22 பிப்ரவரி, 2013

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்


கவிதை : வீரம்

ஆணோ பெண்ணோ
அவசியம் தேவை வீரம்

வீரம் மட்டும் போதாது
விவேகமும் வேணுமுங்க

உடல் சுரமும்
திமிரும் தோலும் இருந்தால்
வீரம் வந்துவிடுமா என்ன?

வீரம்
நெஞ்சில் விளையும் சாரம்
துணிச்சல், துணிவு
வீரத்தின் விரிவு

மண்ணுக்கேற்ற
தன்மையும்
வீரத்தை விளைவிக்கும்

தினவெடுத்து
விரிந்து வெதும்பும்
புடைத்த மார்பும்
கர்ஜனையாய் கர்ஜிக்கும்
தோரணையே வீரம்

வாள் எடுத்து
போரிட வேண்டாம்
வாய் ஜாலம் இருந்தாலே போதும்

சிலம்பெடுத்து
சுழற்ற வேண்டாம்
செதுக்கும் சொற் திறன் போதும்

எதிராளியை மடக்கும்
எந்தக் கலையும்
வீரம்தான்

சொல்லாடல்
பொருளாடல்
மனதாடல்
மௌன மொழியாடல்
எதற்கும் தயாராக இருப்பது
வீரம்தான்

நாவடக்கம் தேவைதான்
நா அடக்கமாய் போகாது
பார்த்துகொண்டால்
வீரம், சூரமாகும்
வீரன் சூரனாவான்

ஆண் மகவு பெற்றுவிட்டால்
அகிலமே திமிலோகப்படும்
பெற்றோரும் உற்றோரும்
அந்தரத்தில் ஆடுவர்
அவனால் சாதிக்கலாம்
என சபதமேற்பர்

பிறந்த அவன்
பிறவிக் கோழையாய்
இருந்துவிட்டால்,
அந்த மகவு தேவைதானா?
பெற்றோர் பாடு திண்டாட்டம்

பெண் பிள்ளை பிறந்துவிட்டால்
இன்னும் சிலர் கலங்கத்தான்
செய்கிறார்கள்

பெண் இல்லாத
நாடு, வீடு
ஊரு, நாடு, தேசம்
ஏன் பூமி ஏதுங்க?

எந்தக் காலத்திலும்
பெண்களும் வீரம் செறிந்துதான்
பிறக்கிறார்கள், வளர்கிறார்கள்
வாழ்கிறார்கள்

வாள் வீசிப் போரிட்ட காலத்திலும்,
புலியையே முறத்தால் அறைந்த காலத்திலும்
பெண்கள்தான் புரட்சி வீராங்கனையாக
இருந்திருக்கிறார்கள்.
அவர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
ஆங்காங்கே

எத்தனையோ கோடி ஆண்கள் மத்தியில்
அரசு நடத்தும் பெண்கள்
எத்தனைபேர் உள்ளனர் நாட்டில்?

வீரத்திற்கு முன்
ஆண் என்ன?
பெண் என்ன?

பெண்ணிடம்
போரிட்டால்
ஜெயிப்பது கடினம்தான்

வலிமையும் இளமையும்
ஆண்களிடம் நிலவும்
வீரத்தின் அளவு

விளையாட்டில்
வெற்றிபெற்று
நாடுவிட்டு நாடு சென்று
பிறந்த பூமிக்கு பேரும் புகழும்
வாங்கி தரும் எத்தனையோ
வீர சூரர்கள் மத்தியில்
என்னைபோல சோதாவும்
வாழும்போது பெருமையாகத்தான் இருக்கு

பள்ளி காலத்தில்
விளையாட்டு வகுப்பின்போது
பெண்டு எடுக்கும்
உடற்பயிற்சி ஆசிரியர்களைச் சபித்தவன்
வாழ்க்கையில் சாதிப்பது மிகவும் கடினம்

பிறப்பிலேயே உள்ளது
வீரமும் சாரமும்

முன்னோர்கள் வீரமாக இருந்தாலும்
அந்த வழியில் வந்தவர்கள்
சூரப்புலியாய் இருப்பார்களா என்ன?

என்னதான் வீர சூரராக இருந்தாலும்
பாம்பைக் கண்டதும்
சற்று தொடை நடுங்கத்தான் செய்யும்
அதான் பாம்பைக் கண்டால்
படையே நடங்கும் என்றனர்

புலி வருது புலி வருது
என தெரு தெருவாய்
ஓட்டமும் நடையுமாய்
மறைய இடம் தேடியவனுக்கு,
புளி வியாபாரியின் கூப்பாட்டைக்
கண்டதும் முகம் சிறுத்துதான்போகும்
சற்று கருத்துதான் போகும்

நண்பர்களே
நாம் தான்
வீரத்தை விட்டாச்சு
நம்ம புள்ளைகளுக்கு
அதைப் புகட்டுவோமா?

அதற்கு
நம் முன்னோர்களின்
வரலாற்றை அவர்களிடம்
வாசிக்கலாம்
அவர்களது நிழற்படத்தைக்
காட்டி தோரணையாய்
நடந்து காட்டலாம்
அவர்களைப் பற்றிய
திரைக் காவியம்
குறுந் தகவல் ஏதேனும்
கிடைத்தால்
பலருக்கும் பங்கிட்டு காட்டலாம்

வீரத்தை
உணர்ச்சியிலேயே
ஊட்டவேண்டும்.

வீரம்
என்னங்க வீரம்?
இந்தக் காலத்திலும்
இருண்ட வீட்டுக்குள் நுழையவே
பயப்படுகிறார்கள்
பேய் பிசாசு குட்டிச்சாத்தான்
இன்ன பிற ஜந்துகள் எல்லாம்
பயமுறுத்துவதாகக் கதைக்கிறார்கள்
மிரட்டும் சத்தமும்
பயங்கர படக் காட்சியும்
திரையரங்குளின் ஒலிபெருக்கிமூலம்
மிகுதிபடுத்தும்போது
மூளையே கலங்கிவிடுகிறதே?

அந்தப் பயம்
அபயம், எம பயம்
பயத்தைப் போக்க
வீரம் தேவை
வீரத்தை யார்
விதைப்பது?
யாரிடம் வாங்குவது?

தன்னம்பிக்கை
விட முயற்சி
வீரத்தை விளைக்கும்
மற்றவர்கள்
நம்மைப் பார்த்து பயந்தால்
நாம் வீரனா? கோழையா?

அச்சம் கண்களில் தெறிக்க
பதட்டம் வார்த்தையில் இருக்க
இதயம் தறிக்கெட்டோட
பயம் பற்றிக் கொண்டால்
பின்னங்கால் பிடறி தெறிக்க
ஓடுபவர்களுள்
நான் முதல்வன்

சில நேரம் பயம்
சில நேரம் வீரம்
சில நேரம் விவேகம்
சில நேரம் கோபம்
சில நேரம் தாபம்
இப்படி எல்லாமும்
மாறி மாறி வந்து போவதால்
மனிதனாய் இருக்கிறேன்
என நினைக்கிறேன்

ஜாக்கிரதை
உங்கள் முன் நிற்கும்
எனது வாளின் கூர்மை
கண்களில் சொறுகிட போகிறது
சற்று கவனமாய் இருங்கள்

இப்படித் திடீரென
கூர்வாளை நீட்டினால்
வீரம் விலைபேசுமா?

பதட்டம் முதலில்
பல் இளிக்கும்
தெம்பு வந்ததும்
தெனாவட்டு தினவெடுக்கும்

இப்ப வரச் சொல்லுங்க அவனை
என சொடுக்கிக் கூப்பிட வைக்கும்
வீரம் உடம்பெங்கும்
ரெத்தமாய் பாயும்

நண்பர்களே
வீரம் சுரம் மாதிரி
வெதுவெதுப்பாய் இருக்கட்டும்
ரொம்ப சூடேறி தலைவரைக்கும்
போனால் தாங்காது

இரண்டு வீரர்கள்
மோதும்போது
தோல்வி என்பது கிடையாது

இரண்டு கோழைகள்
மோதும் போது
வெற்றியே கிடையாது

சரிசமமாய் இருக்கும்
ஒருவருடன் மோதுவதுதான்
உண்மையான வீரம்

ஒண்டிக்கு ஒண்டி
வரத் தயாரா....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக