11 ஆகஸ்ட், 2019

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்



கவிதை : தரிப்பிடம்


குழந்தை பிறப்புக்கு
கரு தரிப்பிடம்

கருவறை

இருட்டறையாக அது
இருந்தாலும் - அதுதான்
உயிர்களின் பிறப்பிடம்


இவ்வுலகில் உதயமாகும்
ஒவ்வொரு உயிரும்
இருளில் உழன்று பின்
வெளிச்சம் வந்ததுக்கான
சான்று அது


கனவுகள் தரிக்கப்படுவது
இதயத்திலா? கண்களிலா?

தரிக்கப்பிடம்
தயாரிக்கும் இடம்


பாலூட்டி, தாலாட்டி
சோறூட்டி, சீராட்டி
வளர்த்து பின்
வாழ்க்கையைப்
பகிர்ந்தளிக்கப்படுவது
தரிக்கப்பட்ட பின்புதான்


தரிப்பதற்கு நாளாகலாம்;
அதையே தறிப்பதற்குகணப்பொழுதுபோதும்
அத்துனையும் தும்சமாகிவிடும்


பறவைகள் கூடுகட்டுவது
பார்ப்பதற்கு படா ஜோரு
எங்கெங்கேயோ ஓடோடி
பறந்து திரிந்து, பார்த்து பார்த்து
ரகரகமாய் கொண்டுவரும்
சாதனங்களை


அஸ்திவாரம் இல்லாமலேயே
அடுக்குமாடிபோல் வளை பின்னும்
அடுத்தடுத்து வாழ்வதற்கு,
தலைமுறை சொல்லப்படுவதற்கு
அந்தரத்தில் அப்படியொரு
மாளிகையை மகிழ்வோடு கட்டும்


பறவைகள் கூடுகட்டும்போது
பெண் பறவை கருவுற்றிருக்கும்
அதுதான் அதன் வேலையை
துரிதப்படுத்தும்


மரக்கிளையோ அல்லது
மாடி வீட்டு ஜன்னலிலோ
பெண்ணை அமரவைத்து
ஆண் ஆவலாய் பறந்து சென்று
அதற்கு உணவும்
கூடு கட்டுவதற்கு இறகும்
இலகுவானதாய் எடுத்துவரும்


ஓரறிவு உள்ள அந்த ஜீவன்
ஓய்வறியாது தன் பெண்ணாட்டியை
உள்ளங்கையில் வைத்து தாங்கும்

பறவைகள் கணப்பொழுதில் கூடுகட்டுவதில்லை
பார்த்து பார்த்து... பக்குவமாய் ...
மெது மெதுவாய்.. மெத் மெத்
பார்த்துக் கட்டும்


ஆண் படும் பாட்டை
உள்ளுக்குள் நகைப்பு எழ
கண்டும் காணாததுமாய்
கண் கொண்டாது
பார்த்துக் கொண்டே இருக்கும்
பெண் பறவை


பொழுது சாய்வதுபோல் தெரிந்தால்
போதும் என சமாதானம் கொண்டு
கண்டுவதை நிறுத்திக் கொள்ளும்

முழுமையடையாத
அந்த வீட்டுக்குள்
துணையை  அழைத்து வரும்
துணையோ
நாணி கோணி
புதுபெண்போல் நுழைந்து
புதுமனை புகுவிழா செய்துவிடும்


அதற்குப் பின் நிகழும் அத்துணையும்
நாம் காண்பதுதான், ரசித்ததுதான்
படிப்பினையாய்
நம்மை நாம் மாற்றிக் கொண்டதுதான்

இந்த நிகழ்வு
பறவைகளுக்கு மட்டுமல்ல,
மண்ணுலகில் பிறப்பெடுத்துள்ள
அத்துணை உயிர்களும்
இதைத்தான் தொடர்கின்றன


மனதில் தைக்கப்பட்ட, தரிக்கப்பட்ட
எண்ணமும் செயலும் நிறைவேற
அதன் பின்னே
அச்சுபிசங்காமல் சென்றாலே போதும்
அத்தனையும் நிறையும்


ஒருவர்மீது
காதல் எழச் செய்வதும்,
கிளர்ச்சிக் கொள்ள செய்வதும்
மன மகிழ்வுணர்வில் திளைப்பதும்
அவர்மேல் கொண்ட
அபிப்பிராயம் தரிக்கப்பட்ட பின்தானே?


அங்கொன்றும் இங்கொன்றும்
செய்வதறியாது
திகைப்படைந்து கிடக்கும்
கசந்துபோன மனதினுள்
என்றோ தரிக்கப்பட்டது
முற்றிலும் எரிக்கப்படாமல்
புகைந்துகொண்டே இருப்பதால்தான்

அவ்வப்போது தலைதூக்கும்
வெளியேற்ற மனம் துடிக்கும்

இன்று எண்ணப்படுவது
நாளையே நிறைவேறிவிடுமா என்ன?
நாளை நாளை என நாளை கடத்திச் செல்வதால்
தரிக்கப்பட்ட எண்ணம் யாவும்
உள்ளேயே தங்கிவிடும்
பொங்கி, ஆழ்ந்து ஆறிவிடும்


முன் பின் தெரியாத யாரோ ஒருவரிடம்
ஆசுவாசமாய் பேசிவிடுவோம்
கசந்துபோன பழையன யாவும்
அவரால் கசைந்து கசைந்து வெளியேற
தரிக்கப்பட்டது, தழுக்கும்


நண்பர்களே...
ஒன்றைச் சொல்ல
பிரியப்படுகிறேன்...


உலகத்தின் எல்லா
இண்டு இடுக்குகளில் எல்லாம்
முருங்கை மரம் முளைத்திருக்கும்,
தளைத்திருக்கும்

ஒரே ஒரு குச்சியை அல்லது
கிளையை நட்டி வைத்து,
முனையைத் தரித்தால்போதும்
தலைமுறைக்கும் தளுக்கும்
தகதகவென ஓங்கி வளரும்
பதியமிடுதல் என்ற
செய்முறையிலும்
பற்பல செடி கொடி தாவரங்கள்
தரிக்கப்படுவதுண்டு


தரிப்பிடம்
அதனதன்
இருப்பிடம்


எண்ணம்போல்
எதுவும்
பிழைக்கும்
தழைக்கும்

நல்லதாய் நினைத்தால்
நன்றாய் தரியும்
ஒன்றாய் திரியும்
இல்லையேல்
விட்டுப் பிரியும்
தரிப்புக்கு
நான் தந்த விளக்கம்


உயிர்ப்பு -
தரிப்புக்கு
இன்னொரு
பொருள் உண்டு


ஒன்றை வேறோடு பிடுங்கி
அடியோடு ஒழித்துவிடுவதற்கும்
தரிப்பு என்பர்

எதையும்
இயற்கையோடு
ஒத்துபோவதுதான்
சாலப் பெரிது
காலத்துக்கும் நல்லது


காதல் தரிக்கப்பட்ட
இதயத்தை மாற்ற முடியுமா?
அப்படி மாற்றிய பின்
காதல் தரிக்குமா?
மரிக்குமா?

பார்வையாலேயே
கவரப்படுகிற
இந்த கலியுக காலத்தில்
எதையும் இனம் காண முடியாது
எண்ணத்தில் நஞ்சை விதைத்து
மஞ்சத்தில் மஞ்ச குளித்தால்
தரிக்கப்படுவதும்
நஞ்சாகத்தான் இருக்கும்


இனப்பெருக்கம் கொண்ட
இனமெல்லாம் எக்கணமும்
வஞ்சம் தீர்ப்பதில்லை
நெஞ்சம் புகைத்துக் கொண்டு
நினைவை வதைத்துக் கொண்டு
நெருங்குவதுமில்லை,
பழகுவதுமில்லை

விதியின் மீறலாய்
ஒன்றிரண்டு இருந்தாலும்
அதனையும் நறுக்கிவிடுவது நலம்


நண்பர்களே,
நல்லதை நினைப்போம்
நல்லதை விதைப்போம்
நாம் விதைக்கும் யாவும்
நல்லதாய் இருந்தால்
நடப்பது யாவும்
நலமாய் இருக்கும்


மழை பொய்த்துவிட்ட பொழுதிலும்
கலங்காது ஏரெடுத்து
உழும் உழவர்போல்

மனம் கலங்காது, மயங்காது
எல்லாவற்றையும் அசைபோட்டு
ரசனையோடு தரிப்பதற்கு, பொரிப்பதற்கு...

மனம் என்ற நன்னிலத்தில்
அன்பு என்னும் விதை தூவுவோம்
தூய எண்ணம் என்ற நீர் தெளித்து
பண்புகளை, நட்புகளை விளைய வைப்போம்
அதில் தரிக்கப்படும் யாவும்
உலகுக்கு எடுத்து பகிர்வோம்


நண்பர்களே,
நம் தமிழின்
தண்ணொளியின் தன்மையை
நாடு போற்ற அனைவரது
நாவை ஆட்டிப் படைக்க
மென்மேலும் விரிவுபடுத்தி
பரப்புவோமாக...


அன்னைக்குத்
தனயன் செய்யவேண்டிய
கடமைகளுள் இதுவும் ஒன்றுதானே?


வாருங்கள்
கடமையை ஆற்றுவோம்
காலம் நம்மைப் போற்றும்