சிரித்தது. நான் நம்ப முடியாமல் அவரைப் பார்த்தேன். ’எப்போ பாரு கையிலயே வச்சிருந்தா குழந்தை எப்படி உடலை அசைக்க முடியும். கை காலை நல்லா உதைக்கிறதுதான் அதுக்கான விளையாட்டு, வாக்கிங், ஜாக்கிங் எல்லாம். இப்ப இருக்கற அப்பா அம்மாக்கள் பிள்ளையைக் கீழே இறக்க யோசிக்கிறாங்க. ஃப்ரீயா விடுங்க. கைக் குழந்தைக்கும் தனிமை, சுதந்திரம் எல்லாம் தேவைப்படும். உங்களுக்குக் கொஞ்சணும்னு தோணுறப்போ மட்டும் கையில எடுத்திட்டுக் கீழ விட்டுடுங்க. நீங்க வேணும்னா...குழந்தை அழுது கூப்பிட்டுக்கும்’ என்றார்.
இந்தியப் பெற்றோர், குழந்தை வளர்ப்பில் பிரதானமாக இரண்டே வழிகளைக் கையாள்கின்றனர். ஒன்று அடக்குமுறை, மற்றொன்று செல்லங்கொடுத்தல். இரண்டுமே ஒரே விளைவைத் தான் ஏற்படுத்துகின்றன. அது சீரழிவு. அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.
அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை. அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும். செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது, சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர்.
குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும். தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும். ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஊட்டியே விடுகின்றனர். நடக்கத் தெரியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரியக் கூடாது. குறிப்பாக அப்பாக்கள், வளர்ந்த பிள்ளைகளையும் கைகளில் தூக்கி வைத்திருப்பதை வீதிகளில், கடைகளில் பார்க்க முடியும். இதன் பெயர் அன்பன்று. குழந்தை தன் வேலையைத் தானே செய்வதைப் பெற்றோர் தடுக்கின்றனர்.
தத்தித் தத்தி நடக்கும்போதே பெருக்குமாற்றை எடுத்து வீட்டைப் பெருக்க எத்தனிப்பதைப் பார்க்க முடியும். பெண் குழந்தை என்றால் இதெல்லாம் இப்பச் செய்ய வேண்டாம் என்கிறோம். ஆண் பிள்ளை என்றால் இதெல்லாம் நீ எப்பவுமே செய்யக் கூடாது என்று தடுக்கிறோம். ஆனால் குழந்தைகள் பால் பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய விருப்பம் காட்டுகின்றன. ஆண் பெண் வித்தியாசமில்லாமல், இன்றைய குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை.
துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமைப்பது போன்ற அடிப்படை வேலைகளுக்கு நாம் அவர்களைப் பழக்கவில்லை. வீட்டு வேலைகளைக் கற்பது பெண் குழந்தைகளின் சுமையாக இருந்த அவலம் தற்போது மாறிவருகிறது.
இன்றைய இளைஞர்கள் பைப் கசிந்தால் சரிசெய்வது, ட்யூப் லைட்டை மாற்றுவது போன்ற சாதாரணப் பணிகளுக்குக்கூட app-ஐத் திறந்து ஆளைத் தேடுகின்றனர். அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளைக்கூட அவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. வீட்டில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் பிற்பகல் வரை உறங்குகின்றனர். நள்ளிரவு கடந்தும் செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால், சோம்பேறித் தலைமுறையாக இன்றைய இளைஞர்கள் தலையெடுத்ததன் காரணம் நமது செல்லங்கொடுத்தல்தான்.
சில ஆண்டுகளுக்கு முன்னர், என் உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். கல்லூரி படிக்கும் தன் மகனை சார் என்றுதான் என் மாமா அழைப்பார். தபதபவென்று வளர்ந்த அந்த இளைஞன் அவன் அறையில் எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பான். எழுந்ததும் செல்போனில் ஆராயத் தொடங்கிவிடுவான் அல்லது வெளியே கிளம்பிப் போய்விடுவான். வீட்டிற்கு விருந்தினர் வந்தால்கூடப் பேசுவதில்லை. `அப்பா பைக் வேணும்’ என்றால் உடனே கடைக்குக் கூட்டிப் போய்விடுவார். அவனிடம் ஒரு கிரெடிட் கார்டைக் கொடுத்து வைத்திருந்தார். வீட்டில் என்ன வேலை என்றாலும் அம்மாவோ அப்பாவோதான் செய்ய வேண்டும். ஒரு நாள் மிக்ஸி போடும்போது ஹை வோல்டேஜ் ஆகி ஃப்யூஸ் போய்விட்டது. டம்மென்ற சத்தத்தைக் கேட்டுக்கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஒருமணி நேரம் கழித்து, உள்ளே இருந்து அவனது குரல் மட்டும் வந்தது, `அம்மா, ஏ.சி ஓடல’. நாள் முழுவதும் அந்த ஆன்ட்டிதான் மாறி மாறி போன் செய்து ஆள்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் படுத்தே கிடந்தான். அண்மையில் விசாரித்தபோது தெரிந்தது, அவனுக்கு மணமான சில மாதங்களிலேயே விவாகரத்தாகி அம்மா வீட்டில் இருக்கிறானாம்.
