சென்னை: என்றும் வாழும் நகரம்!
Published : 26 Aug 2017 10:36 IST
Updated : 26 Aug 2017 10:36 IST
க
ல்வி, அரசியல், கலை, இலக்கியம், அறிவியல், பொருளாதாரம், சமூக நீதி, நிர்வாகம், சட்டம், சினிமா, பத்திரிகை வெளியீடு என்று பலவற்றில் இந்தியாவின் முன்னணி நகரமாக சென்னை இருந்துவருகிறது. அது மண்ணின், மக்களின் பங்களிப்பு. எனவேதான், ‘சென்னப்பட்டணம்’ நூலை எழுதியிருக்கும் ராமச்சந்திர வைத்தியநாத் 650 பக்கங்களில் அதன் நீண்ட வரலாற்றை, பன்முகக் கலாச்சாரத்தைக் குறிப்பிட்டு ‘இந்தப் பட்டணம் எங்களுடையது’ என்று ஒவ்வொருவருடைய கையையும் உயர்த்தி பெருமை கொள்ளச் சொல்கிறார்.
சென்னப்பட்டணம் என்று பெயர் பெற்றிருக்கும் பெரும் நிலம் பண்டைய தமிழ் மரபில் நெய்தல் நிலம். அதாவது கடலும் கடல் சார்ந்ததுமான நிலப்பரப்பு. பல நூற்றாண்டுகளாகச் சென்னப்பட்டணம் வாழும் நகரமாக இருக்கிறது. திருவொற்றியூர், எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், திருவான்மியூர், ராயபுரம் எல்லாம் சென்னப்பட்டணத்தை மிளிர வைத்துக்கொண்டு இருக்கின்றன. ஏசுநாதரின் சீடர் புனித தாமஸ் கடல் வழியாக வந்து மயிலாப்பூரில் கரையிறங்கினார் என்பது வரலாறு.
ராமச்சந்திர வைத்தியநாத் சென்னப்பட்டணம் என்ற நகரத்தையே பழமையின் தொடர்ச்சியாகக் கொண்டு பல ஊர்களை ஒன்றாக இணைத்து, மக்களை முன்நிறுத்தி, இழையறாமல் சொல்கிறார். 15-ம் நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கடல்வழியை கண்டுபிடிக்க, வாஸ்கோட காமா, போர்ச்சுகல் நாட்டிலிருந்து புறப்பட்டு கொச்சியில் வந்து இறங்கினார். அது, பல நூற்றாண்டுகளாக அடைபட்டிருந்த கடல் வழியை ஐரோப்பியர்களுக்குத் திறந்துவிட்டது. அதனால் ஐரோப்பிய வணிகர்கள் பலரும் கோவா, சென்னை, கொச்சி போன்ற துறைமுகப் பட்டணங்களில் இறங்கி நறுமணப் பொருட்கள், நவரத்தினக் கற்கள், மஸ்லின், இண்டிகோ புளு துணி வகைகள் வாங்கிச் சென்றார்கள். அவர்களோடு கிறிஸ்துவப் பாதிரியார்களும் வந்தார்கள்.
ஆங்கிலேயர்கள், டச்சு, பிரெஞ்சு வணிகர்களோடு யூத, அர்மீனிய வர்த்தகர்களும் சென்னப்பட்டணம் வந்து வணிகம் புரிந்தார்கள். வணிகர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் மொழிபெயர்ப்பாளர்களாக துபாஷிகள் உருவானார்கள்.
சென்னப்பட்டணம் பன்மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள், பல்வகை உடைகள், உணவுப் பழக்கங்கள் கொண்ட புதிய நகரமாக மாறியது. அது, மதராஸ் ராஜஸ்தானியின் தலைநகரமாக இருந்தது. எனவே, பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், பல்கலைக்கழகம் கொண்டதாகியது. தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் பொதுக் கல்வி, மருத்துவம், எஞ்சினியரிங், சட்டம் படிக்க இளைஞர்கள் வந்தார்கள். வங்கிகள், ஓட்டல்கள் ஏற்படுத்தப்பட்டன. ரயில் ஓடியது. ஜட்கா என்று சொல்லப்படும் குதிரை வண்டி மக்களின் பொது வாகனமாக இருந்தது. பின்னர் ட்ராம், பஸ் வந்தன.
மும்பையிலிருந்து பார்சிகள் சென்னப் பட்டணம் வந்து நாடகங்கள் போட்டார்கள். மார்வாடிகள், குஜராத்திகள் வட்டிக் கடைகள் திறந்தார்கள். ஜவுளிக் கடைகள், காய்கறிக் கடைகள், ‘ஈவ்னிங் பஜார்’ என்று பலவிதமான கடைகள் புதிது புதிதாக ஆரம்பிக்கப்பட்டன. படித்தவர்களுக்கு சென்னப்பட்டணத்தில் வேலை இருந்ததுபோல கைவினைஞர்களுக்கும் வேலைகள் இருந்தன. இதனால் அனைத்துவிதமான தொழில்களும் செய்வோர் சென்னப் பட்டணத்துக்கு வந்தார்கள். சென்னப் பட்டணம் பணம் புரளும் நகரமாக மாறியது. மக்களுக்குப் பொழுதுபோக்கு தேவைப்பட்டது. புதிதாகக் கோயில்கள் கட்டிக்கொண்டு ஆன்மிகப் புத்தகங்கள், பஞ்சாங்கங்கள் வாங்கிப் படிக்க ஆரம்பித்தார்கள்.
தென்னிந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சங்கீத வித்வான்கள், நடனம் ஆடும் தேவதாசிகள், புரோகிதர்கள், ஓவியர்கள், பொற்கொல்லர்கள் என்று பலரும் சென்னப் பட்டணம் வந்தார்கள். அவர்களில் சிலர் பெயரும் புகழும் பெற்றார்கள். சினிமா வந்ததும் உச்சத்துக்கே சென்றுவிட்டார்கள்.
சென்னப் பட்டணம், படித்தவர்கள், கலைஞர்களைத்தான் வாழவைத்தது என்பது இல்லை. தாது வருஷப் பஞ்ச காலத்தில் பசியாற்றிக்கொண்டு வாழ ஏராளமானவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களுக்கு அரசு கஞ்சித் தொட்டி வைத்துக் காப்பாற்றியது. வேலை கொடுக்க பக்கிங்ஹாம் கால்வாய் வெட்டி, நகரத்தில் நீர்வழிப் போக்குவரத்தை ஆங்கிலேய அரசு உண்டாக்கியது.
சென்னப் பட்டணம் ஆங்கிலேயர்கள் காலத்தில் நவீனமாக உருவாக்கப்பட்டது. எனவே, அதில் அவர்களின் மொழி, பண்பாடு, உணவு, பொழுதுபோக்கு, சட்டம், நிர்வாகம் எல்லாம் செயற்பாட்டில் இருந்தன. நகரம் என்பது தொழிலால் வளர்ச்சி அடையக்கூடியது. இங்கிலாந்தில் ஏற்பட்ட தொழில் புரட்சியின் விளைவாகச் சென்னப் பட்டணத்தில் பின்னி நூற்பாலை உட்பட சில தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டன. தொழிற்சாலைகள் ஏற்பட்டதும், தொழிலாளர்கள் நலன் காக்கத் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. இதில் சென்னப் பட்டணம் இந்தியாவிலே முதலாவதாக இருக்கிறது.
இந்திய தேசிய காங்கிரஸைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற சென்னப் பட்டணம், சமூக நீதியிலும் பிற்படுத்தப்பட்டோர் நலன் என்பதிலும் தன் பங்களிப்பை ஆற்றியுள்ளது என்பது பற்றி ராமச்சந்திர வைத்தியநாத் சொல்லியிருக்கிறார். புகைப்படங்கள் பட்டணத்தை நன்கு ஆவணப்படுத்துகின்றன.
சென்னப் பட்டணம் கவர்ச்சி மிகுந்த, முன்னேற்றம் அடைந்துவரும் நகரம். அது, ஆறுகளும் கடலும் கொண்டது. பல்வேறு இன, மொழி, கலாச்சார மக்களின் பங்களிப்பால் வாழும் நகரமாக இருந்துவருகிறது என்பதுதான் இந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்ட அம்சமாகவும் சொல்லப்படாத அம்சமாகவும் இருக்கிறது.
- சா. கந்தசாமி, மூத்த எழுத்தாளர்,