20 ஏப்ரல், 2018


சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருவிழா

2018-04-20@ 09:40:48
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது சமயபுரம்.

கோயில் வரலாறு: 

திருக்கடையூரில் எமனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் சரணடைந்தார். ஈசனும் காலசம்கார மூர்த்தியாக அவதாரம் எடுத்து எமதர்மனை அழித்தார். இது உலகில் ஜனன மரணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நோய்களின் அதிபதியான மாயாசுரன் நோய்களைப் பரப்பினான். மக்களைத் துன்புறுத்தினான். இதைக் கண்டு கோபம் கொண்ட பார்வதி தேவி தன்வடிவமான மாரியம்மனை மாயாசுரனை வதம் செய்ய அனுப்பினாள். மாரியம்மன் மாயாசுரனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்தாள். பின்னர் அவர்களின் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி அருள் புரிந்தார். பின்பு ஈசனின் அருளுடன் தனது தமையன் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் முதலில் வைஷ்ணவி தேவியாக அமர்ந்தாள். பின்னாளில் சமயபுரத்தில் வந்து மாரியம்மனாக வீற்றிருக்கிறாள்.

மாரியம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசுரனின்  தலைமீது கால் பதித்து,அமர்ந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள். வேப்ப மர காட்டில் உருவான கோவில் என்பதால் தான் இப்போதும் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தல விருட்சம் வேப்ப மரமாக உள்ளது.

கோயில் அமைப்பு: 

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக  280 அடி நீளத்துடனும் தெற்கு வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிரகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2ம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.  இங்கு ஒரே சன்னதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்.

சித்திரை பெருவிழா: 

உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காகவும் சிவபெருமானை வேண்டி மாசி கடைசி ஞாயிறு முதல், பங்குனி கடைசி ஞாயிறு வரை, 28 நாட்கள் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு வழக்கமான தளிகைக்குப் பதிலாக துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு, பாசி பருப்பு, இளநீர் வகைகளே படைக்கப்படுகின்றன. அம்மன் விரதம் இருக்கும் நாட்களில் அம்மன் மனதை குளிர்ச்சி செய்யவே பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

சித்திரை மாதத்தின் கத்திரி வெயிலில் அம்மை போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் அம்மன் உடல் வெப்பத்தை தணிக்கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல், அருள்பாலித்தால் என்ற ஐந்து தொழில்களையும் சித்திரைப் பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் அருள்புரிகிறார் என்பது ஐதீகம். சித்திரை திருநாளில் சமயபுரத்து மாரியம்மனை தரிசிக்கும் பக்தர்களுடைய அனைத்து வேண்டுதல்களையும் தேர்த்திருநாளன்று அருள்பாலிப்பால் எண்ணிய காரியம் இனிதே ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
VIDEO : பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் விசாரணை தொடக்கம் | Professor Nirmala Devi case
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் விசாரணை தொடக்கம் | Professor Nirmala Devi case
946 views
News

மேலும் செய்திகள்

14 ஏப்ரல், 2018

சித்திரை 1
பொன் ஏர் பூட்டும் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பொன்ஏர் என்றும், மதிஏர் என்றும் அழைப்பார்கள்

தங்கத்தால் செய்யப்பட்ட ஏர் கலப்பை கொண்டு வருடத்தின் முதல் நாளில் அரசன் உழவை தொடங்கி வைப்பான்..

இவ்வாறு அரசன் செய்வதிலிருந்து நாட்டு மக்களுக்கு அவன் தெரிவிப்பது முதலில் தான் ஒரு உழவன் என்றும் அதன் பிறகே தானொரு அரசன் என்பதை பறை சாட்டுவதே ஆகும்..

இதை திருவள்ளுவர் அழகாக கூறுவார்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றரெல்லாம்
தொழுதுண்டு பின் செல்வார் "

என்ற குறள் மூலம் உழவனை தொழுது பின் சென்றுதான் மற்றவர்கள் உண்ண வேண்டும் என்று கூறுகிறார்..

பொன்னேர் பூட்டும் விழா, பொன்னேர் கட்டுதல் என்று குறிப்பிடப்படும் விழா நம் தொன்மையான விழாக்களில் ஒன்று. தற்காலத்தில் ஏறக்குறைய நாம் மறந்துவிட்ட பண்டிகை. அதென்ன, பொன்னேர் கட்டுதல்..?? தைப்பொங்கல் என்பது அறுவடை முடிந்தபின் நடக்கும் பண்டிகை போல, பொன்னேர் கட்டுவது என்பது சித்திரை மாதம் விதைக்கும் பருவத்தில் விவசாயத்துக்காக நிலத்தை உழுவதற்கு முன் கொண்டாடப்படும் குடியானவர் பண்டிகை. பாரத தேசம் முழுதுமே இப்பண்டிகை கொண்டாடப்பட்டது. தேசத்தின் அரசர் முதல் கிராமத்தின் ஊர் கவுண்டர்கள் வரை தங்கத்தால் செய்த கலப்பை கொண்டு (அல்லது சிறிது தங்க ஆபரணம் கொண்டு அலங்கரித்த கலப்பை கொண்டு) நிலத்தை உழுது உழவை துவக்கி வைப்பார்கள். தற்காலத்தில் கொங்குப் பகுதியில் அருகிப் போயிருந்தாலும் பாரதத்தின் பிற பகுதிகளிலும், பாரத ராஜ்யம் ஏற்பட்ட வெளிநாடுகளிலும் இன்றளவும் இப்பண்டிகை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. கொங்குப் பகுதியில் எண்பது வயது தாண்டிய பெரியவர்கள் அவர்கள் சிறு வயதில் இப்பண்டிகை கொண்டாடட்டத்தை நினைவுகூறுகிறார்கள்.

சங்க இலக்கியமான சிலப்பதிகாரத்தில் இந்த திருவிழா சிறப்பாக கூறப்படும்

சிலப்பதிகாரத்தில் ஏர்மங்கலம் என்ற தலைப்பில் ஒரு பாடலே தனியாக இருக்கும்..

சிலப்பதிகாரம்

"கொழுங்கொடி யறுகையுங் குவளையுங் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பாருடைப் பனர்போற் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்" - (சிலப்.10:13:2-5)

என்னும் சிலப்பதிகார நாடுகாண் காதையடிகட்கு, "செந்நெற் கதிரோடே அறுகையும் குவளையையும் கலந்து தொடுத்த மாலையை மேழியிலே சூட்டிப் பாரை இரண்டாகப் பிளப்பாரைப் போலப் போற்றுவார் தொழப் பொன்னேர் பூட்டி நின்றோர் ஏரைப் பாடும் ஏர் மங்கலப் பாட்டுமென்க" என்று அடியார்க்குநல்லார் உரை வரைந்துள்ளார். அடியார்க்கு நல்லார் கொங்கதேசத்தில் கன்னகூட்ட பொப்பண்ண காங்கேயன் ஆதரவில் வாழ்ந்தவராவார். அவர் உரை இல்லாவிடில் இசைத்தமிழ் என்ற துறை இன்று இல்லை. ஆக, கொங்கதேசத்தைச் சேர்ந்த அடியார்க்கு நல்லார் உரையில் கொடுக்கபப்டும் விளக்கம், சிலப்பதிகார காலத்திலோ அல்லது அடியார்க்கு நல்லார் வாழ்ந்த (12 நூற்றாண்டு) காலத்திய கொங்கு வழக்கம் என்பதில் மாற்று கருத்தில்லை.

சங்க இலக்கியங்கள்

களமர்கள் பொன்னேர் பூட்டித் தாயர்வாய்க் கனிந்த பாடற்
குளமகிழ் சிறாரி னேறு மொருத்தலு முவகை தூங்க
வளமலி மருதம் பாடி மனவலி கடந்தோர் வென்ற
அளமரு பொறிபோ லேவ லாற்றவாள் வினையின் மூண்டார்.
(திருவிளையாடற்புராணம்)

உழவர்கள் பொன்னேரை பூட்ட எருதுகளும், எருமைக் கடாக்களும் மகிழ்ச்சியுடன் வர, அவை அன்னையரின் வாயினின்று வரும் பாடலுக்கு மனம் மகிழ்கின்ற சிறுவர்களை போல் மருதப்பண்  பாட்டுக்கு மகிழ்ந்து உழவர் சொல்லுக்கு இணங்க உளவு தொழில் செய்தன என்பார்.பல வண்ண எருதுகளை பூட்டி வழிய கால்களை உடைய உழவர்,பூமியில் உழவு செய்ய பூமியின் அங்கம் கிழித்து செந்நெல் பயிர்கள் செழித்து அசைந்து ஆடின என்பார்.

கார் நாற்பது

கருங்குர னொச்சிப் பசுந்தழை சூடி
இரும்புனம் ஏர்க்கடி கொண்டார் பெருங்கௌவை
ஆகின்று நம்மூ ரவர்க்கு.

ஏர்க்கடி கொள்ளுதல் - புதிதாய் ஏருழத் தொடங்குதல்; இதனை ‘நல்லேர்' என்றும், ‘பொன்னேர்' என்றும் வழங்குவர். (ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை)

கம்போடியா-தாய்லாந்து- போன்ற நாடுகளில் இன்றும் இந்த விழா அந்நாட்டு அரசர்களால் கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் பெருவாரியாக கலந்துகொண்டு அங்கே விதைக்கப்படும் நவதானியங்களை போட்டி போட்டு  எடுத்து செல்வர். இதனால் தங்கள் நிலத்தில் விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை. அங்கே உழவு முடிந்ததும் உழவோட்டிய காளைகளுக்கு பல வித தீவனங்கள் வைக்கப்படும். எந்த தீவனத்தை காளை முதலில் உன்கிறதோ அதை வைத்து அவ்வருடத்தின் பலன் முடிவு செய்யப்படும்.

தமிழ்புத்தாண்டு தை 1 என முடிவு செய்ய இவர்கள் யார்??

உழவுசெய்யும் குடியானவனுக்கு சித்திரை 1 புத்தாண்டு தினம்.

13 ஏப்ரல், 2018

தை முதல்நாள் தொடங்கும் திருவள்ளுவராண்டு பற்றிய விளக்கம்


திருவள்ளுவராண்டு முறை தமிழர்களுக்குத் தொடர் ஆண்டு  இல்லாத குறையைப் போக்குகிறது.

தொல்காப்பியர் ஓர் ஆண்டுக்கான ஆறு பெரும்பொழுதுகளைச் சொல்லும்போது ஆவணி மாதமாகிய கார்காலத்தையே தொடக்கமாகக் குறிப்பிடுகிறார். அதன்பிறகே கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் காலங்களை வரிசைப்படுத்துகிறார். இது 2500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் கார்காலத் தொடக்கமாகிய ஆவணி மாதத்தையே ஆண்டின் முதல் மாதமாகக் கொண்டனர் என்பதை உணர்த்துகிறது.

சித்திரை முதல் நாளைப் புத்தாண்டு என்று கொண்டாடும் வழக்கம் பண்டைய காலத்தில் இருந்ததில்லை.

தமிழர்களுக்குத் தொடராண்டுக் கணக்கு இல்லை என்ற குறையைப் போக்க 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழறிஞர்கள் கூடி தை முதல் நாளைத் தொடக்கமாகக் கொண்டு திருவள்ளுவர் ஆண்டு முறையைக் கொண்டுவந்தனர்.

சித்திரைப் புத்தாண்டு முறை என்பது தமிழ்நாட்டை விஜயநகரப் பேரரசு கைப்பற்றி ஆண்ட காலப்பகுதியில் வழக்கத்திற்கு வந்திருக்கலாம். ஆனால் தெலுங்கரது புத்தாண்டான உகாதி ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில நாள்காட்டியின் படி ஏப்ரல் 6 அல்லது 7 தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
இந்த வேறுபாட்டுக்குக் காரணம் தெலுங்கர், கன்னடர் மற்றும் சில மாநிலத்தவர் சந்திரனின் ஓட்டத்தை வைத்து மாதங்களைக் கணக்கிடுகிறார்கள். தமிழர்கள் சூரியன் மேட இராசிக்குள் நுழைவது முதல் அந்த இராசியை விட்டு விலகும் நாட்களை சித்திரை மாதம் எனக் கணக்கிட்டனர்.

இந்துக்களுக்கு என்று இந்திய அளவில் ஒரு புத்தாண்டு கிடையாது.
இப்போதெல்லாம் தமிழர்கள் சனவரி முதல்நாள் கிறித்தவர்களின் புத்தாண்டாக இருந்தாலும் அதனையும் கொண்டாடுகின்றனர். வருமானம் வருவதால் இந்துக் கோயில்களில் சனவரி முதல் நாள் நள்ளிரவில் நடை திறக்கிறார்கள்.

இப்போது வழங்கும் ‘பிரபவ’’ தொடங்கி ‘அட்சய’’‘ ஈறாக உள்ள 60 ஆண்டுப் பெயர்கள் சாலிவாகனன் என்பவனால் அல்லது கனிஷ்ஷனால் கி.பி 78 இல் ஏற்பட்டவை. இவை வடநாட்டு அரசனால் ஏற்பட்டதனால் அவற்றின் பெயர்கள் வட மொழிப் பெயர்களாய் உள்ளன. (பக்கம்7 இந்து 10-03-1940)
இந்த 60 ஆண்டு முறையால் தமிழரின் மொழி, மரபு, மானம், பண்பு, வாழ்வு முதலியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழிவும் இழிவும் இரண்டையும் எண்ணிப் பார்த்து உணர்ந்து தெளிந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தார்கள்.

1. திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டைப் பின்பற்றுவது.
2. அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது.
3. திருவள்ளுவர் காலம் கி.மு. 31 (வழக்கில் உள்ள ஆங்கில ஆண்டுடன் 31 யைக் கூட்டினால்) திருவள்ளுவர் ஆண்டு.
திருவள்ளுவர் ஆண்டுக்கு முதல் மாதம் தை இறுதி மாதம் மார்கழி. புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். கிழமைகள் வழக்கில் உள்ளவை.

இந்த முடிவை எடுத்தவர்களில் தமிழகத்தின் மூத்ததமிழ் அறிஞர்கள் மறைமலை அடிகள், திரு.வி.க., சுப்பிரமணியப் பிள்ளை, சச்சிதானந்தப் பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோம. சுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த முடிவுகளை 1967 – 2011 வரை தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் படிப்படையாக நடை முறைப்படுத்தி வந்தன. தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் தை முதல் நாள் தமிழ்புத்தாண்டு, திருவள்ளுவர் பிறந்த நாள், பொங்கல் நாள் என 2006 இல் ஆட்சிக்கு வந்த திமுக அரசு சனவரி 28, 2008 அன்று ஒரு சட்டத்தை சட்ட சபையில் ஒரு மனமாக நிறைவேற்றியது. அதனை ஆதரித்து அதிமுக உறுப்பினர்களும் வாக்களித்தார்கள்.
தமிழர்களது புத்தாண்டு தை முதல் நாள் என்பதை மறைந்த ஜெயராம் ஜெயலலிதா மட்டும் ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜெயலலிதா ஒரு இந்துத்துவ அடிப்படைவாதி. ஐயங்கார் பிரிவைச் சேர்ந்தவர். அண்ணாவின் பெயரைக் கட்சிப் பெயரிலும் அண்ணாவின் படத்தைக் கட்சிக் கொடியிலும் போட்டாலும் அவர் தனது குலம் மற்றும் மத நம்பிக்கைகளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டு இருந்தவர்.
“நான் ஒரு பிராமண இனத்தைச் சேர்ந்தவள். சாத்திரங்களின்படி அமைந்துள்ள புதுவருடத்தை தமிழ் என்ற போர்வையில் களங்கம் செய்வது தவறு. இது பிராமணிய இனத்தினையே அவதூறு செய்வது போல் உள்ளது. எனவே நான் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலை இந் நடைமுறையைத் தடைசெய்வேன்” என்று 2011 இல் நடந்த தேர்தல் மேடைகளில் முழங்கினார். இது ஒன்றே சித்திரை புத்தாண்டு தமிழர்க்கு உரியதல்ல அது பிராமணர்களுக்கு அதாவது ஆரியர்களுக்கு உரியது என்பது நன்கு புலப்படும்.

2011 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்தச் சட்டத்தை மாற்றிப் பழையபடி சித்திரை முதல்நாள்தான் தமிழரின் புத்தாண்டு என ஆகஸ்டு 23, 2011 அன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

சித்திரை மாதத்தின் தொடக்கத்தை தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்வது ஏன் என்பது குறித்து சட்டசபையில் விளக்கம் அளித்த அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சுய விளம்பரத்திற்காக திமுக தலைவர் கருணாநிதி புத்தாண்டை தை மாதத்திற்கு மாற்றியதாகக் குற்றம் சாட்டினார். மேலும் “சித்திரையில் தொடங்கி பங்குனி வரையிலான தமிழ் மாதத்தில் பௌர்ணமி அன்று வரும் நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராகும்” என்று ஜெயலலிதா கூறினார். ஆனால் 27 நட்சத்திரங்களில் சித்திரை, கார்த்திகை தவிர மற்றப் பெயர்களில் மாதப் பெயர்கள் இல்லை.

திமுக தலைவர் மு.கருணாநிதி புத்தாண்டை தை மாதத்துக்கு மாற்றினாலும் அது அவர் எடுத்த முடிவல்ல. தமிழக அறிஞர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே எடுத்த முடிவு!
சங்க இலக்கியத்தில் தை மாதத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சிறப்பு சித்திரை மாதத்துக்குக் கொடுக்கப்படவில்லை. மேலே கூறியவாறு வானியல் அடிப்படையில் தை முதல் நாள் ஞாயிறு என்ற சூரியன் தனது தென்திசைச் (தட்சணாயனம்) செலவை முடித்துக் கொண்டு வடதிசை செலவைத் (உத்தராயணம்) தொடங்குகிறது. அதாவது தனு இராசியை விட்டு விலகி மகர இராசியல் ஞாயிறு புகுகிறது. தமிழர்களுடைய புத்தாண்டு ஞாயிற்றின் பயணத் தொடக்கத்தில் இருக்க வேண்டுமா? அல்லது நடுவில் இருக்க வேண்டுமா? அதாவது தையில் இருக்க வேண்டுமா? சித்திரையில் இருக்க வேண்டுமா?

தொல்காப்பியர் காலத்தில் ஆவணி மாதம் ஆண்டின் முதல் மாதமாகக் கொள்ளப்பட்டது எனத் தொல்காப்பியத்துக்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் மூலம் தெரிகிறது. பின்பு சித்திரை ஆண்டின் முதல் மாதமாக மாற்றப்பட்டது.
முன்னூறு பாகை கொண்ட அண்டத்தை ஒவ்வொன்றும் 30 பாகை கொண்ட 12 வீடுகளாகவும் 12 இராசிகளாகவும் 27 நட்சத்திரங்களாகவும் பிரித்தது மனிதர்களே. ஒரு இராசி என்பது ஞாயிற்றின் ஓடு பாதையின் இருமருங்கிலும் (10 பாகையில்) காணப்படும் நட்சத்திரங்களே. நட்சத்திரங்கள் உண்மை என்றாலும் அதனை விதிக் கட்டுப்பாடின்றி ஒன்றோடு ஒன்று தொடுக்கும் போது வரும் உருவங்கள் (இராசிகள்) கற்பனையே. சில உருவங்கள் சிங்கம் போல் தோற்றமளித்ததால் சிங்க இராசி என்று பெயரிட்டனர். மேட இராசி ஆடுபோல் தோற்றம் கொண்டது. இருபத்தேழு நட்சத்திரங்களை 12 வீடுகளில் சரி சமமாக அடக்க முடியாத காரணத்தால் ஒவ்வொரு நட்சத்திரத்தையும் 4 கால்களாகப் பிரித்து ஒவ்வொரு வீட்டிற்கும் 2 நட்சத்திரம் ஒரு கால் என ஒதுக்கியுள்ளனர்.

தமிழன் கோயிலில் சமஸ்கிருத மந்திரம், தமிழன் திருமணத்தில் சமஸ்கிருத மந்திரம் என்பதுபோல, தமிழன் ஆண்டையும் சமஸ்கிருதமாக்கிய பிற பண்பாட்டின் ஆதிக்கத்தையே தமிழக சட்டசபையில் ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானம் காட்டுகிறது. தமிழிலே பெயரில்லாத, சமஸ்கிருதத்தில் பெயருள்ள ஆண்டுகள் எப்படித் தமிழ் ஆண்டுகளாகும்?

தமிழர்கள் வாழ்வு இயற்கையை அடிப்படையாய்க் கொண்டது. ஆண்டை மட்டுமல்ல, மாதம், கிழமை நாள் இவற்றையும் இயற்கையின் அடிப்படையிலேயே கணித்தனர். ஒரு நாள் என்பது சூரியன் தோன்றி மீண்டும் சூரியன் தோன்ற எடுத்துக்கொள்ளும் கால அளவு. மாதம் என்பதற்கு திங்கள் என்ற பெயருண்டு. திங்கள் என்பது நிலா. நிலாவை அடிப்படையாக வைத்துக் கணக்கிடப்பட்ட காலம் என்பதால் அது திங்கள் (மாதம்) எனப்பட்டது.

சூரியன் தென்கோடியிலிருந்து, வடக்கு நோக்கித் தொடங்கும் பயணத்தின் முதல் நாளை ஆண்டின் முதல் நாளாகக் கொள்வதென தமிழ் அறிஞர்கள் தீர்மானித்தனர். அதன்படி தை முதல் நாள் சூரியன் தென்கோடி முனையிலிருந்து வடக்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்கி – சித்திரை மாதம் தலைக்கு மேல் நிற்கும். ஆனி மாதக் கடைசியில் வடகோடிக்குச் செல்லும். புரட்டாசி மாதக் கடைசியில் தலைக்கு மேல் மீண்டும் வரும். மார்கழிக் கடைசியில் தென் கோடிக்குச் செல்லும். ஆக, சூரியன் தென்கோடியிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லத் தொடங்கி, மீண்டும் தென்கோடியைச் சென்றடைய எடுத்துக் கொள்ள ஆகும் காலம் ஓர் ஆண்டு ஆகும்.

சூரியன் பூமியை ஒரு முறை சுற்றி வரும் சுற்றுப் பாதை ஒவ்வொன்றும் 30 பாகைகள் (Degrees) அளவுள்ள 12 பகுதிகளாக விதிக்கட்டுப்பாடின்றிப் (arbitrary) பிரிக்கப்பட்டுள்ளன. இந்த ஒவ்வொரு பிரிவும் ஒரு இராசி எனவும் 12 இராசிகளினதும் தொகுதி இராசிச் சக்கரம் எனவும் அழைக்கப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முழுச் சுற்றின் போதும் சூரியன் மகரம் முதல் தனு இராசி வரை உள்ள 12 சூரிய மாதங்கள் (இராசிகள்) வழியாகப் பயணம் செய்கிறது. பூமியைச் சுற்றிய சூரியனின் சார்பு இயக்கத்தில் இந்த ஒவ்வொரு இராசியிலும், சூரியன் இருக்கும் காலப்பகுதியே சூரியமாதம் ஆகும். இப்படி காலக்கணக்கைக் கணிப்பதை தமிழில் காலந்தேர் (காலம்+தேர்) என்று அழைத்தார்கள்.

தமிழர்கள் ஞாயிற்றின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட கலைகளான சோதிடம், ஓரை பார்த்தல், சாதகம் பார்த்தல், முதலிய கலைகளுக்கு சூரியமாதத்தைக் கணித்துப் பயன்படுத்தினர். இந்தியாவில் மலையாளிகளும் தமிழரும் சூரியமாத முறையையே பின்பற்றுகிறார்கள். மலையாளிகள் மாதங்களுக்கு இராசிகளின் பெயரையே வைத்திருக்கிறார்கள். தமிழகத்தில்  சூரியமாத முறை வழக்கத்தில் இருந்தாலும் அம்மாதங்களைக் குறிக்க சந்திர மாதப்பெயர்களே பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.

பூமி தன் அச்சில் சுழலுவதை அடிப்படையாகக் கொண்டு நாட்களும், சூரியனைச் சுற்றி வருவதால் மாதங்களும் ஆண்டுகளும் உருவாகின்றன. இவ்விரு தோற்றப்பாடுகளும் ஒன்றிலொன்று தங்கியிராத இரண்டு வெவ்வேறு தோற்றப்பாடாக இருப்பதால், புதிய மாதப் பிறப்பும் புதிய நாள் தொடங்குவதும் ஒரே நேரத்தில் அமைவதில்லை. தமிழ் முறைப்படி ஒரு நாள் என்பது குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் தொடக்கம் முதல் அடுத்த நாள் சூரிய உதயம் வரையான காலப் பகுதியாகும்.
வானியல் அடிப்படையில் ஞாயிறு தனு இராசியில் இருந்து மகர இராசிக்குள் புகுவதே தை புத்தாண்டுப் பிறப்பாகும். சித்திரைப் பிறப்பு மீன இராசியில் இருந்து மேட இராசிக்கு ஞாயிறு புகும் போது இடம்பெறுகிறது. முன்னது ஞாயிறு வடதிசைப் பயணத்தின் தொடக்கம். பின்னது ஞாயிறு வடக்கு நோக்கிய பயணத்தின் தொடக்கத்துக்கும் முடிவுக்கும் இடையில் இருக்கிறது. அதாவது ஞாயிறு வான் நடுக்கோட்டை (celestial equator) கடக்கும் நாளாகும். எனவே பயணத்தின் தொடக்கத்தை வைத்து ஆண்டைக் கணிப்பதே பொருத்தமாக இருக்கும்.

சித்திரையை ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளும் பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுக் கணிப்பில் பல குறைபாடுகள் இருக்கின்றன. பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரஜோர்பத்தி, ஆங்கீரஸ, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்ரபாணு, சுபாணு, பார்த்திய, விய,,....... ஹேவிளம்பி,.... ராஸஷ, குரோதன, அக்ஷய,,,,,,,, இவைதான் அறுபதாண்டு பெயர்கள். இவற்றில் எதுவும் தமிழ்ப் பெயரில்லை.

(1) பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இந்தப் புராணக் கதை அருவருப்பான, அறிவுக்கு ஒவ்வாத ஒன்றாக இருக்கிறது. அவற்றைத் தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது தமிழ் ஆண்டுகள் என ஒப்புக் கொள்ளமாட்டான்.

(2) சித்திரை முதல் நாளில் தொடங்கும் ஆண்டுகளின் கணக்கு சுழற்சி முறையில் இருக்கும். ஒரு சுற்று 60 ஆண்டுகள் முடிந்தால் மீண்டும் பழையபடி பிரபவ முதல் அட்சய வரையிலான 60 ஆண்டுகள் தொடங்குகின்றன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ‘ ஆண்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பது நடைமுறைக்கும் அறிவுக்கும் ஒவ்வாததாகும்.

வரலாற்றைப் பதிவு செய்யும் போது 60 க்கு மேலே ஒரு தொடராக ஆண்டைக் கணக்கிட முடியாது. ஒருவர் 60 வயதுக்கு மேல் உயிர் வாழ்ந்தால் அவர் அதற்கு மேல் தனது பிறந்த நாளைக் கொண்டாட முடியாது. மேலும் ஒருவர் மன்மத ஆண்டில் பிறந்தவர் என்று வைத்துக் கொண்டால் அவர் எந்த மன்மத ஆண்டில் பிறந்தவர் எனச் சொல்ல முடியாது. ஆக பற்சக்கர வடிவத்தில் வடமொழியில் அருவருப்பான பெயர்களைக் கொண்ட 60 ஆண்டுகளைப் பின்பற்றினால் வரலாற்றைப் பதிவு செய்வதில் குழப்பம் ஏற்படும். அறுபதுக்கு மேல் எண்ண முடியாது.

திருவள்ளுவர் பெயரில் உள்ள தொடர் ஆண்டு இந்தக் குழப்பத்தை அடியோடு நீக்க  உதவுகிறது. திருவள்ளுவர் ஆண்டு முறையில்,
· * 60 ஆண்டு சுழற்சி வராது.
· * தொடர்ச்சியாக ஆண்டுகளைக் கணக்கிடலாம்.
· * தமிழர்கள் வரலாற்றில் முதல் முறையாக தங்களுக்கென ஒரு தொடராண்டு (சகாப்தம்) உருவாக்கப் பட்டுள்ளதென பெருமிதத்துடன் கூறும் நிலை ஏற்படும்.
· * தமிழுக்கும் தமிழருக்கும் பெருமை சேர்க்கும் திருவள்ளுவருக்குத் தலைசிறந்த நினைவாக அமையும்.
· * தமிழரின் திருநாளான பொங்கல் விழா தனிச் சிறப்படையும்.

ஒரு இனம் பல நூற்றாண்டுகளாகக் கடைப்பிடித்து வருகின்ற மரபு அந்த இனத்திற்குத் தீங்கிழைக்கிறது என்று கண்டால் அந்த மரபு ஒழிக்கப்பட வேண்டும் அல்லது மாற்றியமைக்கப்பட வேண்டும். குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் ஆகியவை இன்று சட்டப்படி தடைசெய்யப்பட்டுவிட்டன. ஆதலால் தைப்பொங்கல் நாளான தைத்திங்கள் முதல் நாள் – திருவள்ளுவர் பிறந்த நாள்தான் தமிழனுக்குரிய தமிழ்ப் புத்தாண்டு என ஏற்றுக் கொள்வதில் தவறில்லை!

இருந்தாலும் இந்து சமயத்தைச் சார்ந்த தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டை தமிழ்ப் புத்தாண்டு என்று அழைக்காமல் சித்திரைப் புத்தாண்டு என்று கொண்டாடலாம். தமிழ் கிறித்தவர்கள் சனவரி முதல் நாளை ஆங்கிலப் புத்தாண்டாகக் கொண்டாடலாம்.
ஆனால் சமய வேறுபாடின்றி ஒரு இந்துத் தமிழனும் ஒரு கிறித்தவ தமிழனும் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்றும் பொங்கல் நாள் என்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் என்றும் கொண்டாடுவதே "தமிழன் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு! அமிழ்தம் அவனது மொழியாகும் அன்பே அவனது வழியாகும்" என்பதை மெய்ப்பிக்க உதவும்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா சித்திரை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு என நிறைவேற்றிய சட்டம் நீக்கப்பட வேண்டும்.

"“அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்குத் தைம்முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”

“தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல்
பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்”

“நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு”
- என்றார் பாவேந்தர் பாரதிதாசன்.

31 மார்ச், 2018

*அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’ என்று கேட்டாள்*

எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?
அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?

"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.

நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.

நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.

அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.

நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.

ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.

1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.

2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.

3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?

4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.

5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.

6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.

7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?

8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.

9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.

10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.

11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.

12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.

13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.

14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.

சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.

நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.

மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."

"A Good One For Superstitious People" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது.

அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.

“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).

இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.

வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).

மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).

பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).

ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.

ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?

என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"

அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.

அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.
By JOTHIMANIRAJAN

30 மார்ச், 2018

8ஆம் நாள் நடக்கும் அறுபத்து மூவர் விழா எதற்கு?

கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்ட இந்த ஆலயம் சென்னை நகரின் மையப் பகுதியான மயிலாப்பூரில் அமைந்திருக்கிறது. கிழக்கில் உள்ள கோபுரமே ராஜகோபுரமாகும். 7 நிலைகளும் சுமார் 120 அடி உயரம் உடையது. ஒரு விசாலமான வெளிப் பிரகாரமும் முக்கிய சன்னதிகளைச் சுற்றி பிரகாரங்களும் அமைந்துள்ளன. கிழக்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது கிழக்கு வெளிப் பிரகாரம். இதில் வரிசையாக அண்ணாமலையார், நர்த்தன விநாயகர், ஜகதீசுவரர் மற்றும் நவக்கிரக சந்நிதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. தெற்குப் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய நவராத்திரி மண்டபமும், மேற்கு நோக்கிய சிங்காரவேலர் சந்நிதியும் அமைந்துள்ளன.

மேற்கு கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் மேற்கு வெளிப் பிரகாரத்தில் சுவாமி சந்நிதி முன் உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றைக் காணலாம். இதைக் கடந்தவுடன் சுவாமி சந்நிதி நுழைவு வாயிலின் முன்னுள்ள மண்டபத்தில் இடதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கற்பகாம்பாள் சந்நிதி உள்ளது. சுவாமி சந்நிதிக்குள் நுழைந்தவுடன் இத்தலத்தின் இறைவன் கபாலீஸ்வரர் மேற்கு நோக்கி சுயம்பு லிங்க உருவில் காட்சி தருகிறார். கருவறைச் சுற்றில் நாம் பைரவர், வீரபத்திரர், தேவார மூவர் மற்றும் 63 நாயன்மார்கள் ஆகியோரின் திருவுருவங்களைக் காணலாம்.

தலப்பெயர் வரலாறு

சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார். சிவபெருமானோ ஆதியும், அந்தமும் இல்லாதவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது. மேற்கு வேளிப் பிரகாரத்தில் அருணகிரிநாதரின் திருவுருவம் ஒரு சிறிய சந்நிதியில் சிங்காரவேலர் சந்நிதிக்கு நேர் எதிரே உள்ளது.

வடக்கு வேளிப் பிரகாரத்தில் தலவிருட்சம் புன்னை மரமும் அதன் அருகில் புன்னைவனநாதர் சந்நிதியும் உள்ளது. அம்பிகை இத்தலத்தில் சிவனை வேண்டி தவமிருந்தபோது, சுவாமி அவளுக்கு புன்னை மரத்தின் அடியில் காட்சி கொடுத்தார். புன்னைவனநாதர் சந்நிதிக்குப் பின்புறம் ஒரு பாணத்தின் மத்தியில் சிவலிங்கம் ஒன்று புடைப்புச்சிற்பமாக இருக்கிறது. இச்சன்னதியில் அம்பாள் மயில் உருவில் வழிபட்ட சிலையும் இருக்கிறது. வடக்கு வேளிப் பிரகாரத்தின் வடகிழக்கு மூலையில் மேற்கு நோக்கிய தனி சந்நிதியில் சனி பகவான் அருள் புரிகிறார். தெற்குப் பிரகாரத்தில் இத்தலத்தில் முருகப்பெருமான் 6 திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் கொண்டு மேற்கு நோக்கி மயில் மீது எழுந்தருளியுள்ளார். தேவியர் இருவரும் யானை மீது அமர்ந்து காட்சி தருகின்றனர். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 10 பாடல்கள் உள்ளது.

தல வரலாறு 

1. பார்வதிதேவி சிவனிடம், சிவாயநம என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தின் பொருளை உபதேசிக்கும்படி வேண்டினாள். சிவனும் உபதேசித்தார். அவ்வேளையில் மயில் ஒன்று நடன மாடவே, அதன் அழகில் மயங்கிய அம்பிகை உபதேசத்தை கவனிக்காமல் வேடிக்கை பார்த்தாள். பாடத்தைக் கவனிக்காத மாணவர்களுக்கு குரு தண்டனை கொடுப்பார். இப்போது குருவான சிவன், மாணவியான அம்பிகையை, எதன் அழகில் மயங்கினாயோ அதுவாகவே பிற என்று மயிலாக மாறும்படி செய்து விட்டார். அம்பிகை தன் குற்றத்திற்கு விமோசனம் கேட்டாள். பூலோகத்தில் தன்னை மயில் வடிவில் வழிபட்டுவர விமோசனம் கிடைக்கும் என்றார் சிவன். அதன்படி அம்பிகை மயில் வடிவில் இத்தலம் வந்தாள். சிவனை வணங்கி விமோசனம் பெற்றாள். இருவரும் இங்கேயே கோயில் கொண்டனர். பார்வதி மயில் உருவில் இத்தலத்தில் இறைவனை பூஜை செய்ததால் இத்தலம் திருமயிலை என்றும் பெயர் பெற்றது.

2. திருமயிலை தலத்தில் சிவநேசர் எனபவர் வாழ்ந்து வந்தார். சிவபெருமான் மீது அளவு கடந்த பக்தியுடைய அவருக்கு பூம்பாவை என்ற ஒரு மகள் இருந்தாள். திருஞானசம்பந்தரைப் பற்றியும் அவரின் சைவ சமய தொண்டைப் பற்றியும் கேள்விப்பட்ட சிவநேசர் தன் மகள் பூம்பாவையை சம்பந்தருக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார். அவ்வாறு இருக்கையில் ஒரு சமயம் பூம்பாவை தோட்டத்தில் தன் தோழிகளுடன் மலர் பறித்துக் கொண்டு இருந்த போது பாம்பு தீண்டி இறந்து விடுகிறாள். மகள் இறந்து விட்ட போதிலும் அவள் சம்பந்தருக்கு உரியவள் என்ற எண்ணம் சிவநேசருக்கு வர மகளின் அஸ்தி மற்றும் எலும்புகளை ஒரு குடத்திலிட்டு கன்னி மாடத்தில் பத்திரமாக பாதுகாத்து வைத்திருந்தார்.

திருவொற்றியூர் வந்த சம்பந்தரைச் சந்தித்த சிவநேசர் அவரை வலம் வந்து தொழுதார். கன்னி மாடத்தில் வைத்திருந்த குடத்தைக் கொண்டு வந்து சம்பந்தர் முன் வைத்து பூம்பாவை பற்றிய விபரங்களைச் சொல்லி அழுதார். சம்பந்தர் திருமயிலை கபாலீஸ்வரரை தியானித்து “மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலை” என்று தொடங்கும் பதிகம் பாடினார். பதிகம் பாடி முடித்ததும் குடத்தை உடைத்துக் கொண்டு வெளியே வந்த பூம்பாவை சம்பந்தரை வணங்கினாள். சிவநேசர் சம்பந்தரை வணங்கி பூம்பாவையை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினார். விஷம் தீண்டி இறந்த பூம்பாவைக்கு உயிர் கொடுத்ததின் மூலம் அவள் எனக்கு மகள் ஆகின்றாள் என்று கூறிய சம்பந்தர் சிவநேசரின் கோரிக்கையை நிராகரித்து விடுகிறார். பூம்பாவை தன் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து இறைவன் தொண்டு செய்து வந்தாள்.

இக்கோயில் மேற்கு கோபுரம் அருகில் பூம்பாவைக்கு சந்நிதி இருக்கிறது. அருகில் சம்பந்தர் இருக்கிறார். சம்பந்தர் பூம்பாவையை உயிர்ப்பித்த நிகழ்ச்சி, பங்குனி பிரம்மோற்ஸவத்தின் 8ம் நாள் காலையில் நடக்கிறது. அப்போது சம்பந்தர், பூம்பாவை, சிவநேசர் மற்றும் உற்சவ மூர்த்திகள் கபாலி தீர்த்தத்திற்கு எழுந்தருள்கின்றனர். ஒரு கும்பத்தில் அஸ்திக்கு பதிலாக நாட்டுச்சர்க்கரை வைத்து, சம்பந்தரின் பதிகம் பாடப்படுகிறது. பின்பு பூம்பாவாய் உயிருடன் எழுந்ததை பாவனையாக செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை பார்த்தால் தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அறுபது, எண்பதாம் திருமணம் செய்ய ஏற்ற தலம் இது. பங்குனி பிரம்மோற்ஸவத்தின்போது, இக்கோயிலில் நடக்கும் பன்னிருதிருமுறை விழா மிகவும் பிரசித்தி பெற்றது.

இவ்விழாவின் 8ம் நாளில், 63 நாயன்மார்களும் வீதியுலா செல்கின்றனர். இதேபோல் மாசி பவுர்ணமியில் இங்கு நடக்கும் கடலாட்டு விழாவும் பிரசித்தி பெற்றது. அப்போது சிவன் கடலுக்குச் சென்று தீர்த்த நீராடி வருகிறார். சம்பந்தர் தனது பதிகத்தில் 6வது பாடலில் கடலாட்டு விழாவைப் பற்றியும், பக்தர்கள் கடலாடுவதை இறைவன் பார்த்தபடி இருப்பதையும் குறிப்பிடுவதால் தேவார காலத்தில் இத்தலம் கடலருகே இருந்தது என்பது தெரிய வருகிறது. “பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசி மகநாளில் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதைக் கண்டு களிப்போடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ” என்று தன் பதிகத்தில் குறிப்பிடுகிறார்.

திருஞானசம்பந்தர் இயற்றியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் இரண்டாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. மூவரால் பாடப்பட்ட தேவாரப் பாடல்களில், சுவாமி மற்றும் தலத்தின் பெருமைகளை குறிப்பிட்டுத்தான் பெரும்பாலும் பதிகம் பாடப்பட்டுள்ளது. ஆனால், இத்தலம் வந்த சம்பந்தர், பூம்பாவையை உயிர்ப்பிக்க இக்கோயிலில் நடக்கும் திருவிழாக்களின் சிறப்புக்களை குறிப்பிட்டு 11 பதிகங்கள் பாடினார். சம்பந்தர் பாடிய பதிகத்தில் திருமயிலை கோயிலைப் பற்றியும், இங்கு சிறப்பாக நடக்கும் விழாக்களைப் பற்றியும் குறிப்பிட்டு இவைகளை எல்லாம் பார்த்து அனுபவிக்காமல் நீ இறந்து போகலாமா பூம்பாவை என்று தன் பதிகத்தில் பாடுகிறார். இவ்வாறு திருவிழா குறித்து பதிகம் பெற்ற பெருமையுடைய தலம் இது.
பெருமைமிகு
பங்குனி உத்திரம்...!


பங்குனி உத்திரம் நாள் :
பங்குனி ( 16 ) | 30.3.2018 வெள்ளிக்கிழமை

மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.

பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும், பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் புண்ணிய திருநாள் பங்குனி உத்திரம்.

தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்கின்றன புராணங்கள்.

தெய்வங்களே உத்திரத்தை சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு.

பங்குனி உத்திர நாளில் நிகழ்ந்தவை :

திருப்பரங்குன்றத்தில் முருகன் - தெய்வானை திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

மகாலட்சுமி இந்நாளில் விரதம் இருந்து, மகாவிஷ்ணுவின் திருமார்பில் இடம் பிடித்தாள்.

பிரம்மன், தன் மனைவி சரஸ்வதியை நாக்கிலேயே வைத்துக் கொள்ளும்படியான வரத்தைப் பெற்றார்.

தன் மனைவி இந்திராணியை பிரிந்திருந்த இந்திரன், மீண்டும் அவளுடன் சேர்ந்த நாள் இது.

சந்திர பகவான், கார்த்திகை, ரோகிணி உள்ளிட்ட 27 நட்சத்திரங்களை மனைவியராக அடைந்த புண்ணிய தினம்.

ராமபிரான் - சீதாதேவி, பரதன் - மாண்டவி, லட்சுமணன் - ஊர்மிளை, சத்ருக்னன் - ச்ருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த தினம்.

இமவான் தன் மகள் பார்வதியை சிவனுக்கு திருமணம் செய்ய தேர்ந்தெடுத்தது இந்த நாளில் தான்.

மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

ஆண்டாள் - ரங்கமன்னார் திருமணம் நடந்தது இந்த நாளில் தான்.

இந்த நாளில் தான் இடும்பன் மூலம் காவடி தூக்கும் பழக்கம் ஆரம்பித்தது.

பங்குனி உத்திரத்தில்தான் தர்மசாஸ்தாவான சபரிமலை ஐயப்பன் பிறந்தார்.

அர்ச்சுனன் பிறந்தது பங்குனி உத்திரத்தில்தான்.

வள்ளி அவதாரம் செய்தது பங்குனி உத்திரத்தில்தான்.

காஞ்சியில் காமாட்சி அம்மன் ஆற்று மணலை சிவலிங்கமாக பிடித்து வழிபட்டு சிவனின் அருளைப் பெற்றது இந்த நாளில் தான்.

தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு இரங்கி, மன்மதனை மீண்டும் சிவனார் உயிர்ப்பித்தது பங்குனி உத்திரம் திருநாளில்தான்.

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக்கோலத்தில் பரமன் காட்சி தந்தது இந்த நாளில்தான்.

சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில்.

இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

26 மார்ச், 2018

தமிழர் திருநாள்களும்
அதனைத் தெரிந்துள்ள
உதவும் தகவல்களும்

சித்திரை மாதம் முதல் நாள்...
ஆடி மாதம் முதல் நாள்...
ஐப்பசி மாதம் முதல் நாள்...
தை மாதம் முதல் நாள்...

இவற்றை எல்லாம் விழாவாகக் கொண்டாடுவது ஏதோ ஒரு வித சடங்கு / பழக்கம் என நினைத்துக்கொண்டு இருக்கின்றோம்.

நம் முன்னோர்கள் இந்நாள்களோடு அறிவியல் சம்பவங்கள்  சில உள்ளன என நமக்கு உணர்த்துகின்றனர்.

"சூரியன் உதிக்கும் திசை கிழக்கு" எனறு சிறு பிள்ளைகளுக்குச் சொல்லித் தருகின்றோம்..

என்றாவது,  ஒரு அளவை வைத்து சூரியன் உதிக்கின்றபோது சோதித்து இருக்கிறோமா? கண்டிப்பாக இல்லை.

வெள்ளகாரன் நம்ம அறிவியலை அழித்துவிட்டு, ஒரு முட்டாள் தனமான கல்வியை புகுத்தி விட்டான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று....

ஆமாங்க சூரியன் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே சரியாக கிழக்கே உதிக்கும்....

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஒரு குறிப்பிட்ட புள்ளியில் மறுபடியும் தெற்கு நோக்கி திரும்பும்...

அப்பறம் மறுபடியும் ஒரு நாள் கிழக்கே உதிக்கும், அப்பறம் தென்கிழக்கு நோக்கி நகரும்...

இப்படி சரியாக கிழக்கில் ஆரம்பித்து, வடகிழக்கு, தென்கிழக்கு னு போயிட்டு மறுபடியும் கிழக்குக்கு வர ஆகிற நேரம் சரியாக ஒரு வருடம்..!!!!

சரி... இதுக்கும் தமிழ் மாதத்திற்கும் என்ன சம்பந்தம்?

சூரியன் தன் பயணத்தை கிழக்கில் ஆரம்பிக்கும் நாள் தான் சித்திரை 1.., புத்தாண்டு...!!! (In science it is called Equinox)

அப்புறம் சரியாக வடகிழக்கு புள்ளி தான் ஆடி 1 .... (solstice)

மறுபடியும் கிழக்குக்கு வரும்போது ஐப்பசி 1 (equinox)

மீண்டும் சரியாக தென்கிழக்கு - இப்போது தை1 (solistice)

இந்த வானியல் மாற்றங்கள், அதனை சார்ந்த பருவ கால மாற்றங்களை நன்கு உணர்ந்து இருந்த நம் முன்னோர்கள், இவற்றை அனைவரும் அறியும் வகையில் திருவிழாக்களாக கொண்டாடினார்கள்...

சித்திரை (equinox) - புத்தாண்டு
ஆடி (summer solstice) - ஆடிப்பிறப்பு
ஐப்பசி (equinox)- தீபாவளி
தை (winter solstice) - பொங்கல்

நமது அடுத்த தலைமுறைக்கு நமது பாரம்பரியத்தை வெறும் சடங்காக மட்டும் அல்லாமல் அதன் அறிவியலையும் கொண்டு சேர்ப்போம்.

நமது முன்னோர்கள் "தன்னிகரற்ற" மாபெரும் அறிவாளிகள் மிகவும் மகத்தானவர்கள்.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...