12 டிசம்பர், 2017

ஒரு காட்டில் மரப்பொந்தில் கழுகு ஒன்று வாழ்ந்து வந்தது.

அந்தக் கழுகுக்கு இறைவனிடம் கண்மூடித்தனமான நம்பிக்கை. அதனால் அது அடிக்கடி ஒரு பாறை மீது அமர்ந்து தியானம் செய்துகொண்டிருக்கும்.
ஒருநாள் திடீரென்று

"இறைவனுக்கு நாம் தியானம் செய்வது தெரியுமா?''
என்று சந்தேகம் வந்தது.

பின்னர் தானாகவே இறைவனுக்கு எல்லாம் தெரியும் என்று சமாதானம் செய்து கொண்டது.

ஒருநாள் அந்தக் கழுகு ""இன்று எனக்கு உணவு கிடைக்குமா?

இறைவன்தான் எல்லோருக்கும் படியளப்பவன் ஆயிற்றே...'' என்று யோசித்தது.
உணவு கிடைக்குமா என்ற சந்தேகம் வந்ததும் அந்தக் கழுகு அமர்ந்து தியானம் செய்யும் பாறை மீது நின்று,

"இறைவா,
இன்று எனக்கு உணவு கிடைக்குமா?'' என்று பெரிய குரலெடுத்துக் கூவியது.

உடனே விண்ணிலிருந்து ஒரு குரல்.
"உனக்கு இன்று உணவு உண்டு'' என்று பதில் கூறியது.

மிக்க மகிழ்ச்சியுடன் "இன்று இரை தேடும் வேலை இல்லை,

எப்படியும் உணவு கிடைத்துவிடும்''
என்ற நம்பிக்கையுடன் அந்தக் கழுகு பேசாமல் தியானம் செய்து கொண்டு அந்தப் பாறை மீது அமர்ந்திருந்தது.

நேரம் செல்லச்செல்ல கழுகுக்குப் பசி வரத் தொடங்கியது.

ஆனாலும் கண்களைத் திறக்காமல் இறை தியானத்திலேயே அமர்ந்திருந்தது.

மதியம் ஆயிற்று, மாலையும் போயிற்று. இரவு வந்துவிட்டது.

""நம்மை இறைவனே ஏமாற்றிவிட்டாரே'' என்று மனம் வருந்தியபடி பாறையிலிருந்து புறப்படத் தயாரானது கழுகு.

அப்போது ஒரு குரல் கேட்டது.
"என்ன குழந்தாய். சாப்பிட்டாயா?''
என்றதைக் கேட்டதும், கழுகுக்கு அழுகை வந்துவிட்டது.

"குழந்தாய் சற்று திரும்பிப் பார்.
உன் பின்னாலேயே உனக்கான உணவு இருக்கிறது

''கழுகு பின்னால் சென்று பார்த்தது.
அங்கே ஒரு பெரிய எலி இறந்துகிடந்தது.

கழுகு புன்னகை புரிந்தது. இறைவனிடம் ,
"இதனைக் காலம் தாழ்த்திக் கொடுத்தாயே இறைவா?'

இறைவன் பதிலளித்தார்.
"குழந்தாய்,
உனக்குரிய நேரத்தில் உணவு வந்துவிட்டது.
நீதான் அதைத் தேடி எடுக்காமல் காலம் தாழ்த்திவிட்டாய்.

திரும்பிப் பார்க்கும் முயற்சிகூடச் செய்யாமல் உணவு எப்படிக் கிடைக்கும்.

"கடுகளவேனும் முயற்சி வேண்டும்.
ஒரு வேளை உணவுகூட உழைக்காமல் உண்ணக்கூடாது.

அப்போதுதான் இறைவனின் அருளையும் பெற முடியும்'' என்று கழுகுக்கு ஆசி கூறி மறைந்தார் இறைவன்.

அன்று முதல் கழுகு உழைப்பையே தியானமாக எண்ணிக் கடமையைச் செய்யத் தொடங்கியது..
தெய்வம் நம்பிக்கை எல்லோரிடமும் இருக்க வேண்டும்

ஆனால் தெய்வத்தை நம்பியே ஒரே இடத்தில் இருந்து விடக்கூடாது .

முயற்சி இல்லாமல் எதுவும் கிடைப்பது இல்லை....
உழைப்பவரை என்றும் வறுமை அன்டுவதில்லை...
🌿🌿🌿🌿🌿🌿🌷
*முயற்சி திருவினையாக்கும்*...
🌷🌷🌷🌷🌷🌷
எழுதியது யாருனு தெரியலை...

படித்ததில் பிடித்தது ........

 தஞ்சையில் இருந்து, சென்னைக்கு பத்திரிகை பணிக்கு வந்தபோது நல்ல சம்பளம்தான். ஆனாலும் ஊதாரி. வீட்டுக்கு போன் போட்டு, ஏதாவது பொய் சொல்லி, “ ரெண்டாயிரம் மணியார்டரில் அனுப்புங்கப்பா” என்பேன். (அப்போது நெட் பேங்க்கிங் கிடையாது)

அப்பாவும் உடனடியாக அனுப்பிவிடுவார். (சம்பளத்தைவிட அதிகமாக அப்பாவிடம் வாங்கியிருக்கிறேன்.)

மணியார்டரில் பணம் அனுப்பும்போது, அந்த ஃபாரத்தில் சில வரிகள் ஆங்கிலத்தில் எழுதி அனுப்புவார் அப்பா. (ஆங்கிலத்திலும் மிகப் புலமை பெற்றவர்) அதைக் கையால் எழுதாமல், யாரிடமாவது தட்டச்சி அனுப்புவார். அது அவரது வழக்கம்.

ஒவ்வொரு முறையும், “மை டியர் சன்.. (my dear son)” என்று ஆரம்பிக்கும் அந்த குறுங் கடிதம்.

ஒருமுறை மணிஆர்டர் வந்தபோது அதில் தட்டச்சியிருந்த வார்த்தையைப் பார்த்து அதிர்ந்தேன்.

மை டியர் சன் (my dear son) என்பதற்கு பதிலாக மை டியர் சின் ( my dear sin) என்று தட்டச்சியிருந்தது.

ஆங்கிலத்தில் Sin என்றால் “பாவம்” என்று பொருள்.

அப்பா வேண்டுமென்றே அப்படி தட்டச்சு செய்ய சொல்லியிருக்க மாட்டார். ஆனாலும் “சின்” என்ற வார்த்தை மனதை ஏதோ செய்தது.

அந்த மணியார்டர் பணத்தை வாங்காமல் திருப்பி அனுப்பிவிட்டேன்.

அப்பாவுக்கு போய்ச் சேர்ந்தது பணம். அவருக்கு அதிர்ச்சி. உடனடியாக என் அலுவலகத்துக்கு தொலைபேசினார்.

“ஏம்பா பணம் திரும்பி வந்துருச்சு” என்றார் பதட்டமாக.

அப்பாவிடம் எப்போதுமே வெளிப்படையாகவே பேசுவேன்: “மைடியர் சின் அப்படின்னு இருந்துச்சுப்பா… அது சரிதானேன்னு தோணுச்சு… அதான் “ என்றேன்.

அப்பா சிரித்தார். நான் அவரை மிக கவனித்திருக்கிறேன். பெருந்துன்ப நேரங்களி்ல் அவர் சிரிக்கவே செய்திருக்கிறார். அப்படியானதொரு துயரத்தை வெளிப்படுத்திய அந்த சிரிப்பை இனம் கண்டுகொண்டேன்.

அப்படியே போனை வைத்துவிட்டார் அப்பா.

அப்போது நான் பணியாற்றியது, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் இருந்து வந்துகொண்டிருந்த தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில்.

மறுநாள் காலை.. அலுவலக்ததில் இருந்த எனக்கு செக்யூரிட்டியிடமிருந்து (இன்டர்காம்) அழைப்பு. என்னைப் பார்ப்பதற்கு அப்பா வந்திருப்பதாக தகவல் சொன்னார்.

இரண்டாவது மாடியிலிருந்து ஓடி வந்தேன்.

செக்யூரிட்டி அலுவலகத்தில் அப்பா அமர்ந்திருந்தார்.
உள்ளுக்குள் ஏதோ செய்தாலும், சாதாரணமாக முகத்தை வைத்தபடி, “என்னப்பா திடீர்னு..” என்றேன்.

அப்பா என் தலைவருடி, “தம்பி.. அப்பா உன்னை சின்.. அதான் பாவம்னு நினைப்பேனா..? உனக்கென்ன ராஜா… நீதான என் சொத்து… அந்த டைப்ரட்டிங்காரர் ஏதோ அவசரத்துல தப்பா டைப் அடிச்சுட்டார். இதுக்கெல்லாமா வருத்தப்படுறது? பணத்தை திருப்பி அனுப்பிட்டியே.. சிரமப்படுவேல்ல.. . அதான் கொடுக்க வந்தேன்” என்றார் அப்பா.

முட்டிக்கொண்டு வந்த அழுகையை கட்டுப்படுத்திக்கொண்டு ஏதேதோ பேசினேன்.

யோசித்துப் பார்க்கையில் பிள்ளைகள் என்போர், பெற்றவர்களுக்கு “சின்” என்றுதான் தோன்றுகிறது.

ஆனால், அப்பாக்கள் வரம்.

 *தாயிடம் நிரூபியுங்கள்*-* கடைசி வரை அன்பாக இருப்பேன் என்று.

*தந்தையிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உங்கள் பெயரை காப்பாற்றுவேன் என்று.

*மனைவியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை என் காதல் உனக்கானது மட்டும் என்று.

*சகோதரனிடம் நிரூபியுங்கள்*- கடைசி வரை உனக்கு உறுதுணையாய் இருப்பேன் என்று.

*சகோதரியிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உனக்கு செய்யும் சீர் ஒரு சுமையே இல்லை என்று

*மகனிடம் நிரூபியுங்கள்* -கடைசி வரை உலகமே எதிர்த்தாலும் நான் உன் பக்கம் என்று

*மகளிடம் நிரூபியுங்கள்* - கடைசி வரை உன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் ரத்தம் வரும் என்று

வேறு எவருக்கு நீங்கள்  எதை நிரூபித்தாலும் *அது கடலில் கொட்டிய பெருங்காயமே*.

 தோற்று போனால்
வெற்றி கிடைக்குமா ?
✌ *அம்மாவிடம் தோற்று போ, அன்பு அதிகரிக்கும்..*
✌ *அப்பாவிடம் தோற்று போ, அறிவு மேம்படும்..*
✌ *துணையிடம் தோற்று போ, மகிழ்ச்சி இரட்டிப்பாகும்..*
✌ *பிள்ளையிடம் தோற்று போ, பாசம் பன்மடங்காகும்..*
✌ *சொந்தங்களிடம் தோற்று போ, உறவு பலப்படும்..*
✌ *நண்பனிடம் தோற்று போ, நட்பு உறுதிப்படும்..*
✌ *ஆகவே தோற்று போ,*
தோற்று போனால் வெற்றி கிடைக்கும்
🙏 அன்புடன் வாழுங்கள்.மற்றவரை அன்புடன் வாழ வழி வகுப்போம்..

10 டிசம்பர், 2017

படித்த 4 அழகான குட்டி உண்மை சம்பவங்கள்:

படிக்கும் போது பாருங்கள்,  உங்களை கூட உணர்ச்சிவசப்பட வைக்கும் ...

சம்பவம்-1 👇👇👇👇👇👇

24 வயது வாலிபன் ரயில் ஜன்னல் வழியே பார்த்து கத்தினான்."அப்பா இங்கே பாருங்கள்,"..

மரங்கள் எல்லாம் நமக்கு பின்னால் ஓடுகின்றன என்று!"

அவனருகில் இருந்த அவனது அப்பா
சிரித்துக்கொண்டார்.

ஆனால் அவர்கள் அருகில் இருந்த இளம் தம்பதியினர் அவனைப் பார்த்து பரிதாப பட்டுக்கொண்டனர்....

மறுபடியும் அந்த வாலிபன் கத்தினான்.

"அப்பா மேலே பாருங்கள், ' மேகங்கள்
நம்மோடு வருகின்றன..; என்றான்...

இதைக்கேட்டு தாங்க முடியாத
தம்பதியினர் வாலிபனின் தந்தையிடம்

"நீங்கள் ஏன் உங்கள் மகனை ஒரு நல்ல டாக்டரிடம் காட்டக் கூடாது என்றனர்"

 அதற்கு அந்த வயதான அப்பா சிரித்துக்
கொண்டே சொன்னார்...

"நாங்கள் டாக்டரிடம் இருந்துதான் வந்து கொண்டிருக்கிறோம்...

என் மகன் பிறவிக் குருடு .இன்றைக்கு
தான் அவனுக்கு பார்வை கிடைத்தது என்றார்."

அன்பு நண்பர்களே.,  உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு. மற்றவரை தீர்மானிக்க நினைத்தால் நாம் உண்மையை
இழந்துவிடலாம்.

சில நேரங்களில் உண்மை நம்மை ஆச்சிரிய பட வைக்கலாம்.

'உருவத்தை பார்த்து யாரும் யாரையும்
எடை போடவேண்டாம்.

சம்பவம்-2    👇👇👇👇👇👇👇👇

ஒரு அழகான சிறுமி தன் கைகளில் இரண்டு ஆப்பிள் வைத்திருந்தாள்..

 அங்கு வந்த அவளின் தாய் , நீ இரண்டு ஆப்பிள் வைத்திருக்கே ஒன்று எனக்கு கொடு என்றாள்....

தன் தாயை ஒரு வினாடி பார்த்த அந்த சிறுமி,...

பின் உடனே ஒரு ஆப்பிளை கடித்து விட்டாள்.. பின் உடனே இரண்டாவது ஆப்பிளையும் கடித்து விட்டாள்..

தாயின் முகத்தில் இருந்த சிரிப்பு உறைந்து போனது. தன் ஏமாற்றத்தை வெளிப்படுத்த முடியாமல் தவித்தாள்...

உடனே அந்த சிறுமி, தாயிடம்
சொன்னாள்..அம்மா இந்த ஆப்பிள் தான் இனிப்பாக இருக்கு நீ எடுத்துக்க என்றாள்....

நட்புக்களே, நீஙகள் யாராக வேண்டு மானாலும்இருக்கலாம். எவ்வளவு அனுபவமும் இருக்கலாம்..

அறிவு வீஸ்தீரமாகவும் இருக்கலாம். ஆனால் ஒருவரை பற்றி கணிப்பதை சற்று தள்ளிப்போட்டு கணிக்கவும்.

அடுத்தவருக்கு போதுமான அளவு
இடைவெளி கொடுத்து அவரை அறியவும்.

நீங்கள் அவரை பற்றிக்கொண்ட கண்ணோட்டம் தவறாகவும் இருக்கலாம்.

எதையும் மேலோட்டமாக பார்த்து கணிக்காமல், அவசரப்படாமல் ஆழ யோசித்து கணியுங்கள்..

மனக்கணக்கு தவறலாம்..மனிதரை பற்றிய கணக்கு தவற்க்கூடாது.

சம்பவம்-3  👇👇👇👇👇👇

செட்டி நாட்டு வீதியொன்றில் கீரை
விற்றுகொண்டு செல்கிறாள் ஒரு பெண்.

வீட்டுவாசலில் மகனோடு அமர்ந்திருந்த தாய், கீரை வாங்க அவளை கூப்பிடுகிறாள்."

 ஒரு கட்டு கீரை என்ன விலை....?""

 "ஐந்து ரூபாய்"

ஐந்து ரூபாயா ....??? மூன்று ரூபாய் தான்  தருவேன்.

மூன்று ரூபாய் என்று சொல்லி நாலு கட்டு கொடுத்திட்டு போ"

"இல்லம்மா வராதும்மா"

அதெல்லாம் முடியாது.

 மூன்று ரூபாய் தான்

பேரம் பேசுகிறாள் அந்த தாய்.

பேரத்திற்கு ஒத்துக்கொள்ளாத அந்த பெண் கூடையை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் சென்றுவிட்டு

"மேல ஒரு ரூபாய் போட்டு
கொடுங்கம்மா" என்கிறாள்"

முடியவே முடியாது. கட்டுக்கு  மூன்று ரூபாய்தான். தருவேன்"... என்று பிடிவாதம் பிடித்தாள்.

கீரைக்காரி சிறிது யோசனைக்கு பிறகு

"சரிம்மா உன் விருப்பம்" என்று கூறிவிட்டு நாலு கட்டு கீரையை கொடுத்துவிட்டு  பன்னிரண்டு ரூபாயை  வாங்கி கொண்டு கூடையை தூக்கி தலையில்வைக்க போகும் போது கீழே சரிந்தாள்.

"என்ன டியம்மா காலை ஏதும் சாப்பிடல...?" என்று அந்த தாய் கேட்க"

இல்லம்மா போய்தான் கஞ்சி
காய்ச்சிணும்"

"சரி. இரு இதோ வர்றேன்." என்று
கூறிவிட்டு வீட்டுக்குள் சென்றவள்,..

திரும்பும்போது ஒரு தட்டில் ஆறு இட்லியும், சட்னியோடு வந்தாள். " இந்தா சாப்ட்டு போ"

என்று கீரைக்காரியிடம்கொடுத்தாள்.

எல்லாவற்றையும் பார்த்துகொண்டிருந்த அந்த தாயினுடைய மகன்..

"ஏம்மா ஐந்து ரூபாய்க்கு
பேரம் பேசுனிங்க.. ஒரு இட்லி ஐந்து ரூபாய் ன்னு
வச்சுகிட்டாக்கூட ஆறு இட்லிக்கு
முப்பது ரூபாய் வருதும்மா.....?

என்று கேட்கஅதற்கு அந்த தாய்,

"வியாபாரத்துல தர்மம் பார்க்க கூடாது, தர்மத்துல வியாபாரம் பார்க்க கூடாதுப்பா" என்று கூறினாள்.

இது தான் உண்மையில் மனித நேயம் ......

சம்பவம் 4 👇👇👇👇👇👇👇

 மாலையில் நடைப் பயிற்சியை
முடித்துக் கொண்டு அந்த தம்பதியினர்
வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழியில் ஒரு
கயிற்றுப் பாலம் ஒன்று இருந்தது.

சற்று இருட்டியதால் இருவரும்
வேகமாக நடக்கத் தொடங்கினர்...

 திடீரென மழைச் சாரலும் வீசியது. வேகமாக நடந்து கொண்டிருந்தவர்கள்
ஓடத்தொடங்கினர்.

கணவர் வேகமாக ஓடினார்.

கயிற்றுப் பாலத்தை கணவன் கடந்து
முடிக்கும் போது தான் மனைவி
பாலத்தினை வந்தடைந்தார்.

மழைச் சாரலோடு கும்மிருட்டும் சேர்ந்து
வந்ததால் மனைவி பாலத்தை கடக்க
பயப்பட்டாள்.

அதோடு மின்னலும் இடியும் சேர்ந்து கொள்ள பாலத்தின் ஒரு பக்கத்தில் நின்று கணவனை துணைக்கு அழைத்தாள்...

 இருட்டில் எதுவும் தெரியவில்லை.

மின்னல் மின்னிய போது கணவன் பாலத்தின் மறுபக்கத்தில் நின்று கொண்டிருப்பது தெரிந்தது...

தன்னால் முடிந்த வரை சத்தமிட்டு
கணவனை அழைத்தாள்.

கணவன் திரும்பிப் பார்க்கவில்லை.

அவளுக்கு அழுகையாய் வந்தது.

இப்படி பயந்து அழைக்கிறேன். என்ன மனிதர் இவர் திரும்பி கூட பார்க்க வில்லையே எனமிகவும் வருந்தினாள்.

மிகவும் பயந்து கொண்டே கண்களை மூடிக் கொண்டு கடவுளிடம் பாரத்தைப் போட்டு மெல்ல மெல்ல பாலத்தை கடந்தாள்.

பாலத்தை கடக்கும் போது இப்படி ஒரு
இக்கட்டான நிலமையில் கூட உதவி
செய்யாத கணவனை நினைத்து
வருந்தினாள்.

ஒரு வழியாக பாலத்தை கடந்துவிட்டாள்...

 கணவரை கோபத்தோடு பார்க்கிறாள்.

அங்கு கணவர் மழையில் ஒரு பக்கம் உடைந்து தொங்கிக்கொண்டிருந்த கயிற்றுப் பாலத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டிருந்தார்.

சில சமயம் கணவர் குடும்பத்திற்கு
எதுவும் செய்யாமல் மௌனமாக
இருப்பதாக தோன்றும்...

ஆனால்

உண்மையிலேயே அவர் தன்
குடும்பத்தை தாங்கிப் பிடித்துக்
கொண்டுதான் இருப்பார்.

தூரத்தில் பார்க்கும் போது அன்பு இல்லாதவர் போல இருந்தாலும் அருகில் சென்று பார்க்கும் போது தான் அவரின் அன்பு தெரியவரும்.

வாழ்க்கை ஒரு விசித்திரமான விந்தை.

தூரத்தில் இருப்பது தெளிவாக
தெரிந்தாலும் அருகில் வரும்போதே பொருள் புரிகிறது.

இந்த கோணத்தில் என்றாவது வாழ்கையை பார்த்தது உண்டா நாம்?

நாம் எப்போதும் இந்த கோணத்தில் தான் அனைவரிடமும் பழகவேண்டும்.

 அப்போது தான் கோவம், EGO, இல்லாமல். நிம்மதியாக வாழ முடியும்.

வாழ்க்கை பாடத்தில்  நிறைய கற்று கொள்ளலாம்.

எது நல்லதுனு தேர்ந்தெடுங்க.
யாரையும் குறைவாக எண்ணாதீர்கள்....

ஒரு பிரபல விஞ்ஞானி காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது. ஆள் நடமாட்டமே இல்லை. பக்த்தில் கடைகளும் ஏதும் இல்லை..

தானே டயரைக் கழற்றி ஸ்டெப்னி மாற்ற ஆரம்பித்தார். அனைத்து போல்ட்டுக்களையும் கழற்றிவிட்டு ஸ்டெப்னி எடுக்கப் போகும் போது கால் தடுக்கிக் கீழே விழ கையில் இருந்த போல்ட்டுக்கள் அனைத்தும் உருண்டு போய் பக்கத்தில் இருந்த ஒரு குட்டையில் விழுந்தன..

என்ன செய்வது என்று யோசித்த போது கிழிந்த ஆடையுடன் ஒரு வழிப் போக்கன் அந்த வழியே வந்தான். அவரிடம் "ஐயா! என்ன ஆயிற்று?" என்று கேட்டான்..

அந்த விஞ்ஞானி மனதில் இந்த அழுக்கடைந்த குட்டையில் இறங்க இவன் தான் சரியான ஆள் என்றெண்ணி அவனிடம் " இந்தக் குட்டையில் விழுந்த போல்ட்டுக்களை எடுத்து தாருங்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன்" என்றார்..

அதற்கு வழிப்போக்கன் "இதுதான் உங்கள் பிரச்னையா? அந்தக் குட்டையில் இறங்கி எடுத்துத்தர எனக்கொன்றும் ஆட்சேபனை இல்லை..

ஆனால் அதைவிட சுலபமான வழி ஒன்று இருக்கிறது. மூன்று சக்கரங்களிலிருந்தும் ஒவ்வொரு போல்ட்டைக் கழற்றி இப்போதைக்கு இந்த சக்கரத்தை மாட்டி வண்டியைத் தயார் செய்து கொள்ளுங்கள். வண்டியை ஓட்டிச் சென்று அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள்" என்றான்..

விஞ்ஞானிக்குத் தூக்கி வாரிப் போட்டது. நான் இத்தனை பெரிய விஞ்ஞானியாய் இருந்தும் இந்த சுலபமான வழி புலப்படாமல் போனதே! இவரைப்போய் குறைத்து மதிப்பிட்டு விட்டோமே என்று தலை குனிந்தார் விஞ்ஞானி..

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு. உயிரற்ற பறவையோ எறும்புக்கே உணவு. நேரமும் சூழலும் எப்போதும் மாறலாம். யாரையும் குறைவாக மதிப்பிட வேண்டாம்...

9 டிசம்பர், 2017

ஒவ்வொரு கலவியையும் கர்ப்பத்தில் முடித்து, வதவதவெனப் பிள்ளைகளைப் போடுவது சாதாரண விஷயமாக இருந்த காலம் ஒன்றிருந்தது.  கல்வியும் வேலை வாய்ப்புகளும் பெருகிய காலத்தில் நாம் இருவர் நமக்கு இருவர் முழக்கம் வெற்றியடைந்தது. இப்போது நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றாகிவிட்டது. எண்ணிக்கை குறையக் குறையக் குழந்தைகள் மீதான பெற்றோரின் உரிமையும் அதிகாரமும் பயமும் கட்டுக்கடங்காதவையாகப் போய்விட்டன.

பிள்ளைகள் நிறைய இருந்தபோது தாம் செய்ய வேண்டிய வேலைகளைத்தாமே செய்து அவை தாமாகவே வளர்ந்தன. தாமே அனுமதிக்கப்பட்டதால் அவற்றுக்குப் பொறுப்புகளும் கடமைகளும் கற்பிக்கப்பட்டன.  ஆனால், இன்று பத்து மாத கர்ப்ப காலத்துக்குப் பின்னரும் வயிற்றில் சுமப்பதைப் போலவே அங்கே இங்கே அசையவிடாமல் இறுக்கிப் பிடிக்கிறோம். தலையை ஒருவரும் கால்களை ஒருவருமாகப் பிடித்து இழுத்து வதைப்பதைத் தான் வளர்ச்சி என நினைத்துக்கொள்கிறோம். இதில் கொடுமை என்னவென்றால், அதுதான் பாசம், பற்று, அன்பு என்றும் நம்புகிறோம்.
எனக்குக் குழந்தை பிறந்திருந்த சமயத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.  கவனித்துக்கொள்ளப் பெரியவர்கள் யாரும் இல்லை. குழந்தை தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற நேரமெல்லாம் மாறி மாறித் தூக்கி வைத்துக்கொள்வோம். சில மாதங்கள் கடந்திருந்த போது, இரண்டு நாள்களாக யூரின், மோஷன் போகாமல் குழந்தை அழத்தொடங்கியது. நாங்களும் என்னவெல்லாமோ செய்து பார்த்துவிட்டு மகப்பேறு மற்றும் குழந்தை நல மருத்துவரிடம் அழைத்துப் போனோம். அவர் வயதான ஆண். மகப்பேறு மருத்துவராக ஓர் ஆண் இருப்பதைப் பார்த்து எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.

பிரச்னையைச் சொன்னபோது,  அவர் முன் இருந்த மர டேபிளில் குழந்தையைக் கிடத்தச் சொன்னார். எதுவும் பேசாமல் குழந்தையைக் கவனியுங்கள் என்றார். ஒரு சில நிமிடங்கள், அங்கே அமைதி நிலவியது. எங்களுக்கு எதுவும் புரியவில்லை. குழந்தை கைகால்களை ஆட்டி ஆட்டி உதைக்கத் தொடங்கியது. சற்று நேரத்தில் சிறுநீரும் மலமும் வெளியேறி `ஈஈஈ’ எனச் சிரித்தது. நான் நம்ப முடியாமல் அவரைப் பார்த்தேன். ’எப்போ பாரு கையிலயே வச்சிருந்தா குழந்தை எப்படி உடலை அசைக்க முடியும். கை காலை நல்லா உதைக்கிறதுதான் அதுக்கான விளையாட்டு, வாக்கிங், ஜாக்கிங் எல்லாம். இப்ப இருக்கற அப்பா அம்மாக்கள் பிள்ளையைக் கீழே இறக்க யோசிக்கிறாங்க. ஃப்ரீயா விடுங்க. கைக் குழந்தைக்கும் தனிமை, சுதந்திரம் எல்லாம் தேவைப்படும். உங்களுக்குக் கொஞ்சணும்னு தோணுறப்போ மட்டும் கையில எடுத்திட்டுக் கீழ விட்டுடுங்க. நீங்க வேணும்னா...குழந்தை அழுது கூப்பிட்டுக்கும்’ என்றார்.

இந்தியப் பெற்றோர், குழந்தை வளர்ப்பில் பிரதானமாக இரண்டே வழிகளைக் கையாள்கின்றனர். ஒன்று அடக்குமுறை,  மற்றொன்று செல்லங்கொடுத்தல். இரண்டுமே ஒரே விளைவைத் தான் ஏற்படுத்துகின்றன. அது சீரழிவு. அதீதச் செல்லங்கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் தம்முடைய உலகத்திற்குள் யாரையும் அனுமதிப்பதில்லை. யாருக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. ஒரு கட்டத்தில் அவை பெற்றோரையும் புறக்கணிக்கின்றன.

அன்பு செலுத்துதல் என்பது வேறு, செல்லங்கொடுத்தல் என்பது வேறு என்பதே நமக்குத் தெரியவில்லை. அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல், தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல், உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம். இவை கட்டாயம் குழந்தைக்குத் தரப்பட வேண்டும். செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது, சதா புகழ்வது, கைகாட்டுகிற எல்லாவற்றையும் வாங்கித் தருவது, அடம்பிடித்தலை ஏற்பது, ஒழுக்கமீறலை ரசிப்பது. பெரும்பாலான பெற்றோர் முன்னதையும் பின்னதையும் குழப்பிக்கொள்கின்றனர்.

குழந்தைக்கு உட்காரத் தெரிந்ததும் உணவை ஊட்டிவிடுவதைப் பெற்றோர் நிறுத்திவிட வேண்டும். தட்டில் இருக்கும் சோற்றைச் சிந்திச் சிதறித் தனக்குத் தேவையானதைக் குழந்தையே அள்ளி உண்ணும். ஆனால், பாசக்காரப் பெற்றோர் பள்ளி செல்லும் குழந்தை களுக்கும் ஊட்டியே விடுகின்றனர். நடக்கத் தெரியும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு திரியக் கூடாது. குறிப்பாக அப்பாக்கள், வளர்ந்த பிள்ளைகளையும் கைகளில் தூக்கி வைத்திருப்பதை வீதிகளில், கடைகளில் பார்க்க முடியும். இதன் பெயர் அன்பன்று. குழந்தை தன் வேலையைத் தானே செய்வதைப் பெற்றோர் தடுக்கின்றனர்.

தத்தித் தத்தி நடக்கும்போதே பெருக்குமாற்றை எடுத்து வீட்டைப் பெருக்க எத்தனிப்பதைப் பார்க்க முடியும். பெண் குழந்தை என்றால் இதெல்லாம் இப்பச் செய்ய வேண்டாம் என்கிறோம். ஆண் பிள்ளை என்றால் இதெல்லாம் நீ எப்பவுமே செய்யக் கூடாது என்று தடுக்கிறோம். ஆனால் குழந்தைகள் பால் பேதமில்லாமல் எல்லா வேலைகளையும் செய்ய விருப்பம் காட்டுகின்றன. ஆண் பெண் வித்தியாசமில்லாமல்,  இன்றைய குழந்தைகளுக்கு எந்த வேலையும் செய்யத் தெரியாது என்பதுதான் உண்மை.

துவைப்பது, வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வது, சமைப்பது போன்ற அடிப்படை வேலைகளுக்கு நாம் அவர்களைப் பழக்கவில்லை. வீட்டு வேலைகளைக் கற்பது பெண் குழந்தைகளின் சுமையாக இருந்த அவலம் தற்போது மாறிவருகிறது.

இன்றைய இளைஞர்கள் பைப் கசிந்தால் சரிசெய்வது, ட்யூப் லைட்டை மாற்றுவது போன்ற சாதாரணப் பணிகளுக்குக்கூட app-ஐத்  திறந்து ஆளைத் தேடுகின்றனர்.  அன்றாட வாழ்க்கைக்குத் தேவைப்படும் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலைகளைக்கூட அவர்களுக்கு நாம் கற்பிக்கவில்லை. வீட்டில் செய்வதற்கு எந்த வேலையும் இல்லாததால் அவர்கள் பிற்பகல் வரை உறங்குகின்றனர். நள்ளிரவு கடந்தும் செல்ஃபோனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இதனால், சோம்பேறித் தலைமுறையாக இன்றைய இளைஞர்கள் தலையெடுத்ததன் காரணம் நமது செல்லங்கொடுத்தல்தான்.

சில ஆண்டுகளுக்கு முன்னர், என் உறவினர் வீட்டில் சில மாதங்கள் தங்கியிருந்தேன். கல்லூரி படிக்கும் தன் மகனை சார் என்றுதான் என் மாமா அழைப்பார். தபதபவென்று வளர்ந்த அந்த இளைஞன் அவன் அறையில் எப்போதும் தூங்கிக் கொண்டிருப்பான். எழுந்ததும் செல்போனில் ஆராயத் தொடங்கிவிடுவான் அல்லது வெளியே கிளம்பிப் போய்விடுவான். வீட்டிற்கு விருந்தினர் வந்தால்கூடப் பேசுவதில்லை. `அப்பா பைக் வேணும்’ என்றால் உடனே கடைக்குக் கூட்டிப் போய்விடுவார். அவனிடம் ஒரு கிரெடிட் கார்டைக் கொடுத்து வைத்திருந்தார். வீட்டில் என்ன வேலை என்றாலும் அம்மாவோ அப்பாவோதான் செய்ய வேண்டும். ஒரு நாள் மிக்ஸி போடும்போது ஹை வோல்டேஜ் ஆகி ஃப்யூஸ் போய்விட்டது. டம்மென்ற சத்தத்தைக் கேட்டுக்கூட அவன் அறையை விட்டு வெளியே வரவில்லை. ஒருமணி நேரம் கழித்து, உள்ளே இருந்து அவனது குரல் மட்டும் வந்தது, `அம்மா, ஏ.சி ஓடல’. நாள் முழுவதும் அந்த ஆன்ட்டிதான் மாறி மாறி போன் செய்து ஆள்களைக் கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்த இளைஞன் படுத்தே கிடந்தான். அண்மையில் விசாரித்தபோது தெரிந்தது, அவனுக்கு மணமான சில மாதங்களிலேயே விவாகரத்தாகி அம்மா வீட்டில் இருக்கிறானாம்.

செல்லங்கொடுத்து வளர்க்கப்படுகிறவர்களோடு வாழ்வது மிகவும் கடினம். சோம்பேறித்தனமும், தான் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்ற ஆதிக்க உணர்வும் அவர்களிடம் மேலோங்கி இருக்கும். இந்தியக் குடும்பங்களில் ஆண் பிள்ளைகள் செல்லத்தால் சீரழிக்கப்பட்டனர். இப்போது பெண் குழந்தைகளுக்கும் அது பரவிவருகிறது.  நான் முன்பு ஒரு பத்திரிகையில் பணிபுரிந்த போது, கல்லூரி படிக்கும் மகள்களைக் கொண்ட தந்தை ஒருவர் சக ஊழியராக இருந்தார். மூத்த மகளை இன்ஜினீயரிங் சேர்ப்பதற்குப்பட்ட கடனை அவர் அடைத்து முடிக்கும் போது திருமணம் செய்துவைக்க வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. மகள் பேரில் 30 பவுன் நகை சேர்த்து வைத்திருந்தார். ஆனால், அந்தப் பெண், தனக்கு நூறு பவுன் நகை போட வேண்டுமென்று தந்தையிடம் டிமாண்ட் செய்தாள். அதற்காக ஊரில் உள்ள சொத்தை விற்கச் சொல்லி அடம்பிடித்தாள். `அதை உன் தங்கைக்காக வைத்திருக்கிறேன்’ என அவர் சொன்ன போது, `அவளுக்கு இந்த வீடு இருக்குல்ல’ என்றாளாம். `எங்கள பத்தி அவ கொஞ்சம்கூட யோசிக்க மாட்டேங்கிறா’ என்று புலம்பினார். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்துப் பழக்கப்படுத்தினால், ஒரு கட்டத்தில் பிள்ளைகள் உயிரையும் கேட்பார்கள். கொடுப்பீர்களா?

செல்லங்கொடுக்கும் பெற்றோர் நல்லொழுக்கத்தைவிடக் குழந்தைகளின் திறமைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர்.  சிறுபிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோருடன் பேசுவதற்கே இப்போதெல்லாம் பயமாக இருக்கிறது. `இப்பவே பாடுகிறது, ஆடுகிறது, என்னமா வரைகிறது, கம்ப்யூட்டரில் அதற்குத் தெரியாத விஷயமே இல்லை, அமேசான்ல அதுவே ஆர்டர் பண்ணிருச்சு, எனக்கே எல்லாத்தையும் சொல்லித் தருது…’ என வாய் ஓயாமல் புகழத் தொடங்கிவிடுகின்றனர். நாம் எதற்காக அவர்களைப் பார்க்க வந்தோம் என்பதே மறந்துபோகும் அளவிற்குப் பிள்ளை புராணம் பாடுகின்றனர். ஏன் இவ்வளவு பெருமிதம்?

சமூக வலைதளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இக்காலத்தில் பெற்றோர் தம் பிள்ளைகள் குறித்த வீடியோக்களை ஃபேஸ்புக்கிலும் யூ டியூபிலும் பதிவிட்டுப் புகழ்ச்சிக்குப் பழக்குகின்றனர்.

எல்லாக் குழந்தைகளிடமுமே ஏதேனும் திறமை இருக்கிறது எனும் போது ஏன் நம் குழந்தையை மட்டும் `ஸ்பெஷல்’ எனக் கொண்டாடுகிறோம். அதுவொரு சுயநலன். என் பிள்ளை தான் சிறந்தது என்ற பெருமை இன்று எல்லோருக்குமே தேவைப்படுகிறது. அதனால், நீ திறமைசாலி என்று சொல்வதற்குப் பதில் ‘நீ மட்டும்தான் திறமைசாலி’ என்று சொல்கிறோம். முன்னது அங்கீகாரம். பின்னது அகம்பாவம்.

ஒவ்வொரு குழந்தையும் தனிமனிதராக வளர்ந்தாக வேண்டும். எவ்வளவுதான் பொத்திப் பாதுகாத்து வளர்த்தாலும் ஒரு புள்ளியில்  தன் வாழ்க்கையை, தன் தோல்விகளை, தன் பிரச்னைகளைத் தானே சமாளித்தாக வேண்டும். ஆனால், நமது அதீதப் பாதுகாப்பு வளர்ப்பு முறையால் அவை திக்கற்று நிற்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றன.

செல்லமாக வளரும் பிள்ளைகளால் வாழ்வின் உண்மைகளை ஏற்க முடியாது.  குழந்தைகளைக் கைக்குள்ளிருந்து விடுதலை செய்யுங்கள். அவர்கள் சிரமப்படட்டும். எப்போதும் ஏ.சி போட்டு வைத்திருந்தால் வெயிலுக்கும் குளிருக்கும் எப்படி அவை பழகும்!  வெளியே கூட்டி வாருங்கள். வெறுங்காலில் நடக்கச் சொல்லுங்கள். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கட்டும். துணிகளை மடிப்பது, புத்தகங்களை அடுக்குவது, ஷெல்ஃபை க்ளீன் செய்வது போன்ற தம் வேலைகளைத் தாமே செய்யட்டும். பொருள்களைக் கேட்டால் `நோ’  சொல்லுங்கள். அன்பைக் கேட்டால் அள்ளித் தாருங்கள்.

குழந்தைகள்மீது பெற்றோர் எடுத்துக்கொள்ளும் உரிமைதான் செல்லங்கொடுத்தல். பிரதிபலனாகத் தான் என்ன சொன்னாலும் கேட்டு நடக்க வேண்டுமென மூளையை கண்டிஷன் செய்யும் சுயநலனே அதில் நிறைந்திருக்கிறது.  தானே உலகம் என்று வாழ்ந்தால் போதும் என நினைக்கின்றனர். ஆனால்,  பெற்றோரின் காலத்திற்குப் பின்னரும் இந்தப் பூமியில் குழந்தை ஒரு தனிமனிதராக, சமூக விலங்காக வாழ்ந்தாக வேண்டும். கைகளிலிருந்து வெளியேறிக் கல்வி கற்கவும், பொருளீட்டவும், தனக்கெனத் துணையை அமைத்துக்கொள்ளவும், போகும் இடங்களில் நல்ல மனிதராக அறியப்படவும் வேண்டும். அந்தச் சமூக வாழ்க்கைக்கு வெகுமுன்னரே தயார்படுத்துங்கள். நிறைய மனிதர்களுடன் பழகி, கலந்து, வாழும் வாழ்க்கைதான் ஆரோக்கியமானது. அப்படியான வாழ்க்கைக்கு நல்லொழுக்கமே ஆதாரம். அதைக் கற்பியுங்கள். உங்களின் கண்டிப்புகளும் இல்லைகளும் அதைத் தன் காலில் நிற்கப் பழக்குங்கள். 
எப்போது படித்தாலும் இனியது

*"ஒரு கப்பலில் ஒரு தம்பதி பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கப்பல் கவிழும் அபாயமான கட்டத்தில், ஒரேயொருவர் தப்பிக்க மட்டுமே  படகு ஒன்று  இருக்கிறது.*

*மனைவியை பின்னே தள்ளி விட்டு கணவன் மட்டும் அந்தப் படகில் தப்பிச்செல்கிறார்.*

 *கவிழும் கப்பலின் அந்தரத்தில் இருந்தவாறு தப்பிச் செல்லும் கணவனை நோக்கி மனைவி சத்தமாக....*
*இந்த இடத்தில் என்ன சொல்லியிரிப்பார்???"*

 *என்று மாணவர்களை நோக்கி இந்த கதையைக் கூறிய ஆசிரியை கேட்டார்.*

*எல்லா மாணவர்களும் பல வகையான பதில் தரும் போது ஒரு மாணவன் மட்டும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான்.....*

*"ஏம்பா நீ சைலண்டா இருக்க......"*

*'நம்ம கொழந்தைய பத்திரமா பாத்துக்கங்கன்னு சொல்லிருப்பா டீச்சர்'*

*"எப்பிடிப்பா கரெக்டா சொல்ற, உனக்கு முன்னாடியே இந்த கதை தெரியுமா?"*

*'இல்ல டீச்சர், எங்கம்மாவும் சாவுறதுக்கு முன்னாடி அப்பாக்கிட்ட இதையேதான் சொன்னாங்க...'*

*பலத்த மௌனத்திற்கு பிறகு ஆசிரியை கதையை தொடர்ந்தார்.*

*தனி ஆளாக அவர்களது பெண்ணை அந்த மனிதன் வளர்த்து வந்தார். அவரின் மரணத்தின் பின்னர் பல வருடங்கள் கழித்து அந்தப் பெண் தனது தந்தையின் டைரியைப் பார்க்க நேர்ந்தது.*

 *தாய்க்கு உயிர் கொல்லி நோய் இருந்திருப்பது அப்போதுதான் அவளுக்கு தெரிய வந்தது.*

 *கப்பல் கவிழ்ந்த சம்பவத்தை அப்பா இவ்வாறு எழுதியிருந்தார்.*

*' உன்னோடு நானும் கடலின் அடியில் சங்கமித்திருக்க வேண்டும்... நம் இருவரின் மரணமும் ஒரே நேரத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும். நான் என்ன செய்ய, நமது பெண்ணை வளர்த்தெடுக்க நான் மட்டுமே தப்ப வேண்டியிருந்தது'.*

*கதையை இதோடு முடித்து விட்டு அந்த ஆசிரியை கூறினார்:*

*'வாழ்க்கைல நல்லது கெட்டது எல்லாமே நடக்கும். எல்லாதுக்கும் காரணம் இருக்கும் ஆனா சில நேரங்கள்ல நம்மால் புரிஞ்சிக்க இயலாம போகலாம். அதனால நாம ஆழமா யோசிக்காமலோ, சரியா புரிஞ்சிக்காமலோ யார் மேலயும் முடிவுக்கு வந்துடக்கூடாது.'*

*'நாம சாப்பிட  ரெஸ்டாரெண்ட் போனா, ஒருத்தன் காசு கொடுக்க முன்வந்தா அவன் பணக்காரன் என்று அர்த்தமில்ல, பணத்த விட நம்ம நட்ப அதிகமா மதிக்கிறான்' னு  அர்த்தம்.*

*'முதல்ல மன்னிப்பு கேக்கிறாங்கன்னா அவங்க தப்பு பண்ணிருக்காங்கன்னு அர்த்தமில்ல, ஈகோவ(Ego) விட  உறவை மதிக்கிறாங்க' னு அர்த்தம்.*

*'நம்ம கண்டுக்காம விட்டாலும்  நமக்கு போன், மெஸேஜ் பண்றாங்கன்னா அவங்க வேல வெட்டி இல்லாம இருக்காங்கன்னு அர்த்தமில்ல, நம்ம அவங்க மனசில இருக்கோம்னு அர்த்தம்'.*

*பின்னொரு காலத்தில நம்ம புள்ளங்க நம்மகிட்ட கேட்கும்,,,,,*
*'"யாருப்பா அந்த போட்டோல இருக்கிறவங்கல்லாம்???"'*

*ஒரு கண்ணீர் கலந்த புன்னகையோட நாம சொல்லலாம் ' அவங்க கூடத்தான் சில நல்ல தருணங்களை  நாம கழிச்சிருக்கோம்'...

வாழ்க்கை குறுகியது, ஆனா அழகானது... 

6 டிசம்பர், 2017

🌷 ஒரு குட்டிக் கதை🌷

தையற்காரர் ஒருவர் ,தனது கடையில் துணிகள் தைத்துக்கொண்டிருந்தார்.

 அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.
அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார்.

பின்னர் கத்திரிக்கோலைக் கால் அருகே போட்டுவிட்டு துணியைத் தைக்கலானார்.

துணியை தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப்படுத்தினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மகன் அவரிடம் , “அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாக காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது ...மலிவானது. ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்...?” என்று கேட்டான்.

“ நீ சொல்வது உண்மைதான்” என்றார் தையற்காரர் . “கத்திரிகோல் அழகாகவும் ...
 மதிப்புள்ளதாகவும் இருந்தாலும் , அதன் செயல் வெட்டுவது.அதாவது பிரிப்பது!
ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது.

*ஒருவருடைய மதிப்பு அவருடைய செயலைக்கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல*.
நல்லதையே செய்வோம் நல்லவர்களாக வாழ்வோம்.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...