செல்லங்கொடுத்து வளர்க்கப்படுகிறவர்களோடு வாழ்வது மிகவும் கடினம். சோம்பேறித்தனமும், தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். இந்தியக் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் செல்லத்தால் சீரழிக்கப்பட்டனர். இப்போது பெண் குழந்தைகளுக்கும் அது பரவிவருகிறது. நான் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்த போது, கல்லூரி படிக்கும் மகள்களைக் கொண்ட தந்தை ஒருவர் சக ஊழியராக இருந்தார். மூத்த மகளை இன்ஜினீயரிங் சேர்ப்பதற்குப்பட்ட கடனை அவர் அடைத்து முடிக்கும் போது திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மகள் பேரில் 30 பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். ஆனால், அந்தப் பெண், தனக்கு நூறு பவுன் நகை போட வேண்டுமென்று தந்தையிடம் டிமாண்ட் செய்தாள். அதற்காக ஊரில் உள்ள சொத்தை விற்கச் சொல்லி அடம்பிடித்தாள். `அதை உன் தங்கைக்காக வைத்திருக்கிறேன்’ என அவர் சொன்ன போது, `அவளுக்கு இந்த வீடு இருக்குல்ல’ என்றாளாம். `எங்கள பத்தி அவ கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பினார். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உயிரையும் கேட்பார்கள். கொடுப்பீர்களா?
செல்லங்கொடுக்கும் பெற்றோர் நல்லொழுக்கத்தைவிடக் குழந்தைகளின் திறமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். சிறுபிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோருடன் பேசுவதற்கே இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது. `இப்பவே பாடுகிறது, ஆடுகிறது, என்னமா வரைகிறது, கம்ப்யூட்டரில் அதற்குத் தெரியாத விஷயமே இல்லை, அமேசான்ல அதுவே ஆர்டர் பண்ணிருச்சு, எனக்கே எல்லாத்தையும் சொல்லித் தருது…’ என வாய் ஓயாமல் புகழத் தொடங்கிவிடுகின்றனர். நாம் எதற்காக அவர்களைப் பார்க்க வந்தோம் என்பதே மறந்துபோகும் அளவிற்குப் பிள்ளை புராணம் பாடுகின்றனர். ஏன் இவ்வளவு பெருமிதம்?
சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் பெற்றோர் தம் பிள்ளைகள் குறித்த வீடியோக்களை ஃபேஸ்புக்கிலும் யூ டியூபிலும் பதிவிட்டுப் புகழ்ச்சிக்குப் பழக்குகின்றனர்.
எல்லாக் குழந்தைகளிடமுமே ஏதேனும் திறமை இருக்கிறது எனும் போது ஏன் நம் குழந்தையை மட்டும் `ஸ்பெஷல்’ எனக் கொண்டாடுகிறோம். அதுவொரு சுயநலன். என் பிள்ளை தான் சிறந்தது என்ற பெருமை இன்று எல்லோருக்குமே தேவைப்படுகிறது. அதனால், நீ திறமைசாலி என்று சொல்வதற்குப் பதில் ‘நீ மட்டும்தான் திறமைசாலி’ என்று சொல்கிறோம். முன்னது அங்கீகாரம். பின்னது அகம்பாவம்.
ஒவ்வொரு குழந்தையும் தனிமனிதராக வளர்ந்தாக வேண்டும். எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு புள்ளியில் தன் வாழ்க்கையை, தன் தோல்விகளை, தன் பிரச்னைகளைத் தானே சமாளித்தாக வேண்டும். ஆனால், நமது அதீதப் பாதுகாப்பு வளர்ப்பு முறையால் அவை திக்கற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.
செல்லமாக வளரும் பிள்ளைகளால் வாழ்வின் உண்மைகளை ஏற்க முடியாது. குழந்தைகளைக் கைக்குள்ளிருந்து விடுதலை செய்யுங்கள். அவர்கள் சிரமப்படட்டும். எப்போதும் ஏ.சி போட்டு வைத்திருந்தால் வெயிலுக்கும் குளிருக்கும் எப்படி அவை பழகும்! வெளியே கூட்டி வாருங்கள். வெறுங்காலில் நடக்கச் சொல்லுங்கள். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும். துணிகளை மடிப்பது, புத்தகங்களை அடுக்குவது, ஷெல்ஃபை க்ளீன் செய்வது போன்ற தம் வேலைகளைத் தாமே செய்யட்டும். பொருள்களைக் கேட்டால் `நோ’ சொல்லுங்கள். அன்பைக் கேட்டால் அள்ளித் தாருங்கள்.
குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமைதான் செல்லங்கொடுத்தல். பிரதிபலனாகத் தான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்க வேண்டுமென மூளையை கண்டிஷன் செய்யும் சுயநலனே அதில் நிறைந்திருக்கிறது. தானே உலகம் என்று வாழ்ந்தால் போதும் என நினைக்கின்றனர். ஆனால், பெற்றோரின் காலத்திற்குப் பின்னரும் இந்தப் பூமியில் குழந்தை ஒரு தனிமனிதராக, சமூக விலங்காக வாழ்ந்தாக வேண்டும். கைகளிலிருந்து வெளியேறிக் கல்வி கற்கவும், பொருளீட்டவும், தனக்கெனத் துணையை அமைத்துக்கொள்ளவும், போகும் இடங்களில் நல்ல மனிதராக அறியப்படவும் வேண்டும். அந்தச் சமூக வாழ்க்கைக்கு வெகுமுன்னரே தயார்படுத்துங்கள். நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. அப்படியான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே ஆதாரம். அதைக் கற்பியுங்கள். உங்களின் கண்டிப்புகளும் இல்லைகளும் அதைத் தன் காலில் நிற்கப் பழக்குங்கள்.