30 ஏப்ரல், 2017

ஹெல்த்

மாம்பழம் 360 டிகிரி! வகை, சுவை, சாப்பிடும் முறை, பலன்கள்! #Mango360

ழங்களின் அரசன் மாம்பழம்! அதனால்தான் தமிழர்கள், முக்கனிகளில் இதற்கே முதல் இடம் கொடுத்தார்கள். அதிகச் சுவையானது; மருத்துவக் குணம் நிறைந்தது; அனைவரையும் சப்புக்கொட்டி சாப்பிடவைப்பது... மொத்தத்தில் அனைவரையும் ருசியில் மயங்கவைக்கும் மந்திரப்பழம், மாம்பழம்! உலக அளவில் மாம்பழத்துக்கு மவுசு அதிகம். காரணம், இதன் சுவைக்கு உலகின் மூலை, முடுக்கிலெல்லாம் ஏராளமான ரசிகர்கள். சரி, மாம்பழத்தை எப்படிப் பார்த்து வாங்குவது, உண்பது, அதன் பலன்கள் என்னென்ன? விரிவாகப் பார்க்கலாம். 
மாம்பழம்
"95 சதவிகிதம் மாம்பழங்கள் கல்வைத்துப் பழுக்கவைக்கப்படுகின்றன. அதாவது, வெள்ளை நிறத்தில் இருக்கும் கால்சியம் கார்பைடு (Calcium Carbide) கற்களை இதற்குப் பயன்படுத்துகிறார்கள். அதோடு, இந்தக் கற்களைப் பொடியாக்கி, ஸ்ப்ரே போலவும் பயன்படுத்துகிறார்கள். இந்த ஸ்ப்ரேக்கள் அடிக்கப்பட்ட மாம்பழங்கள் பளபளவென இருக்கும். அதனால், பழத்தில் இயல்பாக இருக்கும் கறுப்பு நிறப் புள்ளிகள் தென்படாது. இப்படி கற்கள், பவுடர் பயன்படுத்தப்பட்டால், மாம்பழத்தில் இருக்கும் சத்துகள் குறைந்துவிடும்’’ என்கிறார் பெரியகுளத்தைச் சேர்ந்த விவசாயி மகாலிங்கம். மேலும், மாம்பழங்களை இயற்கையாகப் பழுக்கவைக்கும் முறை பற்றியும் விளக்குகிறார். 
மாம்பழம்
“இயற்கையான முறையில் மாம்பழத்தைப் பழுக்கவைக்க வைக்கோல், ஊதுவத்தி, பேப்பர் ஆகியவையே போதுமானவை. வீட்டில் உள்ளவர்கள், குறைந்த அளவுக்குத்தான் மாங்காய்களை வாங்குவார்கள். அவற்றை பேப்பரில் சுற்றிவைத்து, ஓர் அட்டைபெட்டியில் போட்டு, ஊதுவத்தி ஏற்றிவைக்க வேண்டும். அதன் புகை அந்தப் பெட்டிக்குள்ளேயே இருக்கும்படி காற்றுப் புகாதவாறு மூடிவைக்க வேண்டும். இரண்டு நாள்களில் மாங்காய்கள் பழுத்துவிடும். பச்சையாக, கடினமான காயாக இருந்தால், பழுக்க இரண்டு நாள்கள் தேவைப்படும்; சற்றுப் பழமாக இருந்தால் ஒரு நாள் போதுமானது.’’
மாம்பழங்களை எப்படிப் பார்த்து வாங்குவது, வாங்கிய பின்னர் எப்படிப் பயன்படுத்துவது என்று சென்னையில் 'லோக்கோ ஃப்ரூட்ஸ்' பழக்கடை வைத்திருக்கும் டி.அமீத் கான் விளக்குகிறார்... 
எப்படிப் பார்த்து வாங்குவது?
தேங்காயைத் தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாங்காயையும் தட்டிப் பார்த்துதான் வாங்க வேண்டும். அனைத்து வகைப் பழங்களையுமே தட்டிப் பார்த்து வாங்கலாம். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமலேயே இருந்தாலோ அழுகியது அல்லது அதிகம் கனிந்தது என்று அர்த்தம்.
மாம்பழம்
வாங்கும்போது, நிச்சயம் கவனிக்கவேண்டிய ஒரு விஷயம், பழத்தில் இருக்கும் கறுப்பு நிறப் புள்ளிகள். இவை இல்லாத பழங்கள், ஆபத்தானவை; செயற்கை முறையில் கனியவைக்கப்பட்டவை. கறுப்பு புள்ளிகள் உள்ள பழங்களில்தான் சுவை அதிகமாக இருக்கும். அவைதான் ஒரிஜினல்!
மாம்பழத்தின் உள்ளே காணப்படும் ஆரஞ்சு மற்றும் சிவப்பு கலந்த நிறம் இயற்கையானது. வெறும் மஞ்சள் நிறச் சதையுள்ள பழம் என்றால், அது ரசாயனம் மூலம் செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது எனப் புரிந்துகொள்ளலாம். 
சாப்பிடும் முறை:
* எந்தப் பழமாக இருந்தாலும், அதை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்கு கழுவ வேண்டும். இப்படிச் செய்தால், பழத்தின் மேல் இருக்கும் ரசாயனம், பூச்சி மருந்து அனைத்தும் நீங்கிவிடும். 
* பழங்களை தோல் சீவிச் சாப்பிட வேண்டும். தோலில் சத்துக்கள் இருக்கும் என்பார்கள்; ஆனால், அதே தோலில்தான் அதை பழுக்கவைக்க அடிக்கப்படும் மருந்துகளும் நிறைந்து இருக்கும். எனவே, கடைகளில் கிடைக்கும் பழங்களின் தோலை நீக்கிவிட்டுச் சாப்பிடுவதே சிறந்தது.
மாம்பழம் ஜூஸ்
 * மாம்பழங்களைத் தோல் சீவி சாப்பிடுவதால், உடல் உஷ்ணம் குறையும். வயிற்றில் அசௌகரியம் உண்டாகாமல் இருக்கும். வயிற்று வலி ஏற்படாது. 
* மல்கோவா, அல்போன்சா, ருமேனியா, பங்கனபள்ளி, இமாயத் போன்ற வகை மாம்பழங்களை சாறாகக் குடிக்கலாம். செந்தூரம், கல்லா, நார் மாம்பழம், மனோரஞ்சிதம், காளையபாடி, காசா போன்றவற்றை அப்படியே சாப்பிடலாம்.
எந்த வகை மாம்பழம் எங்கு ஃபேமஸ்!
* மாம்பழம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சேலம்தான். தமிழ்நாட்டில், அனைத்து வகையான மாம்பழங்களும் கிடைக்கும் இரண்டு ஊர்கள், சேலம் மற்றும் பெரியகுளம். 
* வட தமிழகம் முழுவதற்கும் சேலத்தில் இருந்துதான் அனைத்து வகை மாம்பழங்களும் சப்ளை செய்யப்படுகின்றன. தென் தமிழகத்துக்கு பெரியகுளத்தில் இருந்து வருகின்றன.
* இப்போது ஆந்திராவும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது. அல்போன்சா, மல்கோவா, பங்கனபள்ளி போன்ற மாம்பழங்கள் அதிக அளவில் ஆந்திராவில் விளைவிக்கப்படுகின்றன. 
செந்தூரம்
வகைகளும் சுவைகளும்!
மாம்பழத்தில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. முக்கியமான சில மாம்பழங்கள்... செந்தூரம், காளையபாடி, அல்போன்சா, மனோரஞ்சிதம், நாட்டுக்காய், மல்கோவா, காசா, ஊறுகா காய் (கிளி மூக்கு மாம்பழம்), பங்கனபள்ளி, நார் மாம்பழம் (நீலம் மாம்பழம்), கல்லா மாங்காய், ருமேனியா, இமாயத் (இமாம் பசந்தி).
* இமாயத் வகை அதிக இனிப்புச் சுவை கொண்டது; புளிப்பு இல்லாதது.
* அல்போன்சா, பங்கனபள்ளி, காசா, செந்தூரம், மனோரஞ்சிதம், ருமேனியா போன்றவை குறைந்த அளவிலான புளிப்பும் அதிக இனிப்பும் கொண்டவை.
* நார் மாம்பழம், காசா, காளையபாடி போன்றவற்றில் புளிப்பும் இனிப்பும் சம அளவில் இருக்கும். 
* கல்லா, நாட்டுக்காய், கிளிமூக்கு மாம்பழம் போன்றவை அதிக புளிப்புச் சுவையுடன் இருக்கும். 
மாம்பழத்தின் பலன்கள்
பலன்கள்:
* வாதம் மற்றும் பித்தத்தைப் போக்கும். 
* இதில் அதிக அளவில் இருக்கும் கரோட்டின் சத்து, பார்வைத்திறனை மேம்படுத்தும். கண் நோய்களில் இருந்து காக்கும். 
* மாம்பழத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. ரத்தச்சோகையைச் சரிசெய்யும். 
* மாம்பழத்தை மில்க்‌ஷேக்காக சாப்பிடக் கூடாது. ஜூஸாகக் குடிக்கலாம். 
* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
* இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிமங்கள், பாலிபீனால் ஃபிளேவனாய்டுகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை, குடல், மார்பகம் மற்றும் புராஸ்டேட் புற்றுநோய்களுக்கு எதிராகப் போராடும் சக்தியை நம் உடலுக்கு அளிப்பவை. ஆக, மாம்பழம் நல்லது!
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக