24 ஏப்ரல், 2017

தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகலைக் காணலாமா?
பல்சுவை

தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகலைக் காணலாமா?

நூல்களின் கால இயந்திரத்தில் பயணிக்க ஆசைப்படுபவர்கள், கன்னிமாரா நூலகத்தில் நடந்து வரும் '500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அரிய நூல்கள் கண்காட்சி'யில் கலந்துகொள்ளலாம். நம் வரலாற்றுடன், நூல்களின் பரிணாம வளர்ச்சியையும் காணும் வண்ணம், நூல்களை மலையாக அடுக்கி வைத்திருந்தார்கள்.
தமிழ், ஆங்கிலம், இந்தி  எனப் பல்வேறு மொழிகளைச் சார்ந்த நூல்கள் இந்த அரிய வகை நூல்கள் கண்காட்சியில் உள்ளன. தமிழில் வெளியான முதல் புத்தகத்தின் நகல் நம்மை வரவேற்கிறது. காந்தி பிறப்பதற்கு முன்பே இந்தியாவைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்கள் கண்ணாடிப் பெட்டிகளில் இருந்துகொண்டு கதை சொல்கின்றன. பிரிட்டிஷ் மாணவர்கள் தமிழகத்தில் நடத்திய ஆய்வுக் கட்டுரைகள், அந்தக் காலத்திலேயே அழகாகத் தொகுக்கப்பட்டு புத்தகமாக வந்திருக்கிறது. ஆங்கிலேயர்களின் 'அரசு புகைப்படக்காரர்'களால் எடுக்கப்பட்ட அன்றைய இந்தியாவின் பல்வேறு புகைப்படங்கள், 'கறுப்பு வெள்ளை'ப் படங்களாக காலம் கடந்தும் நிற்கின்றன. 
கன்னிமாரா நூலகம்
புகைப்படம் எடுக்க முடியாத காலகட்டங்களில்... இந்தியாவில் இருந்த பறவைகள், விலங்குகள், மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு தொகுப்பாக இருக்கிறது. ஓவியங்களோடு, ஒவ்வொரு உயிரினத்துக்கான விளக்கமும் கொடுக்கப்பட்டிருப்பது சிறப்பு. தவிர, அடிமை இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்புகள் புத்தக வடிவில் இருக்கிறது. அஜந்தா, எல்லோரா குகைகளில் வரையப்பட்ட ஓவியங்கள் நம்மைப் பின்நோக்கிக் கடத்துகின்றன.
அரிய நூல்கள் கண்காட்சி
1781-ம் ஆண்டு தரங்கம்பாடியில் நிறுவப்பட்ட தமிழகத்தின் முதல் அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட 'ஞானமுறமைகளின் விளக்கம்' கன்னிமாரா பொதுநூலகத்தில் இருக்கும் பழைமையான நூல்களில் ஒன்று. திருச்சபை வழக்கங்களை விளக்கும் இந்நூல், இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கிறது. 1913-களில் தென்னிந்தியாவின் சிலை வடிவமைப்பாளர்களைப் பற்றிப் பேசும் புத்தகம் இருக்கிறது. இந்தியர்களின் கட்டடக்கலை பற்றிப் பேசும், 'இந்தியன் ஆர்கிடெக்சர்' புத்தகம் 1921-ல் வெளிவந்திருக்கிறது. இதுதவிர, டாவின்ஸியின் ஒட்டுமொத்த ஓவியங்களையும் உள்ளடக்கிய 'Leonardo da vinci - the complete paintings and drawings' புத்தகம் கண்காட்சியில் இருக்கிறது. 
தவிர, பண்டைய இந்தியாவின் நில அமைப்புகள், இயற்கை வளங்கள் குறித்த தொகுப்புகள், விலங்கியல், தாவரவியல் சார்ந்து வெளியான புத்தகங்களும் இருக்கிறது. 'மிலிட்டரி காஸ்ட்யூம்ஸ் ஆஃப் இந்தியா' என்ற புத்தகம், ராணுவ வீரர்களின் உடைகள் எப்படியெல்லாம் பரிணாமம் பெற்றது என்பதை விளக்கும் 'pigeons post' என்ற புத்தகம், இந்தியத் தபால் துறையின் பரிணாமங்களைக் கலர் கலர் படங்களில் விவரித்திருக்கிறது. ஓட்டத் தூதுவர்களாக இருந்த 'தபால்காரர்'கள் பயன்படுத்திய உடை, ஆயுதங்கள் எல்லாம் வாசிப்போடு சேர்ந்து பிரமிப்பையும் கொடுக்கிறது. 
அரிய நூல்கள் கண்காட்சி
பதினைந்து ரவுண்ட் டேபிள் போட்டு புத்தகங்களை வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு புத்தகத்தின் வெளியே மட்டும் அட்டை போட்டு இருக்கிறார்கள். இதில், சில புத்தகங்கள் தொட்டாலே உதிரும் நிலையில் இருந்தாலும்... பெரிய மனசுக்காரர்களாக  அந்தப் புத்தகத்தைத் தொடவும், திருப்பிப்பார்த்து போட்டோ எடுக்கவும், ஏன் செல்ஃபி எடுக்கவுமே அனுமதிக்கிறார்கள்.  கண்காட்சியைப் பார்க்கப் பார்க்க... நம் தமிழ்நாட்டின் கடந்த கால சரித்திரத்தை, நிகழ்காலத்தில் நின்றபடியே அணு அணுவாகச் சுவைக்க முடிந்தது. ஆழ்கடலில் தேடித் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்களாக இருந்தது இந்த அரிய நூல்கள். 
கன்னிமாரா நூலகத்தின் இயக்குநர் மீனாட்சி சுந்திரம், "ஒவ்வொரு ஆண்டும் உலக புத்தக தினத்தை முன்னிட்டுதான் இந்தக் கண்காட்சியை நடத்துகிறோம். இந்த ஆண்டும் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அறிவுறுத்தலின்படி இந்தக் கண்காட்சி நடக்கிறது. எங்களிடம் அரிய நூல்கள்னு கிட்டத்தட்ட 25,000 நூல்களுக்கு மேல இருக்கிறது. அது அத்தனையும் வைக்க முடியாது என்பதால், அதில் தேர்ந்தெடுத்து 300 நூல்களை மட்டும் வைத்திருக்கிறோம். இந்த  நூல்களை, இந்தத் தலைமுறையினர் பார்க்க வேண்டும் என்பதுதான் முக்கிய நோக்கம். 
மீனாட்சி சுந்தரம்
இந்த கண்காட்சியில் 1545-ம் ஆண்டு வெளியான நூல்கள் முதல் 1920-ம் ஆண்டு வெளியான நூல்கள் வரை வைத்திருக்கிறோம். 1808-ம் ஆண்டு வெளியான பைபிள். 1858-ம் ஆண்டு மதுரை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள். சென்னை மாகாண வரலாறு, இந்திய வரலாறு, கல்வி வளர்ச்சி போன்ற நூல்களும் காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 23-ம் தேதி புத்தக தினம். அதில் இருந்து 29-ம் தேதி வரை கண்காட்சி நடத்தத் திட்டமிட்டு இருக்கிறோம். காலை 10.30 மணிமுதல் மாலை 5 மணி வரை இந்தக் கண்காட்சி நடக்கும். சென்னை மட்டும் இல்லாமல் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வந்து இந்தக் கண்காட்சியைப் பார்க்கவேண்டும்." எனத் தன் வேண்டுகோளையும் வைத்தார் மீனாட்சி சுந்தரம். 
அரிய நூல்கள் கண்காட்சி
பல அரிய நூல்களின் பக்கங்கள் உதிரும் நிலையில் உள்ளன. அதைக் கண்காட்சியில் பார்க்கும் பலரும் அவற்றைத் தொட்டுப்பார்க்கிறார்கள். புத்தகத்துக்கு அருகிலேயே ஊழியர்கள் நின்றாலும், பார்வையாளர்கள் நூல்களைப் புரட்டிப்பார்ப்பதும், புகைப்படம் எடுத்துக்கொள்வது, செல்ஃபி எடுப்பதுமாய் இருந்தார்கள். இவ்வளவு அரிய நூல்களை மக்கள் பார்வைக்கு வைப்பது பாராட்டுக்குரியது. வரும் வாசகர்களும் அதை உணர்ந்துகொண்டு, புரட்டிப்பார்க்கும்போதும்,  புகைப்படம் எடுக்கும்போதும் கவனமாகக் கையாள்வது மிக முக்கியம்! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக