28 ஜனவரி, 2023
படித்ததில் மனதில் பதிந்தது
1 செப்டம்பர், 2022
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் - சுவாரஸ்யமான கதை
ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் - சுவாரஸ்யமான கதை
நடுமண்டல கோட்டை (ஸ்ரீவில்லிபுத்தூர் குட்டதட்டியில் இருந்தது) நெல்கட்டு பாளையக்காரான பூலித்தேவன் அவர்களிடம் இருந்து கைப்பற்றிய பின்பு கும்பனி பரங்கியர்கள் சிங்கம்மாள்புரம் கிழக்கு பகுதியில் குடியேறிய இடம்தான் அவுட்டன்புரம். (தற்போது நகராட்சி ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர். )
அங்கிருந்து தான் கும்பனியர்கள் வரி வசூல் செய்தனர். ஆனால் சரிவர நில உடைமையாளர்கள் வரி செலுத்தாமல் இருந்ததால் மேல்வார உரிமை திருவாங்கூர் சமஸ்தானத்திடம் கொடுத்தார்கள். அப்படி தான் ஆண்டாள் கோவில் உரிமையும் சமஸ்தானத்திடம் கொடுத்தார்கள்.
1857 ஆண்டில் ஏற்பட்ட முதல் சுதந்திர போராட்டத்திற்கு பின்பு கும்பனியின் அட்டுழியங்கள் முடிவுக்கு வந்ததால் ஆங்கில அரசு நேரடியாக இந்தியாவில் ஆட்சி அதிகாரம் செய்ய ஆரம்பித்ததால் அவர்களுடைய நீதிமன்ற நடைமுறைகள் அமுலுக்கு வந்தது. அதற்கு முன்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் அது மக்களின் மன்றங்களாக இருந்து மக்களின் குறைகளை நீக்க பாரம்பரிய முறைப்படி விதிப்படி நடந்தது.
ஆனால் ஆங்கிலேயர்களின் நீதிமன்றம் ஆட்சியாளர்களை காப்பாற்றவும் மக்களை ஓடுக்கவும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நீதிமன்றத்தில் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தில் இருந்து திருவாங்கூர் சமஸ்தானத்தை வெளியேற்ற நான்குநேரி வானமாமலை மடம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு அதில் வெற்றியும் பெற்றார்கள்.
இதனால் மடம், திருபாற்கடலில் உருண்டு போய் புதைந்து போன ஆண்டாள் கோவிலின் தேருக்கு பதில் தற்போது உள்ள தேரை தயார் செய்ததாகவும் செவி வழி செய்தி உள்ளது.
சுக
#சுகவின்_கிறுக்கல்கள்
12 மார்ச், 2022
தமிழ்ப் புத்தாண்டு
*தமிழ்ப் புத்தாண்டு*
_சிறப்புப் பார்வை_
*சுறவம்*
தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?
01. மறைமலை அடிகளார் (1921)
02. தேவநேயப் பாவாணர்
03. பெருஞ்சித்திரனார்
04. பேராசிரியர் கா.நமசிவாயர்
05. இ.மு. சுப்பிரமணியனார்
06. மு.வரதராசனார்
07. இறைக்குருவனார்
08. வ. வேம்பையனார்
09. பேராசிரியர் தமிழண்ணல்
10. வெங்காலூர் குணா
11. கதிர். தமிழ்வாணனார்
12. சின்னப்பத்தமிழர்
13. கி.ஆ.பெ. விசுவநாதர்
14. திரு.வி.க
15. பாரதிதாசனார்
16. கா.சுப்பிரமணியனார்
17. ந.மு.வேங்கடசாமியார்
18. சோமசுந்தர் பாரதியார்
19. புலவர் குழுவினர் (1971)
மலையகத்தில்
01. கோ.சாரங்கபாணியார்
02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்
03. அ.பு.திருமாலனார்
04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்
05. கம்பார் கனிமொழி குப்புசாமி
06. மணி. வெள்ளையனார்
07. திருமாறன்
08. இரெ.சு.முத்தையா
09. இரா. திருமாவளவனார்
10. இர. திருச்செல்வனார்
இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.
இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.
1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய
இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை...
யாராவது சொல்ல முடியுமா?
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். *ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக* பிரித்து வைத்திருந்தார்கள்.
*வைகறை*
*காலை*
*நண்பகல்*
*எற்பாடு*
*மாலை*
*யாமம்*
என்று அவற்றை அழைத்தார்கள்.
அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் *அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்*. அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். *ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்*.
அதாவது *பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன*.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.
(1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்
1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)
*பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்*.
ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.
1. இளவேனில் - (தை---மாசி)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
3. கார் - (வைகாசி - ஆனி)
4. கூதிர் - (ஆடி - ஆவணி)
5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)
மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை- வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!
பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
*தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்*.
தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! *இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை* இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்கு
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- *பாவேந்தர் பாரதிதாசன்*
ஆகவே, *தமிழன் என்றால்* , *தை முதல்* *நாளே தமிழ்ப் புத்தாண்டு!*
2 பிப்ரவரி, 2022
டண்ணகரம், றன்னகரம், தந்நகரம்
எழுத்துப் பிழை இல்லாமல்
தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு சில விளக்கங்கள்...
"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்?
ஒரு எளிய விளக்கம்
மூன்று சுழி “ண”,
ரெண்டு சுழி “ன” மற்றும்
"ந" என்ன வித்தியாசம்?
தமிழ் எழுத்துகளில்
ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.
"ண" இதன் பெயர் டண்ணகரம்,
"ன" இதன் பெயர் றன்னகரம்,
"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.
மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)
தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)
இது ரெண்டும் என்றுமே மாறி வராது..
நினைவில் கொள்க..
மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ட' இருக்கா,
அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.
ஏன்னா அது "டண்ணகரம்".
கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...
பக்கத்துல 'ற' இருக்கா
அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.
ஏன்னா அது "றன்னகரம்"
என்று புரிந்து கொள்ளலாம்.
இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்
ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து
வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).
இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........
அருமையான விளக்கம் இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது.
தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.
4 ஆகஸ்ட், 2021
வே என்னும் ஒற்றைச் சொல்...
வே என்னும் ஒற்றைத் தமிழ் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.*
⚜ *தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.*
⚜ *மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.*
⚜ *சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.*
⚜ *சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.*
⚜ *'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.*
⚜ *நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.*
⚜ *வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.*
⚜ *கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாகச் செல்வதால் வே'கம் எனப்படுகிறது.*
⚜ *உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.*
⚜ *கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.*
ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.
⚜ *வாழ்க தமிழ்!*✍
31 மே, 2021
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாறும
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்தல வரலாறும்...
ஸ்ரீ வில்லிபுத்தூர் பெருமைகளும்...
பெயர் காரணம்
பல நூற்றாண்டுகளுக்கு முன், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நிலப்பகுதிகள் ராணி மல்லி என்பவரின் ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த ராணிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள், அவர்கள் காட்டில் வேட்டையாடியபோது, கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாமல், வில்லி, அவரது சகோதரர் என்ன ஆனார் என்று காட்டில் தேடிக் கொண்டு இருந்தார். வெகுநேரம் காட்டில் தேடிய பின்னர் களைத்துப்போய் சிறிது நேரம் தூங்கினார்.
அவரது கனவில், கடவுள் அவரது சகோதரருக்கு என்ன ஆயிற்று என்பதை அவருக்கு விளக்கினார். உண்மை புரிந்ததும், தெய்வீக உத்தரவின் பேரில் வில்லி அந்த காடுகளைத் திருத்தி அமைக்க, ஒரு அழகான நகரம் உருவாக்கப்பட்டது. இந்த காரணத்திற்காக, இந்த நகரம், வில்லிப்புத்தூர் என்ற பெயர் பெற்றது. மேலும் இந்த நகரம் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் என்று பிறந்ததின் காரணமாகவும், திருமகளைக் குறிக்கும் ‘’ஸ்ரீ’’ என்று சேர்த்து அழைக்கப்படுகிறது.
வரலாறு:
ஆண்டாள் கோயில் கி.பி. 788ல் கட்டப்பட்டது. இங்குள்ள நரசிம்மர் சன்னதி, கல்வெட்டுகளில் ஒன்றான, சோழனின் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி.946 -966 ) கல்வெட்டில், இக்கோயில் 'ஜலசயநாட்டுக் கிடந்தருளின பரமசுவாமி கோயில்' என்றழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழமன்னன் முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 -1120 ) ஆட்சியில் இந்த ஊர், 'விக்கிரமசோழ சதுர்வேதிமங்கலம்' என்றழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் கல்வெட்டில், இக்கோயில் வடபெருங்கோயில் பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயிலாக இருந்தது. பின், கி.பி.13 ம் நூற்றாண்டில் இந்த ஊர், 'பிரம்மதேய குலசேகர சதுர்வேதி மங்கலம்' என்ற பெரிய நகரமாக பிற்கால பாண்டியர்களால் விரிவுபடுத்தப்பட்டது.
திருமலைநாயக்கர் (1623-1659) மற்றும் இராணி மங்கம்மாள் (1689-1706) ஆட்சி காலத்தில், இந்த நகரம் மிகவும் பிரபலமானது. 1751 முதல் 1756 கி.பி. இருந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் நெற்கட்டும்செவல் பாளையக்காரர் பூலித் தேவர் ஆட்சியின் கீழ் வந்து ஒரு மறவர் பாளையமாக இருந்தது. பின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டைபெரியசாமி தேவர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டது. அடுத்து, முகமது யூசுப் கான் கைகளில் விழுந்தது. 1850 வரை, ஆண்டாள் கோவில் திருவிதாங்கூர் ராஜா சமஸ்தானத்தின் கீழ் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடையும் வரை பிரிட்டிஷ் நாட்டை ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது.( மதுரையைக் கைப்பற்றிய கான்சாகிப் என்ற மருதநாயகம்,
ஆங்கிலேயருக்கு வரி கொடுக்க மறுத்த 'நெற்கட்டுச் செவ்வல்' பாளையக்காரர் பூலித்தேவரை வெல்ல, ஸ்ரீவில்லிபுத்தூரில் முகாமிட்டார்.
1756 மே 6 -ல் நடந்த போரில் அவரை வெல்ல இயலாமல், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டையைக் கைப்பற்றினார். பின், அதை தரைமட்டமாக்கினார். இப்போது எந்தத் தடயமும் இல்லாத அந்த இடம் 'கோட்டைத்தலைவாசல்' என்றழைக்கப்படுகிறது. (அந்த இடம் முழுவதும் இப்போது வீடுகளாகி, கோட்டைத்தலைவாசல் தெருவாக மாறிவிட்டது.)
மதுரைக்கும் நெல்லைக்கும் நடுவில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை இருந்ததால், ஆங்கிலேயர் ஆட்சியில் 'நடுமண்டலம்' என்றழைக்கப்பட்டது. ஆங்கிலேயரின் ராணுவ தளவாடமாகவும் இருந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் முன்பு மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்தது. 1838-இல் திருநெல்வேலி மாவட்டத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. 1910-இல் ராமநாதபுரத்தில் இணைக்கப்பட்டு . பின்பு ராமநாதபுரம் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டது முதல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது.
சூடி கொடுத்த சுடர்க்கொடி.
ஆண்டாள் வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார்.
ஒரு குழந்தையாக, ஆண்டாள், துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டாள்.
இவ்வந்தணர் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு மலர்கள் கொய்து கொடுப்பதைத் தமது கடமையாகக் கொண்டவர். தனக்கெனக் குடும்பம் எதுவும் இல்லாதிருந்த நிலையிலும், குழந்தை தனக்கு இறைவனால் வழங்கப்பட்ட கொடை எனக்கருதி வளர்த்து வரலானார். அவர் அக்குழந்தைக்கு இட்ட பெயர் கோதை.
சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார். கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காக விஷ்ணுசித்தர் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார்.
இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட விஷ்ணுசித்தர் கோதையைக் கடிந்து கொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார்.
அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை அணிந்த மாலைகளே தனக்குப் உகப்பானவை எனவும் அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
கோதை மண வயதடைந்த பின்னர் அவளுக்காகச் செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உறையும் இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார்.
என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டாள்.
திருப்பதி பிரம்மோச்சவத்திற்கு ஆண்டாள் சூடி கொடுத்த மலர் மாலை அணிவிக்கப்படுகிறது.
ஆண்டாள் திருத்தேர் மற்றும் ஆடிப்பூர தேரோட்டம்.
தமிழகத்திலேயே திருவாரூர் தேரை அடுத்து, இரண்டாவது பெரிய தேர் இக்கோயிலுக்குச் சொந்தமானது என்ற விவரம் நிச்சயம் ஆச்சரியத்தைத் தரும்.
இத்தேர் பல நூறு ஆண்டுகளுக்கு முன், நாங்குநேரி மடம் பரமஹம்ச பட்டர் பிரான் ராமானுஜ ஜீயர் சுவாமிகளால் உபயமாக வழங்கப்பட்டது. தேர் முழுவதும் தேக்கு, கோங்கு போன்ற உயர்ரக மரங்களால் செய்யப்பட்டது என்பதால் இன்றளவும் உறுதியாக இருக்கிறது.
இதன் விசேஷம் என்னவென்றால், ராமாயண, மகாபாரத கதைகளைக் குறிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்பங்கள் வடிவமைக்கப் பட்டுள்ளன. சுமார் 1,500 டன் எடையும், 112 அடி உயரமும் கொண்ட இத்தேரின் சக்கரம் முன்பு மரத்தால் செய்யப்பட்டு இருந்தது. தேரோட்ட உற்சவத்தில் சுற்று வட்டார கிராமங்களுக்கு கோபுரமும் திருத்தேரும் கம்பீரமாக காட்சியளிக்கும். பத்து கி.மீ தொலைவிலும் தேர் எந்த ரதவீதியில் உள்ளது என அறியலாம்.
காலபோக்கில் மர சக்கரங்கள் சேதமுற்றதால் அதிக செலவு கருதி 18 ஆண்டுகள் ஓடாதிருந்தது. முன்பு வலிமை வாய்ந்த மக்கள் இத்தேரை நான்கு ரதவீதிகளில் சுற்றி நிலைக்கு வர மூன்று மாதங்கள் ஆகும். தற்பொழுது இரும்பு சக்கரம் அமைத்து தேர் நவீனப்படுத்தப்பட்டது. தற்போது தேரோட்ட உற்சவம் அரை நாளில் நடந்து முடிந்து விடுகிறது.
தமிழக அரசின் சின்னம்
ஆண்டாள் கோவில் கோபுரம் .
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைக்கத் திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர்.
ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறது? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் இருக்கிறது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்து விடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி. டி.கே.சி. அவர்களின் இந்த அரிய யோசனை ஏற்கப்பட்டு தமிழ்நாட்டின் சின்னமாக ஸ்ரீவில்லிபுத்தூரின் கோபுரம் இடம் பெற்றுவிட்டது.
தமிழக அரசு முத்திரையில் இடம்பெற்றுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் கோபுரத்தை முதன் முதலில் தமிழக அரசு சின்னமாக அறிவித்தவர் திரு. பி.எஸ். குமாரசுவாமி ராஜா ஆவார். தற்போதைய தமிழக அரசு சின்னம் திரு. காமராஜரால் 1956இல் அறிமுகப் பட்டது அப்போது மதராஸ் மாகாணம் என்ற பெயரே இருந்தது. பிறகு 1968இல் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்ட போதும் இந்தச் சின்னமே நீடித்தது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோபுரம் தனித்தன்மை கொண்டது; அகலம் குறுகியிருப்பதால் பதினொரு நிலைகள் கொண்ட அதன் உயரம் ஒருவித பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது. உலகப் பன்னாட்டு நிறுவனம் புராதன சின்னமாக இக்கோபுரத்தை அறிவித்துள்ளது.
பால்கோவா:
ஆண்டாள் கோயிலில் இன்றும் பின்பற்றப்பட்டு வரும் வழிபாட்டுச் சடங்கின் அடிப்படையில் பால்கோவாவின் வரலாற்றை உத்தேசமாக அறிய முடிகிறது. அதாவது ஆண்டாள் திருமணம் ஆன பிறகு, பிறந்த வீட்டுக்குச் செல்லும் ஒரு சடங்கின்போது சுண்ட காய்ச்சிய பால், வெல்லம் ஆகியவை சேர்க்கப்பட்ட திரட்டுப்பாலை ஆண்டாளுக்குப் படைக்கிறார்கள். பால்கோவா தயாரிக்கும் முறையுடன் ஓரளவு ஒத்துப்போவதால் இந்த வழிபாட்டு மரபில் இருந்து பால்கோவாவின் வரலாறு பல நூற்றாண்டுப் பழமையானது எனலாம். இந்தப் பின்புலமும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் வளமும் பால்கோவோ தோன்றலுக்கான காரணமாக இருந்திருக்கலாம்.
ஒரு கேன் பால் என்பது பத்து லிட்டர், இதில் ஒன்றேகால் கிலோ ஜீனியை போட்டு மெதுவாகக் கலக்குகிறார்கள். இதைச் செய்ய கேஸ் அடுப்பு பயன்படுத்துவதில்லை, இன்றும் முந்திரி குப்பைகளை வைத்து எரிக்கிறார்கள். அதுவும் இந்த சுவைக்கு ஒரு காரணம் போலும்! மெதுவாக அந்தப் பாலைக் கிண்ட கிண்ட அது சுண்டி வருகிறது
இதைச் செய்ய கடின உழைப்புதான் ஆதாரம் என்றாலும் மக்கள் அதை ஒரு கலையின் வெளிப்பாடாகவே பார்க்கிறார்கள். இந்த உழைப்பாளிகளின் கடின உழைப்புதான் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு உலக அரங்கில் தனி அடையாளத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரின் தனி சிறப்புக்கள்.
கோதை பிறந்த ஊர், கோவிந்தனை (மகாவிஷ்ணு) வாழும் ஊர், தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாம் கோபுரம் இருக்கும் ஊரும் இதுதான்.
கர்மவீரர் காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று ஜெயித்துத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்.
இந்தியாவிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கும் ஒரே ஊரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.
மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் (தசாவதாரம்) மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.
மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள். அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார், ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே புண்ணியஸ்தலமும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்
திருப்பாவை என்னும் வைஷ்ணவ பாடல் தொகுப்பு பிறந்ததும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.
தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நூலகம் பென்னிங்டன் பொது நூலகம் இருப்பதும் இங்கேதான்.
புதுவைத்தலம் என்ற பழைய பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு. இந்த புதுவைத்தலம் என்ற பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலின் பெயரே ஆகும். சுமார் 1400களில் கட்டப்பட்ட திருக்கோவிலான இந்த சிவாலயம்தான் விருதுநகர் மாவட்டத்திலேயே இருக்கும் ஒரே ஒரு பழமையான சைவ திருக்கோவில் ஆகும்.
உலகத்திலேயே சாம்பல் நிற அணில் சரணாலயம் இருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியான செண்பகத்தோப்பில்தான்.
ஏலே நீ யாருல கோமாளி... இது எம் மக்கள் பாசத்தோடும் நேசத்தோடும் பழகும் விதம்.
#
12 மே, 2021
திருஉத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள்
திருச்சிற்றம்பலம்
திருஉத்திரகோசமங்கை கோவில் சிறப்புகள்
🌳இக் கோவில் தான் உலகின் முதல் சிவன் கோவில். 8000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது.
🍀இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றும் பூத்துக் குலுங்குகிறது.
🍏இங்கு தான் இராவணன், மண்டோதரி திருமணம் நடைபெற்றதற்குச் சாட்சியாகக் கல்வெட்டுகள் உள்ளன.
🟢சிவனின் சொந்த ஊர். உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர். உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில்.
♻️நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோவில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.
🍃தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற வாக்கியம் உருவான இடம்.
☘️மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம்.
இப்படி பல அதிசயங்களும், ஆச்சர்யங்களையும், அற்புதங்களையும் தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை அருள்மிகு மங்களநாதர் ,மங்களநாயகி திருக்கோவில்.
🌲திருஉத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இக் கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
🌿இத் தலத்தில் உள்ள உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.
🌴திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்' இத் தலத்தில் தான் நடந்தது. இக் கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில் சிறந்து இருந்த போது, அவர்களது தலைநகராகச் சிறிது காலத்துக்கு திருஉத்திரகோசமங்கை இருந்தது.
🌱ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம், தெட்சிண கைலாயம், சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப்பள்ளி, பத்ரிகா ஷேத்திரம், பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.
🌵மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன் கிடைக்கும்.
🎄இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.
🦚மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.
மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
🥦இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே, இத்தலம் ராமாயண காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்தக் கல்வெட்டு கருதப்படுகிறது.
🥬இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரி நாதர் ஆகியோர் வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.
🌿இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர்.
இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப் படைப்பாக உள்ளார். கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.
🌳இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான் என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.
🟢மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சி தந்த சிறப்புடைய தலம். இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.
🟩இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூஜிப்பதாக ஐதீகம். சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாப விமோசனம் செய்து அம்பாளை மணந்து கொண்டு இத்தலத்திலேயே அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப் புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
📗உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக் கூட பந்தை நகர்த்த முடியும்.
இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல் நீரில் வாழும் மீன்களாகும்.
♻️பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர். இந்தக் கோவிலில் சிவனுக்கும், அம்பாளுக்கு தாழம்பூ மாலை கட்டிப் போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.
🌳இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தினங்களில் ராகு காலத்தில் பூஜை தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள், திருமணத்தடை போன்றவை விலகுகின்றன.
🍀இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி, சகஸ்ரலிங்க சன்னதி நான்கும் தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
🌲நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால் இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.
🌿மங்கள நாதருக்குத் தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
☘️மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்து விடும் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.
🌴மங்கள நாதர் சன்னதியைச் சுற்றி வரும்போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம். இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.
🌵உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு.
இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.
நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர் தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.
🍃அம்பிகைக்குப் பிரணவப் பொருள் உபதேசித்த இடம். இங்குள்ள மங்கள நாதர் லிங்க வடிவில் உள்ளார்.
🥦தலவிருட்சமான இலந்த மரம் மிகமிகத் தொன்மையானதும், இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும் முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.
🌱ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா.
🐍இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன.
🦚சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.
🥬ஈசன், ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒருமுறை பக்தர்கள் வந்து சென்றால் சொர்க்கம் செல்லுவது நிச்சயமாகும்.
🙏🏻💚ௐ நமசிவாய💚🙏🏻
🙏🏻💝#அன்பே #சிவம்💝🙏🏻
திருச்சிற்றம்பலம்
அவனருளாலே எல்லாம் சிவன் செயல் சர்வத்தையும் படைத்த சிற்றம்பல நாதனே!
சர்வத்திலும் நிறைந்தாய், சர்வமும் விழைந்தே;
அர்ப்பணிக்கு முள்ளத்தில், அரியாசனம் கொண்டே முற்பிறவி வினையறுக்கு, முடிவிலா சோதியனே
**திருச்சிற்றம்பலம்**
🙌🏾அவனருளாலே👐🏻
🙏🏻🙏🏻
சிவமே தவம்.....
தவமே சிவம்.....
திருச்சிற்றம்பலம்
முப்பொழுதும்... *நற்றுணையாவது நமசிவாயவே*
கேடு வெட்கக்கேடு
த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...
-
*ஒரு எளிமையான கதை ...மனதை கவர்ந்தது*. அடர்ந்த காடு ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் அழகான குட்டிக் குட்டித் தீவுகள் இருந்தன. அந்தக் ...
-
வர வேண்டாம் என் மகனே! தைப் பொங்கல் திருநாளென்றும் தமிழினத்தின் பெருநாளென்றும் பொங்கலோப் பொங்கலென்று பொங்கியெழும் மகிழ்ச்சியென்றும், ...
-
சித்திரை 1 பொன் ஏர் பூட்டும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. பொன்ஏர் என்றும், மதிஏர் என்றும் அழைப்பார்கள் தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் ...