19 பிப்ரவரி, 2013

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்


கவிதை : கோபம்
முனுக்குனு
கோபம் வரும்
மூன்றுபேருக்கு
தன்னம்பிக்கைவாதி
நம்பிக்கைவாதி
விசுவாசி
இவர்கள்தான் அவர்கள்!
கோபம் இருக்கும் இடத்தில்தான்
குணம் இருக்கும் என பொதுவாகச் சொல்வதுண்டு!
கோபம் வந்ததும் - அது
ஆங்காரம் கொண்டு ஆடி அடங்குவதற்குள்
எத்தனை பேர்களைக் குணமானவர்கள் இழப்பர்...?
இது கோபக்காரர்களுக்குத் தெரியாமலே போய்விடும்!
கோபம் கண்ணை மறைக்கும்
அறிவை மலுக்கும்
குபீர் என எழுந்ததும்
களேபரமாய் முடிந்திடும்
ஒன்றும் தெரியாததுபோல்
மறுபடியும் உள்ளே போய் ஒளிந்துவிடும்
கோபம் - ஓர் இயற்கைச் சீற்றம்தான்
எப்போ வரும்? என்ன செய்யும்?
யாருக்கும் தெரியாது
கோபம் - ஓர் உணர்வுதான்
உணர்ச்சித்தான் - அது
சீண்டப்படும்போது சீற்றம் கொள்கிறது
ஏமாற்றம் வரும்போது சீற்றமாகிறது
அது வெடித்து வெளியேற
எல்லாம் வடிந்து விடுகிறது
மனிதர்க்குள் எல்லாம் இருக்கவேண்டியதுதான்
அதுஅது அந்தந்த நேரத்தில்
சூழலைப் புரிந்துகொண்டு
அடங்கி, ஒடுங்கி விடுவது நல்லது
வலுத்தவர் கைகளில்
இளைத்தவர் கிடைத்தால்
சும்மா விடுவார்களா?
சுவைத்துத் துப்பிவிடுவர்
அதற்காக அடங்கிப் போக வேண்டாம்,
எதற்கும் அத்துமீற வேண்டாம்
எல்லாமும் எல்லாவற்றையும்
மனிதமாகப் பார்ப்போமே?
மனிதர் வாழ
மனிதம் தேவை
மனிதம் மட்டும் இருந்தால்
மற்றதெல்லாம் சுகம்தான்
சுளீர் எனச் சுட்டதுபோல் உணர்வோம் – அது
சுனாமிபோல் எல்லாத்தையும்
தன்னுள் சுருட்டிக்கொள்ளும்
கோபத்தை விரட்ட
தியானம் செய்யலாம்...
தானம் செய்யலாம்...
ஞானம் பெறலாம்...
ஆல் இஸ் வெல்
என ஆங்கிலத்தில் சொல்வர்
எல்லாம் நன்மைக்கே
நம் தமிழ் அதை இலகுவாக்கும்
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ 
அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
இது கீதை - நமக்கான பாதை
இந்த சுலோகம் மனத்தில் நிறைத்துக் கொண்டால்
எதன்மீதும் கோபம், தாபம்
எழாமல் செய்யும்
எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகிவிட்டால்
கோபம் வராது உண்மைதான்
எதற்கு இந்த எதிர்பார்ப்பு?
எதை நாம் கொண்டு வந்தோம்?
எதை நாம் இழப்பதற்கு?
இதுவும் கீதைதான்
நல்லதொரு போதனைதான்
இன்னாருக்கு இன்னது என்று எழுதியாயிற்று
இனி இறப்பும் பிறப்பும் அவர் கையில்
என்பது உறுதியாயிற்று
 இப்படி இருக்க
வீண் கோபம் ஏனோ?
நண்பா…
அழகிய வெண்பா…
நேருக்குநேர் மோதிக் கொண்டால்
வலுத்தவர் ஜெயிப்பார்
மறைந்துகொண்டு தாக்கினால்
புத்திகூர்மை வெல்லும்
கடுஞ்சொல் தானே
எல்லா கலகங்களுக்கும் காரணம்?
இனிய சொல் சொல்லப் பழகு
இனியோரிடம் சேர்ந்து பழகு
நாக்குக் கடித்துக் கொள்ளும்
நாராச வார்த்தைகளை
அப்படியே மடித்து
 உள்ளே தள்ளு
கோபம் குப்பற விழுந்து எழவே எழாது
கோபம்... கோபம்... என நூறுமுறை சொல்
பாவம்... பாவம்... என அது மாறிவிடும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக