29 செப்டம்பர், 2019

காற்றில் கலந்த இசை: KMPS.மனோகரன்

=====================

விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட ஒரு சின்ன கிராமம், அதில் இந்த ஒரு குடும்பத்திற்கு மட்டும் இசையில் எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது??

KMPS. மனோகரன் அண்ணாச்சி இசையில் பெரிய ஞானி, பின்ன புலிக்கு பிறந்தவர் இல்லையா! பொரிகடலை போல் கொடுக்கும் இந்தக்காலத்தில் அல்ல; அந்தக்காலத்திலே கலைமாமணி விருது பெற்றவர் இவரது தந்தை.

திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவின் முக்கிய பாடகராகவும், மேலாளராகவும், இருந்த மனோகரன் அண்ணாச்சியின் பாட்டுக்கச்சேரி இல்லாத பொங்கலே மம்சாபுரத்தில் 80களில் இல்லை எனச்சொல்லலாம். சுசீலா, ஜானகி, பாலசுப்ரமணியம் போன்ற வார்த்தைகள் எல்லாம் முதன் முதலில் என் காதுகளில் விழுந்தது அவரது கச்சேரி கேட்க அம்மா அழைத்துச் சென்றபோதுதான்.

10 வருஷத்துக்கு முன்பு காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கலுக்கு கங்கை அமரனை அழைத்துவந்து கச்சேரி நடத்தி தன்னுடைய செல்வாக்கை ஊர் அறியச்செய்தார்.

அதற்கு அடுத்த வருடம் மாரியம்மன் கோவில் பங்குனிப்பொங்கலுக்கு கச்சேரி நடந்த வந்திருந்தார், கச்சேரியின் நடுவே, “இன்று மதியம் திடீர்ன்னு, நம்ம ஊர்க்கோவிலுக்கு நாமளே ஒரு பாட்டு எழுதி பாடினா எப்படி இருக்கும்ன்னு ஒரு யோசனை வந்துச்சு, உடனே எழுதி இசையமைச்ச பாடல்தான் இது” என்று  “தேரு வருது தேரு வருது தெக்கு தெருவு தேரு வருது” என்ற பாடலை பாடினார்.

அந்த கச்சேரி அவரது வாழ்கையிலே மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது, அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் நடந்த கச்சேரிகளில் எங்க ஊர் காளியம்மனையும் மாரியம்மனையும் பற்றி பல பாடல்களை எழுதி இசையமைத்து பாடினார்.

கோவில் திருவிழா என்றாலே எல்.ஆர்.ஈஸ்வரி வகையறாக்களின் பாடல்களையே கேட்டுப்பழகிய எங்க ஊர் காதுகளுக்கு இவரது பாடல்கள் வேறு ஒரு இன்பத்தை அளித்தது. மனோகரன் அண்ணாச்சி பாடல்கள் இல்லாத மாரியம்மன், காளியம்மன் பொங்கலை இனி நினைத்துப் பார்க்கக்கூட முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்.

இன்று அவர் உயிராய் நேசித்த காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கலின் முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்க இருப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு அவர் மரணமடைந்ததாக செய்தி வருகிறது. கடவுள் மறுப்புக் கொள்கைகளை இதுபோன்ற நிகழ்வுகள்தான் நீர்த்துப்போகச்செய்கின்றன.

இந்த இசை காற்றோடு கலந்ததோ
இல்லை கடவுளோடு கலந்ததோ
தெரியவில்லை.

காற்றுள்ளவரை எங்கள் ஊரையே
சுற்றிக்கொண்டிருக்கும்.


மனோகரன் அண்ணாச்சிக்கு அஞ்சலி!