21 ஆகஸ்ட், 2013

படித்துச் சுவைத்தவை!

புனிதம் பெற்ற கொடிக்கம்பம்!
புதுப்பாளையம் கிராமம் திருச்செங்கோடில் இருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு 06-02-1925இல் மூதறிஞர் ராஜாஜியால் காந்தி ஆசிரமம் நிறுவப்பட்டது. 1925,1934ஆம் ஆண்டுகளில் இங்கு வருகை தந்த காந்திஜி, ஒவ்வொருமுறையும் மூன்று நாட்கள் தங்கி இருந்தார். அவர் சர்வ மத பிரார்த்தனை செய்த கொடிக்கம்பம் இன்றும் புனிதப் பொருளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், நேரு, வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி, சி.சுப்பிரமணியம், காமராஜர், ம.பொ.சி., சி.ஆர்.வெங்கட்ராமன் போன்ற அரசியல் தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். கைவினைஞர்கள், காந்தி ஆசிரமம் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இளநீர் பருகிய மகாத்மா!

1925ஆம் ஆண்டு காந்திஜி புதுப்பாளையம் வந்திருந்தபோது, ரத்தினசபாபதி கவுண்டரின் தோட்டத்துக்குச் சென்றார். அங்கிருந்த விவசாயிகள் செவ்விளநீரை வெட்டி அன்போடு கொடுத்தனர். இரண்டு இளநீரைப் பருகிய காந்திஜி, "சுவை மிகவும் நன்றாக இருக்கிறது!' என்றார்.வேகவேகமாக மேலும் ஒரு இளநீரை வெட்டினர். அதை வாங்க மறுத்த காந்திஜி, "அளவுக்குமேல் சேமிப்பவன் மட்டுமல்ல; சாப்பிடுபவனும் திருடன்தான்'' என்றார்.

தமிழில் கையெழுத்து போட்ட காந்தி!
காந்திஜி 1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். நாகர்கோவில், நாகராஜா கோயிலில் வழிபட்ட அவர், சுசீந்திரத்தில் உள்ள எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார். அங்கிருந்த பார்வையாளர் கையேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். அவரது தமிழ் கையெழுத்து இன்றளவும் அந்தப் பள்ளியில் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நடிக்க முடியாது!
காந்தியடிகள் பார்த்த ஒரே படம் "ராம் ராஜ்யா' என்ற இந்திப் படம். காந்தியடிகள் சினிமாவில் தோன்றவும் ஒரே ஒருமுறை அழைக்கப்பட்டார். அழைத்தவர் பிரபல இயக்குநர் வி.சாந்தாராம். காந்தியடிகளிடம், "கைராட்டையைச் சுற்றுவதுபோல் ஒரேயொரு காட்சியில் தோன்றினால் போதும். ராட்டையின் முக்கியத்துவத்தைப் பரப்ப இது உதவும்'' என அவர் கூறினார். "நான் வெளிநாட்டில் இருந்தபோது, ஒரு ரிகார்ட் எடுக்கச் சம்மதித்து தவறிப்போய் ஒரு பாவம் செய்துவிட்டேன். மறுபடியும் அப்படி ஒரு பாவத்தைச் செய்யமாட்டேன்'' எனக் கூறி கடைசிவரை காந்தியடிகள் நடிக்க மறுத்துவிட்டார்.

நன்றி : தினமணி

17 ஆகஸ்ட், 2013

அறிஞர்களின் பொன்மொழிகள்

  • பகைவனின் புன்சிரிப்பைவிட
    நண்பனின் கோபம் மேலானது. - ஜேம்ஸ் ஹோபெல்
  • நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்! - ஸ்டோன்
  • எந்தத் தொழிலும் இழிவில்லை. தொழில் எதுவும் செய்யா திருப்பதுதான் இழிவு.
    - டால்ஸ்டாய்
  • தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக்கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்.
    - தாமஸ் புல்லர்
  • யாரிடம் உன் எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன். - எமர்சன்
  • அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம். - டீச்சர்
  • தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ,
    அவனே உலகில் வலிமைமிக்க மனிதன். - மாத்யூஸ்
  • பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது. - மார்க்ஸ்
  • அளவில்லாத சோதனைகளைத் தாங்கிச்
    சாதனை படைக்கிறவன்தான் மேதை. - ஹோம்கின்ஸ்
  • உயர்ந்த எண்ணங்களை உடையோர்
    ஒருநாளும் துன்பம் அடையார். - மகாத்மா காந்தி

முத்தான கதை ஒன்று


நல்ல ஊர் எது?

வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி அந்த ஊருக்கு இளைஞன் ஒருவன் வந்தான். அந்த ஊர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம், "ஐயா, நீங்கள் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று நினைக்கிறேன். உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள். இந்த ஊர் நல்ல ஊர்தானே? நான் இங்கேயே தங்கி விடலாமா?'' என்று கேட்டான்.
அவனை மேலும் கீழும் பார்த்த பெரியவர், ""வாயும் கையும் ஒழுங்காக இருந்தால் எந்த ஊரும் நல்ல ஊர்தான்'' என்று பதில் சொன்னார்.
"ஐயா, நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.
அதற்கு அவர், ""வாய், கடுஞ்சொற்களைப் பேசாமல் இனிய சொற்களையே எப்பொழுதும் பேசுமானால், கை திருடாமல் உண்மையாக உழைத்தால் எல்லா ஊரும் நல்ல ஊர்தான்'' என்று விளக்கம் அளித்தார்.
இளைஞன் தெளிவு பெற்று அந்த ஊரிலேயே தங்கி, பெரியவர் கூறியபடி நடந்து வாழ்க்கையில் முன்னேறினான்.

(உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் என்ற நூலிலிருந்து தந்தவர் - என்.கணேசன், வேலூர்.)
நன்றி : தினமணி

பள்ளி மாணவருக்குப் பாடம் புகட்டும் பாடல்

விரைந்து வா தம்பீ! 

 துள்ளிக் குதிக்கும் மீனாகத்
 துடிப்பு மிகுந்த மானாகப்
 பள்ளி நோக்கித் தானாகப்
 பாய்ந்து வாடா என்தம்பீ!
 
 புத்த கங்கள் சீருடைகள்
 பொலிவு மிகுந்த காலணிகள்
 சத்து நிறைந்த சுவையுணவு
 சகல பொருளும் உனக்குண்டு!
 
 விலை யில்லாத பயணத்தில்
 வீட்டி லிருந்து பள்ளிவரை
 அலையாய்ச் சென்று திரும்பிடலாம்
 அறிஞ னாக அரும்பிடலாம்!
 
 நடந்த கால்கள் வலிமறக்க
 நல்கு வார்கள் மிதிவண்டி
 தொடர்ந்து படித்து மேல்வகுப்பைத்
 தொட்டால் உனக்கு மடிக்கணினி!
 
 மாதக் கணக்கில் உழைக்கின்ற
 மழையில் நனைந்தும் நிலைக்கின்ற
 சேத மாகாப் புத்தகப்பை
 சிந்தா மணியே உனக்கிருக்கு!
 
 கணித அளவுக் கருவிகளும்
 குறிப்பு வரைய ஏடுகளும்
 அணிய ணியாகப் பெற்றிடுவாய்
 அழியாக் கல்வி கற்றிடுவாய்!
 
 பெற்றோர் போல அன்போடு
 பெரிதும் ஆர்வம் பொங்கிடவே
 கற்றுக் கொடுப்போம் கடலளவு
 காற்றாய் வாடா என்தம்பீ!

- அணைக்குடி சம்பத் (நன்றி : தினமணி)

தமிழால் இணைவோம்!

வில்லிப்புத்தூரார் என்னும் புலவர், நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர்.
அவர் வருவோர், போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம்தான். அவரிடம் தோற்றுவிட்டால், தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் தொரண்டியால் ஒட்ட அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால், இவர் வில்லிப்புத்தூராரிடம் வாதத்தில் தோற்றவர் என தெரிந்துகொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சினார்கள்.
எந்த வில்லனுக்கும் ஆதிவில்லன் ஒருவன் இருப்பார் இல்லையா? வில்லிபுத்தூராருக்கும் அப்படி ஒருத்தர் இருந்தார்.
வில்லிப்புத்தூராரின் ஆணவம் அழியும் காலம் வந்தது.
தமிழ் அழகன் முருகனைப் பாடும் அருணகிரிநாதர் அந்த ஊருக்கு வந்தார். ஒரு புலவர் வந்தது அறிந்த வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரையும் வாதத்திற்கு அழைத்தார்.

அருணகிரிநாதர் சம்மதித்தார். ஒரு புது கட்டளையும் போட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். வென்றவர் தொரண்டியை வைத்து ஒரு இழுப்பு,. தோற்றவர் காது அறுந்திடும்.
வில்லிப்புத்தூராருக்குக் கிலி வந்துவி்ட்டது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் சம்மதித்தார்.
போட்டி ஆரம்பமானது.
54வது பாடலை அருணகிரிநாதர் பாடினார்.

"
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"
எனப் பாடி முடித்ததும், அதன் பொருளைக் கேட்டார்.
வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போனார்.
எத்தனை பாடலைப் பாடியிருப்போம்? எத்தனை பேரின் காதை அறுத்திருப்போம்?
ஆனால், இவர் பாடல் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. தோல்வியைச் சம்மதிப்பதைத் தவிர  வேறு வழியில்லை. காதை இழக்கப்போவது உறுதி.
அவரது ஆணவம் அழிந்தது. தோல்வியை ஒப்புக்கொண்டார். பாடலுக்கு விளக்கம் கேட்டார்.
அருணகிரிநாதரோ போட்டிவிதி்ப்படி அவர் காதை அறுக்கவில்லை. தோற்றாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
அந்தப் பாடலுக்கான விளக்கம் :

திதத்தத் தத்தித்த        -         திதத்தத் தத்தித்த என்னும் தாளமானங்களை,
திதி                                     -          திருநடனத்தால் காக்கின்ற
தாதை                              -          பரமசிவனும்
தாத                                   -          பிரமனும்
துத்தி                                 -          படப்பொறியினையுடைய
தத்தி                                  -          பாம்பினுடைய
தா                                       -          இடத்தையும்
தித                                     -          நிலைபெற்று
தத்து                                  -         ததும்புகின்ற
அத்தி                                 -         சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி                                     -          தயிரானது
தித்தித்ததே                   -          தித்திக்கின்றதென்று
து                                         -          உண்ட கண்ணனும்
துதித்து                            -          துதி செய்து வணங்குகின்ற
இதத்து                             -          பேரின்ப சொரூபியான
ஆதி                                   -          முதல்வனே!
தத்தத்து                           -         தந்தத்தையுடைய
அத்தி                                 -         அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை                              -         கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத                                   -          தொண்டனே!
தீதே                                   -          தீமையே
துதை                                -          நெருங்கிய
தாது                                  -          சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து                             -         மரணத்தோடும்
உதி                                    -          ஜனனத்தோடும்
தத்தும்                              -         பல தத்துக்களோடும்
அத்து                                -          இசைவுற்றதுமான
அத்தி                                 -         எலும்புகளை மூடிய
தித்தி                                 -          பையாகிய இவ்வுடல்
தீ                                          -          அக்கினியினால்
தீ                                          -          தகிக்கப்படுகின்ற
திதி                                     -          அந்நாளிலே
துதி                                    -          உன்னைத் துதிக்கும்
தீ                                          -          புத்தி
தொத்தது                        -          உனக்கே அடிமையாகவேண்டும்

இவ்வகைப் பாடல்கள் "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். ஏகம் என்றால் ஒன்று. அக்ஷரம் என்றால் எழுத்து. ஓரெழுத்து பாடல் என்பது இதன் பொருளாகும்.

அப்பாடல் அருணகிரிநாதரின் கந்தர் அந்தாதியின் 54வது பாடல்.
அதிசயம்! இதுபோன்ற ஒரு பாடலை நாம் பாடப் புத்தகங்களில் காணப்படாதது வருத்தமே. தமிழின் பெருமையை எல்லாரும் அறிந்துகொள்வதற்கு இதுபோன்ற பாடல்களை மதம், மொழி, இனப் பேதமில்லாது அனைவரையும் சென்றடையவேண்டும்.
தயவுசெய்து இதைப் படித்துவிட்டுக் கடைகோடித் தமிழன்வரை பகிரவும்.

நன்றி : நாகராஜன், மம்சாபுரம், ஶ்ரீவி.

10 ஆகஸ்ட், 2013

ஆறு தலைகொண்ட முருகன் எப்படித் தூங்குவாரு?

திருமணம் ஒன்றில் தலைமை தாங்க திருமுருக கிருபானந்த வாரியார் சென்றிருந்தார். அங்கே நடிகவேள் எம்.ஆர்.ராதாவும் வந்திருந்தார். இருவரும் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள், திருமணப் பேச்சுக்கு இடையே நடிகவேள் தம
து வழக்கமான கிண்டலை அவிழ்த்தார்.

“சாமி... முருகனுக்கு ஆறு தலைன்றானுங்கோ... ராத்திரி தூங்கும்போது எப்படி ஒருபக்கமா படுப்பாரு...?”

கூடியிருந்த அனைவரும் சிரிக்க, வாரியாருடன் வந்தவர்களோ சங்கடத்தில் நெளிந்தார்கள்.

உடனே வாரியார் புன்னகையுடன், திருமண வேலைகளைப் பார்த்துக்கொண்டு பரபரப்பாய் இருந்த மணமக்களின் தந்தையாரை அருகே அழைத்து அவர்களிடம் கேட்டார்.

“நேத்து  தூங்கினீங்களா...?”

அவர்கள் இருவரும், “இன்னைக்குக் கல்யாணத்தை வைச்சுக்கிட்டு எப்படி சாமி தூங்கறது...?” என்றார்கள்.

இப்போது எம்.ஆர்.ராதாவைப் பார்த்து வாரியார் சொன்னார், “ஒரு குழந்தையின் வாழ்க்கையை நடத்திவைக்க நினைச்ச இவர்களுக்கே தூக்கம் வரலையே... உலக மக்கள் அனைவரும் எம்பெருமானோட குழந்தைகள். அவருக்கு எப்படித் தூக்கம் வரும்? தூங்கறதுக்கு நேரம் ஏது?”
(நன்றி, தினத்தந்தி)

விதிமுறை என்பது எல்லோருக்கும் ஒன்றுதான்!

சபர்மதி ஆசிரமத்தில், உணவு உண்பதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் மணி ஒலிப்பது வழக்கம். குறிப்பாக இரண்டுமுறை மணி அடிக்கப்படும். அதற்குள் உணவுக்கூடத்துக்கு வந்துவிடவேண்டும். தாமதமாக வருபவர்கள், உணவுக்கூடத்தின் மூடப்பட்ட கதவுகளுக்குப் பின்னால் காத்திருக்க வேண்டும்.

ஒருநாள், காந்திஜி இரண்டாவதுமுறை மணியடித்து சிறிதுநேரம் கழித்த பிறகே வந்து சேர்ந்தார். எனவே அவர், கதவருகே காத்திருந்தார். அதைக் கவனித்த சேவகர் ஒருவர் ஓடிவந்து, “பாபுஜி... தயவுசெய்து உள்ளே வாருங்கள்” என்றார். ஆனால், காந்திஜி அதை ஏற்க மறுத்துவிட்டார்.

“ஆசிரமத்தின் விதிமுறைகள் எல்லோருக்கும் பொருந்தும். எல்லோரையும்போல நானும் அவற்றை
ப் பின்பற்றவேண்டும். இன்று எனக்காக விதிமுறைகளைத் தளர்த்தினால், நாளை மற்றவர்களுக்காகவும் அப்படித் தளர்த்த வேண்டியிருக்கும்” என்று கூறி, பொறுமையாகக் காத்திருந்தார் காந்தியடிகள்.
(நன்றி, தினத்தந்தி)

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...