19 ஜூன், 2020

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து 
50ஆம் ஆண்டு நிறைவு
(1970-2020)

அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக 'கஜவதனா கருணாகரனா', 'வாதாபி கணபதே' போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள்.

1970 மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில், "நீராருங் கடலுடுத்த' பாடலே இனிமேல் அரசு விழாக்களில் பாடவேண்டும்" என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

கலைஞர் இதை அறிவித்தவுடன் 'கலைமகள்' மாத இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் எதிர்ப்புத் தெரிவித்தார். கடவுளும், தமிழ்த்தாயும் ஒன்றல்ல என்றும், அதற்குப் பதிலாகத் தாயுமானவர் எழுதிய 'அங்கிங்கெனாதபடி' என்ற பாடலையே பாட வேண்டும் என்றார்.

பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, ம.பொ.சி., டாக்டர் மு.வரதராசன் உள்ளிட்டோர் கலைஞரின் முடிவை வரவேற்றனர். எதிர்ப்புகள் அடங்கிப் போனது.

"தேசிய கீதம் இருக்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது சரியல்ல என்றும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது" என்று சமர்குஹா என்பவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இது இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று அன்றைய துணை உள்துறை அமைச்சர் கே.ஆர்.இராமசாமி பதிலளித்தார்.

1970 ஜூன் 17, அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது. 1970 நவம்பர் 23 முதல் அமல்படுத்தப்பட்டது.

'நீராருங் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

திருநெல்வேலி இந்துக் கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரம் பிள்ளையின் 'மணோன்மனீயம்' நாடகத்தில் இடம்பெற்ற பாடலே 'நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் இந்தப் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு, டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலாவால் பாடப்பட்டு, இசைத்தட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்தப் பாடல் 50 ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலை எழுதிய மணோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களையும், அதைத் தமிழகமெங்கும் பாட வைத்த  கலைஞரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

தகவல் : மா.ஆவுடையப்பன்

5 மே, 2020

புத்தக வாசிப்பு

மாணவர்களின் புத்தக  வாசிப்புக்குப் புதுமுறையைக் கையாளலாமே!


புத்தக வாசிப்பில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவது என்பது அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் இடும்.

இவ்விஷயத்தில் கல்வித் துறையும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தவிர ஏதாவது நல்ல புத்தகம் ஒன்றை, மாணவர்களின் வயது, வாசிக்கும் திறன், அவர்களை ஈர்க்கக்கூடிய துறை ஆகியவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கொடுத்து வாசிக்கச் சொல்லலாம்.

 என்ன வாசித்தோம் என சிறு கட்டுரை எழுதித்தரச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண், தேர்வு என்றெல்லாம் அச்சமூட்டக் கூடாது.

முன்பெல்லாம் குடிமைப் பயிற்சி அல்லது நன்னெறி வகுப்பு என்று வாரத்துக்கு ஒன்று அமைத்ததைப் போல மாதத்துக்கு ஒன்றாகக்கூட நூல் வாசிப்புக்கு ஒதுக்கலாம்.

புத்தகத்தில் கவனிக்க வேண்டியவை குறித்தும், வாசிக்கும் விதத்தையும் பொதுவாகச் சொல்லித்தர வேண்டும். ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சித்திரக் கதைகளுடன் உள்ள புத்தகங்களைத் தரலாம்.

முதலில் பாடப்புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்களும் உள்ளன என்ற அறிமுகமே மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். வாசித்துப் பழகி ருசி ஏற்பட்டுவிட்டால் பிறகு தன்னம்பிக்கை பிறக்கும். இதனால், தாங்களாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.

பட்டிமன்றம், பேச்சுப்போட்டி என்று ஏதாவது ஒரு தலைப்பில் பேசச் சொல்வதைப் போல, ஒரு புத்தகத்தைப் பற்றி திறனாய்வு அல்லது குழு விவாதத்துக்கு ஏற்பாடுசெய்தால் நன்கு வாசித்த மாணவர்களின் பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமையும்.

ஆசிரியர்களுக்கே மாணவர்களின் கற்றல் திறனையும் விவாதிக்கும் திறனையும் இதர ஆற்றல்களையும் தொடக்கத்திலேயே அடையாளம் காணும் வாய்ப்பாக அமையும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கான எளிய அறிமுக நூல்களைக்கூட இப்படிச் சுற்றுக்குவிட்டு படிக்கவைப்பதன் மூலம் அந்தந்தப் பாடங்களில் லயிப்பைக் கூட்டவும், சந்தேகங்களைத் தெளிந்துகொள்ளவும் வழிவகுக்கலாம்.

ஆசிரியர்களே உடனிருந்து வரிக்கு வரி சொல்லித்தந்து புரியவைக்கும் முறைக்குப் பதிலாக, தாங்களே படிக்கவும், சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் கேட்டு மேற்கொண்டு தொடரவும் இந்தப் பயிற்சி உதவும். ஆசிரியர்கள் மட்டுமே தங்களுடைய பொறுப்பாகக் கருதாமல் வகுப்புத் தலைவன் போன்ற மாணவர் குழுவையும் இணைத்துக்கொண்டால் குழு இயக்கமாக மலரும்.

பாடப்புத்தக வாசிப்பைவிட பிற நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும் தானாகவே வாக்கியங்களை அமைக்கும் லாகவமும் கூடிவிடும். கற்பித்தல் என்ற கடமை ஆசிரியர்களுக்கு எளிதாகிவிடும்.

வெறும் பாடப்புத்தகம் எனும்போது தோன்றும் கடமையுணர்ச்சி, அதைத் தாண்டிய படிப்பு எனும்போது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நிரம்ப ஊட்டும். ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவர்களுடைய வழிகாட்டலில் நல்ல நூல்களைத் தாங்களாகப் படிக்கும் மாணவர்கள், நடந்து செல்லும் மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டப் பழகும்போது அடையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அடைவார்கள்!

1 மே, 2020

அம்மணி அம்மாள்

அம்மணி அம்மாள் கோபுரம்


ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.

மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.  திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருவமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

கட்டுரை தந்துதவியவர்
குரு மனோகர வேல்

29 ஏப்ரல், 2020

ஓர் இரவு

சிறுகதை

 ஓர் இரவு


*மம்சை செல்வக்குமார்

பழைய நினைவுகள் துளிர்க்க
அந்தப் படபடப்பில் வியர்க்க
தூக்கம் போய் விளிப்பு வந்தது.

ஊரெங்கும் மழை
உள்ளூரில் வெயில்
உள்ளறைவரை அனல்
பிசுபிசுத்தது உடல்.

"அப்பாவுக்கு என்னாச்சுமா
அடிக்க வர்றார்
இப்படி அவர் இருந்ததில்லையே?"

"நீ அவர்கிட்ட போகாதே"
என்னைச் சமாதானம் செய்ய
இப்படியொரு வார்த்தை
அவள் சொல்லியிருக்கக் கூடாது.

பிள்ளைகள் அம்மாவிடவும்
அப்பாவிடவும் அண்டாம இருக்க முடியுமா...

இப்பவே என்னைப் பிரித்துப் பார்த்தால் என் எதிர்காலம்...
என் மகனின் எதிர்காலம்...

"ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தால் போரடிக்குதுமா..."
மகன்தான் ஆரம்பித்தான்.

"அப்படின்னா, அய்யாமையையோ
அம்மாச்சியையோ கூப்பிட்டுக்க வேண்டியதுதான்" நான் ஆறுதலுக்காகச் சொன்னேன்.

"அப்போ எங்க அப்பாவ என்ன செய்ய...?" 
மனைவியின் கேள்வி என்னை
வேறு யோசனைக்குக் கொண்டு போனது.

"நாம இருக்கிற நிலைமையில்
யாரையாவது கூட வச்சிக்க முடியுமா..."
என் பொருளாதார நிலை விளித்துக் கொண்டது.

"என்ன செய்வது...
அப்ப இப்படியே இருக்க வேண்டியதுதான்..."
எழுந்து சமையல் கட்டுக்குள் போனாள் மனைவி.

"அப்ப அவரையும் கூப்பிடுவோம்"
அப்பப்ப கடைத்தீனி வாங்கித் தருவார்ல என்பதுபோல்
இருந்தது மகனின் பார்வை.

"அய்யாமை ஒத்தையில இருக்காங்க அவங்கமேல இரக்கம் வரலையா உனக்கு..." வார்த்தை நாக்கு வரை வந்தது, விழுங்கிக் கொண்டேன்.

சிறிது நேரம் ஏதும் பேசாம
அவரவர் வேலையில் இருந்தோம்.

"ஏம்பா இப்படிச் செய்தால் என்ன..."
மகன்தான் மறுபடியும்.

"அவங்க வரவேண்டாம்,
நாம அங்க போனால் என்ன..."
சொல்லி விட்டு ஓரக்கண்ணால் என்னை ஏறிட்டான்.

"போகலாம். ஆனால் இரண்டு மூனு நாள்ல நாம திரும்பனுமே...
அப்பா வேலைக்குப் போகனுமே..."
மனைவியின் திட்டம் புரிந்தது.

"எங்கே போனாலும் குடும்பமாய்ப் போனால் நல்லது. அதென்ன நீங்கமட்டும் தனியே போவது."

"ஆமா... நீங்க வந்திர கிந்திர போறீங்க..." மனைவியின் குத்தல் வலித்தது.

"ஆமப்பா... எப்பப் பாரு வேல வேலன்னுக்கிட்டு. என்னைக்காவது நாம சேர்ந்து ஊருக்குப் போயிருக்கோமா?"
இவனும் அடிபோடுறானே...
எண்ணம் எழுந்து கொண்டது.

"இந்தப் பேச்சை இத்தோடு விடுவோம். டேய்... நாளைக்கு உனக்கு ஸ்கூல் இருக்லே... போய் படு" என்றதும், என்னை முறைத்து விட்டுப் போனான்.

எல்லா வேலையும் முடித்து,
அவரவர் படுக்கைக்குப் போய் விழுந்தாச்சு.

மகனும் மனைவியும் உள்ளறையில் முனுமுனுக்கும் சத்தம்.

"என்ன அங்கே சத்தம்?"

"ஒன்னும் இல்லே..."
மனைவியின் குரல்.

"இப்படி வீட்டுக்குள்ளே இருப்பது போரடிக்குது அப்பா..."

"விடிந்ததும் ஸ்கூலுக்குப் போற,
முடிந்ததும் வீட்டுக்கு வர்ற...
இதுல உங்களுக்குப் போரடிக்குதோ..."

"ஸ்கூல்தான் முடிய போகுதே..."
மனைவிதான் மீண்டும் தூண்டுறா...
என்னை என்னுள் நோன்டுறா...

'ஆமா... முழுப் பரீட்சை முடிய போகுது. அதுக்குத்தான் இந்த அட்சாரம்...'
எண்ணவோட்டத்தை நிறுத்திவிட்டுச் சொன்னேன்,

"வருஷவருஷம் இரண்டு மாதம் என்னை அம்போன்னுவிட்டுப் போறீகளே, என் கஷ்டம் உங்களுக்குப் புரியாதா...
தனியாய் இருந்து, சமைத்து சாப்பிட்டு வேலைக்குப் போறதும், துணிமணிகளைத் துவைக்கிறதும் எவ்வளவு கஷ்டம் தெரியுமா..."

"அப்படித்தானே இருந்தீங்க..."

"அப்போ தனியாய் இருந்தேன்,
இப்ப கல்யாணமாகி ஒரு குடும்பமாய் இருக்கேன்ல..."

"அப்பா நீங்களும் லீவு போட்டு எங்கக் கூட வரலாமிலே..."

"எங்க வர்றது. வீட்டு வாடகை, மாதச் சாப்பாட்டுக்கு, அடுத்த வருஷ உன் ஸ்கூல் பீஸ்ஸுக்குப் பணம் யார் கொடுப்பா..." கொஞ்சம் கடுப்பாகிப் போனேன்.

"வருஷத்துக்கு ஒருக்கா ஊருக்குப் போவது உங்களுக்குப் பொறுக்காதே..."

"வருஷத்துக்கு ஒருக்காவா... புரட்டாசி மாதத் திருவிழாவுக்கு இரண்டு வாரம். ஐப்பசி மாத தீபாவளிக்கு ஒரு வாரம். அப்புறம் நல்லது கெட்டதுக்குன்னு போனதில்லே..." லேசாய்க் குரலை உயர்த்தினேன். அப்பவாவது அடங்கும் என நினைத்தேன்.

"ஆமா... போனது வந்ததுக்கெல்லாம் கணக்கு பாருங்க..." விசும்பல் சத்தம் உள்ளிருந்து வந்தது.

அவா போறதுன்னு முடிவு பன்னிட்டால், போகுறவரைக்கும் விடமாட்டாள். மகனைக் கொம்பு வீசிகிட்டே இருப்பாள்.

"சரி போறதுதான் போறீங்க, அப்படியே நம்ம ஊருக்கும் போய், எங்க அம்மா கூட ஒரு பத்து நாள் இருங்க."

"நீங்களும் கூட வர்றதா இருந்தால் அங்கே போவோம்."

"அங்கே போனா ஒரே போர்..."

"ஏலேய்... நீ இன்னும் தூங்கலையா... இந்தா வாரேன்.
அது நம்ம சொந்த ஊர்லேய். நம்ம மண்ணு. உங்க மூதாதையர் வாழ்ந்த பூமி. நாம எங்குட்டுத் திரிஞ்சாலும் நம்மள அரவணைக்கிற உறவுகள் எல்லாம் அங்கதாம்லேய் இருக்காங்க. அதுமட்டுமல்ல, உங்க அய்யாமை, என்னைய பெத்த அம்மா அங்கே தனியாய் இருக்குலேய்... உம்மேல அம்முட்டு பிரியமாய் இருப்பாங்கலேய்..."

"போங்கப்பா அது ஒரு ஊர்... அங்க யாரு போவா, இல்லமா..."

"ஆமா அந்த ஊரை அவர்தான் மெச்சுக்கனும்..." சுதியை ஏற்றினாள்.

விளம் வந்தவனாய் அவனை மிரட்ட கையை ஓங்கினேன்.

"இவரு ஒருத்தரு அடிக்க வர்றாரு. சும்மா இரும். இப்ப என்னத்த சொன்னான். அவன் சொன்னது நெசம் தானே. அங்கே ஆறு இருக்கா. உங்க அம்மா ஒருத்தகதான் இருக்காக... வேற யாரு இருக்கா கூடமாட ஓத்தாசைக்கு. போரும், போய்ப் படும். நீவேற எதுக்குல அவர்கிட்ட வாய்க் கொடுக்கே" அவனைச் செல்லமாய் ஒரு சாத்து சாத்தி, என்னை முறைத்தாள்.

சர்வமும் இத்துப் போன தேக்கு மரமாய் நான் ஆடிப்போனேன்.

அங்கே... அந்த ஊர்ல... நான் பிறந்த மண்ணுல... எங்க அம்மா மட்டுமா இருக்காக... அவுக பிறந்து வளர்ந்த வரலாறு இருக்கு... நான் தவிழ்ந்து திரிந்தோடிய வீதியிருக்கு... நான் படித்த பள்ளியிருக்கு... பள்ளிக்கால அடையாளம் இருக்கு, அதற்கொரு வரலாறு இருக்கு... என் இதயம் முழுக்கப் பரவி கிடக்கும் என் எண்ணம் யாவும் அங்கே சிதறிக் கிடக்கு... இவையெல்லாம் போக்கக் கூடியதா, போகக் கூடியதா... நினைவிழந்தவன் போல் கண்ணயர்ந்தேன், மனசு விளித்துக் கொண்டது.

14 ஏப்ரல், 2020



கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார் என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.



தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வந்தது. தை 1ஆம் தேதியையே தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2008ஆம் ஆண்டு தை 1ஆம் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு அதனை ரத்து செய்தது.

தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கலைஞர் ஏன் அறிவித்தார் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.
மறைமலை அடிகளார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேராசிரியர் கா.நமசிவாயர், இ.மு.சுப்பிரமணியனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், வ.வேம்பையனார், பேராசிரியர் தமிழண்ணல், வெங்காலூர் குணா, கதிர். தமிழ்வாணனார், சின்னப்பத்தமிழர், கி.ஆ.பெ.விசுவநாதர், திரு.வி.க., பாரதிதாசனார், கா.சுப்பிரமணியனார், ந.மு.வேங்கடசாமியார், சோமசுந்தர பாரதியார், தமிழ்ப்புலவர் குழுவினர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று எடுத்துரைத்தனர்.
மலையகத்தில் கோ.சாரங்கபாணியார், சா.சி.குறிஞ்சிக்குமரனார், அ.பு.திருமாலனார், பேராசிரியர் இர.ந. வீரப்பனார், கம்பார் கனிமொழி குப்புசாமி, மணி. வெள்ளையனார், திருமாறன், இரெ.சு.முத்தையா, இரா.திருமாவளவனார், இர.திருச்செல்வனார் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப் பிறப்பினை விடுத்து, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.
இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதற்கான விளக்கம் :
1. பிரபவ, 2. விபவ, 3. சுக்கில, 4. பிரமோதூத, 5. பிரஜோத்பத்தி, 6. ஆங்கீரஸ, 7. ஸ்ரீமுக, 8. பவ, 9. யுவ, 10. தாது, 11. ஈஸ்வர, 12. வெகுதான்ய, 13. பிரமாதி, 14. விக்கிரம, 15. விஷு, 16. சித்ரபானு, 17.சுபாணு, 18. தாரண, 19. பார்த்திப, 20. விய, 21. சர்வகித்து, 22.சர்வதாரி, 23. விரோதி, 24. விக்ருதி, 25. கர, 26. நந்தன, 27. விஜய, 28. ஜய, 29. மன்மத், 30. துர்முகி, 31. ஹேவிளம்பி, 32. விளம்பி, 33. விகாரி, 34. சார்வரி, 35. பிலவ, 36. சுபகிருது, 37. சோபகிருது, 38. குரோதி, 39. விசுவாசு, 40. பராபவ, 41. பிலவங்க, 42. கீலக, 43. செமிய, 44. சாதரண, 45. விரோதிகிருது, 46. பரிதாபி, 47. பிரமாதீச, 48. ஆனந்த, 49. ராஷஸ, 50. நள, 51. பிங்கள, 52. காளயுக்தி, 53. சித்தாத்திரி,54. ரெத்திரி, . 55. துன்பதி, 56. துந்துபி, 57. ருத்ரோகாரி, 58. ரக்தாஷி, 59. குரோதன, 60. அக்ஷய,
இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை, யாராவது சொல்ல முடியுமா?
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரமிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள்.
அதுமட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாள் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1,440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அப்படியே பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1,440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்துவ கணக்கீட்டின் படி பார்த்தால், 
1,440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக வகுத்தார்கள். ஆனால், பண்டைக்காலத் தமிழர்களோ தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
  1. இளவேனில் - (தை-மாசி)
  2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
  3. கார் - (வைகாசி - ஆனி)
  4. கூதிர் - (ஆடி - ஆவணி)
  5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
  6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)
மேற்கண்ட மாதக் கணக்கில் இளவேனில் என்பது சித்திரை - வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும், தை மாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன், தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினை கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச் செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்குத்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன்
அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆகவேண்டுமெனில், சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள். பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பதுமட்டும் அல்ல, பகுத்து அறிவது நான் பகுத்தறிவு.
(இக்கட்டுரை இணையம் வழங்கியது கலைஞர் செய்திகள்)




Righ

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...