22 ஆகஸ்ட், 2012

கவிதை

பாவம் பெண்கள்!


குக்கர் சத்தமும்
தண்ணீர் லாரி ஹாரனும்
சேர்ந்தொலிக்க
எனக்கு எட்டுமணி ஜுரம்
அடிக்க ஆரம்பித்தது!

மகன் பள்ளிசெல்ல
இருவேளை உணவு தயாரிக்கும் நிலையில்
முனைப்போடு இருக்கையில்,
தெருமுனையில் குப்பவண்டி விசில்!

அவசரக் கதியில் 
அரக்க பரக்க மெண்டு முழுங்கி
காலை உணவு முடிக்கும்முன்,
'காலை கடன்' அச்சுறுத்தவே
மீண்டும் கழிவறை நோக்கி ஓடினான்!

அவனைப் பள்ளியில் விட்டு வீடுவந்தால்
அயர்ச்சி அப்பியது!
அலுவலகம் செல்லணுமே...
என்ற கடமை கசந்தது!

நின்றபடியே இட்லியை விழுங்கி
கட்டி வச்சிருந்த
மதிய உணவு பொட்டலத்தை
மறவாது எடுத்து வாசல் வர...
அலுவலக 'பீவர்' அடித்தது!

வாகனம் உதையில்தான்
ஞாபகம் வந்தது,
'அடடே...
பிரசவத்துக்குப் போனவளிடம்
போன் பேசலியே...!'

21 ஆகஸ்ட், 2012

தமிழ்நாட்டில் காந்தி

காந்தியின் போராட்டத்தில் தமிழர்கள்

காந்திக்கும் தமிழகத்திற்குமான தொடர்பு, அவர் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டது. தென்னாப்ரிக்காவில் இந்தியர்களுக்காக அவர் நடத்திய போராட்டத்தில் பெருமளவு பங்கெடுத்தவர்கள் தமிழர்களே. 
 
1896ஆம் ஆண்டு தென்னாப்ரிக்கத் தமிழர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக முதன்முறையாகத் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் காந்தி. 
 
தென்னாப்ரிக்காவில் காந்திக்கு உதவியாளராகப் பணியாற்றியவர் வின்சென்ட் லாரன்ஸ் என்ற தமிழர்தான். 
  
இருபத்தொரு ஆண்டு கால தென்னாப்ரிக்கப் போராட்டத்தில் மகாத்மாவுக்குப் பக்கபலமாக இருந்த தென்னாப்ரிக்கத் தமிழர்களுக்கு சென்னை மாகாண மக்கள் ஆதரவு அளித்தனர். எனவே, தமது போராட்டத்திற்கு ஆதரவு அளித்த சென்னை மாகாணத்தில் கண்டிப்பாகச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவேண்டும் என காந்தி நினைத்திருந்தார். அதுவே அவர் தமிழகத்திற்கு அதிகமுறை வருகை புரிய காரணம்.
  
 1896 முதல் 1946 வரையிலான காலகட்டத்தில், இருபதுமுறை தமிழகத்திற்கு காந்தி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காந்தியின் ஒவ்வொரு தமிழகப் பயணங்களும் தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது. ஆதரவாளர்கள் மட்டுமன்றி, தம் கருத்திற்கு எதிரானவர்களையும் நேரடியாகச் சந்தித்து, தம் கருத்தை வலியுறுத்துவதை தமது வழக்கமாக வைத்திருந்தார் காந்தி. இதுவே அவரின் வெற்றிக்குக் காரணம் எனக் கூறலாம்.
 
அரிஜன ஆலயப் பிரவேசம்
 
மற்ற மாநில மக்களைவிட தமிழக மக்கள் மிக விரைவாகவே காந்தியின் கருத்துக்களை உள்வாங்கினர். முதன்முறையாக அரிஜன மக்கள் ஆலயப் பிரவேசம் செய்யும் நிகழ்வு - வைத்தியநாத அய்யர் தலைமையில் மதுரையில் நடந்தது. இதன்மூலம் அரிஜன மக்களின் ஆதரவும் காந்திக்குக் கிடைத்தது. 
 
தமிழகத்தில் கதர் உற்பத்தியும், விற்பனையும் மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருந்ததற்குத் தமிழர்களின் ஆதரவுதான் காரணம். கதர் உற்பத்தியின் பயிற்சிக் களமாகவே தமிழகம் திகழ்ந்தது எனலாம். இன்றுவரை திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் கதராடைக்கு வரவேற்பு இருந்துகொண்டுதான் உள்ளது.

அரை நிர்வாணப் பக்கிரி

காந்தியின் உடைமாற்றம் நடந்தது இருமுறை. தென்னாப்ரிக்காவில் ஆங்கிலேயர் பாணி உடைகளை அணிந்துகொண்டிருந்த காந்தி, பின்னர் வேட்டி ஜிப்பா என்ற சாதாரண உடையை உடுத்த ஆரம்பித்தார். இந்த உடை தென்னாப்ரிக்காவில் உள்ள தமிழர்கள் அணியக்கூடிய உடை.

மதுரையில் ஏழை மக்கள் ஒரே ஒரு வேட்டியை மட்டும் உடையாய் அணிவதைக் கவனித்த காந்தி, மீண்டும் தமது உடையில் மாற்றத்தை மேற்கொண்டார். அவர் எடுத்த பல முக்கியமான முடிவுகளுக்குக் காரணமாக இருந்தது தமிழர்களும் தமிழ்நாடும் என்பதற்கு இதுவே ஓர் சிறந்த உதாரணம். ‘அரை நிர்வாணப் பக்கிரி’யாகக் காந்தி மாறிய இடம் மதுரை. ஒரு புதிய காந்தி அங்கு பிறந்தார் என்றே சொல்ல வேண்டும்.


மகாத்மாவின் தமிழாசை

1937ஆம் ஆண்டு சென்னையிலுள்ள இந்தி பிரச்சார சபாவிற்கு வருகை புரிந்த மகாத்மா காந்தி,  ‘‘எனக்கு தென்னிந்திய மொழிகள் பற்றி ஒன்றுமே தெரியாது என்பதில்லை. தென்னாப்ரிக்க சிறை வாழ்க்கையின்போது, தமிழ் கற்றுக்கொள்ள விரும்பினேன். ஜி.யு. போப்பினுடைய தமிழ் கையேடு என்னை மிகவும் கவர்ந்தது. சிறையில் இருந்து விடுதலை பெற்றதும் தமிழ் படிக்க வாய்ப்பில்லாமல் போய்விட்டது’’ எனத் தமிழ் மொழி மீது தமக்கிருந்த ஆசையை வெளியிட்டார்.
 
தென்னாப்ரிக்காவில், ‘இந்தியன் ஒப்பீனியன்’ என்ற பத்திரிகையைத் தொடங்கிய காந்தியடிகள் அதை ஆங்கிலம், இந்தி, குஜராத்தி மற்றும் தமிழ் மொழிகளில் வெளியிட்டார். இது தமிழுக்குக் கிடைத்த ஓர் அங்கீகாரம்.
 
காந்தி தமிழுக்குக் கொடுத்த முக்கியத்துவம் வேறு எந்த மொழி மக்களுக்கும் கிடைக்காதது. தம்முடைய ஒவ்வொரு முடிவுக்கும் முக்கியக் காரணியாக அமைந்தது தமிழ்நாடு என்றே அவர் கருதினார். இது கண்டிப்பாக ஒவ்வொரு தமிழருக்கும் கிடைத்த பெருமை.
 
மகாத்மாவின் தமிழ்நாடு சுற்றுப்பயண நிகழ்வுகள்
 
ஈரோட்டிலுள்ள வ.உ.சி. பூங்கா அமைந்துள்ள இடத்திற்குக் காந்தி வருகை புரிந்ததன் அடையாளமாக அங்கு காந்தியின் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. 1927ஆம் ஆண்டு காந்தி உயிரோடு இருக்கும்பொழுது அமைக்கப்பட்ட அந்தச் சிலையை வைஸ்கவுண்ட் கோஷன் என்ற வெள்ளைக்கார ஆளுநர் திறந்து வைத்தார். காந்தி இளம்வயதில் எப்படி இருந்தார் என்பதைச் சித்தரிக்கும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது   என்பது குறிப்பிடத்தக்கது.
 
காந்தி தமது மனசாட்சிக்கு எப்பொழுதும் முக்கியத்துவம் கொடுப்பவர். மேலும் தம்முடைய முடிவுகளைத் தமது மனசாட்சி கூறியபடியே எடுத்ததாகவும் கூறுவார். ஆனால், அதனைச் சோதித்துப் பார்க்க இரண்டு மனசாட்சிக் காவலர்களை வைத்திருந்தார்.  ராஜாஜி மற்றும் சீனிவாச சாஸ்திரிதான் அவ்விருவர். இந்த இருவரும் தமிழர்கள் என்பது நாம் பெருமை கொள்ளவேண்டிய  விஷயம். காந்தியடிகள் சில சமயங்களில் தாம் எழுதிய ஆங்கிலத்தை சீனிவாச சாஸ்திரியிடம் கொடுத்து திருத்திக் கொள்வாராம்.

சென்னை இந்தி பிரச்சார சபா வெள்ளி விழா நிகழ்ச்சியில் காந்திஜியைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் ஆயிரக்கணக்கான மக்கள் மின்சார ரயில் மூலம் தியாகராய நகருக்குப் படையெடுத்துள்ளனர். இரண்டரை மணி நேரத்தில் சுமார் இருபது ஆயிரம்பேர் ரயில் பயணம் செய்திருக்கின்றனர். கூட்டம் மிகமிக அதிகமாகவே, தியாகராய நகர் ரயில் நிலைய டிக்கெட் வழங்கும் அலுவலகத்தார், காந்தி பேசும் விழா பந்தலுக்கே அலுவலகத்தை இடம் மாற்றிக் கொண்டுவந்து, பயணச்சீட்டு வழங்க ஆரம்பித்து விட்டாராம். 

மகாத்மா காந்தி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது, ஒவ்வொரு குக்கிராம மக்களும் தங்கள் ஊருக்கு வரவேண்டும் என விரும்பினர். பழனிக்கும் உடுமலைப்பேட்டைக்கும் இடையில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் வன்னியர் வலசு. இந்தக் கிராமத்தில் சாலை வசதி இல்லை. தங்கள் கிராமத்திற்குக் காந்தி வரவேண்டும் என அந்தக் கிராம மக்கள் வலியிறுத்த, சாலை வசதியைக் காரணம் காட்டி காந்தி வரமாட்டார் என அறிவிக்கப்பட்டது.  ஆனால், பொழுது விடிந்ததும் அனைவருக்கும் ஆச்சரியம். எந்தக் கிராமம் சாலை வசதி இல்லை எனக் காந்தியின் பயணத்தில் புறக்கணிக்கப்பட்டதோ, அந்தக் கிராம மக்கள் இரவோடு இரவாகக் காந்தியின் வருகைக்காகச் சாலையை அமைத்திருந்தனர். பின்னர், காந்தி வன்னியர் வலசு கிராமத்தில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். காந்தியின் மீது தமிழர்கள் வைத்திருந்த பற்றுதலுக்கு இதுவே சிறந்த சான்று.

 (நன்றி : புதிய தலைமுறை)

20 ஆகஸ்ட், 2012

மருத்துவம் அறிவோம்!


சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் இனிப்பான செய்தி!

இனிப்புத் துளசி (Stevia))

ஸ்டிவியா (Stevia) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் மூலிகை பயிரானது தமிழில் இனிப்புத் துளசி (அ) சீனித்துளசி என்றழைக்கப்படுகிறது. பராகுவே நாட்டைத் தாயகமாகக் கொண்டுள்ள இப்பயிரானது ஜப்பான், கொரியா, சீனா, பிரேசில், கனடா மற்றும் தாய்லாந்தில்  அறிமுகப்படுத்தப்பட்டு பயிரிடப்படுகிறது.  மேலும், இப்பயிர் இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகிறது. 
இனிப்புத் துளசியின் முக்கியத்துவம்:

மனிதனின் தினசரி உனவு முறைகளுள் சர்க்கரையானது முக்கியப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் சர்க்கரையானது, கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டதே ஆகும். கரும்பு சர்க்கரையானது அதிகமான கலோரிகளைக் கொண்டுள்ளதால், சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்க்கரையைப் பயன்படுத்த முடியாமல் உள்ளனர். தற்போது இவர்கள் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாக இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரையைப் பயன்படுத்தலாம். ஏனெனில், இனிப்புத் துளசியிலிருந்து பெறப்பட்ட சர்க்கரை, கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனைக் கரும்பு சர்க்கரைக்குப் பதிலாகவும், செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாகவும் பயன்படுத்தலாம்.


இனிப்புத் துளசியில் உள்ள வேதிப்பொருள்கள்:

இனிப்புத் துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு (Stevioside)  மற்றும் ரெபடையோசைடு (Rebaudioside) என்னும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால், கரும்பைவிட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. மேலும், ஸ்டீவியோசைடில் உள்ள இனிப்பின் அளவு சர்க்கரையைவிட 200-300 மடங்கு அதிகமாக உள்ளது. இனிப்புத் துளசியின் உலராத இலைகளில் (Fresh leaves) 15-20 சதவிகிதம் என்ற அளவில் ஸ்டீவியோசைடு என்ற வேதிப்பொருள் காணப்படுகிறது. உலர் இலைகளில் (Dried leaves) ரெபடையோசைடு – ஏ (Rebaudioside-A)  2-4 சதவிகிதமும் உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், சோடியம், மெக்னிசியம், கால்சியம்,  பாஸ்பரஸ், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளது.




இனிப்புத் துளசியை இனிப்பூட்டியாக (Sweetener) பயன்படுத்துவதால்
வரும் நன்மைகள்: 


  • இரத்த அழுத்தம் (Blood pressure) மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் (Blood sugar) அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.


  • இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை (zero Calories) மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை.


  • ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது.


  • சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை  டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம்.


  • இதைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.




துளசி என்றால் எல்லாருக்கும் தெரியும். அதன் மருத்துவ குணங்கள் ஏராளம். அதற்கு ஆன்மிக மகத்துவமும் உள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன. எல்லார் வீட்டிலும் இருக்கவேண்டிய செடிகளுள் முதன்மையான இடத்தைப் பிடித்திருப்பது துளசி செடிதான். அவரவர் வசதிக்கேற்ப சிறிய தொட்டியில்கூட துளசி செடியை வளர்த்து வரலாம். ஆனால் அதனைக் கவனமாகப் பராமரிப்பது அவசியம்.

எளிதாகக் கிடைக்கும் இந்தத் துளசியில்தான் எத்தனை எத்தனை மகத்துவங்கள். அவற்றில் ஒரு சில...



  • ஆரோக்கியமான மனிதன் துளசி இலையைத் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. 


  • ஜீரண சக்தியையும் புத்துணர்ச்சியையும் துளசி இலைமூலம் பெறலாம். வாய் துர்நாற்றத்தையும் போக்கும். நமது உடலுக்கான கிருமி நாசினியாகத் துளசியை உட்கொள்ளலாம். 
  • துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரைத் தொடர்ந்து பருகி வந்தால், நீரழிவு எனப்படும் சர்க்கரை வியாதி நம்மை நாடாது. கோடை காலம் வரப் போகிறது. வியர்வை நாற்றமும் கூடவே வந்துவிடும். அதனைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றமா? உங்களிடமா? ஜோக் அடிக்காதீங்க என்பார்கள் அருகிலிருப்போர்.


  • தோலில் பல நாள்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும். எப்படித் தெரியுமா? துளசி இலையை எலுமிச்சை சாறுவிட்டு நன்கு மைபோல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படை, சொரி இருந்த இடம் தெரியாமல் மறையும்.


  • சர்க்கரை நோய் வந்தவர்களும் துளசி இலையை மென்று தின்னலாம். தொடர்ந்து இதனைச் செய்து வந்தால் சர்க்கரை அளவு கட்டுப்படும். மருந்து மாத்திரை மூலம் செய்ய முடியாததை இந்த அருமருந்தான துளசி செய்துவிடும்.

  • சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொள்ளவேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்குத் தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

  • முழுமையான ஆரோக்கியத்திற்கு உகந்த, முற்றிலும் இயற்கையான துளசி இலை சாற்றிலிருந்து தயாரிக்கப்பட்டு, உடல் நலத்திற்கு முக்கியதுவம் அளிக்கும் வகையில் இயற்கையான சர்க்கரை 100 சதவிகிதம் இந்த இனிப்பு துளிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது .

13 ஆகஸ்ட், 2012

மறக்கமுடியாத தலைவர்கள்

மனிதப் புனிதர் : காமராசர்

பெருந்தலைவர் காமராசர் இரவு நீண்ட நேரம் விழித்து, கடமை தவறாது பணியாற்றியவர். இடம் பொருள் பாராது எங்கும் படுத்த உடனே அவர் தூங்கி விடுவார். எங்காவது நெடுங்தூரப் பயணம் என்றால், காரின் பின் சீட்டில் அப்படியே சுருண்டு படுத்துவிடுவது அவரது வழக்கம். 
ஒருமுறை வெளியூர் சுற்றுப் பயணம் முடித்து அவர் திரும்பிக்கொண்டிருந்த சமயம், காரின் பின்இருக்கையில் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். கார் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அப்படியே நிற்பதும், ஏராளமான கார்கள் கடந்து செல்லும் சப்தமும் அவரை விழிப்படைய செய்தது.

காமராசர் எழுந்து வெளியே பார்த்தார். சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்தில் (அப்போது மர்மலான் பாலம்) ஏற்பட்ட டிராபிக் ஜாமில் வண்டி நின்றிருந்தது. வண்டியின் முன்னால் போய் பார்த்தார். நடு பாலத்தில் ஒரு லாரி பிரேக் டவுன் ஆகியிருந்தது. ஒரே ஒரு டிராபிக் போலிஸ்காரர் போக்குவரத்தைச் சரிபடுத்த முடியாமல் தவித்துக்கொண்டிருந்தார்.
தாம் ஒரு முதலமைச்சர் என்பதையெல்லாம் மறந்துவிட்டு, உடனே காரைவிட்டு இறங்கி, அந்தப் போலிஸ்காரருக்கு உதவியாக இருந்து, போக்குவரத்தைச் சரிப்படுத்திவிட்ட பிறகே காரில் ஏறினார்.
அதுமட்டுமல்ல, சைதாப்பேட்டை போலிஸ் ஸ்டேஷன் போய், ''இதுபோன்ற இடங்களில் கூடுதலாக இன்னொருவரைப் போட்டால் என்னண்ணேன்'' என்று பொறுப்போடு கண்டித்து விட்டும் வந்தார். 
(நன்றி : விடுதலை)
பெருந்தலைவர் காமராசரைப் பற்றி இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். படிக்காத மேதையானாலும் அவரொரு அறிவுக் களஞ்சியம். இதுபோன்ற நல்ல பழக்க வழக்கங்கள் அவருள் பொதிந்திருந்தன. பதவி, பட்டம் என எதையுமே அவர் துச்சமென மதித்தவர். மனிதம் மட்டுமே அவருள் ஆழ்ந்திருந்தது, அவரை அதுதான் ஆட்சிப் பீடத்தில் ஏற்றியது.

11 ஆகஸ்ட், 2012

தத்துவக் கதை

இயற்கையின் நியதி; இறைவனின் பிடியில்!


கை கால்கள் நன்றாக இருக்கும் ஒருவர் நம்மிடம் பிச்சை கேட்டு வந்தால், 'எல்லாம் நல்லா தானே இருக்கு. உழைச்சு பிழைக்க வேண்டியது தானே' என்று சொல்லி விரட்டுவோம், இல்லையா? இதோபோன்ற நிலைமை சுவாமி விவேகானந்தருக்கும் ஏற்பட்டது.

சுவாமி விவேகானந்தர் காவி வேஷ்டியும் சட்டையுமாக ஊரெல்லாம் வலம் வருவது கண்ட ஒரு இளைஞன், "இதெல்லாம் ஒரு பிழைப்பா? நீயெல்லாம் உழைத்துப் பிழைக்கக் கூடாதா? வயித்துக்காக இப்படி பிச்சையெடுக்க வருகிறாயே?" என்று கடுமையாகத் திட்டிவிட்டான்.

இதுகேட்ட விவேகானந்தர் ரொம்பவே மனம் நொந்துவிட்டார். அதேநேரம் அந்த நபரின் பேச்சில் இருந்த நியாயத்தையும் உணர்ந்தார்.'அவர் சொல்வதும் சரிதானே! சந்நியாசியானாலும், உழைப்பதற்கு உடல் இருக்கிறதே! அதேநேரம் உழைப்பு அது... இது எனத் திரிந்தால், இறைவனை அடையும் மார்க்கத்தைக் கைவிட வேண்டியிருக்குமே!' எனக் குழம்பிபோன விவேகானந்தர், காட்டுக்குள் சென்று தவமிருந்து உயிரைவிடுவதெனத் தீர்மானித்தார்.

விவேகானந்தர் கண்மூடி தவத்தைத் தொடங்கினார். ஒருநாள் புலி ஒன்று அவர் முன்னால் நின்றது. தற்செயலாகக் கண்திறந்த சுவாமி, புலியை உற்றுப் பார்த்தார். புலி அவரை நோக்கி வந்தது. என்ன நினைத்ததோ தெரியவில்லை, சற்று தள்ளி படுத்துக் கொண்டது.

பாவம் இந்தப் புலி... அதற்குக் கடும் பசிபோலும். நடக்கக்கூட தெம்பில்லாமல் படுத்துவிட்டதே... என்றெண்ணிய விவேகானந்தர், புலியின் அருகில் செல்ல எழுந்தார்.

புலியும் எழுந்தது. திக்... திக்...கான நேரம். ஆனால் புலி எங்கோ ஓடிவிட்டது.

"இறைவா, புலிகூட என்னைக் கொல்லாமல் விட்டுவிட்டதே. என்னை எதற்காக இந்தப் பூமியில்
வாழ வைத்திருக்கிறாய்? என்னிடம் வேறென்ன பயனை எதிர்பார்க்கிறாய்?" என்றபடி விவேகானந்தர் மனதைத் தேற்றிக் கொண்டார். மரண முடிவைக் கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

(தமிழ் இதழ்களில் வந்த கருத்துள்ள கதை)

9 ஆகஸ்ட், 2012

ஊர் வலம் வருவோம்...

பயணம் புதிது

ஆண்டாள் பிறந்த பூமியான திருவில்லிபுத்தூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மம்சாபுரம் என்கிற அழகிய கிராமம் வரும். இந்த ஐந்து கிலோ மீட்டர் என்பது கரடு முரடான காட்டு வழிபோலத்தான் இருக்கும்.

பாதையின் இரு மரங்கிலும் புளிய மரங்கள் புடைசூழ, இருளும் நிலவும்போல நிழலும் வெயிலுமாகக் காணல் நீர்நெளிய பாதையும் நெளிந்து செல்லும். பகலில் பயணிக்கும் யாவரும் தனித்துச் செல்ல சிறிது அச்சப்படுவர். காரணம் வழியெங்கும் எப்போதாவது ஒருவர் வருவார் போவார், மற்றபடி யாரையும் காண இயலாது. அதேற்போல் இரவுவேளையில் பெரும்பாலும் அவ்வழியே செல்வோர் யாரையும் காணமுடியாது. காரணம் ஐந்து கிலோ மீட்டரும் இருளில் மூழ்கி கிடக்கும். ஊதகாற்று மட்டும் உலவும்.

வழி நெடுக பனைமரம், பசுந்தளிர், தென்னை மரம், ஒன்றுவிட்டு ஒன்றாய் புளியமரம் இவை அனைத்தையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பகலில் பயணம் செய்வோர் அதுவும் அதிகாலையில் பயணம் செய்வோரின் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்,

பரவிக்கிடக்கும் பசும் புல்வெளிகளில் நமது தேசிய பறவையான மயில்கள் கூட்டம் கூட்டமாக இரைதேடி அங்காங்கே உல்லாசமாய் திரியும். அதன் அகவு ஒலியும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் குளிர்காற்றும் அதிகாலைப் பொழுதை ரம்மியப்படுத்தும்.
இரண்டு கிலோ மீட்டர் கடந்ததும், கல்மண்டபம் என்றொரு இடம் வரும். அந்தக் காலத்தில் ஆண்டாள் கோயிலிருந்த யானையை இரவு வேளையில் இங்குவந்துதான் கட்டிப்போடுவார்களாம். கற்களால் மட்டுமே அந்த மண்டபம் எழுப்பப்பட்டிருக்கும். சிறியதுதான். பயணக் களைப்பில் வருவோர் போவோரெல்லாம் சற்று களைப்பாரட்டும் என்ற உயர்ந்த நோக்குக்காக இன்று அந்த மண்டபம் யானை இழந்து நிற்கிறது. வெட்டவெளியிலிருந்து வீசும் காற்றும், சுற்றிலும் இருக்கும் பனைமரத்தின் ஓலை அசையும் இசையாகக் கேட்க, சற்று அமர்ந்து செல்வர், நடைபயணமும் சைக்கிள் பயணமும் மேற்கொண்டவர்கள். சமீபத்தில் வெளிவந்த பூ திரைப்படத்தின் முகப்புப் பாடலை இந்த மண்டபத்தைச் சுற்றித்தான் எடுத்தார்கள். அவ்வளவு எளிமையான, அருமையான இடம் இந்தக் கல்மண்டபம்.

மம்சாபுரம்


மம்சாபுரம் எல்லைக்குள் நுழையும்போது நாம் முதலில் பார்க்கும் இடம் ஆரம்ப சுகாதார மையம். இதுதான் நாம் முதலில் காணும் ஆள் நடமாட்டம் உள்ள இடம். இனி அடுத்தடுத்து சிறு சிறு ஊர்களாய் மம்சாபுரம் விரிவடையும்.

முதலில் வருவது காந்திநகர். அதற்கடுத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வெறும் வயல்வெளிதான். 15 மீட்டர் அளவுக்குத்தான் தார்ச்சாலைகள் நம்மை ஊருக்குள் அழைத்துச் செல்லும். அதுவும் முழுமை பெறாமல் குண்டும் குழியுமாய் இருக்கும். பேருந்தில் வந்தாலும், வேறெந்த வாகனத்தில் வந்தாலும் இந்த ஒரு கிலோ மீட்டர் பயணத்தில் உடம்பு நோகத்தான் செய்யும்.

வயல்வெளியின் ஓரமாய் ஊரின் கழிவுநீரும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், சுற்றியுள்ள கம்மாய் நிரம்பியதுபோக எஞ்சிய நீரும் கலந்தோடும் சிறு ஓடை இருக்கும். இந்த ஓடையிலிருந்து வெளியேறும் மழைநீர் திருவில்லிபுத்தூரில் இருக்கும் தெப்பக்குளத்தில் நிரம்பி, மக்களின் அன்றாட தேவையைச் சமாளிக்க பெரிதும் உதவுகிறது.

மம்சாபுரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது 


சிறப்புப் பேரூராட்சியின் அந்தப் பலகை நம்மை வரவேற்கும். மனிதர்களின் வாழ்வின் இறுதிநிலை இடமான இடுகாடுதான் மம்சாபுரம் ஊரின் முகப்பு. ஆம், இடுகாட்டைக் கடந்துதான் மம்சாபுரம் ஊருக்குள் செல்லமுடியும். மெயின் ரோட்டின் அருகிலேயே இடுகாடு இருப்பதால், இதற்கென்று தனியாகப் பேருந்து நிறுத்தமும் உண்டு. அதனைக் கடந்தால் கீழூர் வரும். அதனைக் கடந்தால், மம்சாபுரத்தின் மையப்பகுதி.

பேருந்து நிறுத்தம் 


ஊர் மொத்தத்திற்கும் இந்த இடம்தான் பொது சந்திப்பு. இதன் நாலாபுறமாய் சாலைகள் பிரிந்து செல்லும். 1 கிலோ மீட்டருக்கு மேற்கு விரிந்து செல்லும், 1கிலோ மீட்டருக்கு வடக்கே பாதை பிரிந்து செல்லும், 0.5 கிலோ மீட்டருக்குத் தெற்குத் தெருவாகப் பிரியும்.

மேற்கே செல்லும் பாதை நீண்டுக்கொண்டே சென்று மேலும் மூன்று கிலோ மீட்டர் பயணத்தை உள்வாங்கிக்கொண்டு மேற்குத் தொடர்ச்சியின் அடிவாரத்தில்போய் முடியும். இதோடு மனிதர்கள் வாழும் நிலப்பரப்பின் எல்லை முடிவடையும்.

வடக்கே நீண்டு செல்லும் பாதை, மக்கள் வசிப்பிடம் போக, வயல்வெளி வரும். அதுவும் விரிந்துகொண்டே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையின் இன்னொரு பக்கத்தில் போய் முடியும்.

இராஜபாளையத்துக்கு வழி


பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே செல்லும் பாதை இராஜபாளையம் என்னும் காட்டன் சிட்டிக்குச் சென்று, சங்கரன்கோவில், குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்குச் செல்ல வழிவகுக்கும்.

முகம்மதுசாகிப்புரம்


மத்திய அரசின் கெஜட்டில் மம்சாபுரத்திற்கு முகம்மதுசாகிப்புரம் எனப் பெயரிடப்பட்டிருக்கும். இன்றும் தபால் அலுவலகத்தில் இந்தப் பெயரில்தான் முத்திரை பதிக்கிறார்கள்.

முகப்பு இடுகாடாய் போயிற்றே, ஊருக்குள் எப்படி இருக்குமோ என்ற எண்ணம் வேண்டாம். ஏனெனில், மம்சாபுரம் ரொம்ப நல்ல ஊருங்க. எந்தக் காலத்துக்குப் போனாலும், அதாவது கோடைக்காலம், குளிர்காலம் இப்படிப்பட்ட காலங்களில் இங்கு வருபவர்களைப் பாந்தமாய், பாசமாய் பார்த்துக்கொள்ளும் பவ்வியமான ஊருங்க. அதிகாலையும் அந்திமாலை தொட்டு, இரவு முழுவதும் இதமான காற்றும், மென்மையான குளிருமாய் ஊரே அழகுற இருக்கும்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த மம்சாபுரத்தில் முஸ்லிம் தவிர்த்து எல்லா இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்கிறார்கள். மத்திய அரசு இவ்வூருக்கு வைத்த பேருக்கும் இங்கு வசிப்பவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் அதாவது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், இங்கே முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கலாம். அல்லது முஸ்லிம் ஆளுமைக்குள் இருந்திருக்கலாம்.

மம்சாபுரத்தில் வாழும் மக்களுக்கிடையே அப்பப்ப சண்டை சச்சரவு எழுந்தாலும், நாளடைவில் மாறிபோகும். சாதி பாகுபாடின்றி வாழ்ந்தாலும், சிற்சில உள்பூசல்கள் அவ்வப்போது எழத்தான் செய்யும்.

காதல் புகா இடமுண்டோ?


ஊருக்குள் இளவட்டங்களுக்கிடையேயும் முதிர்ச்சிவடைந்தவர்களிடையேயும் காதல் பித்து வரும் போகும். சிலரது காதல் சீண்டப்பட்டு சின்னாபின்னாமாகவும் ஆகியிருக்கிறது. சிலரது காதல் அதிசயமாய்ப் பூத்து, பகைமை மறந்து பலரையும் இணைத்து வைத்திருக்கிறது.

சாதிவிட்டு சாதி காதலிப்பது, கல்யாணம் செய்துகொள்வது, பெத்தவங்க மனசு மாறுவாங்க என்கிற நினைப்பில் ரொம்ப தைரியமாய் உள்ளூரிலேயே இணைந்து வாழ்வது, இப்படி இன்றும் இங்கே காதல் வாழ்வு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பழைமைவாதிகளான பெற்றோர்கள் மாறியதாய் தெரியவில்லை. இன்னும் பழைய பஞ்சாங்கமாகத்தான் இருக்கிறார்கள்.

தெரு எங்கும் திருவிழா


திருவிழாக் காலங்களில் ஊரே கூத்தாடும். ஒரு வாரம், பத்து நாள்கள் எனத் திருவிழாக்களின்போது குடும்பம் குடும்பமாய் கூடி கும்மாளமிடுவர். இந்த நாள்களில்தான் வெளியூருக்குப் போயிருந்தவர்கள் ஒன்றுகூடுவார்கள். நல்லது பொல்லது சமைப்பார்கள். துணி மணிகளை எடுப்பார்கள். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.

அதேபோல் பணக்காரப் பொண்ணுகளை இந்தத் திருவிழாக் காலங்களில்தான் பார்க்க முடியும். ஒவ்வொரு பெண்களும் அழகுனா அழகு அவ்வளவு அழகாய், சினிமா நடிகைகள் தோற்று பளபளப்பாய் இருப்பார்கள். அந்தக் கிராமத்தில் அவ்வளவு உசத்தியான உடைகளை உடுத்தும் லட்சணமான பெண்களை வேறெங்கும் பார்க்க முடியாது. அவர்கள் அனைவரும் தாய் தகப்பனுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் சொல்லுக்கு அடங்குவார்கள்.

கோழி எப்படி தன் குஞ்சுகளைப் பருந்துவிடமிருந்து காக்கிறதோ, அப்படித்தான் பொத்தி பொத்தி பெற்றோர்கள் கவனமாக வளர்ப்பார்கள். இளவட்ட ஆண்களும் சரி, கூடவே படிக்கிற பசங்களும் சரி, தம்மிடம் பேச மாட்டாளா என ஏங்கி இருந்த காலமும் உண்டு. அப்படிபட்ட தருணத்தில்கூட அந்த வீட்டுப் பெண்கள் காதல் வயப்பட்டு, பெற்றோரைக் கலங்கப்படுத்தியதில்லை.

திருவிழாக் காலங்களில்தான் கோயிலுக்கும், விளையாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்கும் அவர்கள் அழைத்து வரப் படுவார்கள். அந்த வேளையில் இளைஞர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆளவட்டம் போட்டு அலைவார்கள், பேசுவதுபோல பாவணை செய்வார்கள். லந்து அடிப்பார்கள், சிந்து வடிப்பார்கள். அவர்களது காந்த விழிகளிடமிருந்து பெண்களைக் காப்பற்ற அந்தப் பெற்றோர்கள் படாது பாடு படுவார்கள்.

இம்மாதிரி பிள்ளைகளும் என்றைக்கும் இல்லாத திருநாளாய் அன்றைக்கு ரொம்பதான் பவுசு காட்டுவார்கள். ஆனால் இரவு வேளையில் சாமி வீதிஉலா வரும்போது சிலம்பம் ஆடி வரும் வாலிபர்களைத் தங்களுடைய வீட்டு மாடிகளிலிருந்து ஓரக்கண்ணால் ரசிக்கத் தவறமாட்டார்கள். ரசிப்பதோடு மட்டுமல்லாமல், ஆணழகர்களுக்கு மார்க்கும் போடுவார்கள். அதோடு சரி அவர்களது ரசனையும் லயப்பும், விடிந்தால் மாறிவிடும்.

சாரி ஓட்டம்


திருவிழாவில் களைகட்டுவது வெட்டுக்குதிரை என்கிற சாரி ஓட்டம்தான். அன்றைக்குச் சாமியை வீதி உலா கொண்டுவரும்போது, விடலை பசங்க ரொம்ப தெம்பாய் இருப்பார்கள். பூசாரியையும் சாமியையும் உண்டு இல்லை என ஆக்கிவிடுவார்கள். அலங்கரிக்கப்பட்ட சாமி, குதிரை சப்பரத்தில் ஒய்யாரமாய் எழுந்தருள, பூசாரியும் உடன் அமர்ந்திருப்பார். இந்தப் பக்கம் பத்துபேரு, அந்தப் பக்கம் பத்துபேரு பிடித்துக்கொண்டு சப்பரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். ஒரே ஓட்டமாய் ஓடினாலும் பரவாயில்லையே... ஓடிய தெருக்களிலேயே மீண்டும் மீண்டும் பின்புறமாக வருவதும் போவதுமாக அலக்களிப்பார்கள். பார்ப்பதற்குக் கண்கொள்ள காட்சியாக இருந்தாலும், 'அம்மன் காத்திடுவாள்' என்கிற தைரியத்தில் பூசாரி கொலையப் பிடித்து உட்கார்ந்திருப்பார். எல்லரது தோள்பட்டைகளும் கண்ணிபோய் ரணப்படும். அன்றைக்கு மட்டும் சாமி கோயில் வந்து சேர, கோழி கூவிரும்.

ஒவ்வொரு நாள் திருவிழாபோதும் ஒவ்வொரு தலைக்கட்டுகாரர்களும் கோயில் பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாகச் செய்வார்கள். இதுபோக ஊர்மகமை வேறு தனிச்சிறப்பாக இருக்கும். அம்மன் வீதி உலா வரும் சம்பரம், இன்னும் பிற வாகனங்களை நல்லமுறையில் வடிவமைத்து, வண்ணம் தீட்டி இருப்பார்கள். இரவு வேளையில் பளிச்சிடும் சீரியல், விளக்கு வெளிச்சத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீதி உலா வரும்போது பார்ப்போர் கையெடுத்துக் கும்பிட்டு, கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். அவ்வளவு பக்தியாய் இருக்கும் அந்த நாள்கள்.

பனைத்தொழில்


மம்சாபுரத்தில் வசிக்கும் அதிகம்பேர் நாடார் இன மக்கள்தான். இவர்களுக்குள் தெருத் தெருவாய் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு வகையறாக்களாய் இணக்கமாய் வாழ்கிறார்கள். வடக்குத் தெருவில் வசிப்பவர்கள் சிவந்திபட்டி என தங்கள் பகுதிக்குப் பெயரிட்டுள்ளனர். இவர்களது தொழில் பெரும்பாலும் பனைமரம் ஏறுதல், கருப்பட்டி செய்தல், பதநீர் விற்றல் இப்படியாக இருக்கும். சமீபத்தில் இவர்களெல்லாம் பிளாஸ்டிக், இரும்பு வியாபாரத்தில் முனைந்திருக்கிறார்கள்.

காரணம், தென்னைய வளர்த்தவன் தின்னுட்டு சாவான்; பனையை வைத்தவன் பார்த்து சாவான் என்பதுபோல, பனைத் தொழில் என்பது லேசுபட்டதில்லையே. அந்தத் தொழில் மிக உயர்ந்த தொழில்தான். நாட்டுக்கும் வீட்டுக்கும் வாழும் மக்களுக்கும் பயனுள்ள மரம் பனைமரம்தான். ஆனால் அதனைக் கட்டிக் காப்பதும், அதனைப் பயன்படுத்தித் தொழில் புரிவதும் லேசுபட்ட காரியமல்ல. மரமேறி மரமேறி அவர்கள் கை கால்கள் காய்த்து போயிருந்தாலும் அவர்களது மனம் பசு மாதிரி.

இணையதளத்தில் மம்சாபுரம்

சிவந்திபட்டி பகுதியில் வாழும் மக்கள்தான் புரட்டாசி மாதத்தில் உலகமே மெச்சுகிற அளவுக்குத் திருவிழா நடத்தி, இன்டர்நெட் வரைக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆம், இணையதளத்தில் மம்சாபுரம் என தட்டச்சு செய்தாலே அங்கே விரிந்து கிடக்கும் படங்கள் அனைத்தும் மம்சாபுரத்தை இன்னும் மணக்கச் செய்யும்.


ஊர் பள்ளி


சிவந்திபட்டி மகமைக்குட்பட்ட பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு சாதி, மதம் பேதமில்லாம் எல்லா பிள்ளைகளும் படிக்கிறார்கள். இதன் ஆரம்ப காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். அதேபோல் எம்.ஜி.ஆர். இங்கு வந்து நாடகம் ஒன்று நடத்தி, அதன்மூலம் வசூலான பணத்தை இந்தப் பள்ளிக்காக உதவியிருக்கிறார். இந்தப் பள்ளியில் படித்த எத்தனையோ பேர், வெளிநாடுகளுக்குச் சென்று இன்று பெரிய பெரிய கம்பெனியில் இருக்கிறார்கள். சிலர் அரசியலில் நுழைந்து பெரிய பெரிய பதவி வகிக்கிறார்கள்.

ஊரைச் சுற்றி...

மம்சாபுரம் ஊரைச்சுற்றி யானைக் கூட்டம் பரந்து விரிந்து இருப்பதுபோல் மேற்குத் தொடர்ச்சி மலை விரிந்திருக்கும். இதுதான் ஊரை அரணாய் ... ஒரு தாயைப்போல பார்த்துக் கொள்கிறது. எந்த வித இயற்கை பேரழிவு இந்த ஊருக்குள் வந்ததில்லை. முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மலையிலிருந்து வடிந்து வரும் மழை நீரைச் சேமிக்க சிறுசிறு கம்மாய்களாய் கட்டியுள்ளனர். மலையில் மழை பெய்தால் ஆறு, கிணறு, ஓடை என எங்கும் நீர் கரைபுரண்டோட ஆங்காங்கே வண்ணமலர்கள் பூத்தாடும். சில நேரங்களில் மலையிலிருந்து விநோதமான ஜந்துக்கள், மலைக்க வைக்கும் மலைபாம்புகள் தண்ணீரோடு தண்ணீராய் ஊருக்குள் வந்து மக்களைப் பீதிகொள்ளச் செய்யும்.

கம்மாய் நிறைந்ததும் விதவிதமான பறவைகள் பறந்து திரியும். நிறைய மீன்கள் சலுகை விலைக்குக் கிடைக்கும். கிணறு நிரம்பி வழிவதால் சுண்டான் நண்டான் எல்லாம் நீச்சல் கற்றுக்கொண்டு, ஆனந்தப்படுவர். இப்படிப் பட்ட காலத்தில் வடிந்தோடும் தண்ணீரைச் சேமித்து வைத்து விவசாயத்திற்கு உதவும்படி செய்திருக்கிறார்கள். இன்றும் இந்தக் கம்மாய்கள் நிறைந்தால்தான் ஊருக்குள் தண்ணீர் பஞ்சம் தீரும். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைதான் இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமாய் இருந்து வருகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் தூயக் காற்றும், மூலிகை மணமும் அவ்வூர் மக்களை எந்த நோக்காடும் எதுவும் செய்யாதுபடிக்குக் குணப்படுத்துகிறது. செண்பகா நீர்வீழ்ச்சி, சறுக்காம்பாறை, காட்டழகர் கோயில், செண்பகத்தோப்பு இன்னும் பிற அரிய இடமெல்லாம் அங்குதான் உள்ளன. இந்த மலையில் விளைந்த மூலிகையைத்தான் ராமர்பிள்ளை மூலிகைப் பெட்ரோல் செய்ய பயன்படுத்தினார். இன்னும் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. வெளிநாட்டவர்போல் நாமளும் ஆராய்ச்சியில் இறங்கி செய்தால், நம் நாட்டுக்கும் நல்லதொரு பயன் கிடைக்க வழிப்பிறக்கும். இந்த இடங்களுக்கெல்லாம் சென்றுவர கண்டிப்பாக துணிவு வேண்டும், அவ்வளவு திகிலாய் இருக்கும்.
(தொடரும்)

29 ஜூலை, 2012

வாழும் வாக்கியங்கள்

அனுபவக் குரல்


உன் கடமையைச் செய்ய முற்படு;
அப்போது உன் தகுதியை அறிந்துகொள்வாய்.  - கதே

சாக்குப்போக்குச் சொல்லாதீர்; 
அது உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளும் வழியாகும். - ஷெப்பர்ட்

அறிவற்ற சிநேகிதனிடம் சேர்வதைவிட,
புத்திசாலியான விரோதியை அடைவதுமேல். - பெர்னாட்ஷா

கவலையைவிட மிகவும் கொடியது,
ஒருவனிடம் உள்ள சந்தேகம். - டிவாலோஸ்

எதிர்பார்ப்பே இல்லாவிட்டால்
ஏமாற்றத்துக்கு அவசியம் இல்லை. - அகிலன்

எதற்கும் தயாராக இருப்பவனை நோக்கித்தான்
வாய்ப்புகள் வரும். - லுயிஸ் பாய்சர்

கொடுக்கும் கொடையைவிட
கொடுப்பவனின் மனநிலையே
அவனை அடையாளம் காட்டுகிறது. - சாணக்கியன்

வசந்தம் ஒரே நாளில் மலர்ந்து விடுவதில்லை. அதுபோல
வாழ்வில் உயர்வும் ஒரே நாளில் கிட்டிவிடாது. - அரிஸ்டாட்டில்

எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அதற்கு 
முதல் தேவையாக இருப்பது தன்னம்பிக்கைதான். - சாமுவேல் ஜான்சன்

தன்னம்பிக்கை இல்லாதவன் வாழ்க்கை,
காலால் நடப்பதற்குப் பதிலாக தலையால் நடப்பதுபோன்றது. - எமர்சன்

விதியின் பலன் இல்லையென்றாலும்,
முயற்சியின் பலன் கட்டாயம் உண்டு. - கார்ல்மார்க்ஸ்

வேகமாக உயர்வது அல்ல பெரியது,
எப்போதுமே உயர்ந்தபடி இருப்பதுதான் பெரியது. - இப்தார்க்

பிறருடைய துன்பங்களை நினைத்துப் பார்த்தால்,
நம்முடைய துன்பங்களைச் சகிக்க கற்றுக்கொள்கிறோம். - மார்க் ட்வைன்

மனிதனின் ஆசைக்கு அளவு இல்லை.
அவன் ஆற்றலுக்கும் எல்லை இல்லை. - மேக்ஸிம் கார்க்கி

அலங்கார மாளிகையில் அடிமையாகத் தலைவணங்கி வாழ்வதைவிட,
இடிந்த பாழடைந்த வீட்டில் சுதந்திரமாக வசிப்பது மேல். - மூர்

நல்ல மனிதர்கள்

காமராஜரின் மனித நேயம்

காமராஜர் முதல்வராக இருந்த அந்த நாள்களில், பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கி வந்து தருவார். முதல் தளத்தின் முன்பாக இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ஒருமுறை "ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறேன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ளே இட்லி வாங்கி வந்துடு" என்று 100 ரூபாயைக் கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகிக் காத்திருந்தார்.

நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுத்தடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. அவரைப் பார்த்ததும், "ஏன்யா... நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா" என்று எகிறினார் மூக்கையா தேவர்.

மண்ணாங்கட்டிக்குக் கோபம். "என்னங்கய்யா நீங்க... இங்க ஆஸ்ட்ல அவ்வளவு இட்லி இல்லைனு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாய்க்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா" என்று பதிலுக்குச் சத்தம் போட்டார். இதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி... அப்பாவி... அவ்வளவு வெள்ளந்தி!

இப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவைப் படித்துகாட்டச் சொல்லி வீட்டில் அழுதுபுரண்டு கதறினார். "அரசாங்க உத்தியோகத்தில் எழதப் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்கக்கூடாது, பணியிலிருந்து நீக்கப்படுகிறார்கள்" என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்தக் கடிதம். 
 
இரண்டு நாள் கழித்து, பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார் மண்ணாங்கட்டி. மூக்கையா தேவர் முன் தரையில் விழுந்து கதறி அழுகிறார். அவரும் என்னவென்று கேட்க, "இப்படி ஓர் உத்தரவு வந்திருக்கிறதே? என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா" என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா..." என்றார் மூக்கையா தேவர். 
 
அப்போதெல்லாம் நேரடியாகத் தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.
மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது.

மறுமுனையில் முதல்வர் காமராஜர். யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேணும்? என்கிறார்.

"ஐயா... நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறேங்க ஐயா..." என்றபடியே அருகில் இருந்த மூக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்திலிருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. 
 
"எழுதப் படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார் மூக்கையா தேவர்.
மறுமுனையிலிருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் "ஐயாஎழுதப் படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க" என்கிறார் மண்ணாங்கட்டி
 
மறுமுனையில் பேச்சே இல்லை....

அடுத்த முப்பது நிமிடத்தில் உயர் அதிகாரிகள்  மூன்றுபேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களைக் கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வரிடம் எனப் புரிகிறது. மூக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி "ஐயா நீங்களும் வாங்க" என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜரை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதல்வரின் அறையில் உள்ள ஷோபாவில்கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி, கதவோரம் நின்றுகொண்டார்கள். 
 
"நீங்கதான் மண்ணாங்கட்டியா..." என்கிறார்​. 
 
"ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா" என்றபடியே காலில் விழுந்தார். 
 
காலில் விழும் கலாச்சாரம் காமராஜருக்கு அரவே பிடிக்காது. அதிகாரிகளைப் பார்க்க, உடனே அவர்கள் எழுப்பி நிற்க வைக்கிறார்கள். 
 
மண்ணாங்கட்டியைப் பார்த்து, "வா... வான்ணேன். வந்து பக்கத்தில உட்காருங்கன்ணேன்" என்றழைக்கிறார். 
 
மண்ணாங்கட்டி தயங்கி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க, தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.
மண்ணாங்கட்டியின் முதுகைத் தட்டிக்கொடுத்து, முகத்தையே உற்றுப் பார்த்தார் முதல்வர் காமராஜர். 
 
பட்டென்று கையெடுத்து கும்பிட்டு, "நான் தப்பு பன்னிட்டேன். தெரியாம செய்திட்டேன்" எனக் கதறுகிறார். 
 
"என்னை மன்னிச்சுடு. அந்தத் தவறை நீதான் புரியவைச்சே... ரெண்டு நாளா உங்க வீட்ல சோறு தண்ணியில்லியாமே? சமைக்கலையாமே....? உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்... எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்...? நான் அப்படி ஓர் உத்தரவு போட்டிருக்கக்கூடாது. இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான்" என்று தட்டிக்கொடுத்து ஆதரவாய்ச் சொல்ல, மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு எழவில்லை...

அடுத்து அங்கேயே ஓர் உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளைப் பார்த்து "இவரை அழைச்சிட்டுப் போங்க. வேலை கொடுத்தாச்சு. இனிக் கவலைப்படாதீங்கன்னு அவரோட மனைவி, குழந்தைங்ககிட்ட சொல்லுங்க"ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். 
 
பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி, "போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய்க் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்" என அந்த அதிகாரிகளிடம் கண்டிப்போடு கூறுகிறார்.
 
மண்ணாங்கட்டிக்குப் பேச வார்த்தைகளின்றிக் கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேறமுதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்துக் கும்பிட்டபடியே அனுப்பி வைக்கிறார்.

ஓர் ஏழையின் கண்ணீர் வலி.. இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவேஎழைகளுக்காகவே வாழ்ந்தவர்...!

கவிதை

எதிரே வந்தவன்...


கைகாட்டித் திரும்புகையில்
மனம் காட்டிக் கொடுத்தது
எதிரே வந்தவன் மோதிடுவான் என்று!

நினைத்ததுபோலவே
இடித்த அவன்
நிற்காமல் ஓடிவிட
நின்றபடி தேம்புகிறேன் நான்!

போக்குவரத்து நெருக்கடியில்
இடிபாடுகளென்பது சகஜந்தான்,
இருந்தும் பதற்றம் ஏன்?

எத்தனைதான் சிந்திப்பது?
வீதியில் இறங்கியபின்
சிந்தனை தேவையா?

தொடர் கேள்விகளுக்கு
விடைதெறியாது
தேம்பும் என் மனத்தைத்
தேற்றும் முயிற்சியில்
தோற்றுபோனேன்!

- மம்சை செல்வக்குமார்