27 ஆகஸ்ட், 2017

ஆகஸ்ட் 26 - எஸ்.எஸ்.வாசன் நினைவு தினம்
அகில இந்தியாவையும் தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்கவைத்த மேதை எஸ்.எஸ்.வாசன். ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். திறமை, புத்திக்கூர்மை, கடுமையான உழைப்பு மூலம் பத்திரிகைத் துறையிலும் சினிமா துறையிலும் உச்சத்தைத் தொட்டவர். 1903 மார்ச் 10-ல் தஞ்சை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் பிறந்தார் எஸ்.எஸ்.வாசன். தந்தை பெயர் சுப்ரமணியம், தாயார் வாலாம்பாள். வாசனின் முழுப் பெயர் சீனுவாசன். நான்கு வயதுக் குழந்தையாக இருந்தபோதே தந்தையை இழந்தார். தாயார் அரும்பாடுபட்டு வாசனைப் படிக்கவைத்தார். தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் தேர்ந்தவரான வாசனின் தாயார், இரண்டு மொழிகளிலும் உள்ள இலக்கியங்களைக் கற்றறிந்தவர். தான் படித்த கதைகளையெல்லாம் வாசனுக்குச் சொல்வார்.
உயர்நிலைப் பள்ளி முடிந்ததும் தாயாருடன் சென்னைக்கு வந்தார். பச்சையப்பன் கல்லூரியில் இண்டர்மீடியட் வரை படித்தார். அதற்கு மேல் படிக்க வசதியில்லை. அவர் பார்த்த முதல் வேலை பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கிக் கொடுக்கும் வேலை. பெரியார் நடத்திய ‘குடியரசு’, ராய.சொக்கலிங்கம் நடத்திவந்த ‘ஊழியன்’ பத்திரிகைகளுக்கு விளம்பரம் வாங்கித் தந்திருக்கிறார். விளம்பரம் சேகரிக்கப் பல ஊர்களுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
சைனா பஜாரில் சிறிதும் பெரிதுமாக நடந்துவந்த வியாபாரங்கள் வாசனின் மனதைக் கவர்ந்தன. அங்கு விற்கப்படும் பொருட்களைப் பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் செய்வது, அதைக் கேட்டுக் கடிதம் எழுதுவோருக்கு வி.பி.பி.யில் பொருளை அனுப்பிப் பணம் பெறுவது என்ற ‘மெயில் ஆர்டர்’ முறையை முதல் முறையாகத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். அதே சமயத்தில், அவருக்கு எழுதும் ஆர்வமும் இருந்தது. அந்நாட்களில் பலரும் பேச அச்சப்படுகிற விஷயத்தைத் துணிச்சலாகப் புத்தகமாக எழுதினார்.
1927-ல் வெளிவந்த அந்தப் புத்தகத்தின் தலைப்பு ‘இல்வாழ்க்கையின் ரகசியங்கள்’. ஆங்கிலத்தில் அதற்கு ‘மிஸ்டரீஸ் ஆஃப் மேரீட் லைஃப்’ (`MYSTERIES OF MARRIED LIFE’) - எஸ்.எஸ்.வாசன், ஃபிக்ஷனிஸ்ட் அண்ட் எத்னலாஜிஸ்ட்’ என்று கவர்ச்சிகரமாகத் தலைப்பும் கொடுத்தார். அதை அவரே அச்சிட்டு, விற்பனை செய்தார்.
ஆனந்த விகடன்
பூதூர் வைத்தியநாதய்யர் என்ற தமிழறிஞர் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை நடத்திவந்தார். தன்னுடைய பொருட்களுக்கு ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையில் விளம்பரம் கொடுத்திருந்தார் வாசன். ஆனால், அதற்குரிய பணம் செலுத்தியும் பத்திரிகையும் வரவில்லை, விளம்பரமும் வரவில்லை. அதை விசாரிக்கப் போனார் வாசன். நிதி நெருக்கடியால் பத்திரிகை வரவில்லை; அடுத்த மாதம் வரும் என்றார் வைத்தியநாதய்யர். அதே போல் வந்தது. ஆனால், 1927-க்குப் பிறகு, அவரால் தொடர்ந்து பத்திரிகை நடத்த முடியவில்லை. இப்போது வாசன் பத்திரிகையை விலைக்கு வாங்கிக்கொள்ளத் தயார் என்றார். ‘ஆனந்த விகடன்’ எட்டெழுத்து. ஒரு எழுத்துக்கு ரூ.25 என்று முடிவுசெய்து ரூ. 200-க்கு ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை விற்க முன்வந்தார். விகடன் வாசன் கைக்கு வந்தது. அப்போது வருடம் 1928.
