மரணம் வேரெங்கும் இல்லை
இருக்கும்போது இல்லாத வலி
இறந்தபோது வரும்!
இருந்தபோது வராதவர்கள் எல்லாம்
இறந்தபோது வருவார்கள்!
இறந்தவர் வீட்டிற்குப் போனால்
எல்லாமும் உயிர்ப்பித்திருக்கும்!
அதுவரை அவலமாய்த் தெரிந்தவர்கூட
அன்று அழகாய்த் தெரிவார்!
அவரைப் பற்றித் தெரியாதவையெல்லாம்
அங்கே அரட்டப் படும்!
அதுவரை நடந்த நிகழ்வெல்லாம்
அன்றொருநாள் கண்ணீரோடு கரையும்!
இப்பூவுலகில்....
முதல் இறப்பு ஆணாக இருக்கட்டும்;
பெண்களின் சாவை
ஆண்களால் சகித்துக்கொள்ள முடியாது!
மனைவி இறந்தால்,
கணவன் நடைப்பிணம்!
மனைவி இருக்கும்போதே
கணவன் இறந்தால்
மனைவி அன்றே பிணம்!
அத்தனை ஆண்டுகால வாழ்வை
அன்றைய பொழுதோடு அளவிட முடியாது!
அப்பா இறந்தால் மகள் அழுவதில்லை;
அம்மா இறந்தால் மகன் அழுவதில்லை;
ஆனால், அவர்கள் வாழும்போது அழுதிருப்பார்கள்!
இறப்பும் பிறப்பும் ஒரு கொடுப்பினை வேண்டும்
அது சிலபேருக்குத்தான் அமையும்!
சிலருக்குப் பெயரன், கொள்ளுபெயரன் இருக்கும்
சிலர் அதற்கு ஏங்கியே உயிர் விடுவர்!
இறந்தும் வாழ்பவர்கள் மத்தியில்
வாழும்போதே இறக்கும் சிலருக்கு
ஏதேனும் ஒரு மரணம் உணர்த்தும்!
மரணம் வேரெங்கும் இல்லை
மனிதர்களோடுதான் அது பயணிக்கிறது...!
மம்சை செல்வகுமார்