2 ஜனவரி, 2021

எம் பைந்தமிழ் நாடு வாழிய வாழியவே

எம் பைந்தமிழ் நாடு வாழிய வாழியவே!

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு, நம் தமிழ் திரு நாடுதான். இங்கு மட்டும் நாற்பாதயிரம் கோயில்கள் உள்ளன. அவ்வளவு கோயில்கள் ஏன்? அவசியம் என்ன? 

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு.

சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள். அன்று உலகிலேயே உயர்ந்த கட்டடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்.

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. லண்டன் ஒரு சிறு மீன்பிடிக்கும் கிராமமாக 1066இல் நிறுவப்பட்டது.

தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். 

ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதேபோல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், ஜவுளி வகைகள், கைவினைப் பொருள்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.

உலகிலேயே ஒரே சீராக 80 லட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக்கொள்ள பயன்படுத்தினர்.

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.

பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன. 

ஏன் கோயில்கள் கட்டினார்கள்?

தமிழர்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம்?

தமிழகத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள், அவரவர்கள் ஆண்டபோது ஏன் மருத்துவமனை கட்டவில்லை?, கல்விச்சாலை அமைக்கவில்லை? ஆனால் கோயில்களைக் கட்டினார்கள்.

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன?

மக்களுக்குப் பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான்?

உலகின் குருவாக தமிழகம் ஆனது எப்படி ?

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆகும் செலவு என வரவு செலவை வைத்து தன்னிறைவுத் திட்டத்தை அடைய நிதிநிலை அறிக்கை போடுவார்கள்.

இதை எண்ணியேதான் தமிழக கோயில்கள் எழுப்பப்பட்டன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் என இதை வைத்துதான் சொல்லினார்கள் போலும்.

மன்னர்கள் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரைச் சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்பக் கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருள்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்குக் கொண்டு செல்லும் போக்குவரத்து, வண்ணம் தீட்டும் ஓவியக் கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாகக் கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன்மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பண்டமாற்று முறையில், தன்னிறைவு பெற்றது பொருளாதாரம். 

கோவிலுக்குக் கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதைக் கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்தக் கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருள்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்யும் மண்பானை செய்வோர், மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்குத் தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என, அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனத்திற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள். 

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம். அந்த வஸ்திரங்களைச் சுத்தம் செய்ய ஒரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், அதுவும் வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க, அதன்மூலம் வாழ்வாதாரம் பெறுகவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டிய வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்தக் கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளைபொருள்களின் விதை பொருள்கள்.

12 வருடத்திற்கு ஒருமுறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவரவருக்குத் தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்குக் கட்டமைக்கப்பட்டதே, நம் கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம். 

அந்தந்த ஊரைச் சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என, ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

இப்படி அமைக்கப்பட்டதுதான் நம் நாட்டின், வீட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு.

மாதச் சம்பளம் பணமாக, பணத்திற்குப் பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை. 

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்தத் தெய்வங்கள், அங்கே வாழ்வதாகவும், அந்தக் கோயிலின் சொத்துக்கள், அந்தத் தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

உயிருள்ள ஒருவர், எப்படித் தினமும் குளிப்பாரோ, உடை உடுத்திக் கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

நிலங்கள் கோவிலுக்குச் சொந்தம், கோவிலுக்கு வருடத்திற்கு நெல் முதல் தேங்காய் மற்றும் எண்ணை திரிநூல் கொடுத்துவிட்டு நிலத்தில் வேளாண்மை செய்துகொள்ளலாம், ஆறு கால்வாய்கள் குளம் ஏரி அணை என்பதை அரசு பார்த்துக்கொள்ளும், சோழன் வெட்டிய கால்வாய்களின் நீளம் உலகத்தின் சுற்றளவை விடப் பெரியது எனக் கூறப்படுகிறது,

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, தமிழகம் உலக குருவாக திகழ்ந்தது.

உலகமெங்கும் நிலபிரபுத்துவ பொருளாதாரமாக இருந்தபோது இங்கே கோவில் பொருளாதாரமும் குடவோலை முறையும் இருந்தது,

வாழிய எம் பைந்தமிழ் நாடு வாழிய வாழியவே. 

17 ஆகஸ்ட், 2020

கவிப்பேரரசு காலக் கவிதை

 #அந்தந்த_வயதில்


#இருபதுகளில்


எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்...

படி!

பிறகு

புத்தகங்களை எல்லாம்

உன்

பிருஷ்டங்களுக்குப்

பின்னால் எறிந்துவிட்டு

வாழ்க்கைக்கு வா...


உன் சட்டைப் பொத்தான்,

கடிகாரம்,

காதல்,

சிற்றுண்டி,

சிற்றின்பம்

எல்லாம்

விஞ்ஞானத்தின் மடியில்

விழுந்து விட்டால்,

எந்திர அறிவு கொள்!

ஏவாத ஏவுகணையினும்

அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

மனித முகங்களை

மனசுக்குள் பதிவு செய்!

சப்தங்கள் படி!

சூழ்ச்சிகள் அறி!

பூமியில் நின்று

வானத்தைப் பார்!

வானத்தில் நின்று

பூமியைப் பார்!

உன் திசையைத் தெரிவு செய்!

நுரைக்க நுரைக்க காதலி!

காதலைச் சுகி!

காதலில் அழு!

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

மணம் புரி!

பூமியில் மனிதன்

இதுவரை துய்த்த இன்பம்

கையளவுதான்...


மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கையென்பது

உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

இன்னும்... இன்னும்...

சூரியக் கதிர்கள்

விழமுடியாத ஆழத்தில்...


#முப்பதுகளில்


சுறுசுறுப்பில்

தேனீயாயிரு!

நிதானத்தில்

ஞானியாயிரு!

உறங்குதல் சுருக்கு!

உழை!

நித்தம் கலவி கொள்!

உட்கார முடியாத ஒருவன்

உன் நாற்காலியை

ஒளித்து வைத்திருப்பான்...

கைப்பற்று!


ஆயுதம் தயாரி...

பயன்படுத்தாதே.

எதிரிகளைப் பேசவிடு!

சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,

இடிபிளக்காத

ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை,

சூரியனுக்கு

நிழல் கொடுக்கும்

உயரத்தில் பரப்பு..

நிலை கொள்.


#நாற்பதுகளில்


இனிமேல்தான்

வாழ்க்கை ஆரம்பம்..

செல்வத்தில் பாதியை

அறிவில் முழுமையை

செலவழி...


எதிரிகளை ஒழி!

ஆயுதங்களை

மண்டையோடுகளில் தீட்டு!

ஒருவனைப் புதைக்க

இன்னொருவனைக்

குழிவெட்டச் சொல்!

அதில்

இருகையால் ஈட்டு..

ஒரு கையாலேனும் கொடு...

பகல் தூக்கம் போடு.

கவனம்!

இன்னொரு காதல் வரும்!

புன்னகைவரை போ...

புடவை தொடாதே.

இதுவரை இலட்சியம் தானே

உனக்கு இலக்கு!

இனிமேல்

இலட்சியத்துக்கு நீதான்

இலக்கு...


#ஐம்பதுகளில்


வாழ்க்கை, வழுக்கை

இரண்டையும் ரசி..

கொழுப்பைக் குறை..

முட்டையின் வெண்கரு

காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!

நீ மனிதனா என்று

வாழ்க்கையைக் கேள்...

இலட்சியத்தைத் தொடு

வெற்றியில் மகிழாதே!

விழா எடுக்காதே!


#அறுபதுகளில்


இதுவரை

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

இனியேனும்

வாழ்க்கையை நீ வாழ்...


விதிக்கப்பட்ட வாழ்க்கையை

விலக்கிவிடு...


மனிதர்கள் போதும்.

முயல் வளர்த்துப் பார்!

நாயோடு தூங்கு!

கிளியோடு பேசு!

மனைவிக்குப் பேன் பார்!

பழைய டைரி எடு

இப்போதாவது உண்மை எழுது..


#எழுபதுக்கு_மேல்


இந்தியாவில்

இது உபரி...

சுடுகாடுவரை

நடந்து போகச்

சக்தி இருக்கும்போதே

செத்துப்போ...

ஜன கண மண...


- கவிப்பேரரசு -

3 ஜூலை, 2020

தேவதை என் மகள்

என் மகள் மீனாட்சிக்கு ஐந்து வயதானது. என் ஒரே மகள். அவள் பிறந்தநாளுக்காக என் நண்பன் கேசவனிடன் வாங்கிய கடனில்,  
200 ரூபாய் ஃபிராக், 20 ரூபாய் கேக், 10 ரூபாய் சாக்லேட், 20 ரூபாய் பொம்மை மட்டும் வாங்க முடிந்தது.

வீட்டிற்கு வந்தபோது அவள் தோழி பொன்னியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். 

நான் வீட்டிற்குள் நுழைந்ததும்,

''ஐ... அப்பா '' என்று ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். 

அவளிடம் உடை மற்றும் பொம்மையைக் கொடுத்தேன்.

''புடிச்சிருக்கா..., மீனு'' என்றேன்.

''எனக்கு இந்தப் பொம்மை வேண்டாம்பா.''

''ஏன் வேண்டாம் மீனு. இது நல்லா  இல்லையா ''

''இதைக் கடையில திருப்பி கொடுத்துட்டு, பொன்னி போட்டிருக்காலே அதே மாதிரி  ஜல் ஜல் கொலுசு வாங்கிட்டு வாங்கப்பா. ''

''அது வேண்டாம் மீனு. கால்ல குத்தி  புண்ணு வந்துடும். இந்தப் பொம்மை அழகா இருக்கு பாரு. பாப்பா மாதிரி வச்சு விளையாடு. ''

''எனக்கு அதுதான் வேணும்'' என்று அழத் தொடங்கினாள்.

 ''நாளைக்கு வாங்கிட்டு வரேன் செல்லம். ''

'' இன்னைக்கே கொலுசு வேணும்'' என்று கத்தி அழுதாள்.

''எதுக்கு அவளைப் பிறந்தநாள் அதுவுமா அழ வச்சுட்டு இருக்கீங்க ''  மனைவியின் குரல்.

''சரிமா, வாங்கிட்டு வரேன்'' என்று வெளியே கிளம்பினேன்.

அப்போதும் என்னிடம் சரியாக 30 ரூபாய் தான் இருந்தது. 

வெள்ளிக் கொலுசின் விலை கேட்டேன், 2000 என்றார்கள். வெள்ளி அல்லாத போலி கொலுசு கூட 100 ரூபாய்க்குமேல் சொன்னார்கள்.  

கடைவீதியில் மண் உண்டியல் 30 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வீடு வந்தேன். 

மீனு தூங்கி இருந்தாள் .

விடிந்ததும் ''ஜல் ஜல் கொலுசு வேணும்பா '' என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

''நான் ஒரு மேஜிக் பொருள் வாங்கிட்டு வந்திருக்கேன். அதை வச்சு நாம என்ன வேணாலும் வாங்கலாம். தெரியுமா ?'' 

''என்ன மேஜிக் பா... ''

''இங்க பாரு உண்டியல் ''

''இதுல இருந்து கொலுசு வருமா ''

''ஆமா மீனு. இதை சாமி பக்கத்துல வச்சிடனும். தினசரி உள்ளே காசு போடணும்.  நிறைந்ததும் இதை உடைத்தால் நிறைய காசு கிடைக்கும்.  நமக்கு என்ன வேணுமோ வாங்கிக்கலாம்.''

எங்கள் கம்பெனியில் மாலை 4 மணி ஆனதும், கேசவன் டீ குடிக்கக் கூப்பிடுவான். அவன் சிகரெட் பிடித்து விட்டு டீ  குடிப்பான். நானும் டீ குடித்துவிட்டு 10 ருபாய் கொடுத்துவிடுவேன்.  

உண்டியல் வாங்கிய மறுநாள் என்னைக் கூப்பிட்டான்.

''அருண், டீ குடிக்கப் போகலாம் வா...''

'' இல்ல கேசவன். டீ குடிக்கறதை நிறுத்த போறேன். அடிக்கடி தலை சுத்தற மாதிரி இருக்கு.'' 

''சரிப்பா, விட்டுடு . அதுவும் நல்லது தான்.''

டீ குடிக்காமல் வைத்திருந்த காசை வீட்டுக்கு வந்து மீனுவின் கையால் உண்டியலில் போடச் செய்வேன். 

அந்த சில்லரைகள் 'க்ளிங்' என்ற சத்தத்துடன் விழுவதைக் கேட்டு சிரிப்பாள்.

இது தினமும் நடந்தது. நாட்கள் கடந்தன. 

கேசவன் வேறு கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். 

நான் டீ குடிக்காமல் சேமித்த காசுகள் உண்டியலில் நிறைந்தன. மீனு உண்டியலைக் குலுக்கி அந்தச் சத்தத்தைக் கேட்டு ரசிப்பாள் . 

''இந்தச் சத்தம் கூட ஜல் ஜல் கொலுசு சத்தம் மாதிரியே கேக்குதுப்பா.  பொன்னி போட்டு நடக்கற மாதிரி எனக்கும் வாங்கிக் கொடுங்கப்பா.''

''உண்டியல் நிறையட்டும் மீனு. நாம் காசை எடுத்துட்டு போய் வாங்கிக்கலாம். ''

அது தோராயமாக 2000 ரூபாய் வந்திருக்கும் என்று ஒரு நாள்  தோன்றியது.

''மீனு உண்டியலை உடைச்சு எண்ணி பாக்கலாமா.''

''ஐ... ஜாலி, ஜல் ஜல் கொலுசு வாங்கப் போறேனே... ''

உடைத்து எண்ணினேன். 2030 ருபாய் இருந்தது. 

நானும் மீனுவும் கிளம்பினோம். 2000 சில்லரையை, ஒரு மாளிகைக் கடையில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டாக மாற்றிக்கொண்டோம்.

 ''அப்பா இந்த ஒரே ஒரு பிங்க் கலர் பேப்பர் காசு கொடுத்தா, ஜல் ஜல் கொலுசு கொடுப்பங்களா...''

''ஆமாம் மீனு ''

''இதை நானே, பத்திரமா வச்சுகிறேன். கடையில் இருக்கிற அங்கிள் கிட்ட நானே கொடுக்கறேன்.''

''சரி செல்லம், பத்திரமா வச்சுக்கோ.''

தன் ஸ்கர்ட் பாக்கெட் உள்ளே வைத்துக்கொண்டாள்.

பேருந்து நிறுத்தம் சென்று காத்திருந்தோம். 

எங்களைக் கடந்து சென்ற ஆட்டோவில், தெரிந்த முகம். கேசவன்.

சிறிது தூரம் சென்ற ஆட்டோ அங்கேயே நின்றது. நான் மீனுவை அழைத்துக்கொண்டு ஆட்டோக்கு அருகில் சென்றேன்.

கேசவன் இறங்கினான்.

''கேசவா, புது வேலைக்குப் போனதும் மறந்துட்டியே. போன் பண்ணறதுக்குக் கூட நேரம் இல்ல உனக்கு. நான் ஒரு நாள் பண்ணேன். அப்பவும் எடுக்கல நீ... ''

''இல்ல அருண். போன் பண்ணனும் தான் நினைப்பேன். அந்த நேரம் வேற ஏதாவது வேலை வந்துடும். அப்புறம் பேசிக்கலாம்னு விட்டுடுவேன். மீனு குட்டி நல்லா இருக்கியா... ''

''நல்லா இருக்கேன் அங்கிள் ''

''ஆட்டோல யாரு. ஹரிணியா. எப்படி இருக்க ஹரிணி.''

''நல்லா இருக்கேன் அங்கிள் ''

''மீனு ஹரிணி அக்காக்கு ஹாய் சொல்லு.''

''ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க.''

''நான் நல்லா இருக்கேன் மீனு. நீ எப்படி இருக்க.''

''நல்லா இருக்கேன் அக்கா. ''

ஹரிணி மீனுவை விட மூன்று வயது பெரியவள்.

''அருண், ஒரு பிரச்சினை ஆயிடுச்சு. ஒரு ஆக்ஸிடெண்ட் '' 

''என்ன ஆக்சிடென்ட், யாருக்கு, என்ன ஆச்சு ''

''ஹரிணியோட வலது கால்ல ஒரு கார்காரன் ஏத்திட்டு போயிட்டான்.  ஒரு மாசம் முன்னாடி ''

கேசவன் ஹரிணியின் வலது காலை காட்டினான். முழங்கால் பகுதியில் இருந்து அவள் கால் இல்லை. 

அதிர்ச்சியாக இருந்தது.

''செக்கப் தான் போயிட்டு வர்ரோம்.  அந்தக் கால் மாதிரி அளவெடுத்து செஞ்சு ஹாஸ்பிடலியே கொடுப்பாங்களாம். கொஞ்சம் பணம் தேவைப்படுது. உன்கிட்ட இருந்தா கடனா தரமுடியுமா ?''

''கேசவா, இப்படிக் கேட்டுட்டியே. உன்கிட்ட எத்தனை முறை கடன் வாங்கி இருக்கேன். என்கிட்ட இருந்தா கொடுக்காம இருப்பேனா?''

நான் மீனுவைப் பார்த்தேன்.  மீனு என்னைப் பார்த்தாள்.

தன் ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து 2000 ரூபாயை கேசவனிடம் நீட்டினாள். 

''அங்கிள் இந்தக் காசை டாக்டர் கிட்ட கொடுத்து, ஹரிணி அக்கா கால் சரி பண்ண சொல்லுங்க அங்கிள்'' என்றாள். 

''தேங்க்ஸ் மீனு , தேங்க்ஸ் அருண்.  எவ்ளோ சீக்கிரம் முடியுமோ திருப்பி கொடுத்துடறேன்.''

''அப்புறம் பாத்துக்கலாம் கேசவா.  மெதுவா கொடு.''

அவர்கள் ஆட்டோ கிளம்பி சென்றது.

''மீனு, நீ ரொம்ப நல்ல பெண்ணாய் ஆயிட்டே... ''

''ஹரிணி அக்கா பாவம் பா...  அதான் கொடுத்தேன். உங்க கிட்ட 30 ரூபாய் இருக்குலே. அதுல மேஜிக் உண்டியல்  வாங்கி, டெய்லி காசு சேர்த்து ஜல் ஜல் கொலுசு வாங்கிக்கலாம்'' என்றாள். 

''ஓகே டா... செல்லம் ''

கடைவீதியில் மீண்டும் ஒரு மேஜிக் உண்டியல் வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

எழுதியவர் : தமிழ்ச்செல்வன்

30 ஜூன், 2020

புதுமைப்பித்தன்

புகழ்பெற்ற சிறுகதை மன்னன் என்றழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்களின் நினைவுநாள் அவரைப்பற்றிய சில குறிப்புகள் 
தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். 

உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜாமூன் காதல்’ 1933-ல் வெளிவந்தது. இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி. 

சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’

‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணி’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. 

‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில்பணம் பெற்றுக் கொள்ளாமல் எழுதினார். 

‘தினமணி’, ‘தினசரி’ பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.
எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.

சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. 

‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்’ முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை. 

திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 

19 ஜூன், 2020

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து 
50ஆம் ஆண்டு நிறைவு
(1970-2020)

அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக 'கஜவதனா கருணாகரனா', 'வாதாபி கணபதே' போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள்.

1970 மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில், "நீராருங் கடலுடுத்த' பாடலே இனிமேல் அரசு விழாக்களில் பாடவேண்டும்" என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

கலைஞர் இதை அறிவித்தவுடன் 'கலைமகள்' மாத இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் எதிர்ப்புத் தெரிவித்தார். கடவுளும், தமிழ்த்தாயும் ஒன்றல்ல என்றும், அதற்குப் பதிலாகத் தாயுமானவர் எழுதிய 'அங்கிங்கெனாதபடி' என்ற பாடலையே பாட வேண்டும் என்றார்.

பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, ம.பொ.சி., டாக்டர் மு.வரதராசன் உள்ளிட்டோர் கலைஞரின் முடிவை வரவேற்றனர். எதிர்ப்புகள் அடங்கிப் போனது.

"தேசிய கீதம் இருக்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது சரியல்ல என்றும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது" என்று சமர்குஹா என்பவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இது இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று அன்றைய துணை உள்துறை அமைச்சர் கே.ஆர்.இராமசாமி பதிலளித்தார்.

1970 ஜூன் 17, அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது. 1970 நவம்பர் 23 முதல் அமல்படுத்தப்பட்டது.

'நீராருங் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

திருநெல்வேலி இந்துக் கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரம் பிள்ளையின் 'மணோன்மனீயம்' நாடகத்தில் இடம்பெற்ற பாடலே 'நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் இந்தப் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு, டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலாவால் பாடப்பட்டு, இசைத்தட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்தப் பாடல் 50 ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலை எழுதிய மணோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களையும், அதைத் தமிழகமெங்கும் பாட வைத்த  கலைஞரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

தகவல் : மா.ஆவுடையப்பன்

5 மே, 2020

புத்தக வாசிப்பு

மாணவர்களின் புத்தக  வாசிப்புக்குப் புதுமுறையைக் கையாளலாமே!


புத்தக வாசிப்பில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவது என்பது அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் இடும்.

இவ்விஷயத்தில் கல்வித் துறையும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தவிர ஏதாவது நல்ல புத்தகம் ஒன்றை, மாணவர்களின் வயது, வாசிக்கும் திறன், அவர்களை ஈர்க்கக்கூடிய துறை ஆகியவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கொடுத்து வாசிக்கச் சொல்லலாம்.

 என்ன வாசித்தோம் என சிறு கட்டுரை எழுதித்தரச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண், தேர்வு என்றெல்லாம் அச்சமூட்டக் கூடாது.

முன்பெல்லாம் குடிமைப் பயிற்சி அல்லது நன்னெறி வகுப்பு என்று வாரத்துக்கு ஒன்று அமைத்ததைப் போல மாதத்துக்கு ஒன்றாகக்கூட நூல் வாசிப்புக்கு ஒதுக்கலாம்.

புத்தகத்தில் கவனிக்க வேண்டியவை குறித்தும், வாசிக்கும் விதத்தையும் பொதுவாகச் சொல்லித்தர வேண்டும். ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சித்திரக் கதைகளுடன் உள்ள புத்தகங்களைத் தரலாம்.

முதலில் பாடப்புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்களும் உள்ளன என்ற அறிமுகமே மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். வாசித்துப் பழகி ருசி ஏற்பட்டுவிட்டால் பிறகு தன்னம்பிக்கை பிறக்கும். இதனால், தாங்களாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.

பட்டிமன்றம், பேச்சுப்போட்டி என்று ஏதாவது ஒரு தலைப்பில் பேசச் சொல்வதைப் போல, ஒரு புத்தகத்தைப் பற்றி திறனாய்வு அல்லது குழு விவாதத்துக்கு ஏற்பாடுசெய்தால் நன்கு வாசித்த மாணவர்களின் பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமையும்.

ஆசிரியர்களுக்கே மாணவர்களின் கற்றல் திறனையும் விவாதிக்கும் திறனையும் இதர ஆற்றல்களையும் தொடக்கத்திலேயே அடையாளம் காணும் வாய்ப்பாக அமையும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கான எளிய அறிமுக நூல்களைக்கூட இப்படிச் சுற்றுக்குவிட்டு படிக்கவைப்பதன் மூலம் அந்தந்தப் பாடங்களில் லயிப்பைக் கூட்டவும், சந்தேகங்களைத் தெளிந்துகொள்ளவும் வழிவகுக்கலாம்.

ஆசிரியர்களே உடனிருந்து வரிக்கு வரி சொல்லித்தந்து புரியவைக்கும் முறைக்குப் பதிலாக, தாங்களே படிக்கவும், சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் கேட்டு மேற்கொண்டு தொடரவும் இந்தப் பயிற்சி உதவும். ஆசிரியர்கள் மட்டுமே தங்களுடைய பொறுப்பாகக் கருதாமல் வகுப்புத் தலைவன் போன்ற மாணவர் குழுவையும் இணைத்துக்கொண்டால் குழு இயக்கமாக மலரும்.

பாடப்புத்தக வாசிப்பைவிட பிற நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும் தானாகவே வாக்கியங்களை அமைக்கும் லாகவமும் கூடிவிடும். கற்பித்தல் என்ற கடமை ஆசிரியர்களுக்கு எளிதாகிவிடும்.

வெறும் பாடப்புத்தகம் எனும்போது தோன்றும் கடமையுணர்ச்சி, அதைத் தாண்டிய படிப்பு எனும்போது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நிரம்ப ஊட்டும். ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவர்களுடைய வழிகாட்டலில் நல்ல நூல்களைத் தாங்களாகப் படிக்கும் மாணவர்கள், நடந்து செல்லும் மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டப் பழகும்போது அடையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அடைவார்கள்!

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...