14 ஏப்ரல், 2018

சித்திரை 1
பொன் ஏர் பூட்டும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பொன்ஏர் என்றும், மதிஏர் என்றும் அழைப்பார்கள்

தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல் நாளில் அரசன் உழவை தொடங்கி வைப்பான்..

இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் தான் ஒரு உழவன் என்றும் அதன் பிறகே தானொரு அரசன் என்பதை பறை சாட்டுவதே ஆகும்..

இதை திருவள்ளுவர் அழகாக கூறுவார்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார் "

என்ற குறள் மூலம் உழவனை தொழுது பின் சென்றுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று கூறுகிறார்..

பொன்னேர் பூட்டும் விழா, பொன்னேர் கட்டுதல் என்று குறிப்பிடப்படும் விழா நம் தொன்மையான விழாக்களில் ஒன்று. தற்காலத்தில் ஏறக்குறைய நாம் மறந்துவிட்ட பண்டிகை. அதென்ன, பொன்னேர் கட்டுதல்..?? தைப்பொங்கல் என்பது அறுவடை முடிந்தபின் நடக்கும் பண்டிகை போல, பொன்னேர் கட்டுவது என்பது சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் குடியானவர் பண்டிகை. பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதல் கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள். தற்காலத்தில் கொங்குப் பகுதியில் அருகிப் போயிருந்தாலும் பாரதத்தின் பிற பகுதிகளிலும், பாரத ராஜ்யம் ஏற்பட்ட வெளிநாடுகளிலும் இன்றளவும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொங்குப் பகுதியில் எண்பது வயது தாண்டிய பெரியவர்கள் அவர்கள் சிறு வயதில் இப்பண்டிகை கொண்டாடட்டத்தை நினைவுகூறுகிறார்கள்.

சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா சிறப்பாக கூறப்படும்

சிலப்பதிகாரத்தில் ஏர்மங்கலம் என்ற தலைப்பில் ஒரு பாடலே தனியாக இருக்கும்..

சிலப்பதிகாரம்

"கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்" - (சிலப்.10:13:2-5)

என்னும் சிலப்பதிகார நாடுகாண் காதையடிகட்கு, "செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க" என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார். அடியார்க்கு நல்லார் கொங்கதேசத்தில் கன்னகூட்ட பொப்பண்ண காங்கேயன் ஆதரவில் வாழ்ந்தவராவார். அவர் உரை இல்லாவிடில் இசைத்தமிழ் என்ற துறை இன்று இல்லை. ஆக, கொங்கதேசத்தைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் உரையில் கொடுக்கபப்டும் விளக்கம், சிலப்பதிகார காலத்திலோ அல்லது அடியார்க்கு நல்லார் வாழ்ந்த (12 நூற்றாண்டு) காலத்திய கொங்கு வழக்கம் என்பதில் மாற்று கருத்தில்லை.

சங்க இலக்கியங்கள்

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.
(திருவிளையாடற்புராணம்)

உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர, அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண்  பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.

கார் நாற்பது

கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க்கடி கொண்டார் பெருங்கௌவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.

ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்' என்றும், ‘பொன்னேர்' என்றும் வழங்குவர். (ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை)

கம்போடியா-தாய்லாந்து- போன்ற நாடுகளில் இன்றும் இந்த விழா அந்நாட்டு அரசர்களால் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் பெருவாரியாக கலந்துகொண்டு அங்கே விதைக்கப்படும் நவதானியங்களை போட்டி போட்டு  எடுத்து செல்வர். இதனால் தங்கள் நிலத்தில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை. அங்கே உழவு முடிந்ததும் உழவோட்டிய காளைகளுக்கு பல வித தீவனங்கள் வைக்கப்படும். எந்த தீவனத்தை காளை முதலில் உன்கிறதோ அதை வைத்து அவ்வருடத்தின் பலன் முடிவு செய்யப்படும்.

தமிழ்புத்தாண்டு தை 1 என முடிவு செய்ய இவர்கள் யார்??

உழவுசெய்யும் குடியானவனுக்கு சித்திரை 1 புத்தாண்டு தினம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக