28 ஜூலை, 2017

திருக்குறளுக்கும் ஏழுக்கும் உள்ள உறவு; உமாதாணு ஆய்வு
Makkalkural 28 Jul. 2017 13:51
சாதி, மதம், இனம், மொழி, மாநிலம், நாடு என்ற குறுகிய வட்டங்களுக்கு அப்பாற்பட்டு, வாழ்வியலுக்கு வழிகாட்டும் 1330 அருங்குறள்களை உள்ளடக்கிய நூல் திருக்குறள்.
“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்று குறிப்பிடுகிறார் திருவள்ளுவர். கணிதமும் மொழியும் மனிதர்களின் இருகண்கள் என்று வலியுறுத்தி கூறுகிறார்.
இந்நிலையில், கணிதமும், 1330 குறள்களும் எவ்வாறு பின்னிப் பிணைந்து, இழையோடுகிறது என்பதை, கணித வல்லுனர் உமாதாணு சிறந்த முறையில் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வு முடிவுகள், உலகத்தில் உள்ள எந்த இலக்கியப் படைப்புக்கும் இல்லாத, தனிச்சிறப்பு திருக்குறளுக்கு இருப்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. மேலும், 7 என்ற எண்ணுக்கும், திருக்குறளுக்கும் உள்ள தொடர்பு மிகுந்த வியப்பை ஏற்படுத்துகிறது.
திருக்குறளில் 7ம் எண்ணின் சிறப்பு
திருவள்ளுவர் என்ற பெயரில் 7 எழுத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு குறளிலும் 7 சீர்கள் மட்டுமே உள்ளன. திருக்குறளில், 133 அதிகாரங்களில் 1330 குறள்கள் உள்ளன. அந்த இலக்கங்களின் கூட்டுத் தொகையும் 7ஆக இருப்பது ஒரு சிறப்பு. மொத்தத்தில், 7 என்ற எண்ணுக்கும் திருக்குறளுக்கும் ஒரு பிணைப்பு உள்ளது.
மேலும், 7ஆல் வகுபடும் தன்மைக்கும், திருக்குறளுக்கும் கூட தொடர்புள்ளது. ‘திருவள்ளுவர்’ என்ற சொல்லில் வரக்கூடிய எழுத்துக்கள் 7. அது 7ஆல் வகுபடும் எண்ணாக இருக்கிறது. ஒவ்வொரு குறளிலும், வரக்கூடிய சீர்களின் எண்ணிக்கை 7. அதுவும் 7ஆல் வகுபடக் கூடிய எண்ணாக இருக்கிறது. திருக்குறளில் 1330 குறள்களும், 133 அதிகாரங்களும் உள்ளன. இந்த எண்ணும் 7ஆல் வகுபடக் கூடிய எண்ணாக உள்ளது.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்என்ப வாழும் உயிர்க்கு” என்ற குறள் கணிதத்துக்கும் மொழிக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கிறது என்பதை திருக்குறள் எடுத்துக்காட்டுகிறது. இது 392 ஆவது குறளாக அமைகிறது. இதுவும் 7 ஆல் வகுபடும் எண்ணாக அமைவது ஆச்சரியமாக உள்ளது.
7ஆல் வகுபடக் கூடிய எண்களில் உள்ள 190 குறள்கள், உலக மனிதர்களின் வாழ்வியல் நியதிகளை உயர்த்திப்பிடிப்பவைகளாக உள்ளன. இவ்வாறு, 7ஆல் வகுப்படக் கூடிய 190 குறள்களின் எண்கள் 7,14,21…1330 ஆகிய அனைத்தையும் கூட்டினால், வரக் கூடிய 1,27,015 என்ற எண்ணும் கூட, 7ஆல் வகுபடக்கூடியது என்பது மிகவும் வியப்புக்குரிய ஒன்றாகத் தெரிகிறது.
பிறந்த ஆண்டை கண்டறியலாம்
எல்லாவற்றிற்கும் மேலாக, உலகத்திலுள்ள ஒவ்வொருவரின் பிறந்த ஆண்டையும் மிகச் சரியாக கூறக்கூடிய கணக்கீடும் திருக்குறளில் உள்ளது.
ஜனவரி முதல் தேதியில் நிறைவடைந்த ஒருவருடைய வயதை, குறளின் மொத்த எண்ணிக்கையான 1330 ல் கழித்து விட்டு, அத்துடன் 686 என்ற சிறப்பு எண்ணை கூட்டினால், அவருடைய பிறந்த ஆண்டு தெரிய வரும். (7 ஆல் வகுபடும் 686 என்ற சிறப்பு எண்ணை, இதற்காக, உமாதாணு தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.)
எடுத்துக்காட்டாக, ஒருவருடைய வயது ஜனவரி 1 ந்தேதியில் 76 வயது நிறைவடைந்து உள்ளது என்று வைத்துக் கொள்வோம். அந்த 76 என்ற எண்ணை, 1330 ல் கழித்தால் 1254 வரும். இதோடு 686 என்ற வியத்தகு எண்ணைக்கூட்டினால், 1940 என்ற எண் கிடைக்கிறது. இதுதான் அவருடைய பிறந்த ஆண்டு.
இவ்வாறு உலகிலுள்ள ஒவ்வொருவரின் பிறந்த ஆண்டையும், திருக்குறளிலிருந்து கணக்கிட்டு அறிய ,உலகத் திருமறையான திருக்குறள் உதவுகிறது என்று, கணித வல்லுனர் உமாதாணு கூறி உள்ளார்.
கணித வல்லுனர் உமாதாணு, ஓர் எண் 7 ஆல் வகுபடுமா எனும் வழிமுறையை அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும்படி, எளிமைப்படுத்தி குறுந்தகடாகவும் வெளியிட்டுள்ளார். ஓர் எண் 2,3, 4, 5, 6,8, 9,11 என்ற எண்களால் வகுபடுமா என்று கண்டறியும் முறைகள், கணித புத்தகங்களில் இடம் பெற்றிருப்பது போல், 7ஆல் வகுபடுமா என்று கண்டறியும் இவரின் எளிமையான முறையும் கணித புத்தகங்களில் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக