6 நவம்பர், 2019

படைப்பு

படைப்பு: கலை இலக்கிய திங்களிதழ்



ஓர் ஆணின் பிரசவ வலி

மகனே நீ பிறந்ததும்
பெற்றவளைவிட அதிக பூரிப்படைந்தேன்... 

மூத்தவனைவிட
மூக்கும் முழியுமாய்
இருந்தாய்... 

ஆண் பிள்ளை என
மூத்தவனுக்கு முணுமுணுத்த 
நம் சொந்தங்கள்... 

இரண்டாவதும் 
ஆண் என்றதும் அப்பா மீது
இலட்சணப் பார்வை பட்டது. 

நீ வளர ஆரம்பித்தாய்
நான் மலர்ந்தேன்... 

நீ தவழ்தாய்
நான் நிமிர்தேன்... 

உன் மழலை
என்னை மயங்கச் செய்தது
புத்தியை மழுங்கச் செய்தது... 

சாதித்து விட்டோம்
என்றிருந்த என்னை 
ஒரு நொடியில்
சாய்த்து விட்டாய்...
இல்லை இல்லை 
சாய்ந்து விட்டேன் மகனே...
 
ஊர் கண், உறவு கண்
நல்ல பார்வை, கெட்ட பார்வை
பட்டதோ உன்மேல்
வினை
தொட்டதோ என்மேல்...
 
நன்றாய்தான் இருந்தாய்... 
மூத்தவனைவிட எதிலும்
முனைப்பாய்... 

பெற்ற எங்களைவிட
உன்னுடன் பழகும்
எல்லாரையும் அப்போதே
இனம் கண்டாய்... 

குரல் கேட்டதும்
ஓடி வருவதும்... 
ஆள் வாடை பட்டதும்
ஆடி வருவதும்... 
மகனே உன் அருகிலேயே
என்னை இருக்க வைத்தாய்...
என்னை இறுக வைத்தாய்...

அதெப்படி...
என்னை உனக்குத் தெரியும்?
என் வாடை உனக்குப் புரியும்?
விவரமானாய் நீ... 

வீட்டினுள் நான் நுழைந்ததும்
எங்கிருந்தாலும் ஓடி வருவாய்...
கை இரண்டையும் தூக்கிக்கொண்டு
ஏங்கி வருவாய்... கண்கள் தானே பனிக்கும்

நான் வீட்டினிலேயே இருந்தால்
என்னைவிட்டு விலக மாட்டாய்
வேறெவரிடமும் ஓட மாட்டாய்... 

உன்னை ஒவ்வொரு கணமும் 
நினைக்கையில் கடவுள் மீது 
பயமும் பக்தியும் கூடியது... 

வீட்டில் அத்துணைபேருக்கும்
முன்னால் விழித்திடுவாய்... 
இரவில் அவர்களுக்குப் பின்தான்
தூங்குவாய்... 

நாம் தூங்கும்போது
நான் ஓர் அறை
நீ உள்ளறை
நான் தூங்கி விட்டேனா என
நீ பார்ப்பாய்... 
நீ தூங்கி விட்டாயா என
நான் பார்ப்பேன்... 
நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்... 

கட்டிலிலிருந்து
தலையை உயர்த்திப் பார்ப்பாய்... 
நான் பார்த்ததும்
கவிழ்ந்துகொண்டு குலுங்குவாய்
கொலுசொலி சினுங்கும்... 

நான் பார்வையை எட்டிப் போடுவேன்... 
நீ கவிழ்ந்து கொள்வாய்
மகிழ்ச்சியில் குலுங்குவாய்
மெத்தை அதிரும்... 

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
இவ்வாறுதான் நினைக்கத் தோன்றும்...
முன் ஜென்மத்தில்
நான் பிள்ளை நீ அப்பா
இந்த ஜென்மத்தில்
நீ பிள்ளை நான் அப்பா

எங்கே இருக்கிறாய் மகனே...
எப்போது வருவாய்...

வந்துவிடு சீக்கிரம்
நொந்துவிடும் என் மனம்

உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்
வருடமெல்லாம்...
நீ வந்தால்தான் வசந்தமெல்லாம்...



காத்திருப்போர் பட்டியலில்

உன் அப்பா

மம்சை செல்வகுமார்



(குறிப்பு - மூளையில் கட்டியென வைத்தியம் செய்தோம். ஒன்றரை வயதிலேயே அவனைப் பறிக்கொடுத்தோம்)

5 நவம்பர், 2019


அருந்தமிழ் மருத்துவம் ஐநூறு

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,
இந்த பாடலை ஒவ்வொரு வரும் எழுதி வைத்து கொள்ளுங்கள், எக்காலத்திலும் உதவும்,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது

சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
    தமிழ் மருத்துவ அறிவுரைப்பா

மூளைக்கு வல்லாரை
  முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
   எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
  பசிக்குசீ  ரகமிஞ்சி
கல்லீரலுக்கு  கரிசாலை
  காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
  காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
  தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
  நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு  முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
  மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு  மருதம்பட்டை
  அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு  எள்ளெண்ணை
  உணர்ச்சிக்கு  நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
  களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
  குரலுக்கு  தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
  வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு  தாமரைப்பூ
  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

 கக்குவானுக்கு வசம்புத்தூள்
  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                         
விக்கலுக்கு மயிலிறகு
   வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
   வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
  சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
   நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
  பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்
  கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
  ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
   விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
  கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
  கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
   உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
   உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
  அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
  அறிந்தவரை உரைத்தேனே!!


சீனா சீனிக்கிழங்கு

நாம் மறந்தே போன நம் முன்னோர்களின் முக்கிய உணவான சீனிக் கிழங்கு என்ற சர்க்கரை வள்ளிக் கிழங்கின் தாயகம் சீனாவாகும்.

சீனி என்றாலே சீன என்பது பொருளாகும். பட்டாசு சீனாவில் இருந்து வந்ததால் அதை சீனி வெடி என்கின்றோம், வெள்ளை சர்க்கரையை சீனிச் சர்க்கரை என்கின்றோம்.  அது போலத்தான் இந்த சீனிக் கிழங்கும்.

சீனர்களின் உடல் வலிமைக்கும் நீடித்த ஆயுளுக்கும் இந்த சீனிக் கிழங்கும் ஒரு காரணமாம். நம் முன்னோர்களின் நோயற்ற வாழ்க்கையும் இதையே மெய்ப்பிக்கின்றது.

தென்தமிழகத்தில் சிந்தாமணி சீனிக் கிழங்கு என்று ஒரு வகை உண்டு. அந்த சிந்தாமணி சீனிக்கிழங்கை அவித்து பிய்த்துப்பார்த்தால் அதன் நடுவில் முட்டையில் மஞ்சள் கரு இருப்பது போல கிழங்கு மஞ்சள் நிறத்தில் இருக்கும். ருசியோ கொள்ளை ருசியாக இருக்கும்.

சீசன் சமயத்தில் விருதுநகர் அருள்மிகு ஸ்ரீ வெயிலுக்குகந்த அம்மன் கோவில் அருகிலும் எதிரிலும் இந்த சிந்தாமணி சீனிக்கிழங்குகளை மலை போல குவித்து விற்பார்கள்.

தகவல்: பெரியாண்டவர், ஈரோடு