18 பிப்ரவரி, 2013

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்


கவிதை : அருவி

ரம்மியமான
அந்தப் பொழுதில்
சிறகடிக்கும்
சிற்சிறு பறவைகள்
பட்டாம்பூச்சிகள்
படபடக்க
மணம் கமழும்
அந்த வனத்தில்
காற்றோற்றமான அந்தியில்
காலற நடை பயில
எத்தனை பிறவி எடுத்தாலும்
அத்தனைக்கும் அங்குதான்
அடக்கமாகனும்
அமரராகனும்

அப்படிபட்டதொரு
அழகிய வனத்தில்
புதிதாக மெட்டதமைத்த
புரியாத பாஷையில்
எழுதப்படாத ராகத்தில்
அற்புதமான ஒரு
ரம்மியம் கண்டேன், கேட்டேன்
அங்கே என் கண்முன்னே
அருவி ஒன்று குதித்துக் கொண்டிருந்தது
அதில் குருவி ஒன்று குளித்துக் கொண்டிருந்தது

அற்புதத்தை எட்ட நின்றுதான்
அனுபவிக்கவேணும்
அருகில் சென்று
குதூகலித்தால்
ஆபத்தாகிவிடுமோ என்றொரு
அச்சம், மிச்சமில்லாமல்
என்னைக் கவ்விக் கொண்டது

அதுமட்டுமல்லாது,
குருவியின்
குதூகலமும்
குலைந்துவிடும் அந்தக்
குழப்பத்திலேயே
வனத்தை அனுபவிக்க
சற்று மறந்துதான் போனேன்

தாமாக உருவான அந்த
வனத்தில்
தயவு தாட்சன்யம் இல்லாது
தாராளமாய்
தண்ணீரைத் தாரை வார்த்தது
அந்த அருவி

சர்வமும் அடங்கிவிட்டதொரு
சங்கல்ப்பம் எனக்குள்
எந்த ஒரு அசபாவிதமும்
நடந்திடக்கூடாது
என்ற ஒரு முன்னெச்சரிக்கை
பதட்டமான நிலையில்
நானும் குருவியும்
அந்த அருவியும்

ஜில் என்றொரு நிலை
என்னுள் புகுந்ததால்
இதயம் சிலிர்த்துக் கொண்டு
மூக்குப் புடைக்க
நாக்குத் துருதுருக்க
தும்மலுக்குத் தயாரானேன்

ஏய்...ஏய்...
சத்தமாய் தும்மிடாதே
சகலமும் கெட்டிடும்
ஆறஅமர நிதானமாய்
வாயை மூடிக் கொண்டு
சத்தமே இல்லாமல்
சத்தமிடு என
காதருகே பட்டாம்பூச்சி
படபடத்தது

சிங் என்றொரு
சத்தத்துடன்
என் அவசியத்தை
அடக்கிக் கொண்டேன்

அந்தக் குருவி
அதனோடு வந்த குருவிகளுடன்
இணக்கமாய் இன்பமாய்
இளகிக் கொண்டு
இணக்கியது
நல்ல ரசனையான குருவி
நான்தான் நாவைக் கடித்து
மென்று முழுங்கிக் கொண்டேன்

சுற்றும் முற்றும்
பார்த்துக் கொண்டேன்
பத்தரமாய் இருக்கேன்
என்பதை உறுதிசெய்துகொள்ள...

கண்ணுக்கு எட்டும்
தூரம்வரை
ஒரே பச்சபசேல்...
நடுநடுவே இடைஇடையே
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
அதுவரை பார்த்திராத
அற்புதமான உயிரினங்கள்

மலர் வகைகள்
பல விதமாய்
விரித்தும் மணத்தும் கிடந்தன

காய், கனி
என எதையும்
இனம் கண்டு
குணம் நுகர முடியாத
தவிப்பான அப்பொழுதில்,

எதையும் தொட்டுவிடாதே
தின்று தீர்த்துவிடாதே
என மனம் எச்சரித்தது
சதா நச்சரித்தது

நான் ஒருவனே
எவ்வளவு நேரம்தான்
ரசிப்பது, புசிப்பது
ரசித்ததையே கலைத்து
புதிதாய் ரசிப்பது?

தனியாய் இருக்கிறாய்
கவனம் கொள்
உயிர் உள்ளேயிருந்து
மிரட்ட, மிரண்டு போனேன்.

பழைய வாழ்வுக்குத் திரும்ப
மனம் தயாராக இருந்தது
ஜீனம் அங்கேயே
நனைத்து, நய்ந்து
களைத்துப் போய்கிடந்தது,
கலைந்து கிடந்தது.

அவசர அவசரமாய்
அத்தனையும்
அள்ளி எடுத்துக் கொண்டு
பரபரக்க படபடக்க
ஓட நினைத்தபோதுதான்

இப்பதான் வந்தே
அதுக்குள்ள போறே
அருவியைக் கண்டா பயமா?
காடு உனக்குப் பிடிக்காதா?
இயற்கை உனக்கு இனிக்காதா?
நாங்க எல்லாம் இருக்கோம்...
பயப்படாதே என
பக்குவமாய் பாசமாய்
மணத்துக் கிடந்த அந்த தென்றல்
மனதுக்குள் ஊடுருவியது

அடுத்தது என மனம்
கடுக்க ஆரம்பித்ததால்
எதை எடுக்க
எதை கோர்க்க
என்கிற நிலைக்குத்
தள்ளப்பட்டேன்...

இந்த உலகத்தில்
ஆனந்தமும் பரவசமும்
அழகும் பரவி கிடக்கிது
அதை அனுபவிக்க
அடுத்த கனத்தை எண்ணக்கூடாது
என்பதை புரிந்து கொண்டேன்.

நாளையை எண்ணும்போது
இன்றை விட்டுவிடுகிறோம்
இன்றை நினைத்து இருந்தால்
நாளை எப்படி வெல்வது?

இந்த மனம் இருக்கே மனம்
அதை அடக்க, முடக்க
நினைத்தால்
அது உதைக்கிறது,
பலமாய் கனைக்கிறது
பாரமாய் கணக்கிறது

அருவியைப் பார்த்துவிட்டு
குதித்து குதித்து குளிக்கலாம்தான்
இயற்கையை ஒருவரே
அனுபவிக்கக்கூடாதே அதில்
ரசனை இல்லையே

அடுத்தமுறை வருகிறேன்
எனச் சொல்வதற்குள்
அந்தக் குளிரான நேரத்தில்
மனம் சூடாகிப் போனேன்

அந்த வனாத்தரத்திற்கு
அத்தனை நண்டு சுண்டுகளையும்
அழைத்து வந்திருக்க வேண்டும்
அவர்களது இன்பத்தை,
ரசனையை, மிளர்ச்சியை,
மிரள்ச்சியான அந்த விழிகளை,
அடக்க ஒண்ணா
அந்த தவிப்பை,
கண்கூடாகப் பார்த்திருக்கலாம்

கனவு சொல்லிக் கொண்டா வருகிறது
அப்படி வந்தால்
அனைவரும்
அங்கே குடிகொள்ளும் அளவுக்கு
அழைத்துச் செல்கிறேன்

தற்போது அந்த மிதப்பிலேயே
தவிப்பிலேயே இருந்துவிடுவோம்
தகதகக்கும் இந்தக் கந்தங்கப் பூமி
சற்று ஆசுவாசப்படட்டும்

அதுவரை
சிறகடிப்போம்,
ரசிப்போம், புசிப்போம்
அந்த நினைவுகளை

கவிதை : நந்தவனம்
நந்தவனம் - அது
எந்தன்
சொந்தவனம்
அந்த வனம்
அற்புத வனம்
அழகிய வனம்
பிரவேசிகள்
பிரகாசிக்க
பரிகசிக்க
அந்த வனத்தில்
அனுமதி இல்லை
ஆம் மனம்
அழகிய
நந்தவனம்தான்
மனம் ஒரு
வனம் அது
நந்தவனம்
எந்தன்
சொந்தவனம்
நுழைவாயில்
நுகரப்படுவது
அதிசய மணம்
அங்கே நட்டிவைத்த
மலர்களின் நறுமணம்
ரம்மியமான ஒரு சூழலுக்கு
உங்களை நகர்த்தபோகிறேன்
கெட்டியாகப் பிடித்துக் கொண்டு
என்னோடு பயணிங்கள்
மண்ணை சற்று மறந்து
வாசல் வந்தாயிற்று
பூசல் இல்லாத
அசல் அங்கே
தெரியுது பாருங்கள்
ஒருவரது எண்ணம்
அவரது வண்ணம்,
எழுச்சி; நெகிழ்ச்சி; மகிழ்ச்சி
யாவும் பளிச்செனத்
தெரியும் அங்கே
முதன் முறையாக
நீங்கள் நுழைவதால்
சற்று கலக்கம் இருக்கலாம்
மிரளாதீர்கள்
உமது காலடிகளை
அழுத்திப் பதியாதீர்
வாசகம் படித்தாயிற்றா
பக்குவமாய் கடைப்பிடியுங்கள்
ஏனெனில் உங்கள் வலி
உங்களது பாதத்தில் உள்ளது
என எங்கோ படித்திருக்கிறேன்
ஆகையால்
அடியை அழுத்தாது எடுத்து வையுங்கள்
உங்கள் மிதி தாழாது மனம்
நைந்துவிடப் போகிறது
உங்கள் சொந்த நுகர்வை
வரும்போதே விட்டு வந்திருப்பீர்கள்
ஆகையால்
தற்போது சுவாசிக்கும் அனைத்தும்
சுயமானது சுத்தமானது
நயமானது நறுமணமானது
ஏனெனில் மனம் மணமறியாது
சுற்றும் முற்றும் பார்த்தாயிற்றா
சுருக்காக வெளியே வாருங்கள்
சொந்த கொள்ள அதுவொன்றும்
சுயமானதல்ல
சொர்க்கமானது அது
யாவரும் வந்து செல்லும்
யாசக சாலை நல்லதொரு
பாடசாலை
நந்தவனம்
நொந்த வனமாய்
ஆகிவிடக்கூடாது
என்பதற்காக
அங்காங்கே
நான் மரங்களை விதைத்தேன்
மரங்கள் கிளை பரப்பி
நல் மணங்களை விதைத்தது
வெறும் மரம் மட்டும் தானே
என இருந்துவிட்டேன்
அதனைச் சுற்றி புல்வெளிகள்
தானாய் எழுந்தன
புல் முளைத்ததும்
பூண்டு விளைந்தது
பூண்டு காய்த்தது
கனிந்தது, இனித்தது
அதை உண்ண
பட்சகள் பறந்தன
வெறும் கனி போதாது
மலர்களை வேண்டும் என
வண்டினம் ரீங்காரமிட
வண்ணத்துப்பூச்சிகள்
மகரந்தம் விதைத்தன
மலர்கள் மலர்ந்தன
உலர் நிலம்கூட
உவகைகொண்டு மணந்தது
இப்படித்தான்
நம் மனத்தையும்
பன்படுத்தவேண்டும்
நல்வழிபடுத்த வேண்டும்
மனமும்
வனமும் ஒன்றுதான்
எந்த நேரமும்
ஏதேனும் இரைச்சல்
இருந்துகொண்டே இருக்கும்
இடையிடையே
இடி மின்னல் புயல்
காற்று சூறாவளி தென்றல்
என வந்து வந்து போகும்
அத்தனையும்
உள்வாங்கிக் கொண்ட
நந்தவனம்
மகிழச்சியையும்
மன நெகழ்ச்சியையும்
நறுமணத்தையும்
நற்கனிகளையும்
நமக்குக் கொடுக்கிறதே
இதுபோல்
நாமளும் நமது
மனத்தை
நந்தவனமாய் மாற்றி
நம்மை நாடுவோருக்கு
நல்லதை செய்வோம்
நம்மால்
நாலுபேர் மகிழ்வுற்றால்
நல்லதுதானே?



கவிதை : கலவரம்
கலவரம்
கலங்கடிக்கிற
பயங்கரம்!
எந்நிலையிலும்
எதுவாகிலும்
கலவரம் அடைந்தால்
கலகம்தான் விளையும்!
கழகம் பிறக்கும்போதே
கலகமும் பிறந்துவிட்டது!
புறத்தில் எழும் கலவரம்
நேருக்கு நேர் சந்தித்து
சந்தி சிரிக்கும்!
அகத்தில் எழும் கலவரம்
அடங்காமல், அத்துமீறும்
அத்தனையும் சுக்கு சுக்காகும்!
இளைஞர்களுக்கு
இளம் பெண்களைக் கண்டால்
வரும் கலவரம்!
அதனால்
மனம் படபடக்கும்,
இதயம் துடிதுடிக்கும்,
வார்த்தைகள் நொட்டும்
அவர்களது
வாலிபமே வாலிபால் ஆடும்!
இளம் பெண்களுக்கு
திடகாத்திரமான
ஆண்களைக் கண்டால்...
நேருக்கு நேர் சந்திக்க
விழிகள் மருகும்
விட்டு நகர்ந்தால்
அகிலமே நகரும்!
ஒருவார்த்தை
சொல்வதற்குள்
மிடறுவிழுங்கும்
நிமிடமெல்லாம் நரகமாகும்!
இதற்கு பெயர்
காதல் என
ஊரெல்லாம்
ஊதி தள்ளும்!
நெஞ்சுக்குள் நிகழும்
கலவரம்
பஞ்சு பஞ்சாய் ஆகிரும்
நாளும் பொழுதும்,
கிழமையும் இளமையும்!
அது தனி மனித கலவரம்
அதனால் ஏற்படும் அத்தனை
சேதாரம், செய்கூலிக்கு
அவன் ஒருவனே ஆதாரம்!
ஒருவரைத் தூண்டிவிட்டு
கைகட்டி வேடிக்கை பார்த்து
வெற்றிச் சூடுவோம்
என பம்மாத்து சொல்லி
அவனுக்குள் இருக்கும்
அவனை உசுப்பேத்தி விடுவர்!
அவனை ஏத்திவிட்டு
மிருகனாக்கி
வெப்பத்தை மூட்டி
ஈரத்தை மேலே போர்த்துவர்!
கோழிச்சட்டையாய்
மனிதர்களை மாற்றிவிடும்
கேலி சண்டாளர்கள்!
அவர்களிடத்தில்
ஜாக்கிரதையாக இருக்கணும்!
கலவரம் முடிந்தால்
கண்ணீர் வரும்,
கண்ணீரே வரம்!
ஒரு ஜான் வயிற்றை
ஒப்பேத்துவதற்குள்
நூறு கிராம் இதயத்தை
சுக்கு நூறாய் உடைத்தெரியும்
எண்ணக் கற்றைகளை
எதை வைத்துக் கட்டுவது?
நாம் நினைத்தபடி
ஒருவரும் இல்லை
எனும்போதுதான்
ரெளத்திரம் எழுகிறது!
ரெளத்திரம் எழுந்ததும்
இரத்த காவு கேட்கும்
அரக்க பசி கொண்டு!
இரை இட்ட காளையாய்
மண்டிவிடும் என நினைத்தால்,
முரண்டு பிடித்து
முன்னுக்குப் பின்னு
முரண் ஆக்கும்!
காளை தானே
என விட்டால்
காலை பிடிக்கும்
பிறகு வாலை பிடிக்கும்
பிறகு ஆளை பிடிக்கும்
மொத்தமாய்
சோளியை முடிக்கும்!
கலவரத்திற்காக
கத்தியை எடுத்தவர்கள்
புத்தியை எங்கே வைத்தார்கள்?
கலவரம், கலவரம்
ஒரே கலவரம்
இதுதான்
இன்றைய நிலவரம்!
தன்னம்பிக்கையாய்
தம்பி செயல்படட்டும்
என விட்டால்
கம்பி எண்ணிக்கொண்டு
வம்பு வழக்கு போடுகிறான்!
தம்பிதான்
உனை நம்பிதான்
உலகு இருக்கு,
உண்மை இருக்கு
எனக்கும் உறுத்தல் இருக்கு!
தம்பி, தங்கைகளே...
அண்ணன்மார்களே...
மனம் திறந்து
குணம் பகிர்ங்க
பூவை எடுத்தால்
மணத்தை மட்டும் நுகர்ங்க
மெல்லிய அதன் இதழை
நசுக்கி நாராய் பிழியாதிங்க
பூவுக்குள் மணம் இருப்பதுபோல்
மனம் இருக்கும் குணம் இருக்கும்
நம்மைபோல் எல்லாம் இருக்கும்
அவ்வாறு இருக்க போயிதான்
வண்டுகளே வண்டிகட்டு வருதுக...
யாரையும் யாரும்
பூவுக்குச் சமமாய் பாருங்க
பூபோல மென்மையாய் அவர்களைப் பாருங்க
மென்மை ஒன்றும் பெண்மை இல்லை
மென்மையும் மென்மையும்
சேர்ந்தால் நன்மைதான்
ஆயுதம் ஏந்துவதால்
ஆறுக்கு லாபம்?
வன்முறை, கலவரம்
தீயவாதிகள் பெற்ற பிள்ளைகள்
பேர் சொல்லும் பிள்ளைகளா அவை?
நவீனமான இந்த உலகில்
நாம் உணர்த்தும் நாகரிகம்
நல்லதாய் இருக்கட்டும்
நம் கண்பட்டு, சொல்பட்டு,
கரம் பட்டு, கால்பட்டு
அவையெல்லாம் பொல்லதாய்
ஆகவேண்டாம்
எந்தப் பொல்லாப்பும்
நமக்கு வேண்டாம்
நாம் உண்டு
நம் வேலை உண்டு
என இருப்போம்
அதுபோதும்
உலகம் உயரும்
உலகத்தவர்களே...
உன்னதமானவர்களே...
இந்தக் காலமும்
இனிவரும் காலமும்
இன்பம் மட்டுமே
எங்கும் நிலவட்டும்
அதுதான் பரவசம்,
அது பரவட்டும்!
எடுப்பார் கைப்பிள்ளை
என்கிற அளவுக்கு
எதுவும் மாறவேண்டாம்
எல்லார்க்கும் காலம் கனியும்
அதுவரை
அவசரமில்லாது
அமைதியாக
உலக நடப்பை பார்ப்போம்!
நம் கண்முன்
நிறைய விரிந்து கிடக்கு
அவைகளை ஒவ்வொன்றாய்
கோர்ப்போம்...!
கலவரமும் வேண்டாம்
கவலையும் வேண்டாம்
கலங்கமும் வேண்டாம்
கண்ணீர் வடிக்கவும் வேண்டாம்
ஒருஜான் வயிறை வளர்க்க
இத்தனையும் தேவையா?
இவையெல்லாம்
நாளையே மாறிவிடாது
நாளே நம்மை மாற்றும்!


கவிதை : அரங்கம்
அரங்கம்
அங்கு நடப்பது யாவும்
அந்தரங்கம் அல்ல
அவரவர் சொந்தரங்கம்!
அரங்கம் வந்து
வெளிச்சம் போட்ட யாவும்
அடக்கமாவது இல்லை,
அடங்கிப் போவதில்லை!
ஒருவரை அடையாளம் காண,
அவரது திறமையை அறிய,
அவரை அரங்கம் அழைத்து
அரங்கேற்றம் செய்தால்
அத்தனையும் வெளிப்படும்
எதனையும் மூடி மறைக்க
வேண்டியதில்லை
அரங்கத்தில் அத்தனையும்
அம்பலப்படும்
கலை வெளிப்பாடும்
கவலையின் அடிச்சுவடும்
அங்கே அரங்கேற்றம் பெற்றால்
அரங்கம் நுழைந்தவரின் கதி
அலைமேல் படகுதான்
திறமையை வெளிச்சம் போடவேண்டியதுதான்
அழகை அம்பலப்படுத்தலாமா?
அல்லது அழுகையை அம்பலப்படுத்தலாமா?
அரங்கத்தில்
சுயமெல்லாம் சுடப்பட்டு,
சுட்டெரிக்கப்பட்டு,
தவமாய் தவமிருந்தாலும்
தகுதி நிலைபெறுவதில்லை
உலகின் கண்
அரங்கத்தில் விழும்
அரங்கத்தின் கண்
உலகதில் விரியும்
அங்கே யார் யாரோ
வருவார் போவார்
அரங்கத்தில் எதுவும்
நிரந்தரம் இல்லை
அங்கேயே அடைந்து கிடப்பது
பலருடைய
குமறலும் குறைகளும்தான்
திறமை வெளியேறிவிடும்
திறன் அரங்கைத் தாங்கிப்
பிடித்துக் கொள்ளும்
ஒருவரை அரங்கம் ஏற்றி பார்க்க
ஆசைபட்ட அவர்
பலருக்கு அசை பொருளாகிப் போனார்
அரங்கம் ஏறியதும் அவனோ
அவரை வசை பாடலானான்
ஆசிரியர் என்றொரு அச்சமில்லை
மாணவன் என்ற அவன்
மிச்சமில்லாது அவரை
அங்கே துகிலுரித்தான்
மனதால் மானபங்கம் பட்ட அவர்
குரு என்கிற பதம் இழந்து
குழம்பித்தான் போனார்
கற்று கொடுங்கள் என்று
வந்த அவனை
விட்டுக் கொடுத்தார்,
சர்வமும் அற்றுதான் போனார்
தம்மிடம் உள்ள
சாரத்தைப் பிழிந்து
அவனை உரமேற்றி,
உருவாக்கி
அரங்கம் ஏற்றிவிட்ட அவர்
இன்று யாரோ?
நல்ல ஆசிரியரின்
நல்ல குருவின்
நாசுக்கான
நசுக்கப்பட்ட கதை
அரங்கம் ஏற்றம் பெற்ற
அத்தனையும்
அவசியமானதுமில்லை,
அர்த்தம் இல்லாததுமில்லை
ஒருவருக்கு
உயர்வு வேணும் என்றால்
அதற்கு அரங்கம் தேவை அல்ல
அரங்கம் யாரையும்
உயர்த்துவதில்லை
ஏற்கெனவே அவர் உயர்ந்துதான்
அங்கே வருகிறார்,
வரவழைக்கப்படுகிறார்
மாசிற்ற மனதையும்
மருவற்ற வாழ்வையும்
உருகும் இதயமும்
பெற்றிருந்தாலே
அவர் உயர்ந்தவர்தான்
பிறருக்காக யாரொருவர்
மருகினாலும்
அவர் அந்த தெய்வத்திற்குச் சமம்
தவறே செய்யாதிருந்தாலும்
தப்பே பண்ணாதிருந்தாலும்
அவரது இதயம்
புத்தம் புதிதாய் புழக்கப்படாமல் இருந்தாலும்
யாருக்கும் எதற்கும்
பயன்படாததாய் இருந்துவிடும்
இவ்வுலகில்
படைக்கப்பட்ட நாமெல்லாம்
நம்முடைய உறுப்புகள் அத்தனையும்
செயல்படுத்தவேண்டும்
எதையும் மிச்சமில்லாது,
வஞ்சமில்லாது புழங்கவேண்டும்
நண்பர்களே...
அரங்கம் தேவை என
அலைய வேண்டாம்
அரங்கேற்றம் செய்தால்
அகிலம் பாராட்டும்
என பதற வேண்டாம்
உங்களது திறமை
போற்றப்பட வேண்டும்,
புகழப்பட வேண்டும்
என எண்ணினால்
திறனை வெளிகொணர வேண்டும்
எப்படி?
மானுடராய் பிறப்பெடுத்த நாமெல்லாம்
மற்றவருக்காகச் சிறிது உருகவேண்டும்
நாம் உயர்ந்தால் போதுமா?
நம்மைச் சார்ந்தவர்கள் உயர்ந்தால் போதுமா?
இந்த அகிலமே உயர்ந்தால்தானே
அத்தனையும் உயரும்?
மனதை விசாலமாக்கி
எண்ணத்தை விரிவுபடுத்தி
செயலை எட்டிபோடுவோம்
இன்னும் கடக்கும் தூரம் உள்ளது
வலது காலை எடுத்து வைத்து
வாருங்கள்
இடதுகால் தானே கூடவரும்!


கவிதை : உறைபனி
கடந்து வந்த
பாதையெங்கும்
ஒரே குளிர்
பனித் துளிகள்
ஆங்காங்கே
பளபளக்க
எண்ணம் மட்டும்
உறையாதிருந்தது
உறைபனியாக
ஒருவரை
உற்சாகப்படுத்தவேண்டுமெனில்
கைநிறைய பனியை
அள்ளித் தாருங்கள்
கொடுப்பவரும் சிலிர்ப்பார்
பெறுபவரும் சிலிர்த்துப் போவார்
ஒருவரை
சந்தோஷப் படுத்த
குளிர் நீரால்
முகத்தைக் குளிர்வியுங்கள்
குழந்தையாய்
குதூகளிப்பார்
செயற்கையாய்
பனி கட்டியைச்
செய்யலாம்
இயற்கையான
பனிக்கு அது
ஈடாகாது
நல்ல பனிகாலம் அது
இருமல் வராதவற்கும்
வந்துவிடும்
அவ்வளவு குளிர் தரையெங்கும்
பிஞ்சு பாதம் பதிக்க
நெஞ்சு தவிக்கும்
அப்படி
பாதம் தரையைத் தொட
பதறது,
எல்லாம் உதறுது
ஒவ்வொரு நாட்டவருக்கும்
ஒவ்வொரு விருப்பு வெறுப்பு
ஆனால் சுவாசம் என்பது பொது
இங்குள்ள குளிர்
அங்கு தளிர்போல
மெத்மெத் என இருக்கும்
இங்கு இருக்கும் வெயில்
அங்கு தூரிபோல
மெல்ல வறடும்
இங்கு வீசும் காற்று
அங்கு பூபோல
சுகமாய் மணத்துக் கிடக்கும்
இப்படி ஒவ்வொரு நாட்டவருக்கும்
ஒவ்வொரு நாட்டும்
ஏற்றம் இறக்கம்
மாற்றம் தேற்றம்
பனி என்பது பொதுதானே?
பனிந்தேன் என்கிறார்களே
பனியும் தேனும் கலந்துதான்
பனிந்தேனா?
எவ்வளவு பெரியவராக
இருந்தாலும்
பனிக்கு அவர்கள்
குனிந்தே ஆகனும்
பனி அவர்களை
பனிய வைக்கும்
கனிய வைக்கும்
குனிய வைக்கும்
அதான் பனிந்தேன்
என பம்முகிறார்கள்
தும்முகிறார்கள்
உறை பனியே
உறையாதிருக்கும் கனியே
பிறையான நிலவே
முறையான அழகே
சிறையான என் இதயத்தை
செத்த காட்டு
செத்துபோகிறேன்
என்று எழுதும்
இளைஞர் பட்டாளம்
இன்றில்லை
எல்லாம் நவீனமாகிவிட்டதாம்
காதலும் கற்று மற
எல்லாம் கடந்து போகணுமாம்?
காலத்தைக் கடக்கவா முடியும்?
காலத்தை விட்டு
நடக்காவா முடியும்?
காலத்தோடு பயணிப்போம்
ஞாலத்தோடு பகிர்வோம்
எவ்வளவுதான்
தின்றாலும்
திகட்டவே திகட்டாது
காதல்
எவ்ளவுதான்
திட்டினாலும்
வலிக்கவே
வலிக்காது காதலுக்கு
காதலில் பனியும்
எவரும்
பனிக்கும் பனிவர்
பனியும் ஒருவகையில்
காதல்களை
கண்ணியர்களை
கண்ணாளவர்களை
இணைத்திருக்கிறது,
இணைக்கிறது
அந்த ஒற்றையடி
பாதையில்
யாரும் மற்ற வேளையில்
நானும் அவளும்
மௌமாய் நடக்கையில்
இடை இடையே
சூடாகும் மூச்சுக் காற்று
அவள் விலகிச் செல்வதால்
இடை இடையே
சுவாசம் அதிகரிக்கும்
எங்களுள் பனி ஊடுறுவதால்
உலகம் மொத்தமுள்ள
காதலர்களே
கவனம் கொள்க...
உணர்ச்சிவசப்பட்டு
பனியில் காதலியோடும்
காதலனோடும்
பயணிக்காதீர்கள்
உங்கள் இருவரையும்
கண்ட பனி
கண்ட சனிபோல
உறைந்தே கிடக்கும்
உறைபனி
சற்று அதைக் கவனி
பணி நிமர்த்தமாக
பனியைச் சற்று
தவிர்க்கிறேன்
அதிக குளிர்
உடம்புக்கு ஆகாதுதானே?

கவிதை : சம்பளம்
சம்பளம் - கூலி
வெகுமதி - வெகுமானம்
மதிப்பு - அளவு
கொடுக்கல் - வாங்கல்
எல்லாம் பணத்தை
மையப்படுத்துவது
பைத்தியகாரத்தனம்
உடல் உழைப்புக்கு
உயர்வு நிச்சயம்
உழைப்புக்கு ஏற்ற
ஊதியம்
கிடைப்பது அரிதுதான்
மனம் ஒப்புக்கொள்ளும்
எல்லாவற்றையும்
செய்ய இயலாதுதான்
மனம் பணத்துக்கு
மசியாது பார்த்துக்கொண்டால்
யாரும் யாரையும்
அசைக்க முடியாது,
அமுக்க முடியாது,
அழிக்க முடியாது.
சம்பாதிக்கனும்
அது உழைப்பால்
மட்டும் நிகழவேண்டும்
சம்பளம் தனி,
கிம்பளம் தனி
கையூட்டு கொண்டால்
கைதி நிச்சயம்
சங்கதி முழுதும் தப்பாது
உழைக்காது பெறும்
ஒவ்வொரு காசும்
உபயோகப்படாது
உள்ளத்தை உறுத்தும்
உளியால் அறுக்கும்
உழைப்பவரின்
வியர்வை நிலத்தின்
விழுவதற்குள்
அவருக்கான
கூலியைக்
கொடுத்துவிடல்
நலன்
கூலிக்காக மாறடிக்கும்
கும்பல் ஒன்று
உலகத்தில் உள்ளது
அவர்களை இதில்
சேர்க்காதீர்கள்
ஒரு வாய் சோறு போதும்
திமு திமு என
தினக்கூலி செய்வான்
தினவெடுத்த
பண முதலாளி சிலர்
ஏவல் செய்வர்
செய்யும் வேலைக்கு
காவல் செய்வர்
அவனவனுக்கு
அடிவயிறு பற்றிக்கொண்டால்
தெரியும்
உழைப்பும், பிழைப்பும்
உலகம் முழுவதிலும்
பிச்சைக்காரர்கள்
பிழைப்பு நடத்துகிறார்கள்
ஒருவரிடம்
கைநீட்டி யாசகம்
கேட்பது ஒரு பிழைப்பா?
நாம் நல்ல விதமாய்
இந்தப் பூமியில்
படைக்கப்பட்டுள்ளோமே
அதுபோதாதா?
அதற்காக இறைவனுக்கு
நன்றி சொன்னால்போதும்
பிச்சையெடுத்து
பெற்றவர்களையும்
படைத்தவரையும்
கேலி செய்ய விடலாமா?
இல்லை என்பது
முட்டாள் தனம்
கைவிரல் பத்தும்
மூலதனம்
சம்பளம் குறைவு
வேலைப் பளு என
வெறுப்போடு
வேர்வை சிந்த வேண்டாம்
வேர்வை விளையும் காலம் வரும்
காலம் வரும்,
காலம் வரும்
என காத்திருந்து
உழைக்காது இருந்தால்
கவலைதான் வரும்
காலம் சிரிக்கும்
மூளை இருப்பவன்
உழைக்காமலே
உயர்வடைகிறான்
மூளை அற்றவன்
முனங்கிக் கொண்டே
இருக்கிறான்
மூளைக்கு வேலை கொடு
வேலைக்குத் தீனி கொடு
உடலும், உள்ளமும்
மெருகேறும்
அவனவன் செயல், திறன்
எல்லாவற்றுக்கும்
மூளையைப்
பழக்கபடுத்திக் கொண்டான்
பக்குப்படுத்திக் கொண்டான்
எல்லாருக்கும்
மூளை இருக்கத்தான் செய்கிறது
கற்றவருக்கு அது இயங்குகிறது
மற்றவருக்கு அது ஏங்குகிறது
உடலில் உள்ள மொத்த திசைவையும்
இயக்குவது மூளைதான்
மூளைக்கு யாரும் கட்டளையிடத்
தேவையில்லை
மூளையின் கட்டளையை
எதுவும் மறுப்பதில்லை
மறுத்தால், மனிதன் இல்லை
மனிதன் கண்டுபிடிப்புகள்
மற்றவர் பார்வைக்கு உள்ளன
இறைவனின் படைப்புகள்
மனிதனுக்குள் உள்ளன
கணினி வரும்,
உலகு நவீனப்படும்
நாகரிகம் ஆகும்
இவையெல்லாம்
நம்மைப்
படைத்தவனுக்குத் தெரியுமா?
மனிதன் படைக்கும்
பொருள்களை எல்லாம்
அவனால் ஆளுப்படும்
என்பது உண்மைதான்
அவனால் எப்படி ஆளப்படுகிறது?
நம்மைப் படைத்தவன்
மூளையை முன்கூட்டியே
பகுதி பகுதியாய், செதில் செதிலாய்
பகுத்துள்ளான்
அதனுள் புகுந்தும் யாவும்
மனிதனைப் புலப்படுத்தட்டும்
பலபடுத்தட்டும்
என அவன் காத்திருந்தான்
எதிர் பார்த்திருக்கிறான்
கற்றவர்கள்
மூளையின் பயனை
அடைந்தனர்
அதிகம் கற்றவர்கள்
மூளையை மீறி
செயல்பட்டனர்
மூடன் ஆனார்கள்
மூளைச் சலவை செய்யப்படுகிறது
என்கிறார்கள்
அதில் என்ன அழுக்கு படிந்துள்ளதா?
அல்லது அழுக்காகி, பழுதாகி விட்டதா
சலவை செய்து, புதிதாக்க...
இவ்வுலகில்
எங்கு சென்றாலும்
உழைத்து வாழவேண்டும்
என்பது நியதி
உழைப்புக்கேற்ற
ஊதியம் கிடைப்பது உறுதி
கற்றவர்களுக்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு என
அய்யன் வள்ளுவன்
சொல்லியிருக்கிறான்
கற்போம், கற்பிப்போம்
மேலும் மேலும் கற்போம்
கற்றுக்கொண்டே இருப்போம்
கல்லாதவர்களே
இல்லாதவர்களாக ஆக்கும்வரை
கற்றுக்கொண்டே இருப்போம்
உலகு நாகரிகம் அடைந்தாலும்
நாம நடந்து வந்த பாதையை
மறவாது, மறக்காது வாழ்வோம்
ஒருவர் தாம் பெற்ற
அனுபவத்தைப் பிறருக்குச் சொல்ல
சம்பளம் தேவையில்லை
சம்பளம் வாங்கனும் என்றால்
அதற்கு உழைக்கனும்
சம்பளம் வாங்கியதும்
குடும்பத்தாரோடு
சவுக்கியமாய் வாழனும்


கவிதை : சிறைக்கைதி
கண்டிப்பு
தண்டிப்பு
என ஒருவர்மேல்
குறிவைத்தாலே
அவர் வாழ்வே
நொடிப்பு
இவ்வுலகில்
தவறிழைக்காதவர்
என எவரும் இல்லை
தெரிந்தோ, தெரியாமலோ
அறிந்தோ, அறியாமலோ
ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில்
எந்த ஒரு ஜீவனுக்காவது
தவறு செய்திருப்பர்
பெற்றோருக்கு
அடங்காதவர்
காவலர் கண்ணில்
எளிதாகப் பிடிபடுவர்
தாய் தந்தை சொல்
மந்திரம் என
எண்ணாவிட்டாலும்
நாம் பிழைக்க உதவும்
தந்திரம் என
நினைத்துக் கொள்ளுங்கள்
தாய் தகப்பன் வாயில் இருந்து
இவன் தருதலை என்று
சொன்னாலேபோதும்
அவன்
சொல்லி அடிக்க முடியாது
கில்லியும் அடிக்க முடியாது
கிலி அவனைப் பிடிக்கும்
பலி மேல் பலிவந்து
பலிபோட்டுவிடும்
எங்கப்பன் குதருக்குள்
என்றொரு சொல்லடை
எங்கள் ஊரில் சொல்வார்கள்
திருடன் ஒருவன்
தவறுமேல் தவறு செய்து
ஊராருக்குப் பிடிகொடுக்காது
ஓடோடி வாழ்ந்தான்
அன்றும் அப்படித்தான்
எல்லோருக்கும் பயந்த அவன்
தம் வீட்டுக்குள்ளேயே
ஒளிந்துகொள்ளலாம் என
ஓடிவந்த சமயம்
விளையாடிக் கொண்டிருந்த
மகளிடம் பொய் சொல்லி
ஒளிந்து கொண்டான்
காவலர்கள் நெருக்கிவந்துவிட
வேறு வழியில்லாது
வீடுதான் ஒளிவிடம் என
எண்ணிய அவன்
மகளைக் குளிர்வித்தான்
உள்ளே ஒளிந்து கொள்கிறேன்
வருபவர்களிடம்
இல்லை எனச் சொல்லிவிடு
அப்பா ஐஸ் வாங்கி தாரேன்
என்றவன் மகளிடம்
ஐஸ் விற்றான்
கள்ளம் போலிஸ் விளையாடிய
பிள்ளை மனசுக்கு என்ன தெரியும்?
காவலர்கள் வந்ததும்
அப்பன் சொன்னதை
அப்படியே சொல்லிவிட்டது
நெற்கொட்டும் குதிர்க்குள்
நெருக்கடித்திருந்த
அவனை
அமுக்கிப் பிடித்த காவலர்
மகளைப் பார்த்தாவது திருந்தும்
என இறுக்கிப் பிடித்து கொண்டார்
சிறைவாசம்
என்ன பூவாசமா?
இல்லை வனவாசமா?
நான் கொஞ்சம்
நீ கொஞ்சம்
ஆளுக்குக் கொஞ்சம்
அனுபவித்துக் கொள்ள
சுதந்திரமாய்
சுற்றித்திரிந்த
பொழுதெல்லாம்
பிறர் சொல்ல கேட்டும்
திருந்தாதவனை...
சிறையில்
கைதியாக
யாரும் மற்றுத்
தனித்துவிடப்பட்டு,
ஒவ்வொரு மணித்துளியும்
செய்த குற்றத்தை
எண்ணி எண்ணி
இலக வைக்கும்
சிறைவாசம்
முடிந்ததும்
வாழ்கையின்
பற்று பாசம்
துளிரும்
இவ்வுலகில்
எல்லாரும்
ஏதோ ஒருவிதத்தில்
கைதிகள் தான்
கருவுற்றதும்
கருவறைக் கைதி
அன்னையின்
அரவணைப்பில்
வளர்ந்ததும்
அன்புக் கைதி
விவரம் தெரிகிற வரைக்கும்
அன்னையின் பிடியைத்
தளராது பிடித்துக்கொண்டு
அவள் விரல் காட்டும்
திசையே விடியலாய்,
அவளுக்கும், அவளுக்குள்ளும்
கட்டுப்பட்டு
பாசக் கைதியாய் கிடப்போம்
விவரம் அறிந்து கொண்டபின்
பெற்றோரையே
பத்தாடிவிட்டு
பரதேசியாய் திரிவோம்
பள்ளிச் செல்ல
அவள் நம்மைப் படுத்தும் பாடு
அவளை நாம் படுத்தும் பாடு
அத்துணையும்
சகித்துக்கொண்டு
நம்மை தேற்றுவாள்,
உயிர் ஊக்குவாள்
உயிர்க் கைதியாய் கிடக்கும்
எதிர்காலத்தில்
எதிர்நீச்சல் போட
ஏகலைஞனாகக்
கற்றுக் கொடுப்பாள்
உலகம் தெரியாது
உள்ளன்போடு
உள்ளக் கைதியாய்
உள்ளங்கையிலேயே
கிடப்போம்
இளைஞன் என
நெஞ்சு நிமிர்ந்ததும்
இதயம் படபடக்க
ஆரம்பிக்கும்
கண்ணில் தெரிவதெல்லாம்
பட்டாம்பூச்சியாய் சிறகடிக்கும்
வாலிப முறுக்கேறியதும்
காதல் கைதியாய்
காதலிக்கு மட்டும்
கட்டுப்பட்டு, ஒற்று ஊதி
மெட்டு படைப்போம்
இப்படி
ஒவ்வொரு தருணமும்
ஒவ்வொன்றுக் குள்ளும்
இணைப்பாய்
பிணைப்பாய் இருக்கும்
சிறைச்சாலை
ஒருவனைத்
திருத்தும் சாலை
பள்ளிச்சாலையில்
கல்லாததை
சிறைச்சாலை
செதுக்கிவிடும்
பள்ளி, கல்லூரியில்
படிப்பு ஒன்றே, கல்வி ஒன்றே
கற்கவேண்டும் நன்றே
அதுவும் இன்றே
சிறைக்கைதியாய்
சின்னாபின்னாமானவன்
திருந்தி வாழ நினைப்பதுண்டு
சமுதாயம் தடுக்கவும் செய்யும்
அவனை ஒடுக்கவும் செய்யும்
தனி ஒருவன்
திருந்திவிட்டால்
சிறைச்சாலைகள்
எதுக்கு?
நண்பர்களே,
நாமெல்லாம்
குற்றம் செய்யாத கைதி
அதுவும்
ஆயுள் கைதி
ஆம்
ஆயுள் உள்ளவரைக் கைதி
மரணம்
முத்தமிடும்வரை
நாமெல்லாம்
ஒரே அரவணைப்பில்
ஒரே கதகதப்பில்
இதயக் கதவடைப்பில்
அன்பு பிணைப்பில்
அன்பு கைதியாவோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக