3 ஜூலை, 2020

தேவதை என் மகள்

என் மகள் மீனாட்சிக்கு ஐந்து வயதானது. என் ஒரே மகள். அவள் பிறந்தநாளுக்காக என் நண்பன் கேசவனிடன் வாங்கிய கடனில்,  
200 ரூபாய் ஃபிராக், 20 ரூபாய் கேக், 10 ரூபாய் சாக்லேட், 20 ரூபாய் பொம்மை மட்டும் வாங்க முடிந்தது.

வீட்டிற்கு வந்தபோது அவள் தோழி பொன்னியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். 

நான் வீட்டிற்குள் நுழைந்ததும்,

''ஐ... அப்பா '' என்று ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். 

அவளிடம் உடை மற்றும் பொம்மையைக் கொடுத்தேன்.

''புடிச்சிருக்கா..., மீனு'' என்றேன்.

''எனக்கு இந்தப் பொம்மை வேண்டாம்பா.''

''ஏன் வேண்டாம் மீனு. இது நல்லா  இல்லையா ''

''இதைக் கடையில திருப்பி கொடுத்துட்டு, பொன்னி போட்டிருக்காலே அதே மாதிரி  ஜல் ஜல் கொலுசு வாங்கிட்டு வாங்கப்பா. ''

''அது வேண்டாம் மீனு. கால்ல குத்தி  புண்ணு வந்துடும். இந்தப் பொம்மை அழகா இருக்கு பாரு. பாப்பா மாதிரி வச்சு விளையாடு. ''

''எனக்கு அதுதான் வேணும்'' என்று அழத் தொடங்கினாள்.

 ''நாளைக்கு வாங்கிட்டு வரேன் செல்லம். ''

'' இன்னைக்கே கொலுசு வேணும்'' என்று கத்தி அழுதாள்.

''எதுக்கு அவளைப் பிறந்தநாள் அதுவுமா அழ வச்சுட்டு இருக்கீங்க ''  மனைவியின் குரல்.

''சரிமா, வாங்கிட்டு வரேன்'' என்று வெளியே கிளம்பினேன்.

அப்போதும் என்னிடம் சரியாக 30 ரூபாய் தான் இருந்தது. 

வெள்ளிக் கொலுசின் விலை கேட்டேன், 2000 என்றார்கள். வெள்ளி அல்லாத போலி கொலுசு கூட 100 ரூபாய்க்குமேல் சொன்னார்கள்.  

கடைவீதியில் மண் உண்டியல் 30 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வீடு வந்தேன். 

மீனு தூங்கி இருந்தாள் .

விடிந்ததும் ''ஜல் ஜல் கொலுசு வேணும்பா '' என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

''நான் ஒரு மேஜிக் பொருள் வாங்கிட்டு வந்திருக்கேன். அதை வச்சு நாம என்ன வேணாலும் வாங்கலாம். தெரியுமா ?'' 

''என்ன மேஜிக் பா... ''

''இங்க பாரு உண்டியல் ''

''இதுல இருந்து கொலுசு வருமா ''

''ஆமா மீனு. இதை சாமி பக்கத்துல வச்சிடனும். தினசரி உள்ளே காசு போடணும்.  நிறைந்ததும் இதை உடைத்தால் நிறைய காசு கிடைக்கும்.  நமக்கு என்ன வேணுமோ வாங்கிக்கலாம்.''

எங்கள் கம்பெனியில் மாலை 4 மணி ஆனதும், கேசவன் டீ குடிக்கக் கூப்பிடுவான். அவன் சிகரெட் பிடித்து விட்டு டீ  குடிப்பான். நானும் டீ குடித்துவிட்டு 10 ருபாய் கொடுத்துவிடுவேன்.  

உண்டியல் வாங்கிய மறுநாள் என்னைக் கூப்பிட்டான்.

''அருண், டீ குடிக்கப் போகலாம் வா...''

'' இல்ல கேசவன். டீ குடிக்கறதை நிறுத்த போறேன். அடிக்கடி தலை சுத்தற மாதிரி இருக்கு.'' 

''சரிப்பா, விட்டுடு . அதுவும் நல்லது தான்.''

டீ குடிக்காமல் வைத்திருந்த காசை வீட்டுக்கு வந்து மீனுவின் கையால் உண்டியலில் போடச் செய்வேன். 

அந்த சில்லரைகள் 'க்ளிங்' என்ற சத்தத்துடன் விழுவதைக் கேட்டு சிரிப்பாள்.

இது தினமும் நடந்தது. நாட்கள் கடந்தன. 

கேசவன் வேறு கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். 

நான் டீ குடிக்காமல் சேமித்த காசுகள் உண்டியலில் நிறைந்தன. மீனு உண்டியலைக் குலுக்கி அந்தச் சத்தத்தைக் கேட்டு ரசிப்பாள் . 

''இந்தச் சத்தம் கூட ஜல் ஜல் கொலுசு சத்தம் மாதிரியே கேக்குதுப்பா.  பொன்னி போட்டு நடக்கற மாதிரி எனக்கும் வாங்கிக் கொடுங்கப்பா.''

''உண்டியல் நிறையட்டும் மீனு. நாம் காசை எடுத்துட்டு போய் வாங்கிக்கலாம். ''

அது தோராயமாக 2000 ரூபாய் வந்திருக்கும் என்று ஒரு நாள்  தோன்றியது.

''மீனு உண்டியலை உடைச்சு எண்ணி பாக்கலாமா.''

''ஐ... ஜாலி, ஜல் ஜல் கொலுசு வாங்கப் போறேனே... ''

உடைத்து எண்ணினேன். 2030 ருபாய் இருந்தது. 

நானும் மீனுவும் கிளம்பினோம். 2000 சில்லரையை, ஒரு மாளிகைக் கடையில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டாக மாற்றிக்கொண்டோம்.

 ''அப்பா இந்த ஒரே ஒரு பிங்க் கலர் பேப்பர் காசு கொடுத்தா, ஜல் ஜல் கொலுசு கொடுப்பங்களா...''

''ஆமாம் மீனு ''

''இதை நானே, பத்திரமா வச்சுகிறேன். கடையில் இருக்கிற அங்கிள் கிட்ட நானே கொடுக்கறேன்.''

''சரி செல்லம், பத்திரமா வச்சுக்கோ.''

தன் ஸ்கர்ட் பாக்கெட் உள்ளே வைத்துக்கொண்டாள்.

பேருந்து நிறுத்தம் சென்று காத்திருந்தோம். 

எங்களைக் கடந்து சென்ற ஆட்டோவில், தெரிந்த முகம். கேசவன்.

சிறிது தூரம் சென்ற ஆட்டோ அங்கேயே நின்றது. நான் மீனுவை அழைத்துக்கொண்டு ஆட்டோக்கு அருகில் சென்றேன்.

கேசவன் இறங்கினான்.

''கேசவா, புது வேலைக்குப் போனதும் மறந்துட்டியே. போன் பண்ணறதுக்குக் கூட நேரம் இல்ல உனக்கு. நான் ஒரு நாள் பண்ணேன். அப்பவும் எடுக்கல நீ... ''

''இல்ல அருண். போன் பண்ணனும் தான் நினைப்பேன். அந்த நேரம் வேற ஏதாவது வேலை வந்துடும். அப்புறம் பேசிக்கலாம்னு விட்டுடுவேன். மீனு குட்டி நல்லா இருக்கியா... ''

''நல்லா இருக்கேன் அங்கிள் ''

''ஆட்டோல யாரு. ஹரிணியா. எப்படி இருக்க ஹரிணி.''

''நல்லா இருக்கேன் அங்கிள் ''

''மீனு ஹரிணி அக்காக்கு ஹாய் சொல்லு.''

''ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க.''

''நான் நல்லா இருக்கேன் மீனு. நீ எப்படி இருக்க.''

''நல்லா இருக்கேன் அக்கா. ''

ஹரிணி மீனுவை விட மூன்று வயது பெரியவள்.

''அருண், ஒரு பிரச்சினை ஆயிடுச்சு. ஒரு ஆக்ஸிடெண்ட் '' 

''என்ன ஆக்சிடென்ட், யாருக்கு, என்ன ஆச்சு ''

''ஹரிணியோட வலது கால்ல ஒரு கார்காரன் ஏத்திட்டு போயிட்டான்.  ஒரு மாசம் முன்னாடி ''

கேசவன் ஹரிணியின் வலது காலை காட்டினான். முழங்கால் பகுதியில் இருந்து அவள் கால் இல்லை. 

அதிர்ச்சியாக இருந்தது.

''செக்கப் தான் போயிட்டு வர்ரோம்.  அந்தக் கால் மாதிரி அளவெடுத்து செஞ்சு ஹாஸ்பிடலியே கொடுப்பாங்களாம். கொஞ்சம் பணம் தேவைப்படுது. உன்கிட்ட இருந்தா கடனா தரமுடியுமா ?''

''கேசவா, இப்படிக் கேட்டுட்டியே. உன்கிட்ட எத்தனை முறை கடன் வாங்கி இருக்கேன். என்கிட்ட இருந்தா கொடுக்காம இருப்பேனா?''

நான் மீனுவைப் பார்த்தேன்.  மீனு என்னைப் பார்த்தாள்.

தன் ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து 2000 ரூபாயை கேசவனிடம் நீட்டினாள். 

''அங்கிள் இந்தக் காசை டாக்டர் கிட்ட கொடுத்து, ஹரிணி அக்கா கால் சரி பண்ண சொல்லுங்க அங்கிள்'' என்றாள். 

''தேங்க்ஸ் மீனு , தேங்க்ஸ் அருண்.  எவ்ளோ சீக்கிரம் முடியுமோ திருப்பி கொடுத்துடறேன்.''

''அப்புறம் பாத்துக்கலாம் கேசவா.  மெதுவா கொடு.''

அவர்கள் ஆட்டோ கிளம்பி சென்றது.

''மீனு, நீ ரொம்ப நல்ல பெண்ணாய் ஆயிட்டே... ''

''ஹரிணி அக்கா பாவம் பா...  அதான் கொடுத்தேன். உங்க கிட்ட 30 ரூபாய் இருக்குலே. அதுல மேஜிக் உண்டியல்  வாங்கி, டெய்லி காசு சேர்த்து ஜல் ஜல் கொலுசு வாங்கிக்கலாம்'' என்றாள். 

''ஓகே டா... செல்லம் ''

கடைவீதியில் மீண்டும் ஒரு மேஜிக் உண்டியல் வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

எழுதியவர் : தமிழ்ச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக