4 ஜூன், 2017

வளைகாப்பு" சடங்கும் அதன் முக்கியத்துவமும்

”வளைகாப்பு” என்ற சடங்கு முக்கியமாக முதல் முறையாகக் கருவுற்ற பெண்களுக்கு அவரின் கணவர், பெற்றோர் உறவினர்களால் செய்யப்பெறும் ஓர் சமயச் சடங்காகும். அனேகமாக கருவுற்ற பெண்களுக்கு 5 ஆம் மாதம் 7ஆம் மாதம் 9 ஆம் மாதம் ஆகிய காலங்களில் ஏதாவது ஒன்றில் வளைகாப்பு என்ற சடங்கு நிகழ்த்தப் பெறுகின்றது.

நம் இந்து தர்மத்தில் எந்த ஒரு சடங்கும் சம்பிரதாயங்களும் பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உளப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென ஒருங்கே எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம் என்னும் இச் சடங்காகும்.

கருவுற்றிருக்கும் இளம் பெண்கள் பிரசவ காலம் நெருங்க நெருங்க பிரசவ நிகழ்வின் பயத்தினால் உளத் தென்பை இழந்து விடுகின்றார்கள். அதனால் அவர்களை அனுபவம் மிக்க தாயார், சகோதரிகள், மாமி, மச்சாள்மார், உற்றார் உறவினர் தங்கள் அனுபவங்களை அவர்களுக்கு கூறி தேற்றுகின்றனர். இருந்தும் ஒரு மனப்பயம் அவர்களுக்குள் இருக்கத்தான் செய்கின்றது. அதனால் இறை நம்பிக்கை கொண்டவர்கள் சமயசடங்குகள் செய்வதன் மூலம் அவர்களை மேலும் தேற்றி மகிழ்விக்கின்றனர்.

ஒரு குழந்தையின் குணாதிசயம் மற்றும் வளர்ச்சிக்கு இந்த மூன்றாவது trimester இல் தாய் வாழும் சூழல், தாயின் மன நிலை, தாயின் உடல் நலம் போன்றவை முக்கிய பங்காற்றுகிறது. தாயாவவள் பயந்த சுபாவத்துடன் கர்ப்பகாலத்தில் இருந்தால் பிள்ளையும் பயந்தங்கொள்ளியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை. அதனால்தான் கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்களை மகிழ்வோடு வாழ வைப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றார்கள்.

பொதுவாக கர்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து 7 முதல் 9 மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் ஒரு சிசு தாயின் கர்ப்பப்பையினுள் உள்ள நீரில் (குளத்தில்) கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை, வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது. உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்குவது அந்த மாதத்தில் இருந்து தான். எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் சிசுவுக்கு (குழந்தை) நன்றாக கேட்க துவங்குகிறது.

அது போல ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம். உன் நல்வரவை எதிர்பார்த்து உனக்காகவே காத்திருக்கும் உனது உறவுகள் நாங்கள் இருக்கிறோம் என்று குழந்தைக்கு உறுதி கூறும் சடங்கு தான் வளைகாப்பு என்றும் கூறலாம்.

தாயின் கையில் அணியப்பெற்ற கண்ணாடி வளையல்களின் ஒலி குழந்தையின் நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியை தூண்டுவதாக அமைகிறது. மேலும் அது குழந்தைக்கு பாதுகாப்பான உணர்வையும் நல்ல மனநிலையையும் தரும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது.

நமது நவீனத்துவ ஆராய்ச்சிகளின்படி, கருவில் இருக்கும் சிசு, 20 வாரங்களுக்கு பின்பு ஒலியை கேட்கும் திறனை பெற்றுவிடுகின்றன என உறுதிப்படுத்துகின்றன

சில குடும்பங்களில் இவ் சடங்கை வேதியரை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை செய்து "பும்சுவன சீமந்தம்" என்றும் நடத்துகின்றார்கள்.

பொதுவாகா சடங்கு (ritual) என்பது, சமயம் அல்லது மரபு வழியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட சில செயல்முறைகளின் தொகுப்பாகும். இச் சடங்க்குகள் குறியீட்டுத் தன்மைகளைக் கொண்டதான இச் செயல்பாடுகள், மனிதரின் அல்லது சமூகத்தின் பயன் கருதிச் நிகழ்த்தப் பெறுகின்றன.

இந்து மத ஆகமங்களிலும், புராணங்களிலும் மனிதர் செய்ய வேண்டியதாக 41 வகை சடங்குகள் சொல்லப்பட்டுள்ளது. இவற்றில் பல சடங்குகள் அவர்களது குழந்தைப் பருவத்திலும், வாலிபப் பருவத்திலும் அவர்களின் பெற்றோரால் செய்யப்பெற்று விடுகின்றன.

தற்காலத்தில் பெரும்பாலானவர்கள் மாப்பிள்ளை வீட்டில் வளைகாப்பு நடத்தி தாய் வீட்டுக்கு அழைத்து வருகிறார்கள். ஆனால், அக்காலத்தில் தாய் வீட்டுக்கு பெண்ணை வரவழைத்து அங்கு வைத்தே வளைகாப்பு நடக்கும். அப்போது பெண்ணின் தாய் மகளுக்கு, லட்சுமியை பற்றிய பாடல்களைப் பாடிக் கொண்டே நெற்றி வகிட்டில் முள்ளம்பன்றியின் முள்ளால் லேசாக கீறி குங்குமம் வைப்பார்.

முள்ளம்பன்றியின் முள்ளால் கீறுவது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நன்மையைத் தரும். "வகிடு" என்ற சொல்லின் சமஸ்கிருதப் பெயரே ஸீமந்தம். பெண்களின் வகிட்டில் லட்சுமி குடியிருக்கிறாள். நெற்றியில் பொட்டிட்டால் அவள் சந்தோஷமடைவாள். அப்பெண்ணுக்கு பிறக்கும் குழந்தை செல்வ வளத்துடன் வாழும் என்ற நம்பிக்கையினால் ஸீமந்தம் நடத்துகிறார்கள்.

யாப்பாணத் தமிழர்கள் பின்பற்றும் வளைகாப்பு சடங்கு முறை.
7 அல்லது 9 வது மாதத்தில் நல்ல ஒரு முகூர்த்த நாளில் கருவுற்ற பெண்ணை தோயவாத்து, புதுமணப் பெண்போல் அலங்கரித்து; உற்றார், உறவினர், சுற்றத்தார், நண்பர்கள் புடைசூழ நிறைகுடம், பழங்கள், பூக்கள், சந்தனக் குழம்பு, குங்குமம், கண்ணாடி வளையல்கள், அறுகரிசி, பன்னீர், பல வகை இனிப்புப் பண்டங்கள் பரப்பி வைக்கப்பட்ட மேடைக்கு கணவன் கர்பிணி மனைவியை அழைத்து வந்து சிம்மாசனம்போல் அலங்க்கரிக்கப் பெற்ற கதிரையில் அமரச்செய்வார்.

அதன் பின்னர் கருவுற்ற பெண்ணின் தாய் மாமன் தேங்காய் உடைக்க; கணவர் மலர்மாலை அணிவித்து கௌரவிப்பார். அதனைத் தொடர்ந்து நெற்றியில் குங்கு பொட்டு வைத்து, சந்தணக் குழம்பை இரு கன்னங்களிலும், கைகளிலும் பூசுவார். அத்துடன் வளையல்களை இரு கைகளிலும் அணிவிப்பார். அதனைத் தொடர்ந்து பன்னீர் தெளித்து அறுகரிசி இட்டு மனைவியையும் குழந்தையையும் வாழ்த்தி ஆசீர்வதிப்பார்,

அதற்கு அடுத்ததாக கருவுற்ற பெண்ணின் தாயார் அங்கு வைக்கபெற்றிருக்கும் இனிப்புப் பண்டங்களை ஒவ்வொன்றாக எடுத்து மகளுக்கு ஊட்டி, காப்புகள் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி போட்டு ஆசீர்வதிப்பார். அதுபோல் அங்கு வருகை தந்திருக்கும், பெரியோர்களும், உறவினர்களும் சந்தனம் பூசி, வளையல்கள் அணிவித்து, பன்னீர் தெளித்து, அறுகரிசி போட்டு வாழ்த்துக்கள் கூறி ஆசீர்வதிப்பார்கள்.

இறுதியாக "திருஷ்டி" கழிவதற்காக ஆரார்த்தி எடுப்பார்கள். வருகை தந்து, ஆசீர்வதித்து சிறப்பித்தோருக்கு தெட்சணையாக, தத்தமது வசதிக்கேற்ப, மஞ்சள், குங்குமம், புடைவைகளை வழங்கி மகிழ்விப்பார்கள். வேறு சிலர் மஞ்சள் குங்குமத்துடன் பழங்களும் சிறிய தொகைப் பணமும் தெட்சனையாக வழங்கி மகிழ்விப்பார்கள். இதன் போது வருகை தந்தவர்களும் கர்பிணி பெண்ணுக்கு அல்லது பிறக்கப்போகும் குழந்தைக்கு பாவிக்கக் கூடிய பொருட்களை பரிசில்களாக வழங்க்கியும் மகிழ்விப்பர்.

வளைகாப்பில் எல்லோரும் குழந்தையையும் தாயையும் வாழ்த்துவதால் அந்த பெண்ணுக்குள் இருக்கும் பிரசவ பயம் நீங்கி அல்லது குறைந்து மிகவும் சந்தோசமும், மனத்தைரியமும் ஏற்படுவதுடன் எல்லோரினதும் ஆசீர்வாதங்களும் வாழ்த்துக்களும், இறையருளும் கருவாக இருக்கும் சிசுவுக்கும், தாயாருக்கும் கிடைக்கப் பெறுவதனால் நல்வாழாவு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...