`மருத்துவ அணிச் செயலாளர் முதல் தெலங்கானா ஆளுநர் வரை...!' - தமிழிசை கடந்துவந்த பாதை
`தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற வாசகம் மூலம் கடைக்கோடி தொண்டனுக்கும் பரிச்சயமானவர் தமிழிசை. ஒரு பெண் தலைவராக அவர்கடந்து வந்த பாதை சுலபமானதல்ல.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு மகளாக பிறந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ. பட்டமும், கனடாவில் மருத்துவப் பயிற்சியும் பெற்றவர். இவரது கணவர் டாக்டர் சௌந்தரராஜன், சென்னைப் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.
அப்பா தீவிர காங்கிரஸ்காரர்; ஆனால், தமிழிசை, தன் விருப்பதுக்கு ஏற்ப தனது அரசியல்வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டவர். 1999-ம் ஆண்டு பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். அடிப்படை உறுப்பினராக தனது பயணத்தைத் தொடங்கியவர், தனது உழைப்பால் முன்னேறினார். அதே ஆண்டில் பா.ஜ.கவின் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டு மருத்துவ அணியின் மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
முரண்பட்டு நிற்கும் கட்சி ஒன்றில் தமிழிசை சேர, அவரது தந்தைக்கு அது பிடிக்காமல் போனது. `நான் தேர்ந்தெடுத்த பாதைக்காக அப்பாவை விட்டுக்கொடுக்க நேர்ந்தது’ என்று தமிழிசை கூறியிருக்கிறார். பல சங்கடங்களைக் கடந்து, தான் செல்லும்பாதையில் உறுதியாக இருந்தவர்.
பா.ஜ.கவின் மாவட்ட, மாநில மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவ அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், மாநிலப் பொதுச்செயலாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது செயல்பாடுகளைக் கண்ட கட்சி மேலிடம், 2006 மற்றும் 2011 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதேபோல 2009 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார்.
ஆனால், அவரால் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.கவின் தமிழகத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர்களில் தமிழிசை மட்டும்தான் ஒரே பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பா.ஜ.கவின் முகமாகவே மாறி, பா.ஜ.க என்றால் தமிழிசை என்ற நிலைக்கு கட்சியை லைம்லைட்டிலே இருக்கச்செய்தவர்.
அவர் தலைவராகப் பணியாற்றிய காலங்கள் சிக்கலானவை. மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட நீட், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட விவகாரங்களை சாதுரியமாகக் கையாண்டார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசை விட்டுக்கொடுக்காமல், அதே சமயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பிரச்னையைக் கையாள முனைந்தவர். பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டபோதிலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கட்சிப்பணியாற்றியவர்; மீம்ஸ்களை போகிற போக்கில் கடந்து சென்றவர்.
அதேபோல ஊடக விவாதங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் எப்படிப்பட்ட கேள்விகளையும் புன்னகையால் எதிர்கொண்டு பதிலளிப்பவர். கடுமையான வார்த்தை உச்சரிப்போ, பாதியில் புறக்கணிப்போ அவரிடம் இருந்ததில்லை. இக்கட்டான சூழல்களில் கட்சியை வழிநடத்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. தமிழகத்தில் அரசியலைக்கடந்து பல்வேறு கட்சித் தலைவர்களிடம் நட்பு பாராட்டுபவர் தமிழிசை. தனக்கான மைனஸை பிளஸாக மாற்றியவர்; உருவகேலிக்கு ஆளாக்கப்பட்ட தமிழிசை அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பெண் தலைவராக இருந்து தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபட்ட தமிழிசை தற்போது தெலங்கானாவின் ஆளுநராக பதவிஏற்க உள்ளார். `தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்', `வெற்றிகரமான தோல்வி' போன்ற வார்த்தைகளால் அதிக கவனம் ஈர்க்கப்பட்டவர் தமிழிசை.
ஆனந்த விகடன், 01.09.2019