20 ஆகஸ்ட், 2017

ஒரே கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாவது என்றால் என்ன? (What is multiple pregnancy?)

சில சமயம் பெண்ணின் கருப்பையில் ஒன்றுக்குக்கு மேற்பட்ட கரு உண்டாகி குழந்தையாக வளரலாம். இதையே ஒரே கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாதல் என்கிறோம்.
மொத்த கர்ப்பங்களில் சுமார் 3% ஒரே கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரே கரு முட்டையில் இருந்தும் உருவாகலாம் அல்லது வெவ்வேறு முட்டைகளில் இருந்தும் உருவாகலாம்.
ஒரு கருமுட்டை ஒரு விந்தணுவால் கருத்தரிக்கப்பட்டு பிறகு ஒன்றுக்கு மேற்பட்ட கருக்களாகப் பிரியும்போது ஒரே மாதிரி தோற்றமுள்ள இரட்டைக் குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உருவாகின்றன. இது முற்றிலும் தற்செயலாக ஏற்படும் ஒரு நிகழ்வே ஆகும். ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாவதற்கும் உங்கள் வயது, குடும்பத்தில் இது போன்று முன்னர் நடந்திருப்பது அல்லது இனம் ஆகிய எதற்கும் தொடர்பு எதுவும் இல்லை. ஒரே மாதிரி இருக்கும் இரட்டைக் குழந்தைகள் பிறக்கும்போது, பொதுவாக இரண்டும் ஆண் குழந்தைகளாக அல்லது பெண் குழந்தைகளாக இருக்கும், இரண்டுக்கும் ஒரே இரத்தப் பிரிவு இருக்கும். இரட்டைக் குழந்தைகளின் கண்களும் சருமமும் முடியும் ஒரே மாதிரி இருக்கும்.


இரண்டு முட்டைகள் இரண்டு வெவ்வேறு விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்டால், இந்த இரட்டையர்களை உடன் பிறப்பு இரட்டையர்கள் (ஃப்ராட்டெர்னல் ட்வின்ஸ்) என்கிறோம். இவற்றில் இரண்டும் ஆண் குழந்தைகளாகவோ அல்லது இரண்டும் பெண் குழந்தைகளாகவோ அல்லது ஒன்று ஆண் மற்றொன்று பெண் குழந்தையாகவோ இருக்கலாம். உங்கள் குடும்பத்தில் இதற்கு முன்பு யாருக்காவது உடன் பிறப்பு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருந்தால், உங்களுக்கும் அப்படிப் பிறக்க வாய்ப்புள்ளது. இவர்கள் இருவரும் வெவ்வேறு இரத்தப் பிரிவுகளைக் கொண்டிருக்கலாம்.
ஒரே கர்ப்பத்தில் மூன்று அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளும் உருவாவதுண்டு, அவை உடன் பிறப்பு குழந்தைகளாகவோ அல்லது ஒரே மாதிரி இருக்கும் குழந்தைகளாகவோ அல்லது இரண்டு வகையும் கலந்த குழந்தைகளாகவோ இருக்கலாம்.
ஒரே கர்ப்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் எப்படி உருவாகின்றன? (What causes multiple pregnancy?)

இது தற்செயலாகவும் நடக்கலாம். சில காரணங்களும் இருக்கலாம்.
பின்வரும் காரணங்களால் ஒன்றுக்கு மேற்பட்ட கருக்கள் உருவாகும் வாய்ப்பு அதிகரிக்கலாம்:
உங்களுக்கு வயது அதிகமாக இருந்தால், ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட கரு முட்டைகள் வெளியானால்
செயற்கை முறை கருத்தரிப்பை செய்துகொண்டால்
நீங்கள் கருத்தரிப்புக்காக மருந்து எடுத்துக்கொள்பவராக இருந்து, அந்த மருந்துகளின் காரணமாக ஒரே சமயத்தில் வெளிவரும் முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்தால்
அறிகுறிகள் (Symptoms)

சாதாரண கருப்பையை விட பெரிய கருப்பை கொண்டவர்களுக்கு, ஒன்றுக்கு மேற்பட்ட கரு வளர வாய்ப்புள்ளது. உங்கள் வயிற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமப்பதுபோல உங்களுக்குத் தோன்றினாலும், அதை உங்கள் மருத்துவர் மட்டுமே உறுதிப்படுத்த முடியும்.
கண்டறிதல் (Diagnosis)

ஒன்றுக்கு மேற்பட்டட இதயத்துடிப்பு இருப்பதாகத் தோன்றினால் அல்லது கருப்பை வழக்கத்தைவிட மிகப் பெரியதாக இருந்தால் உங்கள் மருத்துவர் அல்ட்ராசவுண்ட் சோதனையும் செய்யலாம். கருப்பையில் எத்தனை கருக்கள் உள்ளன என்பது அல்ட்ராசவுண்ட் சோதனையில் உறுதியாகத் தெரிந்துவிடும்.


சிகிச்சை (Treatment)

உங்கள் கர்ப்பத்தில் இரண்டு அல்லது மேற்பட்ட கருக்கள் வளர்வதாக உறுதிப்படுத்தப்பட்டால், பின்வரும் விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்:
ஊட்டச்சத்து: ஊட்டச்சத்துள்ள மற்றும் சரிவிகிதமான உணவு உட்கொள்ள வேண்டும். இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் சத்து மருந்துகளை போதுமான அளவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அக்கறையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்: உங்களையே நீங்கள் அக்கறையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். தவறாமல் மருத்துவரிடம் சோதனைக்குச் செல்ல வேண்டும், அப்போது தான் உங்கள் உடல்நலம் நல்லபடியாக இருக்கிறதா என்றும் குழந்தைகளின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்றும் கவனமாகப் பார்த்துக்கொள்ள முடியும்.
எடை கூடுதல்: ஆரோக்கியமான அளவிற்கு எடை கூடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். கர்ப்பத்தில் இரட்டைக் குழந்தைகள் இருந்தால், தாயின் எடை 17-25 கி. கி. கூடுவது நல்லது. இது கர்ப்பத்திற்கு முந்தைய உங்கள் எடையைப் பொறுத்து அமையும். எவ்வளவு எடை கூட வேண்டும் என்பதை அறிந்துகொள்ள உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.
சிக்கல்கள் (Complications)

ஒவ்வொரு நாளும் பல குழந்தைகள் ஆரோக்கியமாகப் பிறக்கின்றன. இருப்பினும், சாத்தியமுள்ள சிக்கல்கள் என்ன என்பது பற்றி நாம் தெரிந்துகொள்வது நல்லது, அவை:
உயர் இரத்த அழுத்தம்: உங்களுக்கு எந்த அளவுக்கு கடுமையாக உள்ளது என்பதைப் பொறுத்து உங்களுக்கு சிகிச்சை அளிக்கப்படலாம். மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம், முன் கூட்டியே மகப்பேறு நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படலாம், கரு கண்காணிக்கப்படலாம், படுக்கையிலேயே ஓய்வெடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்படலாம்.
நஞ்சுக்கொடி தொடர்பான பிரச்சனைகள்: நஞ்சுக்கொடி அறுந்துவிடலாம்.
சிறுநீர்ப்பாதை நோய்த்தொற்று (UTI): இந்தப் பிரச்சனைக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படலாம்.
இரத்தசோகை: இரும்புச் சத்து மருந்துகள் கொடுக்கப்படலாம், இரும்புச் சத்து அதிகமுள்ள உணவு வகைகள் பரிந்துரைக்கப்படும்.
இரத்த இழப்பு: பிரசவத்திற்குப் பிறகு அதிக இரத்தப்போக்கு ஏற்படலாம், இதனால் இரத்தம் ஏற்ற வேண்டி வரலாம்.
அறுவை சிகிச்சை முறையில் குழந்தை பிறத்தல்: குழந்தைகள் தலை மேல் நிலையில் இருந்தால், அறுவை சிகிச்சை முறை தேவைப்படலாம்.
அடுத்து செய்ய வேண்டியவை (Next steps)

உங்களுக்கு கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் மசக்கை அறிகுறிகள் மிக அதிகமாக இருக்கும். வாந்தி அதிகம் எடுப்பதால் உடலில் நீர் சத்து இல்லாமல் போகவிடக்கூடாது.
மதுப்பழக்கம், புகைபிடித்தல், அதிக அளவில் மருந்துகளை எடுத்துக்கொள்ளுதல், ரசாயனங்கள் மற்றும் அழகுசாதனப் பொருள்களைப் பயன்படுத்துதல் போன்றவற்றைத் தவிர்க்கவும். இவை உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம்.
போதிய ஓய்வெடுக்கவும், தவறாமல் மருத்துவரிடம் பரிசோதனைக்குச் செல்லவும்.
எச்சரிக்கை (Red Flags)

பின்வரும் சூழ்நிலைகளில் மருத்துவமனைக்குச் செல்லவும் அல்லது உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்:
பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்பட்டால்
பனிக்குடம் உடைந்து நீர் வந்தால்
குறைப்பிரசவ வலியின் அறிகுறிகள் தோன்றினால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக