29 செப்டம்பர், 2019

காற்றில் கலந்த இசை: KMPS.மனோகரன்

=====================

விவசாயத்தை ஆதாரமாகக் கொண்ட ஒரு சின்ன கிராமம், அதில் இந்த ஒரு குடும்பத்திற்கு மட்டும் இசையில் எப்படி இவ்வளவு ஆர்வம் வந்தது??

KMPS. மனோகரன் அண்ணாச்சி இசையில் பெரிய ஞானி, பின்ன புலிக்கு பிறந்தவர் இல்லையா! பொரிகடலை போல் கொடுக்கும் இந்தக்காலத்தில் அல்ல; அந்தக்காலத்திலே கலைமாமணி விருது பெற்றவர் இவரது தந்தை.

திண்டுக்கல் அங்கிங்கு இசைக்குழுவின் முக்கிய பாடகராகவும், மேலாளராகவும், இருந்த மனோகரன் அண்ணாச்சியின் பாட்டுக்கச்சேரி இல்லாத பொங்கலே மம்சாபுரத்தில் 80களில் இல்லை எனச்சொல்லலாம். சுசீலா, ஜானகி, பாலசுப்ரமணியம் போன்ற வார்த்தைகள் எல்லாம் முதன் முதலில் என் காதுகளில் விழுந்தது அவரது கச்சேரி கேட்க அம்மா அழைத்துச் சென்றபோதுதான்.

10 வருஷத்துக்கு முன்பு காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கலுக்கு கங்கை அமரனை அழைத்துவந்து கச்சேரி நடத்தி தன்னுடைய செல்வாக்கை ஊர் அறியச்செய்தார்.

அதற்கு அடுத்த வருடம் மாரியம்மன் கோவில் பங்குனிப்பொங்கலுக்கு கச்சேரி நடந்த வந்திருந்தார், கச்சேரியின் நடுவே, “இன்று மதியம் திடீர்ன்னு, நம்ம ஊர்க்கோவிலுக்கு நாமளே ஒரு பாட்டு எழுதி பாடினா எப்படி இருக்கும்ன்னு ஒரு யோசனை வந்துச்சு, உடனே எழுதி இசையமைச்ச பாடல்தான் இது” என்று  “தேரு வருது தேரு வருது தெக்கு தெருவு தேரு வருது” என்ற பாடலை பாடினார்.

அந்த கச்சேரி அவரது வாழ்கையிலே மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது, அதற்கு அடுத்தடுத்த வருடங்களில் நடந்த கச்சேரிகளில் எங்க ஊர் காளியம்மனையும் மாரியம்மனையும் பற்றி பல பாடல்களை எழுதி இசையமைத்து பாடினார்.

கோவில் திருவிழா என்றாலே எல்.ஆர்.ஈஸ்வரி வகையறாக்களின் பாடல்களையே கேட்டுப்பழகிய எங்க ஊர் காதுகளுக்கு இவரது பாடல்கள் வேறு ஒரு இன்பத்தை அளித்தது. மனோகரன் அண்ணாச்சி பாடல்கள் இல்லாத மாரியம்மன், காளியம்மன் பொங்கலை இனி நினைத்துப் பார்க்கக்கூட முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிட்டார்.

இன்று அவர் உயிராய் நேசித்த காளியம்மன் கோவில் புரட்டாசி பொங்கலின் முதல் நாள் கொடியேற்றத்துடன் துவங்க இருப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பு அவர் மரணமடைந்ததாக செய்தி வருகிறது. கடவுள் மறுப்புக் கொள்கைகளை இதுபோன்ற நிகழ்வுகள்தான் நீர்த்துப்போகச்செய்கின்றன.

இந்த இசை காற்றோடு கலந்ததோ
இல்லை கடவுளோடு கலந்ததோ
தெரியவில்லை.

காற்றுள்ளவரை எங்கள் ஊரையே
சுற்றிக்கொண்டிருக்கும்.


மனோகரன் அண்ணாச்சிக்கு அஞ்சலி!

16 செப்டம்பர், 2019

ஓர் ஆசிரியர் என்பவர்
எப்படி இருக்க வேண்டும்?


பொதுவாக மாதா,பிதா, குரு, தெய்வம் என்பார்கள். பெற்றோர்களுக்கு அடுத்து ஆசிரியரே நம்முடைய வாழ்வின் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றனர். ஆனால், தற்போதுள்ள பரபரப்பான சூழ்நிலையில் ஆசிரியர்கள் குழந்தைகளின் வாழ்வை ஒழுங்குபடுத்துவதில் முதல் இடத்தை பெறுகின்றனர் என்றுதான் கூறவேண்டும். 

விஞ்ஞான மயமான இந்த உலகில் நாம் ஓடிக்கொண்டிருக்கிறோம். பிறந்த குழந்தையை வீட்டில் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு செல்கின்றனர். இரண்டு வயது ஆனதுமே, ப்ளே ஸ்கூலில் சேர்த்துவிடுகிறார்கள். அந்தக் குழந்தையின் வாழ்க்கை பள்ளியில் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து பள்ளி, கல்லூரி எனச் சென்று கொண்டிருக்கையில், அவர்களின் மூன்றில் ஒரு பங்கு வாழ்க்கை முடிந்து விடுகிறது. 

பள்ளிப்படிப்பு வரை மாணவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்களோ அதுவே அவர்களது வாழ்க்கையில் பிரதிபலிக்கிறது. இந்தக் காலகட்டத்தில் பெற்றோர்களின் அன்பு, அரவணைப்பு, ஆதரவு எவ்வளவு முக்கியம். ஆக, இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு குழந்தை எந்த மாதிரி வளர்கிறது என்பது அந்த ஆசிரியரைப் பொருத்தும் அமைகிறது.

ஒரு குழந்தைக்கு  ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் கற்று தருவது ஆசிரியரே. வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான்.


ஒரு ஆசிரியர் என்பவர் எப்படி இருக்க வேண்டும்?

► ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர்தான் ஆசிரியர். மாணவர்களின் நிலைக்கு இறங்கி வர அவர்கள் தயாராக இருக்க வேண்டும். 

► மாணவர்களின் முழுக்கவனமும் தன்னிடம் இருக்குமாறு பாடம் கற்பிக்க வேண்டும். மாணவர்களுக்குப் புரியும் விதத்தில் பாடம் கற்பிக்க வேண்டும்.

► எப்போதும் முகத்தில் ஒரு புன்சிரிப்புடன் வலம் வரவேண்டும். அதுவே மாணவர்களுக்கு ஓர் உற்சாகத்தை அளிக்கும். 

► பாட நூல்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து பொதுவான விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். 

► முக்கியமான விஷயங்களை தினமும் மாணவ சமூகத்துடன் பகிர்ந்தகொள்ள கூடியவராய் இருத்தல் வேண்டும்.

► தனக்கு நேரம் செலவிடுவதைவிட மாணவர்களுக்கு அதிக நேரம் செலவழிப்பவராக இருக்க வேண்டும்.

► மாணவர்களுக்குக் கல்வியின் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அவர்களது தனிப்பட்ட திறமையை வெளிக்கொண்டு வந்து, அவர்களது சாதனைக்குத் தூண்டுகோலாக இருக்க வேண்டும். 

► எதில் விருப்பம் உள்ளதோ, அதை கண்டறிந்து செயல்படுத்த முயற்சிக்க வேண்டும். மாணவன் படிக்கவில்லை என்றால், அவர்களுக்குப் புரியும் படியாக நீங்கள் எவ்வாறு சொல்லி கொடுக்கலாம் என யோசிக்கலாம்.


► ஒரு விளக்கத்தைக் கொடுக்கும்போது, செய்முறை அடிப்படையில் மாணவர்களுக்கு உணர்த்தினால் படிப்பின்மீது ஆர்வம் வரும்.

► ஓர் ஆசிரியர், மாணவரின் சுக, துக்கங்களைக் கேட்டு ஆறுதலுடன் இருப்பதும் அவசியம்.

► ஆசிரியர் அனைத்து நற்பழக்கங்களிலும் மாணவர்களுக்கு ஒரு முன்உதாரணமாக இருந்தால், அவர்களுக்கு நீங்கள் சொல்லவே தேவையில்லை. உங்கள் வழியைத் தானாக அவர்கள் பின்பற்றுவார்கள். 

► ஆக மொத்தத்தில் ஆசிரியர் என்பவர் அனைவருக்கும் ஒரு படி மேலாக இருக்க வேண்டும். ஆசிரியரின் பணி மகத்தானது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

15 செப்டம்பர், 2019


வந்துவிடு மகனே...
வாழ்வில்
வசந்தம் வரட்டும்!

மகனே நீ பிறந்ததும்
பெற்றவளைவிட அதிக பூரிப்படைந்தேன்... 

மூத்தவனைவிட
மூக்கும் முழியுமாய்
இருந்தாய்... 

ஆண் பிள்ளை என
மூத்தவனுக்கு முணுமுணுத்த 
நம் சொந்தங்கள்... 

இரண்டாவதும் 
ஆண் என்றதும் அப்பா மீது
இலட்சணப் பார்வை பட்டது. 

நீ வளர ஆரம்பித்தாய்
நான் மலர்ந்தேன்... 

நீ தவழ்தாய்
நான் நிமிர்தேன்... 

ஊர் கண், உறவு கண்
நல்ல பார்வை, கெட்ட பார்வை
பட்டதோ உன்மேல்
வினை
தொட்டதோ என்மேல்... 

உன் மழலை
என்னை மயங்கச் செய்தது
புத்தியை மழுங்கச் செய்தது... 

சாதித்து விட்டோம்
என்றிருந்த என்னை
சாய்த்து விட்டாய் மகனே
இல்லை இல்லை 
சாய்ந்து விட்டேன் மகனே... 

ஒரு வயது
நன்றாய் இருந்தாய்... 
மூத்தவனைவிட எதிலும்
முனைப்பாய் இருந்தாய்... 

பெற்ற எங்களைவிட
உன்னுடன் பழகும்
எல்லாரையும் அப்போதே
இனம் கண்டாய்... 

குரல் கேட்டதும்
ஓடி வருவதும்... 
ஆள் வாடை பட்டதும்
ஆடி வருவதும்... 
மகனே உன் அருகிலேயே
என்னை இருக்க வைத்தாய்...
என்னை இறுக வைத்தாய்...

அதெப்படி...
என்னை உனக்குத் தெரியும்?
என் வாடை உனக்குப் புரியும்?
விவரமானாய் நீ... 

வீட்டினுள் நான் நுழைந்ததும்
எங்கிருந்தாலும் ஓடி வருவாய்...
கை இரண்டையும் தூக்கிக்கொண்டு
ஏங்கி வருவாய்... கண்கள் தானே பனிக்கும்

நான் வீட்டினிலேயே இருந்தால்
என்னைவிட்டு விலக மாட்டாய்
வேறெவரிடமும் ஓட மாட்டாய்... 

உன்னை ஒவ்வொரு கணமும் 
நினைக்கையில் கடவுள் மீது 
பயமும் பக்தியும் கூடியது... 

வீட்டில் அத்துணைபேருக்கும்
முன்னால் விழித்திடுவாய்... 
இரவில் அவர்களுக்குப் பின்தான்
தூங்குவாய்... 

நாம் தூங்கும்போது
நான் ஓர் அறை
நீ உள்ளறை
நான் தூங்கி விட்டேனா என
நீ பார்ப்பாய்... 
நீ தூங்கி விட்டாயா என
நான் பார்ப்பேன்... 
நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்... 

கட்டிலிலிருந்து
தலையை உயர்த்திப் பார்ப்பாய்... 
நான் பார்த்ததும்
கவிழ்ந்துகொண்டு குலுங்குவாய்
கொலுசொலி சினுங்கும்... 

நான் பார்வையை எட்டிப் போடுவேன்... 
நீ கவிழ்ந்து கொள்வாய்
மகிழ்ச்சியில் குலுங்குவாய்
மெத்தை அதிரும்... 

உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
இவ்வாறுதான் நினைக்கத் தோன்றும்
முன் ஜென்மத்தில்
நான் பிள்ளை நீ அப்பா
இந்த ஜென்மத்தில்
நீ பிள்ளை நான் அப்பா

எங்கே இருக்கிறாய் மகனே...
எப்போது வருவாய்...

வந்துவிடு சீக்கிரம்
நொந்துவிடும் என் மனம்

உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்
வருடமெல்லாம்...
நீ வந்தால்தான் வசந்தமெல்லாம்...

அம்மை அப்பனாய்...

ஓர் ஆசிரியரின் பள்ளி அனுபவம்


முன்னுரை:

அரிது அரிது மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும் கல்வியில் சிறந்து விளங்குதல் அதைவிட அரிது என்பதற்கேற்ப ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் அறிவு விளக்கம் பெற வேண்டும்.

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக    (குறள்  391)

என்ற வள்ளுவரின் வாக்கிற்கேற்ப கற்கத் தகுந்த நுல்களைக் குற்றமின்றி கற்று, அக்கல்வியை தன்னலமின்றி பிறருக்கு கற்றுக் கொடுப்பதே ஆசிரியர்களின் குறிக்கோள். உலகில் மக்கள் செய்யும் தொழில்கள் பல காணப்பட்டாலும், ஆசிரியர் தொழிலே சிறந்தது. இதற்கு இணையான தொழில் வேறொன்றில்லை. மக்களின் அறியாமையை நீக்குவதால்தான் ஆசிரியப்பணியே அறப்பணி, அதற்கே தன்னை அர்ப்பணி , இப்பணி தியாகப்பணி, தெய்வீகப் பணி, சமூகப் பணி என்று  எல்லோராலும் சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்ற கருத்தை மனதில் கொண்டு பணியாற்றுகின்றனர். தற்போது ஆசிரியர்களின் நிலைமை என்ன? இக்கட்டுரையில் காண்போம்.

அன்றைய காலத்தில் ஆசிரியர் நிலை:
            அன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களைக் கண்டாலே மாணவர்கள் மரியாதையுடன் போற்றினர். தனது பெற்றோருக்கு அடுத்த நிலையில் இருக்கும் குருவை (ஆசிரியரை)  தெய்வத்திற்கும் இணையாக வணங்கி அவர்களின் அறிவுரைகளை ‘பசுமரத்தாணி போல’ மனதில் பதித்து  வாழ்ந்தனர்.

                கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
                என்னாற்றுங் கொல்லோ உலகு 
                
என்பதைப்போல தனக்காக வாழாமல் மாணவர்களுக்காக வாழும் தன்னலமற்ற ஆசிரியர்களின் பணி மகத்தானது. ஆசிரியர்கள் தவறுகளை சுட்டிக்காட்டினால் தலைநிமிர்ந்து பார்க்கவும் முடியாமல் வெட்கத்தால் நாணி நிற்கும் மாணவர்களைக்  கண்டு மனம் நெகிழ்ந்து அவர்களை வெற்றிப் பாதையில் செலுத்தும் சிறந்த வழிகாட்டிகள் ஆசிரியர்கள். இன்றளவும் மாணவர்கள் மனதில் அழியாமல் நிற்கும் சிகரங்கள் ஆசிரியர்களே. உண்மையிலேயே தாய்க்கும், பிள்ளைக்குமான உன்னதமான நிலைமை அன்று…

இன்றளவில் ஆசிரியர் & மாணவர் உறவுநிலை:
                இப்பொழுதோ பள்ளிகளில் மாணவர்களைக் கண்டால் ஆசிரியர்கள் பயப்படும் நிலையாகிவிட்டது. மரியாதை என்பதை மாணவர்களிடம் இருந்து பிச்சை கேட்கும் நிலைக்கு ஆசிரியர்களின் நிலை சீர்குலைந்துள்ளது. 75%  மாணவர்களிடம் ஒழுக்க நிலையை காண்பது அரிதாகியுள்ளது. இன்றைய மாணவன் தவறு செய்யும் போது, அதைச்  செய்யாதே என்று ஆசிரியர் கூறினால், அதை அவன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை. அவனுக்காக ஆசிரியர்கள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய சூழலே  நிலவுகிறது.  அவர்களின் தவறுகளைக்  கண்டித்தால் மாணவர்களால் வெறுக்கும் நிலைக்கு ஆசிரியர்களின் பரிதாப நிலை அமைந்துள்ளது. மாணவர்கள் ஒரு புரியாத புதிராகவே இருக்கின்றனர். மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாதிசயங்களைக்  கொண்டவராக உள்ளனர். கல்வியே அழியாச் செல்வம் என்பதை உணர்ந்த ஆசிரியர்கள் மாணவர்களிடம் கல்வியைக்  கற்பது அவசியம் என்று கூறினால் ஆசிரியர்களை மாணவர்கள் வெறுக்கின்றனர். ஆசிரியர்களிடம், பாடப்பகுதியைப்  பற்றி விரிவாகப்  பேசுவதைவிட, மற்ற பொழுதுபோக்கு விசயங்களைப்  பேசவே நினைக்கின்றனர். அமைதியாக இருக்கும் ஆசிரியர்களையே கொலை புரியும்  மாணவர்கள் இருக்கும் நிலையில் மாணவர்களிடம் எங்கே கண்டிப்புடன் செயல்வடுவது. அவர்களைக் கண்டாலே பயம்தான் அசிரியர்களுக்கு… ஏன் இந்த நிலை?

பெற்றோர் & பிள்ளை (மாணவர்) உறவு நிலை :      
                தாய் தந்தை இருவரும் வேலைக்குச்  சென்றால்தான் குடும்பத்தை நடத்த முடியும், பிள்ளைகளைப் படிக்க வைக்க, அவர்களின் தேவைகளைப்  பூர்த்தி செய்யப் பணம் தேவை.  அவற்றைச்  சம்பாதிப்பற்கு முயற்சி செய்வது தவறு இல்லை அதே நேரத்தில் தங்களின் பிள்ளைகளிடம் நேரத்தை செலவிட மறுக்கின்றனர். குழந்தைகளின் குறைகளையும் நிறைகளையும் பகிர்ந்து கொள்ள நேரம் கிடைப்பதில்லை.

                ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
                உயிரினும் ஓம்பப் படும்’

உயிரைவிடவும் மேலானதாக கருதப்படும் ஒழுக்கத்தை முதலில் கற்றுக் கொடுக்கும் குருக்களே பெற்றோர்கள்.  இதனை அவர்கள் உணர மறுக்கின்றனர். அலுவலகத்தில் அடுத்தவரின் வாழ்க்கை உயர்வுக்குப்  பாடுபடும் பெற்றோர், தங்களின் வாழ்க்கையைக்  காக்கவிருக்கும் பிள்ளைகளைப் பற்றி ஏன் அக்கறை கொள்வதில்லை.  தொலைக்காட்சியில் வரும் நாடகங்களைப் பார்க்க நேரத்தை செலவிடும் அவர்கள் பிள்ளைகளின் திறமைகளை அறிந்து அவர்களை உற்சாகப்படுத்தி வெற்றிக்கு வழிகாட்ட மறுக்கின்றனர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை பிள்ளைகள் மீது இஷ்டம் இல்லாத காரணத்தால் ‘டியூஷன்’ என்ற பெயரில் நடத்தப்படும் வகுப்புகளுக்கு செலவிட நினைக்கின்றனர். மாணவர்களின் மனக்கருத்துகளை கேட்பதில்லை. மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இடையே பிளவு காணப்படுகிறது. சில மாணவர்களுக்குத்  தங்களின் பெற்றோர் எங்கு பணிபுரிகின்றனர், ஊதியம் எவ்வளவு என்பது கூட தெரியாத நிலை உள்ளது. தங்களின் பெற்றோருக்கு பகுதி நேர வேலை என்றால் சொல்லத் தேவையே இல்லை. பிள்ளைகள் தங்களின் பெற்றோரைக் காண்பது கூட அரிதான ஒன்றாகிறது.

மாணவர்களின் மனக்குமுறல்களில் ஆசிரியர் பங்கு:
      மாணவர்களைப் போலவே கல்வி முறையிலும், அதைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களிடமும்,   சில குறைகள் உண்டு. ஆசிரியர்கள்  கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்ற பெயரில் மாணவர்களை எந்நேரமும் படிக்கும்படி கட்டாயப்படுத்துகின்றனர். அதுவும் தவறுதான். மாணவர்கள் வாழ்க்கைக்கு கல்வி எவ்வளவு அவசியம் என்பதை அவர்களே உணரும்படியான சூழலை அவர்களுக்கு முதலில் உருவாக்கித் தர வேண்டும். அவர்களும் மனிதர்களே என்பதை உணர வேண்டும்.

                ஓடி விளையாடு பாப்பா
                நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா….’ 

என்ற பாரதியின் பாடலுக்கேற்ப பள்ளிகளில் பள்ளி நிர்வாகமும், நிர்வாகத்திற்கு இணங்கி நடக்கும் ஆசிரியர்களும்  பிள்ளைகளை விளையாட அனுமதிப்பது இல்லை. இன்றைய சூழலில் பிள்ளைகள் விளையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது.காரணம் படிப்பு, தேர்வு, மதிப்பெண் எனப்பல காரணங்கள்.  குறிப்பாக அரசுப்  பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை பரிதாபதிற்குரியது. அதைவிடக் கொடுமையானது அடுத்த வருடம் பொதுத் தேர்வு எழுதுவதற்கு இந்த வருடமே முன்னதாக பாடங்களை எடுப்பது, மாணவர்களை மிகுந்த மனக்குழப்ப நிலைக்கு தள்ளுகிறது. மாணவர்களுக்கு படிப்பின் மீது சலிப்பு ஏற்படுகிறது. அந்தப்  பாடங்களையும் அவர்களால்  சரியாகப்  படிக்க முடிவதில்லை.

மாணவர்களுக்கு  ஆசிரியர்களே எதிரி:
                பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர், மாணவர்களிடம் பாரபட்சம் காட்டுகின்றனர். இதுவும் மாணவன் சீரழிவுக்கு முக்கிய காரணம். அதிக மதிப்பெண்கள் எடுத்துத்  தேர்ச்சி அடையாத மாணவன், திருந்திப்  படித்து தேர்ச்சி அடைவதற்கு முயன்றால் அதை சில ஆசிரியர்கள் ஏற்க மறுக்கின்றனர்.காரணம் ஒருமுறை மாணவன் செய்யும் தவற்றை மனத்தில் கொண்டு அவன் கடைசிவரை இப்படித்தான் என்ற முடிவுக்கு வருகின்றனர் ,  பிறகு என்ன, அந்தக்  குறிப்பிட்ட மாணவன் பின்னாளில் தவறே செய்யாவிட்டாலும் கூட இந்த ஆசிரியர், அம்மாணவனை ஒதுக்கும் சூழல் உருவாகி வருகிறது . மாணவன், தன்னிடம் ஆசிரியர் கண்ட குறைகளைத் திருத்திக் கொண்டாலும் காரணமே இல்லாமல் அவனை வார்த்தைகளால் திட்டித்  தீர்த்துவரும் நிலையிலே சில ஆசிரியர்கள் உள்ளனர்.

                                தீயினாற் சுட்டபுண் உள்ளாறும், ஆறாதே
                                நாவினாற் சுட்ட வடு.

ஆசிரியர்கள் சிலர் மாணவர்களைச் சபிக்கின்றனர். தங்களின் பிள்ளைகளைப் போல நினைக்க வேண்டிய மாணவர்களை வாழ்த்தவில்லை என்றாலும் சபிக்க வேண்டாம். எனென்றால் நாம் சபித்த மாணவன் நாளை உயர் பதவி  வகிக்கும் சூழலில் இவ்வாசிரியர் அம்மாணவனை நேரில் சந்திக்கும் சூழலில்  கோபத்தால் திட்டிய நம்நிலை என்ன?  என்பதனை ஆசிரியர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மாணவர்கள் தங்களது தவறை திருத்திக் கொள்ள வாய்ப்பினை அளிக்க வேண்டும்.

                மாணவர்கள் பெற்றோரிடம் கிடைக்காத அன்பைத்தேடி அலையும்போது ஆசிரியர்கள்  திட்டிய வார்த்தைகள் அவன் மனதில் ஆறாத வடுவாக இருக்கிறது.இப்படித்தான் முன்னாள் மாணவர் ஒருவரை நான் சந்தித்த போது அவன் சொன்னான் “ மிஸ் என்னைய அப்போ அடிச்ச அந்தக் கணக்கு வாத்தியார நான் எங்க பாத்தாலும் அடிப்பேன். அவரால நான் மனரீதியா பட்ட வேதன இன்னும் ஆரல” என்றான். இப்படித்தான் இன்றைய ஆசிரியர்கள்,  மாணவர்களால் அதிகமாக வெறுக்கக் கூடிய நிலைக்கும், கேலிப் பேச்சுக்கும் ஆளாகின்றனர். அந்த  ஆசிரியர்கள். மாணவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்தி அவர்களின் எதிரிகளாகவே மாறுகின்றனர். அதனால் ஏற்படுவதுதான் ஆசிரியர் கொலை, வெற்றிப்பாதைக்கு அனுப்பவில்லை என்றாலும் பரவாயில்லை மாணவர்களைப் பாதாளத்தில் தள்ள வேண்டாமே…

மாணவர்களின் சீரழிவுக்குப் பெற்றோரின் பங்கு:
                இன்றைய பெற்றோர் தன் பிள்ளைகள் சந்தோசமாகவும் கௌரவமாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாணவர்களுக்கு குடும்பக்கஷ்டம் தெரியாமல் வளர்க்கின்றனர். அவர்கள் கேட்கும் போதெல்லாம் பணத்தைக்  கொடுத்துக்  கெடுக்கின்றனர்.  தங்களின் பிள்ளைகள் சமுதாயத்தின் முன்பாக அனைத்தும் தெரிந்தவனாக விளங்கவேண்டும் என்பதற்காக கணிப்பொறி, கைப்பேசி, போன்றவற்றை இயக்க கற்றுக் கொடுப்பதொடு, அதிக விலைக்கு வாங்கித்தருகின்றனர். இந்நிலையானது மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறது.

        இன்று கைப்பேசி இல்லாத மாணவர்களே இல்லை எனலாம். தவறான பாதையில் பிள்ளைகளை அழைத்துச் சென்றுவிட்டு பின்  வருந்தும் பெற்றோர்களே இங்கு அதிகம். மாணவன் எங்கு செல்கிறான், யாருடன் பழகுகிறான் என்பதை கவனிக்க மறக்கின்றனர்.பிறகு மதிப்பெண் குறைந்தால் ஆசிரியர்களிடம் வந்து புலம்பித் தவிக்கின்றனர் பெற்றோர்கள். என் பிள்ளை சொன்ன பேச்சை கேட்க மறுக்கிறான் நீங்களாவது அவனைத்  திருத்துங்கள் என்றுகூறி தங்களது பொறுப்பை தட்டிக்கழிக்கின்றனர். ஆசிரியர்கள் சில வேளைகளில் கண்டித்தால் அதே பெற்றோர் ஆசிரியர்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர். இதனால் ஆசிரியர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. சில பெற்றோர் மாணவர்களின் முன்பாகவே ஆசிரியர்களை திட்டும் அவல அடையும் நிலையும் காணப்படுகிறது.  இக்காரணத்தால் மாணவன் ஆசிரியரை ஏளனமாக பார்த்துக்  கைகொட்டிச் சிரிக்கிறான். ஆசிரியர்களுக்கு அவமானமே மிஞ்சுகிறது.

இச்சிக்கல்களுக்கு தீர்வு :
                மாணவர்கள்,  ஆசிரியர்களிடையே மரியாதையோடு கலந்த அன்புறவு நிலவ வேண்டும். வெறும் வார்த்தையாக மட்டும் இல்லாமல் மாணவர்களை தன் பிள்ளைபோல ஆசிரியரும், மாணவர்கள் ஆசிரியர்களை தன் தாயைப் போலவும் கருதுதல் வேண்டும். தன் பிள்ளைக்கு ஒரு அவமானம் என்றால் துடிக்கும் பெற்றோரைப் போல ஆசிரியர்கள் மாற வேண்டும். மாணவச் சமுதாயம், நம்முடைய வளர்ச்சிக்குதான் ஆசிரியர்கள் பாடுபடுகின்றனர் என்பதை மனதளவில் உணர வேண்டும். மாணவர்களின் தேவைகள் இன்னது என்பதை அறிந்து ஆசிரியர்கள் செயல்படவேண்டும்.  கூண்டுக்கிளிகளாக அடைக்காமல் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தைக் கொடுத்து சிறந்த வழிகாட்டுதல்கள் புரிய வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளை பக்குவமாகப் , பொறுமையாக பிற மாணவர்கள் முன்பு வெளிப்படுத்தாமல் தனிமையில் கூறுவது சாலச் சிறந்தது.  மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பது நல்லாசிரியரின் கடமை.

முடிவுரை :

                கற்கை நன்றே, கற்கை நன்றே
                பிச்சைப் புகினும் கற்கை நன்றே

என்பதற்கேற்க கல்வியைப் பிறரிடம் இரந்தாவது கற்க வேண்டும் அத்தகைய கல்வியைப்  புகட்டும் ஆசிரியப் பணிக்குச் சிறந்ததொரு நிலையை மாணவச் சமுதாயம் அளிக்க வேண்டும். ஆசிரியப் பணியின் மூலமாக உலகில் உள்ள அறியாமை இருளை அகற்றி, சிறந்த மாணவச் சமுதாயத்தை உருவாக்க ஆசிரியர்களுடன் மாணவர்களும், பெற்றோரும், நிர்வாகமும் கைகோர்த்து நிற்க வேண்டும். அப்பொழுதுதான் இப்பணி மென்மேலும் சிறக்கும்.

1 செப்டம்பர், 2019

`மருத்துவ அணிச் செயலாளர் முதல் தெலங்கானா ஆளுநர் வரை...!' - தமிழிசை கடந்துவந்த பாதை



`தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற வாசகம் மூலம் கடைக்கோடி தொண்டனுக்கும் பரிச்சயமானவர் தமிழிசை. ஒரு பெண் தலைவராக அவர்கடந்து வந்த பாதை சுலபமானதல்ல.


tamilisai
tamilisai


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் குமரி ஆனந்தனுக்கு மகளாக பிறந்தவர் தமிழிசை சௌந்தரராஜன். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்.பட்டமும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தில் டி.ஜி.ஓ. பட்டமும், கனடாவில் மருத்துவப் பயிற்சியும் பெற்றவர். இவரது கணவர் டாக்டர் சௌந்தரராஜன், சென்னைப் போரூர் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி சிறுநீரகவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிவருகிறார்.

tamilisai

tamilisai

அப்பா தீவிர காங்கிரஸ்காரர்; ஆனால், தமிழிசை, தன் விருப்பதுக்கு ஏற்ப தனது அரசியல்வாழ்க்கையைத் தீர்மானித்துக் கொண்டவர். 1999-ம் ஆண்டு பா.ஜ.கவில் தன்னை இணைத்துக்கொண்டார். அடிப்படை உறுப்பினராக தனது பயணத்தைத் தொடங்கியவர், தனது உழைப்பால் முன்னேறினார். அதே ஆண்டில் பா.ஜ.கவின் தென்சென்னை மாவட்ட மருத்துவ அணிச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கடந்த 2001-ம் ஆண்டு மருத்துவ அணியின் மாநில பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
முரண்பட்டு நிற்கும் கட்சி ஒன்றில் தமிழிசை சேர, அவரது தந்தைக்கு அது பிடிக்காமல் போனது. `நான் தேர்ந்தெடுத்த பாதைக்காக அப்பாவை விட்டுக்கொடுக்க நேர்ந்தது’ என்று தமிழிசை கூறியிருக்கிறார். பல சங்கடங்களைக் கடந்து, தான் செல்லும்பாதையில் உறுதியாக இருந்தவர்.
பா.ஜ.கவின் மாவட்ட, மாநில மருத்துவ அணிச் செயலாளர், மருத்துவ அணியின் தேசிய ஒருங்கிணைப்பாளர், மாநிலப் பொதுச்செயலாளர், மாநில துணைத் தலைவர், தேசியச் செயலாளர் போன்ற பொறுப்புகளை வகித்துள்ளார். இவரது செயல்பாடுகளைக் கண்ட கட்சி மேலிடம், 2006 மற்றும் 2011 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளித்தது. அதேபோல 2009 மற்றும் 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டார்.


tamilisai

tamilisai

ஆனால், அவரால் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை. 2014-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பா.ஜ.கவின் தமிழகத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார் தமிழிசை சௌந்தரராஜன். பா.ஜ.கவின் மாநிலத் தலைவர்களில் தமிழிசை மட்டும்தான் ஒரே பெண் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பா.ஜ.கவின் முகமாகவே மாறி, பா.ஜ.க என்றால் தமிழிசை என்ற நிலைக்கு கட்சியை லைம்லைட்டிலே இருக்கச்செய்தவர்.


அவர் தலைவராகப் பணியாற்றிய காலங்கள் சிக்கலானவை. மத்திய அரசு சார்பில் கொண்டுவரப்பட்ட நீட், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. உள்ளிட்ட விவகாரங்களை சாதுரியமாகக் கையாண்டார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசை விட்டுக்கொடுக்காமல், அதே சமயத்தில் தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் பாதிப்பு ஏற்படாமல் பிரச்னையைக் கையாள முனைந்தவர். பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டபோதிலும், அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கட்சிப்பணியாற்றியவர்; மீம்ஸ்களை போகிற போக்கில் கடந்து சென்றவர்.

tamilisai

tamilisai

அதேபோல ஊடக விவாதங்களிலும், செய்தியாளர் சந்திப்பிலும் எப்படிப்பட்ட கேள்விகளையும் புன்னகையால் எதிர்கொண்டு பதிலளிப்பவர். கடுமையான வார்த்தை உச்சரிப்போ, பாதியில் புறக்கணிப்போ அவரிடம் இருந்ததில்லை. இக்கட்டான சூழல்களில் கட்சியை வழிநடத்தியவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. தமிழகத்தில் அரசியலைக்கடந்து பல்வேறு கட்சித் தலைவர்களிடம் நட்பு பாராட்டுபவர் தமிழிசை. தனக்கான மைனஸை பிளஸாக மாற்றியவர்; உருவகேலிக்கு ஆளாக்கப்பட்ட தமிழிசை அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. பெண் தலைவராக இருந்து தமிழகத்தில் கட்சியை வளர்க்க பாடுபட்ட தமிழிசை தற்போது தெலங்கானாவின் ஆளுநராக பதவிஏற்க உள்ளார். `தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்', `வெற்றிகரமான தோல்வி' போன்ற வார்த்தைகளால் அதிக கவனம் ஈர்க்கப்பட்டவர் தமிழிசை.

ஆனந்த விகடன், 01.09.2019