20 பிப்ரவரி, 2013

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்


கவிதை : நிலவொளி

யாரும் அற்று
தனித்துவிடப்பட்ட மனதிற்கு
வானம் நிறைந்திருக்கும்!
வான்வெளியும்
நிலவொளியும் தான் தேற்றும்!
 
தனியாகச் சென்றாலும்
துணையாய் வரும்
வேண்டாம் என்றதை
வெறுத்து ஒதுக்க முடியாது

தண்ணெ வீசும்
அதன் தண்ணொளியே காரணம்

 
பகலெல்லாம் எழும்
சூட்டை, வெப்பத்தை
இரவில் வரும் நிலவொளி தானே தணிக்குது?
 
நிலா - எப்போதும் எனக்கு
மழலையாகத் தெரியும்
பிறையாக இருந்தாலும்
மறைவாக இருந்தாலும்
அதன் செயல் யாவும்
எப்போதும் என்னுள்
இணைந்துக்கொள்ளும்
 
யாரிடமாவது வசமாய் திட்டு வாங்கி
கோபம் கொப்பளிக்க
அமைதியாய் இருக்கும்போது...
மேலும் என்னை யாரோ சீண்டுவதுபோல்
ஓர் உணர்வு எட்டிபார்த்தால்,
நிலா நின்று கொண்டிருக்கும்
கேலியாய் சிரிக்கும்
மென்னியைப் பிடிக்க கையை எட்டிபோட்டால்
ஓசை எழுப்பாது ஒதுங்கி, பதுங்கிக் கொள்ளும்
நான் தேட, அது ஒளிய
நான் ஓட, அது பின்தொடர
இப்படியான விளையாட்டில்
எனக்குள் இருந்த கோபம் வடிந்துவிடும்
 
நிலா ஒரு அமானுசிய தட்டு
ஏழை எளியோருக்கெல்லாம் அட்சய தட்டு
ரோட்டோரம் வாழ்வோருக்கு ஆகாச விளக்கு
அவர்கள் வாழ்வை வெளிச்சம் போடும் அதிசய பல்பு
 
அம்மா சோறு ஊட்டும்போது
பிரம்மிப்பாய் இருந்த நிலா
இன்னும் அதே வளர்ச்சியில்தான் இருக்குது
நான் வளர்ந்து விட்டேன்

 
நிலாச்சோறு, நிலாக் கூட்டம்
நண்பர்களோடு இருந்த நாள்களை
நாளெல்லாம் நினைவூட்டும் நிலா

 
பூமியின் சுழலுக்கு ஏற்ப
சூரியனின் தகதகப்பிற்கு ஈடுகொடுத்து
பூமி மடியில் மண்டிகிடக்கும்,
பூமியை அண்டிக்கிடக்கும்
அனைவரையும் குளிர்விப்பது
யாரும் செய்யக்கூடிய காரியமா?
யாரும் செய்துவிடும் காரியமா?

 
இப்படி என்பதற்குள்
நிலா அத்தனையும் செய்துவிட்டு
ஒன்றும் செய்யாததுபோல் மௌனம் காக்கும்
ஒருவிதத்தில் நிலா ஒரு ஞானி...
அத்தனையும் தன்னுள் பொதித்துக்கொண்டு
மௌனமாய் இருப்பதால், நிலா ஞானிதான்

 
வளர், பிறை என்பதெல்லாம்
நாள்கள் கழிக்க எண்ணப்படுகிற பொழுதுகள்
நிலாவைப் பொருத்தவரை
அது வளரவும் இல்லை; தேயவும் இல்லை
அது அப்படியே இருக்கிறது
இன்னும் புத்தம் புதுசாய்

 
நிலாக்குள் பாட்டி வடை சுடுகிறாளாம்…
கதை கதையாம் காரணமாம்
காரணத்தில் ஊறனமாம்...
இன்னும் அந்த பாட்டிக்கு வயசு தீறல
அப்படியே இருக்கு வடையைச் சுட்டபடியே

 
ஆம்ஸ்ட்டாங்க் நிலவில் கால் பதித்தாராம்
அவருக்குப்பின் அனைவரும்
இப்போது அங்கே குடியேற திட்டமிட்டு
புறப்பட்டுகொள்ள தயார் நிலையில் இருக்கின்றனர்

 
நிலவில் மனிதர் குடியேறிவிட்டால்
அதன் தண்ணொளி என்னவாகும்?
உலகத்தில் நடக்கும் அக்கிரமங்களை எல்லாம்
வெளிச்சம் போட்டுக் காட்டும் அதன் பவர் எங்கே போகும்?
மனிதர் கால்பட்ட இடம்தான் மாறிவிடுமே?
நிலாவையும் அவன் விட்டுவைப்பானா?
பிட்டு பிட்டு விற்பானா?
 
இயற்கையாய் இருப்பதை
ஆராய்ச்சி செய்து காய்ச்சி எடுப்பதால் யாருக்கு லாபம்?
இன்றைய தலைமுறைகளுக்கு
நிலாச்சோறு தெரியவில்லை
நிலா முட்டம் தெரியவில்லை
நிலவொளி கூட காலபோக்கில் தெரியாமல் போகும்
 
ஒவ்வொருக்குள்ளும் ஒளிந்து கிடக்கும்
நல்ல சிந்தனையை... நல்ல செயலை
எழச் செய்வதும், கலை படைக்கச் செய்வதும் நிலாதான்
அருகில், எதிரில் இருப்பவர்களை எல்லாம் விரட்டிவிட்டு
திறந்தவெளி வானத்தைப் பாருங்கள்
பாலொளி வீசும் பௌர்ணமி பளிர் சிரிப்போடு காத்திருப்பாள்
 
அவளோடு அளவளாவுங்கள்
அவளது தண்ணொளி முழுதையும்
உங்கள் மேல் பீச்சியடிப்பாள்
உடம்பிலுள்ள இண்டு இடுக்கெல்லாம்
வாங்கி நிரப்பிக் கொள்ளுங்கள்
குழம்பிக் கிடக்கும் மனதிற்குக் குளிரூட்டுவாள்
தவியாய் தவிப்பவர்களுக்குத் தாயாய் இருப்பாள்குறைகளைக் கொடுங்கள்
நிறைகளைத் தருவாள்
 
நிலா பெண்தான்
பெண்ணால் தான்
இவ்வளவு இனியாகவும், தன்மையாகவும் இருக்க முடியும்
ஆண்களெல்லாம் சற்று ஆசுவாசப்பட்டுக் கொள்ளுங்கள்
ஆணும் ஆணும் சேர்ந்தால் நல்லதா நடக்கும்?
ஓரிரு நிமிடத்திலேயே ஆயிரம் பொல்லாப்பு முளைக்கும்
அதுபோல் பெண்ணும் பெண்ணும் பத்து நிமிடம் தனிமைப்பட்டால்
தரையே பிளவுபட்டுவிடும்
அந்தளவுக்கு அள்ளிவிடுவர் ஏச்சும் பேச்சும்
அதனால்தான் ஆணையும் பெண்ணையும்
அருகருகே படைத்து
ஆனந்தமடையுங்கள் என
ஆண்டவன் விட்டுவிட்டான்
 
சகாக்களே…
சற்றுநேரம் என்னைக்
கவனிங்கள்…
அதோ அங்கே பாருங்கள்
அது அது நிலாதான்
அமாவாசை என்றார்களே?
என்னை நோக்கியே பார்க்கிறாள்
என்னோடு வாருங்கள்
உங்களையும் நோக்குவாள்
உங்களையும்
என்னோடு அழைத்துவரச்
சொல்லி சைகை புரிகிறாள்
தெரிகிறதா? புரிகிறதா?
புலம்பாதீர்கள்
எல்லாரும் அவரவர்
பால்கனிக்கு வாருங்கள்
நிலாவும் நானும்
காத்திருக்கிறோம்

சீக்கிரம்…
விடிந்து விடப் போகிறது
வானம் வடிந்துவிடப் போகிறது
இருள் விழித்துவிடப் போகிறது

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்


கவிதை : சமத்துவம்

சகலரும்
சகலமும் பெற
சமத்துவம்
உயிர்த்துவம்,
உயரத்துவம்!

இருப்பவர்
இல்லாதவருக்கு
இல்லை எனக்
கை விரிக்காது,
உதறிவிடாது
அரவணைக்கவே
சமத்துவம்
வாழ்வின் தத்துவம்!

சமத்துவத்திற்காக
நம் முன்னோர்கள்
போராடி போராடி
பொழுதுதான் போய்ச்சு!

சமத்துவம் விடிஞ்சபோது
சத்தியமாய்
அவர்கள் இல்லை!

சமத்துவபுரம்
என்றொரு இடமும்
எங்கள் நாட்டில் உள்ளது
சாமான்யன் தவிர
சகலரும் அங்கே
குடியிருப்பர்
இல்லாதவன்
இருப்பவன் என
எவரும் பாகுபாடின்றி
சமத்துவமாய்
சமத்துவபுரத்தில்
வசிப்பர், புசிப்பர்
எளியோரை ரசிப்பர்

வாழும் நாட்டை
வறுமையாக்கிவிட்டு
மிடுக்கோடு
எவ்வித அச்சமும் இல்லாது
ஏசி வாகனத்தில் பவனி வரும்
கோமான்கள் எந்த நாட்டிலும் உள்ளனர்

உழைப்பதே இல்லை
ஊழியம் செய்வதும் இல்லை
பணம் மட்டும்
பெட்டி பெட்டியாய்
நிரம்பும், நிறையும்
அப்போதும் நிறையவே நிறையாது
அவர்கள் மனசு

வெள்ளை செலவுக்கும்
கொள்ளை கறுப்பாய்
அயல்நாட்டில் தஞ்சமடைய
ஊர் பணத்தில்,
மக்கள் வியர்வையில்
அவர்கள் மஞ்ச குளிப்பார்கள்

காற்றுள்ளபோதே
தூற்றிக் கொள்
என்னும் பழமொழி
இவர்களுக்குச்
சால பொருந்தும்

பணம் பெருத்தவர்களின்
படையலில்
ஏழைகளின் உமிழ் சொட்டும்
அவர்கள் வீட்டில்
பணிபுரியும் அனைவரும்
மீந்ததைத் தின்று
உயிர்வாழ
சமத்துவம்
அங்கே தாண்டவம் ஆடும்

ஏய்ப்பவன்,
ஏழை பாளை,
இளைத்தவன்,
வலுத்தவன்
குடியான், முடியான்
நிலை மாறவேண்டுமெனில்
சமத்துவம்
சாம்ராஜ்ஜியம் செய்யனும்

அதற்கு
சாமான்யன்
முடிசூடனும்
நடக்குமா?
நடக்கனும்

இளைஞர்கள் நினைத்தால்,
மாணவர்கள் நினைத்தால்
நடக்காதது எதுவும்
இருக்கா என்ன?

சாமான்யனாக இருப்பவர்
முடிசூட்டியதும்,
கிரீடம் தலைக் கேறியதும்
தலை கனம் வந்துவிடுகிறது
கனம் குறைந்தால்தானே
கவனம் பிறக்கும்?
கனம் ஏற ஏற
பாரம் தாங்காது
மண்ணைக் கவ்வ வேண்டியதுதான்

பதவி பித்தில் இருப்பவர்கள்
பித்து தெளிய
மத்து எடுத்து கடையணும்
புத்தி சீராகும் இல்லையேல்
மூளை செலவாகும்

ஏழை ஒருவன்
உணவுக்காக
ஏங்கிக் கொண்டிருக்க
அவனைச் சுற்றியிருக்கும்
நான்குபேர் நல்லா வக்கனையாய்
வளைத்துக் கட்டிகொண்டால்
ஏதுங்க சமத்துவம்?
பாவங்க இந்த சவம்

கண்கள் பணிக்கும்போது
நெஞ்சம் உருகணும்
வறுமை கையேந்துவதற்குள்
பத்து விரலும்
பாக்கெட்டுக்குள் நுழையணும்
இருப்பதை யோசிக்காது
எடுத்து போடவேண்டாம்
உனக்கும் கொஞ்சம் ஒதுக்கிவிட்டு
கொஞ்சமாவது பிட்டுபோடு
ஏழைகள் வாழ்வு மொட்டு விடும்

யோசனை செய்து பாருங்கள்...
நாம் கடித்து உண்டு
மீய்ந்துபோன ரொட்டியை
நாய்கூட வாய் வைப்பதில்லை
கடமைக்காக நாம் வீசியெறியும்
எச்சில் சாதத்தைக்
காகம்கூட சீந்துவதில்லை
இப்படி இருக்கும்போது,

கூடி உண்டு பாருங்கள்
அந்த ஜீவன்கள் எல்லாம்
வாலாட்டிக் கொண்டே
நம்மிடையே உலாவும்
அன்பாய் ஈசிக் கொள்ளும்

இருப்பதைப் பகிர்ந்து உண்ணும்
நிலை வந்தால்
சத்தியமாய்
சமத்துவம் நிலவும்
அந்தக் காலம் வெகு தூரம் இல்லை...

நீண்ட நாள்களுக்குப் பின்
நல்ல காய்ந்துபோன
ரொட்டி ஒன்று
கைவசம் இருக்கு
எம பசி வந்து காய்ந்து கிடக்கேன்
சீக்கிரம் வாருங்கள்
ஆள் அரவம் அற்ற
அந்தக் காட்டுப் பகுதியில்
ஆளுக்குக் கொஞ்சமாய்
எச்சியில் நனைக்க,
எச்சில் தெறிக்க
பரிமாறிக் கொள்வோம்

எச்சில்கூட மருந்துதான்
சமத்துவம் வந்துவிட்டால்
அதுவும் புனிதமாகும்