ஆரம்ப நாட்களில் விகடன் மாதம் இருமுறை பத்திரிகை யாக வந்தது. பிறகு, ‘ஆனந்த விகடன்’ பொறுப்பாசிரியராக கல்கி வந்துசேர்ந்தார். அவர் எழுத்துக்களுக்கு இருந்த வரவேற்பால் ‘ஆனந்த விகடன்’ விற்பனை கிடுகிடுவென உயர்ந்தது. விகடனில் வாசன் நடத்திய குறுக்கெழுத்துப் போட்டிக்கும் பெரிய வரவேற்பு இருந்ததால், விற்பனை சிகரத்தைத் தொட்டது.
அப்போதுதான் ‘ஆனந்த விகட’னில் வாசன் ‘சதிலீலாவதி’ என்ற நாவலை எழுதினார். அதைத் திரைப்படமாகத் தயாரிக்க மருதாசலம் செட்டியார் என்ற பட அதிபர் முன்வந்தார். 1936-ல் வெளிவந்த ‘சதிலீலாவதி’ தமிழ்த் திரையுலகில் முக்கியத்துவம் பெற்ற படம். வாசன் எழுதிய முதல் திரைப்படக் கதை. இந்தப் படத்தில்தான் எம்ஜிஆரும் அறிமுகமானார்.
‘சதிலீலாவதி’ படம் திரைக்கு வந்து வெற்றிபெற்ற பிறகும்கூட, திரைப்படத் தொழில்மீது எஸ்.எஸ்.வாசனுக்கு ஆர்வம் ஏற்படவில்லை. ‘பத்திரிகைத் தொழிலே போதும்’ என்றிருந்தார்.
புரட்சி செய்த தியாகபூமி
தமிழ் சினிமாவின் பிதாமகன் கே.சுப்ரமணியம். (நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமணியத்தின் தந்தை) இவர்தான் தியாகராஜ பாகவதரையே அறிமுகப்படுத்தினார். அப்போது கல்கி எழுதிய கதைதான் ‘தியாக பூமி’. அப்போது வாசனைச் சந்தித்தார் கே.சுப்ரமணியம். ‘தியாக பூமி’ கதையைத் திரைப்படமாக்க விரும்புவதாகத் தெரிவித்தார். படப்பிடிப்பு நடக்கும்போது எடுக்கப்படும் புகைப்படங்களோடு ‘தியாக பூமி’யை ‘ஆனந்த விகட’னில் தொடர்கதையாக வெளியிடுவது என்று வாசனும் சுப்ரமணியமும் முடிவுசெய்தனர். அதன்படி ‘தியாக பூமி’ படத்தின் கதை, ‘ஆனந்த விகட’னில் சினிமா ஸ்டில்களுடன் தொடராக வெளிவந்தது. இந்த உத்தி, அகில இந்தியாவிலும் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டு, வெற்றிபெற்றது. கதை வாசகர்களைப் பெரிதும் கவர்ந்தது. அதனால், ‘ஜெமினி பிக்சர்ஸ் சர்க்யூட்’ என்ற பட விநியோக நிறுவனத்தை வாசன் தொடங்கி ‘தியாக பூமி’யின் விநியோக உரிமையைப் பெற்றார்.
1939, மே 20-ல் சென்னையில் கெயிட்டி, ஸ்டார் ஆகிய இரு திரையரங்குகளில் ‘தியாக பூமி’ வெளியானது. படத்தைப் பெண்கள் விரும்பிப் பார்த்தனர். ‘தியாக பூமி’ புடவை, ‘தியாக பூமி’ வளையல் என்று சந்தைகளில் புடவைகளும் வளையல்களும் விற்க ஆரம்பித்தார்கள்.
படத்தில் இடம்பெற்றிருந்த தேச பக்திப் பாடல்கள், சுதந்திரப் போராட்டக் காட்சிகள் காரணமாக, இந்தப் படத்துக்கு பிரிட்டிஷ் அரசு தடை விதித்தது. தடை உத்தரவு வரப்போகிறது என்பது முந்தின நாள் தெரிந்துவிட்டதால், படத்தை விடிய விடிய மக்களுக்கு இலவசமாகக் காட்டுவதற்கு சுப்ரமணியமும் எஸ்.எஸ்.வாசனும் ஏற்பாடு செய்தனர். இந்தியா சுதந்திரமடைந்த பிறகு தடை நீங்கி, ‘தியாக பூமி’ மீண்டும் திரையிடப்பட்டது. அப்போதும்கூட வாசனுக்கு சினிமாமீது ஆர்வம் ஏற்படவில்லை. ஆனால், காலம் அவரை சினிமாவுக்குள் இழுத்துவந்தது. அதுவும் கே.சுப்ரமணியம் மூலமாகவே.
சினிமா தயாரிப்பு
வாசன் ஸ்டுடியோ அதிபரான கதை சுவாரசியமானது.
அப்போதெல்லாம் படம் எடுக்க சென்னையில் அதிக வசதி கிடையாது. கல்கத்தாவில்தான் வசதிகள் இருந்தன. படம் எடுப்பதாக இருந்தால் 60, 70 பேர் கொண்ட கோஷ்டி யைச் சென்னையிலிருந்து கல்கத்தாவுக்கு அழைத்துச் சென்று, அவர்களை அங்கே எல்லா வசதிகளோடும் சுமார் மூன்று மாதங்கள் தங்க வைத்து, படம் முடிந்த பிறகு, அவர்களைத் திரும்ப சென்னைக்குக் கொண்டுவந்து சேர்ப்பது என்பது மிகவும் சிரமமான வேலை மட்டும் அல்ல; மிகுந்த பொருட்செலவும், கால விரயமும் ஏற்படுத்துகிற காரியம். அவ்வளவு சிரமத்தையும் பொருட்செலவையும் ஏற்பதற்குக் காரணம், அங்குள்ள ஸ்டுடியோக்களில் இருந்த வசதியும், அங்கு தொழில்புரிந்த திறமை மிக்க ஒளிப்பதிவாளர்கள், ஒலிப்பதிவாளர்கள், எடிட்டர்கள் உள்ளிட்ட நிபுணர்கள்தான்.
இதனால் சென்னையிலேயே அவ்வளவு வசதிகளும் நிறைந்த ஒரு ஸ்டுடியோவைக் கட்டலாம் என்று சுப்ரமணியம் முடிவெடுத்தார். சில தயாரிப்பாளர்களையும் கூட்டு சேர்த்துக்கொண்டார். அண்ணா சாலையில் இப்போது ஜெமினி அழைக்கப்படும் இடத்தில் ‘ஸ்பிரிங் கார்டன்ஸ்’ என்ற பெயரில் ஒரு காடு இருந்தது. ‘மோஷன் பிக்சர் புரொடியூசர்ஸ் கம்பைன்ஸ்’ என்ற பெயரில் அங்கே ஒரு ஸ்டுடியோவை நிறுவினார் கே.சுப்ரமணியம். அங்கு பணிபுரிவதற்காக ‘கல்கத்தா ஈஸ்ட் இந்தியா கம்பெனி’ ஸ்டுடியோவில் வேலை பார்த்த நிபுணர்களைச் சென்னைக்கு வருமாறு செய்தார். அப்படி வந்தவர்கள்தான் அந்நாளில் பிரபலமான சைலன் போஸ், கமால் கோஷ் போன்ற சிறந்த ஒளிப்பதிவாளர்களும், திரன்தாஸ் குப்தா என்ற லெபாரட்டரி நிபுணரும், சின்ஹா என்ற ஒலிப்பதிவாளரும், ஒப்பனைக் கலைஞர் ஹரிபாபுவும்!
‘மூவிலேண்ட்- ஜெமினி ஸ்டுடியோ’
இந்த ஸ்டுடியோவில் பல படங்கள் எடுக்கப்பட்டன. அப்போது கே.சுப்ரமணியம் இயக்கத்தில் இதே ஸ்டுடியோவில் ‘இன்பசாகரன்’ என்ற படம் தயாராகி, வெளிவரும் நாளைக்கூட விளம்பரப்படுத்திவிட்டார்கள். அப்போதுதான் அந்த துயரச் சம்பவம் நடந்தது.
சுப்ரமணியம் பல கனவுகளோடு நிறுவிய அந்த ஸ்டுடியோ 1940, டிசம்பர் 21 அன்று முற்றிலுமாகத் தீப்பற்றி எரிந்தது. அந்த விபத்தில் ‘இன்பசாகரன்’ படத்தின் நெகடிவ்களும், ஃபிலிம் கருவிகளும் சேர்ந்து எரிந்துபோயின. அதற்கு முன்பு ‘தியாக பூமி’க்கு அரசு விதித்த தடையால் சுப்ரமணியத்துக்கு நஷ்டம், அவரின் இந்திப் படம் ஏற்படுத்திய நஷ்டம், இப்போது இந்தத் தீ விபத்து என்று எல்லாம் ஒன்றுசேர்ந்தன. ஸ்டுடியோவை ஏலத்துக்கு விடும் நிலை. தன் ஸ்டுடியோவை ஏலத்தில் எடுத்து, படத் தயாரிப்பிலும் ஈடுபடும்படி வாசனை சுப்ரமணியம் ஊக்கப்படுத்தினார். முதலில் தயங்கிய வாசன் பின்னர் சம்மதித்தார்.
ஏலத்தன்று ஐந்து உறைகள் இருந்தன. ரூ.70,000 ரூ. 82,000; ரூ. 75,000, ரூ. 80,000 என்று நான்கு உறைகளைப் பிரித்துப் பார்த்தாயிற்று. கடைசி உறையைப் பிரித்து, அதில் உள்ள தொகையைப் பார்த்ததும் அதிகாரிக்கே சிரிப்பு வந்துவிட்டது. காரணம், அதில் விநோதமாகக் குறித்திருந்த எண்பத்தாறாயிரத்து நானூற்று இருபத்தேழு ரூபாய், பதினோரு அணா, ஒன்பது பைசா என்ற தொகை.
அதிக விலை குறித்துக் கடைசியாக எடுக்கப்பட்ட உறையின் உரிமையாளர் வாசனுக்கே ஸ்டுடியோ கொடுக்கப்பட்டது. வாசன் அதற்கு, ‘மூவிலேண்ட்- ஜெமினி ஸ்டுடியோ’ என்று பெயர் சூட்டி , ராஜா சர் முத்தையா செட்டியாரைக் கொண்டு தொடக்க விழா நடத்தினார். வாசனிடம் ஸ்டுடியோ வந்தது 1941-ல், 1969-ல் இயற்கை எய்தும் வரை 28 வருடங்கள் ஓய்வில்லாமல் உழைத்தார் வாசன்.
‘நந்தனார்’, ‘ஒளவையார்’, ‘மங்கம்மா சபதம்’, ‘சந்திர லேகா’, ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’, ‘இரும்புத்திரை’, ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, எம்ஜிஆரின் நூறாவது படமான ‘ஒளி விளக்கு’ என்று பல வெற்றிப் படங்களைத் தயாரித்ததோடு மட்டுமல்லாமல், அகில இந்திய அளவி லும் புகழ்பெற்றார். தமிழில்: 28, தெலுங்கில்: 19, இந்தியில்: 24, பிறமொழிகளில்: 7 என்று மொத்தம் 36 வருடங்களில் ஜெமினி தயாரித்து வெளியிட்ட திரைப்படங்களின் எண்ணிக்கை 78.
பிரம்மாண்ட சந்திரலேகா
அந்தக் காலகட்டத்தில் ஒரு தமிழ்ப் படத்தைத் தயாரிப்பதற்கு ஆகக்கூடிய செலவு ரூ.2 லட்சம்தான். ஜெமினி அதிபர் எஸ்.எஸ். வாசன் ஆங்கிலப் படங்களுக்கு இணையாக ‘சந்திரலேகா’ படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டார். ரூ.30 லட்சத்துக்கு பட்ஜெட் போடப்பட்டது. அந்தப் படத்துக்காக காஷ்மீரிலிருந்து, கன்னியாகுமரி வரை அலைந்து படத்தில் ஒரு சர்க்கஸ் குழுவை ஒப்பந்தம் செய்தார்கள். இந்த சர்க்கஸ் கம்பெனி பின்னாளில் ‘ஜெமினி சர்க்கஸ்’ ஆனது. முதலில் ஆச்சார்யா என்பவர்தான் படத்தை இயக்கினார். பிறகு, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். பிறகு, வாசனே படத்தை இயக்கினார். படத்தில் வரும் ‘டிரம் டான்ஸ்’ இன்று வரையில் பிரபலம்.
இந்தப் படத் தயாரிப்பின்போது வாசன் பல சோதனைகளைச் சந்தித்தார். ஸ்டுடியோ, உட்பட தன் சொத்துக்களையெல்லாம் அடமானம் வைத்தார் வாசன். அடமானத்துக்கான வட்டித் தொகை கிடுகிடுவென ஏறிக்கொண்டிருந்தது. இதுபற்றி வாசனே பின்னாளில் இப்படிக் குறிப்பிட்டார். “சந்திரலேகா படத்தைத் தயாரிக்க நான் திட்டமிட்டதற்கு மேலாகப் பணம் செலவாகிக்கொண்டிருந்தது. கையில் இருந்த பணத்தையெல்லாம் செலவுசெய்த பின்னர், ஜெமினி உட்பட என் சொத்து அனைத்தையும் அடமானம் வைத்துவிட்டேன். அப்படியும் படம் முடிந்தபாடில்லை. கடனால் ஏற்பட்ட கவலையைவிட, அப்பெருந்தொகைக்குக் கட்டிய வட்டியை நினைக்கும்போது நான் சற்று தளர்ந்துவிட்டேன். ‘இத்துடன் வாசன் போய்விடுவார். இவ்வளவு பெரிய கடனிலிருந்து அவர் மீண்டு வரவே முடியாது’ என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள். இந்தச் செய்தியை ‘தி இந்து’ அதிபர் சீனுவாச அய்யங்கார் கேள்விப்பட்டு, திடீரென்று ஒரு நாள் என்னை அழைத்தார். ‘சந்திரலேகா’ படத்துக்காக, பெருந்தொகை கடன்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். உண்மைதானா?’ என்று கேட்டார்.
‘உண்மைதான்’ என்றேன்.
‘சந்திரலேகா மூலம் எவ்வளவு வசூலாகும் என்று எதிர்பார்க்கிறாய்?’
‘தமிழ்நாட்டில் மட்டும் 60 லட்சம் ரூபாய் வசூலாகும். பிறகு, இந்தி மார்க்கெட் இருக்கிறது. கோடிக்கணக்கில் வரும் என்று நம்பிக்கை இருக்கிறது’ என்றார் வாசன்.
கூடவே, ‘கொடுக்கும் வட்டியை நினைத்து அச்சப்படு கிறேனே தவிர, கடனை நினைத்து அல்ல’ என்றார் வாசன்.
அடுத்த நிமிடமே வாசனின் பணப் பிரச்சினையைத் தீர்த்துவைத்தார் சீனுவாச அய்யங்கார். ‘நான் இப்போது உனக்குச் செய்யும் உபகாரத்துக்கு, நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்’ என்றார்.
‘என்ன?’ - இது வாசன்.
‘உன்னுடைய படிப்பு, அறிவு, ஆற்றல், துணிவு, உழைப்பு, பொய்-புரட்டு இல்லாத புனித வாழ்க்கை இத்தனையையும் கேள்விப்பட்டுத்தான் உனக்கு இந்தப் பண உதவியைச் செய்கிறேன். உன்னைப் போல சகல சாமர்த்தியங்களும் ஒருவனுக்கு இருந்து, பணம் ஒன்று இல்லாத காரணத்தால் அவனுடைய அறிவும் ஆற்றலும் பயனற்றதாகிவிடும் என்று உனக்குத் தெரிந்தால், இப்போது நான் உனக்குச் செய்த உதவியைப் போல் நீ மற்றவர்களுக்குச் செய்ய வேண்டும்’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.
உதவிக்கரம்
‘இந்து சீனுவாச அய்யங்காருக்குக் கொடுத்த வாக்குறுதியை பின்னாளில் நிறைவேற்றினார். இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சிவாஜி, பத்மினியை வைத்துப் படமெடுத்துக்கொண்டிருந்தார். பணத் தட்டுப் பாடு ஏற்பட்டது. அறிமுகம் இல்லாத அவரை அழைத்து 2 லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார். அப்போதுதான் கே.எஸ்.ஜியிடம் சீனுவாச அய்யங்காருக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிச் சொன்னார் வாசன்.
1948, ஏப்ரல் 9 அன்று ‘சந்திரலேகா’ வெளியானது. அந்தக் காலத்தில் ஒரு புதிய படம் பத்து ஊர்களில்தான் திரையிடப்படும். அங்கு ஓடி முடிந்த பிறகு, அடுத்த ஊருக்குப் பெட்டி போகும்.
‘சந்திரலேகா’ ஒரே சமயம் 120 ஊர்களில் திரையிடப்பட்டது. 18,364 அடி நீளமுள்ள இந்தப் படம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. தமிழ் ‘சந்திரலேகா’ வசூலைக் குவித்தது. ஆனால், பட்ட நஷ்டத்தில் கொஞ்சம் பாதிப்பு ஏற்பட்டது. இந்தி ‘சந்திரலேகா’ கோடி கோடியாகக் குவித்தது. வாசனைக் கண்டு அகில இந்தியாவே வியந்தது.
இப்படி, இறவாப் புகழும் சாதனையும் படைத்த உழைப்பு மேதைதான் எஸ்.எஸ்.வாசன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக