16 நவம்பர், 2018





Advertisement

நகைச்சுவையும், பக்தி சுவையும் வாரி வாரி தந்த வாரியார்! இன்று வாரியார் பிறந்த நாள்



நகைச்சுவையையும், உருக்கும் பக்திச் சுவையையும் தமிழ் உலகிற்கு வாரி வாரித் தந்தவர் வாரியார்.

“அன்பாய் அரும்பி, தமிழாய் மலர்ந்து, இசையாய் மணம் வீசி, அறமாய்க் காய்த்து, அருளாய்க் கனிந்தவர் - பாமரன் உள்ளத்தில் பரமனைப் பதித்தவர்
ஆன்மிகப் பெருவீட்டின் பூட்டைத் தமிழ்ச் சாவியால் எளியவர்களுக்கும் திறந்து காட்டியவர்; - பக்திச் சுவை ஊட்டியவர் -நகைச்சுவையால் உள்ளத்தைத் தொட்டவர். - அதில் உயர்கருத்தை நட்டவர். -தமிழே முருகன், முருகனே தமிழ் என்று கேட்பவரை உருக வைத்தவர் -திருமுருக கிருபானந்த வாரியார்” என்பது குமரி அனந்தன், வாரியார் சுவாமிகளைக் குறித்துக் தீட்டியிருக்கும் அழகிய சொல்லோவியம்.காங்கேயநல்லூரில் 1906 ஆகஸ்ட் 25- ல் பிறந்தவர் வாரியார். அவர்

'சம்பந்தரைப் போல் தவழ்ந்தபடி, சுந்தரரைப் போல் நின்றபடி, மணிவாசகரைப் போல் இருந்தபடி, அப்பரைப் போல் தள்ளாடியபடி எண்பத்தேழரை ஆண்டுகள் இம் மண்ணுலகில் நல்ல வண்ணம் வாழ்ந்து காட்டியவர்; நாட்டு மக்கள் நலமுடன் வாழ வழிகாட்டியவர். அவரது பேச்சு, எழுத்து, வாழ்வு என்னும் மூன்றையும் இறுதி மூச்சு வரை ஆட்கொண்டிருந்த சுவைகள் இரண்டு. ஒன்று, பக்திச் சுவை; மற்றொன்று, நகைச்சுவை.என்ன வரும்; வராது ஒருமுறை மைசூர் மகாராஜா, “நீங்கள் முருகனுக்கு அதாரிடி என்று கேள்விப்-பட்டேன். முருகனை வணங்கினால் என்ன வரும்?” என்று வாரியாரிடம் கேட்டார். வாரியார், “என்ன வரும் என்பதைப் பிறகு சொல்வேன். என்ன என்ன வராது என்பதை முதலில் சொல்வேன்” என்றார். இப்படிச் சொன்ன உடன், மகாராஜா சிரித்துவிட்டாராம். “முருகனை வணங்கினால் வறுமை வராது, கால பாசம் வராது. இந்த இரண்டிற்குப் பதிலாகச் செல்வம் வரும், ஞானம் வரும். நோயும் துன்பமும் முருகனடியாரை நெருங்க மாட்டா” என்று வாரியார் கூறினார்.


மணிவிழா :


1966-ல் வாரியாருக்கு பெரிய அளவில் மணிவிழா நடத்த வேண்டும் என்று அவரது அன்பர்கள் திட்டமிட்டனர். ஆனால் அவர் விரும்பவில்லை. தனக்கே உரிய நகைச்சுவைப் பாணியில் சொன்ன காரணம்: “சிலர் மணிவிழா என்று 'மணி' திரட்டும் விழாவாகச் செய்து கொள்வார்கள். நான் அதை எள்ளளவும் விரும்ப-வில்லை.”சிலர் சிரிக்கவே மாட்டார்கள். சிரித்தால் தம்முடைய பெருமை குறைந்துவிடும் என்று எண்ணி வாழைப் பூவைப் போல் 'உம்' என்று முகத்தை வைத்துக் கொண்டிருப்பார்கள். அவர்களைக் கண்டு பரிதாபப்பட வேண்டும் என்பது வாரியார் கருத்து.குடவாசல் சிவாலயத்தில் குடமுழுக்கு நடந்தது. அவ்விழாவில் வாரியார் கலந்து கொண்டு 'மீனாட்சியம்மை திருமணம்' என்னும் தலைப்பில் விரிவுரை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.இடையிடையே சில நகைச்சுவை இடம்பெற்ற பொழுது பலரும் விழுந்து விழுந்து சிரித்தனர். ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை. இடையில் வாரியார் சுவாமிகளின் உரையில் ஓர் ஆச்சரியமான நகைச்சுவை வந்தது. எல்லோரும் கொல்லென்று சிரித்தார்கள். இடையில் சிரிக்காமல் இருந்த அந்த அன்பர் சிரிப்பை அடக்க முடியாமல் குபீரென்று சிரித்து விட்டார். வந்தது ஆபத்து. என்ன ஆபத்து என்று கேட்கின்றீர்களா? அவர் வாயில் புகையிலையை மென்று எச்சிலை அடக்கிக் கொண்டிருந்தார். அந்தப் தாம்பூல எச்சில் அருகில் இருந்தவரின் வெள்ளைச் சட்டை, சிவப்புக் கலர் தோய்த்தது போன்ற ஒரு காட்சியை உண்டாக்கியது. சிரிக்காதவர் சிரித்ததனால் இந்தத் தீமை ஏற்பட்டது என இந்நிகழ்வையும் தமது பேச்சுத் திறத்தால் சிரிப்புக்கு உள்ளாக்கினார் வாரியார். 'சிரிப்பால் விளைந்த தீமை' என அவர் இதைச் சுவையாகக் குறிப்பிட்டார்.


புத்திசாலி கணவன் :


புத்திசாலிக் கணவனுக்கும் முட்டாள் கணவனுக்கும் உள்ள வேறுபாடு என்ன தெரியுமா? இதோ, வாரியார் கூறுகிறார், 'வாயை மூடு!' என்று முட்டாள், தன் மனைவியைத் திட்டுகிறான். 'நீ அமைதியாக இருக்கும்போது எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா?' என்கிறான் புத்திசாலி. அறிவார்ந்த நகைச்சுவை என்பது இதுதான்!வாரியார் சுவாமிகளைப் பற்றி ரத்தினச் சுருக்கமாக ஒரே வரியில் மதிப்பிட வேண்டும் என்றால், இப்படிச் சொல்லலாம்: அவர் சொல்லின் செல்வர், சமயோசிதப் பேச்சில் வல்லவர். ஒருமுறை அவருடைய சொற்பொழிவு நடந்த பொழுது சில பேர் இடையில் எழுந்து வெளியே சென்றனர். அப்பொழுது வாரியார் , 'சொல்லின் செல்வன்' என்று அனுமனைக் குறிப்பிடுகிறார்கள். இங்கேயும் சில 'சொல்லின் செல்வர்கள்' இருக்கிறார்கள். நான் நல்ல விஷயங்களைச் சொல்லின், அதைக் கேட்காமல் செல்வதைத் தான் சொல்கிறேன்” என்று பேச்சின் இடையே அவர்களை மென்மையாக அங்கதச் சுவையுடன் சாடினார். அதற்குப் பிறகு யாரும் அந்த இடத்தை விட்டு அகலவில்லை.


வள்ளி வந்தது எப்படி :


முருகப் பெருமானின் துணைவி வள்ளி நாயகிக்கு அந்தப் பெயர் வந்ததற்கு வாரியார் புதுமையான ஒரு விளக்கத்தினைத் தருவார்:
“முருகப் பெருமானின் மனைவியை 'வள்ளி' என்று ஏன் அழைக்கிறோம்? முருகன் நாம் கேட்டதை எல்லாம் தரும் 'வள்ளல்'. வள்ளல் என்பது ஆண்பால், அதன் பெண்பால் வள்ளி. ஆக, வள்ளலின் மனைவி 'வள்ளி' ஆனார்!வாரியார் நகைச்சுவைத் திறனைப் பறைசாற்றும் ஓர் எடுத்துக்காட்டு“கள்ளைக் குடித்தால் தான் போதை தரும் என்பது இல்லை. 'கள்' என்று சொன்னாலே போதும். பலர் மயங்கி விடுகிறார்கள். ஒருவரை 'நீ' என்று சொல்லுவதற்குப் பதில் 'நீங்கள்' என்று சொல்லிப் பாருங்கள். அவர் எளிதில் மயங்கி விடுவார். எல்லாம் அந்தக் 'கள்' செய்யும் வேலைதான்.”இதே போல், 'இல்லாள்' என்ற சொல்லுக்கு வாரியார் தரும் விளக்கமும் சுவையானது. 'இல்லாள்' இல்லத்தை ஆள்பவள். பெண்பாலாகத் தான் குறிப்பிடுகின்றோம். அதையே ஆண்பாலாகச் சொல்ல முடியுமா? அப்படிச் சொன்னால் 'இல்லான்' - 'பாப்பர்' என்று ஆகிவிடும். ஆகவே தான் பிச்சைக்காரன்கூட 'அய்யா, பிச்சை' என்று சொல்ல மாட்டான்; 'அம்மா, பிச்சை' என்று தான் சொல்லுவான். அந்தப் பிச்சைக்காரனுக்குக் கூடத் தெரியும், அய்யா பேரில் வீட்டு மனை இருக்காது என்று! எல்லாமே அம்மா பேரில் தான் இருக்கும். ஆகவே இல்லாள் உயர்ந்தவள் ஆகிறாள்!”


கரூருக்கு வருவாரா?


கரூரில் வாரியார் ஆற்றிய தொடர் சொற்பொழிவு முடிவடையும் நாள். பாராட்டிப் பேசியவர் ஒருவர், 'மீண்டும் வாரியார் பேச்சை எப்பொழுது கேட்போமோ…?' என்ற ஏக்கத்தோடு, 'மீண்டும் கரூருக்கு எப்போது வருவீர்கள் சுவாமி?' என்று ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு வாரியார், “கரூருக்கா? கரூருக்கு (கருவூருக்கு) மீண்டும் வரக்கூடாது என்பதற்காகத் தானே இத்தனை ஆண்டுகள் இறைவனை வேண்டிப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். என்னை மீண்டும் கரூருக்கு வாருங்கள் என்று சொல்கிறீர்களே…?” என்றாரே பார்க்கலாம். அரங்கம் கர ஒலியால் அதிர்ந்தது!வாரியார் மனைவி அமிர்தலட்சுமி காலமானார். மற்றவர்கள் கலங்கினர். அவர் இயல்பாக இருந்தார். “அவளுக்கு உரிய ஸ்டேஷன் வந்தது. இறங்கி விட்டாள். அடுத்த ஸ்டேஷனில் இறங்க நாமும் ஆயத்தமாக இருப்போம்'' என்றார். யாரால் இப்படிக் கூற முடியும்? வாழ்வில் இடுக்கண் வந்து தாக்கும் வேளையிலும் எவரால் இவ்வாறு நகைச்சுவை உணர்வுடன் பேச முடியும்?
-முனைவர் இரா.மோகன்,
எழுத்தாளர், பேச்சாளர்.
94434 58286.



Advertisement

 வாசகர் கருத்து (14)

    Advertisement

     Facebook Messenger    

    கேடு வெட்கக்கேடு

    த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...