தன்னையே இழக்க வைக்கும் கோபமும், காமமும்!
Dinakaran
திருமூலர் மந்திர ரகசியம்
பயணம் செய்யும்போது யாராவது ஏழை எளியவர்களைப் பார்த்தால் மனம் வருந்துகிறது. “இவர்கள் இப்படிக் கஷ்டப்படுகிறார்களே” என்று எண்ணியபடியே, கை தானாக ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையாவது எடுத்துக் கொடுக்கிறது. யாரும் கெட்டவர்கள் இல்லை. அடுத்தவர்களின் துயரத்தைக் கண்டால், ‘ஆ! இப்படி ஆகிவிட்டதே!’ என வருந்துபவர்கள் இன்றும் ஏராளமாக இருக்கிறார்கள். அடுத்தவர்களின் நிலையைப் பார்த்து வருந்தும் நம்மைப் பார்த்து வருந்துகிறார்கள் சித்த புருஷர்கள். அடுத்தவர்களின் நிலையைப் பார்த்து வருந்தாதே என்கிறார்களோ எனப் பார்த்தால்... இல்லை, ஒட்டு மொத்த மனித குலத்தையுமே பார்த்து அவர்கள் வருந்துகிறார்கள்.
அப்படிப்பட்ட தன் வருத்தத்தைப் பதிவு செய்கிறார் திருமூலர். பதிவைப் பார்த்தால், அவருக்குத்தான் நம்மீது எவ்வளவு கருணை என்பது புரியும். ஆர்வ மனமும் அளவில் இளமையும் ஈரமும் நல்ல என்று இன்புறு காலத்துத்தீர வருவதோர் காமத்தொழில் நின்று மாதவன் இன்பம் மறந்து ஒழிந்தார்களே
(திருமந்திரம் - 2091)
கருத்து: அளவில்லாத ஆர்வம் கொண்ட மனமும், இளமையும், அனைத்திலும் பற்று கொள்ளும் தன்மையும் கொண்டு, ‘இவையே நமக்கு நல்லவை, நமக்கு ஏற்றவை, இன்பம் தருபவை என எண்ணி, திளைத்து மகிழ்ந்திருக்கும் காலத்தில், அவையெல்லாம் அழிந்து போகும்படியான பெண்ணாசையில் ஈடுபாடு கொண்டு, மாதொரு பாகனாகிய சிவபெருமானை மறந்து வீணாகக் கெட்டழிகிறார்களே! ஆழமான சொற்களால் ஆன பாடல் இது.
பாடலின் தொடக்கமே, நம் பிறவிக்கான காரணத்தைச் சொல்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வோர் அடிப்படை அல்லது மூலம் இருக்கும் அல்லவா? அதுபோல, நாம் பிறந்ததற்கான காரணம், அடிப்படை என்ன என்பதைத் திருக்குறள் சொல்கிறது: ‘அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான் றும்தவா அப்பிறப்பீனும் வித்து’ஆசை என்பது தவறாமல் பிறப்பைக் கொடுக்கக் கூடிய விதை என்பதே அக்குறளின் கருத்து. அவ்வாறு ஆசையின் காரணமாக, ஆர்வத்தின் காரணமாகப் பிறவியெடுத்த நாம், பிறந்ததில் இருந்தே ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்பதைப்போல, ஆசையின் காரணமாகப் பிறந்த நாம், மேலும் மேலும் அதிலேயேதான் அகப்பட்டுக் கொள்கிறோமாம்.
அதாவது, ஏற்கனவே கட்டிப்போடப்பட்ட நாம் அக்கட்டினில் இருந்து விடுபட முயலாது, மேலும் மேலும் கட்டுகளைப் போட்டுக் கொள்கிறோமாம். பாட்டின் தொடக்கத்தில் ‘ஆர்வ மனமும்’ என்பதைத் தொடர்ந்து ‘அளவில்’ என ஒரு சொல் இடம் பெற்றிருக்கிறது அல்லவா? அதை முன்னால் கொணர்ந்து ‘அளவில் ஆர்வ மனமும்’ எனப் பொருள் காண வேண்டும். அளவில்லாத ஆர்வ மனம், பிறப்பிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
குழந்தையாக இருக்கும்போது உணவுக்காகத் தாயைக் கூவியழுது அழைத்தது போய், பல் முளைத்ததும் கடித்துச் சுவைத்து உண்ண கற்கண்டின் மீது ஆர்வம் ஏற்படுகிறது. அப்படியே வளர வளர, ஒவ்வொன்றின் மீதும் ஆர்வம் உண்டாகி, இளமை வந்ததும்..... கேட்கவே வேண்டாம்! ‘உலகம் முழுவதும் எனக்காகவே, அவற்றையெல்லாம் அனுபவிக்கவே நான் பிறந்திருக்கிறேன்’ என்ற ஆர்வம் வளர்கிறது. அதிலும், ‘இது, இது, நமக்கு ஏற்றது; நமக்கு நல்லது’ என்றெல்லாம் மகிழ்ச்சியில் திளைக்கும்போது, அனைத்தையும் அழிக்கும்படியாகப் பெண்ணாசை வந்து விடுகின்றது.
பாடலில் இந்த இடத்தில் சற்று நின்று நிதானிக்கலாம். இதுவரை இப்பாடலுக்கு நம் நிலையை அனுசரித்து விளக்கம் பார்த்தோம். ஆனால் திருமூலரின் இப்பாடலில் பொதுப்படையாகப் பாடியிருப்பதால், இனி இப்பாடலை உயர்நிலை பெற்றவர்களின் வாழ்க்கையோடு பொருத்திப் பார்க்கலாம். முனிவர்கள் பலர், சிறுவயதிலிருந்தே, இறைசிந்தனையில் ஆர்வம் கொண்டு, ‘இளமை குறுகிய காலம்தான் இருக்கும்; வலிவும் இளமை காலத்தில்தான் இருக்கும். ஆகையால் இளமை இருக்கும்போதே, தவத்தைச்செய்து சிவத்தைச் சேர வேண்டும்’ என்று கருதி கடுந்தவம் செய்வார்கள். அவர்கள் செய்யும் தவப்பலன் அவ்வப்போது கைகூடும்.
ஆனால், பிரச்னையே இங்குதான் முளைக்கின்றது. கடுந்தவம் செய்து, தவப்பலன் கைகூடத் தொடங்கியதும், அதன் மூலம் கிடைக்கும் செல்வ(சுகப்)பலன்களை அனுபவிப்பதில் புத்தி போய்விடுகிறது. உதாரணமாக - விசுவாமித்திர முனிவர் தவம் செய்யும்போது, அவரை மயக்க ரம்பை வந்தாள். விவரம் உணர்ந்த முனிவர் கோபம்கொண்டு, அவளைக் கல்லாய்ப் போகும்படிச் சபித்தார். அதன்பின் மறுபடியும் தவத்தைத் தொடங்கியபோது, மேனகை வந்தாள். விளைவு? விசுவாமித்திர முனிவர் தன்னை இழந்தார்.
அதுவரை விசுவாமித்திர முனிவர் செய்த தவத்தின் பலன்ரம்பையிடம் கோபத்திலும், மேனகையிடம் காமத்திலும் போய்விட்டது. தவ மேன்மையால் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளக்கூடிய முனிவர்களே அவ்வாறு திசைமாறித் தடுமாறியிருக்கிறார்கள் என்றால், நாம் எந்த மூலைக்கு? மாபெரும் தவம் செய்தவர்கள்கூட அவ்வாறு வழுக்கி விழுந்ததை இதிகாச புராணங்கள் சொல்லி, நமக்கு எச்சரிக்கைதான் விடுக்கின்றனவே தவிர, அம்மகா தவசிகளான உத்தமர்களைக் கேலி பேச அல்ல. திருமூலர் இப்பாடலில் மிகுந்த கருணையோடு, நம்மீது அவருக்குண்டான இரக்கத்தை வெளிப்படுத்தியிருப்பதன் காரணம் புரிகிறதல்லவா? மேலும் இப்பாடலில் திருமூலர் ஒரு தொழிலைக் குறிப்பிடுவதைக் கவனிக்க வேண்டும். ‘காமத்தொழில்’ என்கிறார்.
அது என்ன காமத்தொழில்? எந்தப் பொருளில் சொல்லப்பட்ட வார்த்தை இது? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு தொழில் இருக்கிறது. ஆனால் அவற்றிலெல்லாம் இல்லாத ஆக்கமும் ஊக்கமும், காமத்தில் இருக்கிறது. ‘இந்த மனித குலம் இப்படிக் காமத்தைத் தொழிலாகவே கொண்டு விட்டார்களே, தெய்வ சிந்தனை என்பது இல்லாமல் இருக்கிறார்களே!’ என வருந்துகிறார் திருமூலர்.
சிறு வயது முதல் தொடர்ந்து வரும் அளவில்லாத ஆர்வத்தைச் சொல்லி, ‘பளிச்’சென்று தோன்றி மறையும் மின்னலைப் போன்ற இளமைக் காலத்தைச் சுட்டிக்காட்டி, வாழ்வின் முன்னேற்றத்தைச் சொல்லி, அந்த நேரத்தில் புத்தி காமத்தின் பக்கம் போய், அதுவே தொழிலாகக்கொண்டு உருப்படுவதற்கான தெய்வ சிந்தனையில்லாமல் இருக்கிறார்களே- எனத் திருமூலர் தன் வருத்தத்தைப் பதிவு செய்த பாடலிது.
சிறு வயதில் இருந்தே நல்லவற்றுக்குப் பழக்கவேண்டும், பழக வேண்டும் என்கிறார் திருமூலர். ‘அப்பா! ஒரு நாலு பூவை எடுத்து சாமிக்குச் சாத்து. அவன் நாமாவச் சொல்லு’ என்று சொல்லிக் கொடுக்க வேண்டுமாம். இவ்வாறு செய்யச் சொல்லித் திருமூலர் நமக்குச் சொல்லிக் கொடுக்கிறார். அதிலும் நான்கு விதமான மலர்களைச் சொல்கிறார். பாடலைப் பார்த்தால் விவரம் புரியும். அம்புய நீலம் கழுநீர் அணிநெய்தல்வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம் தும்பை வகுளம் சுர புன்னை மல்லிகை செண்பகம் பாதிரி செவ்வந்திசாத்திடே
(திருமந்திரம்-1003)
மலர்களின் பெயர்களை வரிசையாகச் சொல்லும் அற்புதமான பாடல் இது. தாமரை, நீலோற்பலம், செங்கழுநீர் மலர், அழகிய நெய்தல், மணம் வீசும் பாக்குமலர், மாதவி, மந்தாரை, தும்பை, மகிழம்பூ (வகுளம்), சுரபுன்னை, மல்லிகை, செண்பகம், பாதிரி, செவ்வந்தி எனும் பதினான்கு விதமான மலர்களைப் பட்டியல் இட்டிருக்கிறார் இப்பாடலில். மேலும் இப்பாடலில் நீர்ப்பூ, நிலப்பூ, கொடிப்பூ, கோட்டுப்பூ எனும் நான்கு விதமான மலர்களையும் குறிப்பிட்டிருக்கிறார். நீரிலோ, நிலத்திலோ, செடி கொடிகள் நிறைந்த இடத்திலோ, மலைப்பகுதியிலோ எங்கு இருந்தாலும், அங்கு மலர்கள் கிடைக்கும்.
அவற்றை எடுத்து ஆண்டவனுக்குச் சாத்து எனக் குறிப்பிடுகிறது பாடல். சுலபமாகத்தான் தோன்றுகிறது.ஆனால் செயல்முறையில் வரும்போது...? ஓர ஒட்டார் ஒன்றை உன்ன ஒட்டார் மலர் இட்டு உன(து)தாள்சேர ஒட்டார் ஐவர் செய்வது என்? யான் சென்று தேவர் உய்யச்சோர நிட்டூரனைச் சூரனைக் காருடல் சோரி கக்கக்கூர கட்டாரி இட்டு ஓர் இமைப்போதினில் கொன்றவனே
(கந்தர் அலங்காரம் - 4)
- என அருணகிரிநாதர் சொன்னதுதான் நடைமுறையில் வருகிறது. மலர்களை எடுத்து இறைவன் திருவடிகளில் சாத்த முடியாதபடி, ஐவரும் (ஐம்புலன்களும்) தடுக்கிறார்களாம். சென்ற பாடலில் திருமூலர் சொன்ன அதே கருத்து இங்கே அருணகிரிநாதாரிடமும் எதிரொலிக்கிறது. ஆர்வத்தின், ஆசையின் காரணமாக ஐம்புலன்களும் வேறு வேறு திசைகளில் அலைந்து பயணப்படும்போது, மலர்களை எடுத்து இறைவனுக்குச் சாத்துவது என்பது, சாத்தியப்பட மாட்டேன் என்கிறது. திருமூலரே மற்றொரு பாடலில் ‘புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு; அண்ணல் அது கண்டு அருள்புரியா நிற்கும்’ எனப் பாடம் நடத்தியதை, ஏற்கனவே பார்த்திருக்கிறோம். பாடம் நடத்தியவர் அடுத்த பாடலில் தன் அனுபவத்தைச் சொல்லி,வேறொரு பாடம் நடத்துகிறார்!
எய்திய நாளில் இளமை கழியாமை
எய்திய நாளில் இசையினால் ஏத்துமின்
எய்திய நாளில் எறிவது அறியாமல்
எய்திய நாளில் இருந்து கண்டேனே
(திருமந்திரம்-186)
கருத்து: மனிதப் பிறவி கிடைத்த பெருமையை எண்ணி, இளமை இருக்கும்போதே இசைபாடி இறைவனைத் துதித்து வாழுங்கள். மானிடப் பிறவியும் இளமையும் இருக்கும்போதே, இறை உணர்விற்குத் தடையாக இருந்த மன மயக்கங்களைத் தூக்கி எறிய அறியாமல் இருந்தவன், மன மயக்கங்களைத் தூக்கி எறியும் பக்குவ நிலை அடைந்தபோது, ‘எனக்குள் இருந்த இறைவனோடு கலந்து பேரின்பம் கண்டேன்’ என்றவகையில் மனிதப் பிறவியின் பெருமை, இளமையின் உயர்வு முதலியவற்றைச் சொல்லி, தன்னைப் பற்றியும் கூறித் திருமூலர் பாடிய இப்பாடலின் தொடக்கமே ‘எய்திய நாளில்’ என, மானிடப்பிறவி எய்திய பெருமை குறிக்கப்படுகிறது. இருப்பதைக் கொண்டு திருப்தி அடையாதவன், எவ்வளவு கிடைத்தாலும் திருப்தி அடையமாட்டான். நம்மிடம் இருப்பதில் மிகமிக முக்கியமானது நம் உடம்பு. அதுவும் எந்தவிதமான ஊனமும் இல்லாமல் இருக்கிறது.
ஊனம் இல்லாமல் இருந்தாலும் மனநலம் பாதிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் இருந்தால் என்ன பலன்? அந்த நிலையும் இல்லை; மனம் தெளிவாக இருக்கிறது. இவ்வாறு குறையின்றி இருந்தாலும், மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கிறோமா என்றால், இல்லை! ‘எனக்கு ஒரு பய மதிப்பு குடுக்கமாட்டேங்கறான்,’ என்று வருத்தம் வேறு! நமக்கு அடுத்தவர் மதிப்பு கொடுப்பது இருக்கட்டும். நாமே நமக்கு மதிப்பு கொடுக்க மாட்டேன் என்கிறோமே! கை கால்கள் முதலியன நன்றாக இருந்தும், மனநலம் நன்றாக இருந்தும், நம்மை நாம் உணரவில்லை, அறியவில்லை.
ஒருவேளை இதை முன்னிட்டுத்தான், ‘நான் யார் தெரியுமா?’ என்று கேட்கிறோமோ என்னவோ! திருமூலரே மற்றொரு பாடலில், ‘தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை; தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்’ எனக் கூறியிருக்கிறாரே! ஆகையால், கிடைத்தற்கு அரிதான மனிதப் பிறவி, அதுவும் ஊனமின்றி, மனநலம் உடையதாக. இப்படிப்பட்ட மானிடப் பிறவியில், ‘இளமையாக இருக்கும்போதே, இசைபாடி, இறைவனைத் துதித்து வாழுங்கள்!’ என இளமையின் உயர்வைச் சொன்ன திருமூலர், மறைமுகமாக ஓர் எச்சரிக்கை விடுக்கிறார். ‘வாழ்வும் தாழ்வும் இளமையில் உன்னுடைய செயல்பாடுகளைப் பொறுத்தே அமையும். இளமையில் நல்வழிப்படு!’ என உணர்த்துகிறார்.
‘ஆமா!அவருக்கென்ன, சொல்லிட்டுப் போயிட்டாரு. நமக்கெல்லாம் இப்ப இளம கெடயாது. முன்னாள் இளைஞர்னு வேணா சொல்லிக்கலாம். அதுனால திருமூலர் இளமையைப் பத்தி சொன்னது நமக்கு இல்ல,’ என்றுஎண்ணியோ, பேசியோ ஏமாறக்கூடாது. இவ்வாறு பேசும் நாமே ‘முதுமையிலும் இளமை’ என்று பேசவும் செய்கிறோமே! ‘பளிச்’சென்று சொல்வதானால், செயலற்ற தன்மை முதுமை; செயலாற்றும் தன்மை இளமை! ஆகையால், முதுமை வந்துவிட்டது என்று ஒதுங்கக்கூடாது எனும் மறைமுக எச்சரிக்கையும் இப்பாடலில் உண்டு.
மானிடப்பிறவி, இளமை ஆகியவற்றின் பெருமையைக் குறிப்பிட்டு, இசைபாடி இறைவனைத் துதியுங்கள் எனக் கூறிய திருமூலர், ‘மன மயக்கங்களைத் தூக்கி எறியத் தெரியாமல் இருந்த நான், மன மயக்கங்களைத் தூக்கி எறியும் பக்குவ நிலை அடைந்தபோது, எனக்குள் இருந்த இறைவனோடு கலந்து பேரின்பம் கண்டேன்’ எனத் தன் வரலாறு கூறுகிறார். திருமூலர் மன மயக்கங்களுக்கு ஆட்பட்டிருந்ததாக சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்திலோ, உபமன்யு பக்த விலாசத்திலோ, அகஸ்தியர் அருளிய சிவபக்த விலாசத்திலோ கூறப்படவில்லை. அப்படியிருக்க, திருமூலர் ஏன் இவ்வாறு சொல்ல வேண்டும்? இதுதான் உத்தமர்களின் குணம். நமக்குத் தைரியம் ஊட்டுவதற்காகத் தம்மை இகழ்ந்து கொள்வார்கள் அவர்கள். மன மயக்கங்களைத் தூக்கி எறியும் பக்குவ நிலை வரவேண்டும். அவ்வாறு செயல்பட்டவர்கள் இறைவனுடன் இரண்டறக்கலக்கும் இன்ப நிலை அடைவார்கள் எனக் கூறும் பாடலிது.
- பி.என்.பரசுராமன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக