24 ஆகஸ்ட், 2024

கேடு வெட்கக்கேடு

மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர்.

வீட்டிற்குள் நுழைந்ததும், படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார். மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் . அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார் .

'' அப்போ... நான் வர்றேன். உடம்பை நல்லா பார்த்துக்க '' என்று கிளம்பிய போது, உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார், ''ஒரு வாய் சாப்பிட்டுட்டு போப்பா.''

''வேண்டாம்மா '' என்று முதலில் மறுத்தவர், ''சரி.. சரி.. சாப்பாடு எடுத்து வைங்க'' என்று கூறி, அடுக்களைக்குள் சென்று தரையில் அமர்ந்தார். 

அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள். அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு, அம்மாவைப் பார்த்து கை கூப்பினார் காமராஜர் .

''அப்போ நான் வரட்டுமா..? ''

சொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தாயாரின் இறுதி காலத்தில் காமராஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டதாக எழுத்தாளர் சாவி எழுதியிருக்கிறார். 

''தாயாரின் மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார் . பல்லக்கு கட்டுகிறவர் இலவசமாக கட்டித் தருகிறார் . வந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை, அதற்கான பணமும் இல்லை. பத்து வருடம் இராஜாங்கம் நடத்தினான் மகன்..! பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி ! '' 
- என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்த போது  கவிஞர் கண்ணதாசன் எழுதினார். 

விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீடு , இந்திரா காந்தியிலிருந்து லால்பகதூர் சாஸ்திரி வரை பலரும் வந்திருந்த அந்த வீடு, பிறகு அரசுடைமை ஆனது. 

"குமுதத்தில் எழுதுவதற்காக 1995ஆம்  ஆண்டில் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்கு போயிருந்தேன் . 

அருகில் இன்னொரு வாடகை வீட்டில், காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் , அங்கு போனேன். மிகவும் எளிமையான வீடு. 

காமராஜர் மறைந்த பிறகு , பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது , அதைப் பெற்று கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான் . 

அறுபத்து மூன்று வயதான ,
காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார் . கணவர் இறந்துவிட , அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் . மிகக் குறைந்த வருமானம் , குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது .

'' நாங்க ஏழு பேர் இருக்கோம் . சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து, அழுது கூட கேட்டுப் பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா." எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார் .

"இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன். கூட்டுறேன். இந்தா இருக்கு பாருப்பா (பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டைக் காட்டுகிறார்.)

"எங்க மாமா வீட்டிலே பெருக்கிற வேலையாவது கொடுக்கச் சொல்லுப்பா, உனக்கு புண்ணியமா போகும். அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியாய்க் கிடைக்குமில்லே. நான் அங்கே போய் பெருக்கினா அவமானம்னு சொல்றாங்க. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டைக் கூட்டிப் பெருக்கிறதில எனக்கு என்ன அவமானம் இருக்குப்பா?'' 
- என்று கசிந்து அழுதார். ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள் . 

சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் .

'' மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கல.. குடும்பத்துக்கும் சேர்த்து வைக்கல. இப்போ பாருப்பா.. விதவை பென்ஷனுக்கு மனு போடுற நிலைமையிலே இருக்கேன்.'' சொல்லும் போது கை கூப்பின காட்சி , முள்ளாய் உறுத்தியது .

அடுத்த வாரம் 1996 , மே மாதத்தில் குமுதத்தில் , '' வீட்டு வேலை செய்யும் காமராஜரின் மருமகள் '' என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளி வந்தது . வெளிவந்த மறுவாரத்தில் ஆச்சரியமான ஒரு மாற்றம்.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா , காமராஜரின் குடும்பத்திற்கு வீடும் , வேலை வாய்ப்பும் , வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது . 

அந்தத் தகவலைச் சொல்ல ,  மறுபடியும் விருதுநகரில் உள்ள கமலாதேவி வீட்டுக்குப் போன போது , அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார். கண்கள் ததும்பின. கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள்" என்று எழுத்தாளர் மணா எழுதியுள்ளார் .

இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார் என்பது தமிழுக்கும் , தமிழகத்துக்கும் பெருமை தான். 

மக்கள் நலனுக்காகவே கடைசி வரை தொலைநோக்கு பார்வையுடன் உழைத்த காமராஜரைத் தோற்கடித்தவரைக் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும் ?

வெட்கக்கேடு. வேறு என்ன சொல்ல? 

20 மே, 2024

உறவுகள் மனித வாழ்வின் ஒரு வரம்

அண்ணா நகருக்குச் சென்று இருந்த நான் அங்கு வசிக்கும் என் நண்பர் ஒருவரின் நினைவு வர சந்திக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டுக்கு சென்றேன். மாலை நேரம். அவரோ தொலைக்காட்சியில் தோய்ந்து இருந்தார்.
என்னை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைவார் என்று எதிர் பார்த்தேன். அவரோ தொலைபேசியில் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்பது போலப் பார்த்தார். "நான் இந்த வழியாக வந்தேன், வெறுமனே எட்டிப் பார்க்க நினைத்தேன்" என்று சமாளித்துத் திரும்பினேன்.
விருந்து என்பது தமிழகத்தில் வித்தியாசமான பதம். வீட்டுக்கு வருகிறவர் அனைவரும் விருந்தினர். இன்றோ உறவினர் மட்டுமே விருந்தினர். அதிலும் நெருங்கிய சொந்தம் மட்டுமே அடங்கும். ஒன்று விட்டவர்களைக் கழற்றி விட்டுப் பல நாட்களாகிறது..
அந்த காலத்தில் அனைவரும் உறவினர்கள். ஓர் ஊரில் இருக்கும் அனைவரும் முப்பாட்டன் வகையில் சொந்தமாய் இருப்பார்கள். திண்ணையில் அமர்ந்து இருக்கும் அனைவரும் உணவு வேளையில் உண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் குடியேற நேர்ந்தாலும் அந்த நெருக்கம் நீடித்தது.
நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் வருவது மரியாதைக் குறைவு. அவர்களும் செய்தி தெரிந்தால் கோபப் படுவார்கள். நகரத்துக்கு செல்வது அரிது. கிராமத்தில் இருந்து பண்டிகைக்கு துணி எடுக்கவும், தீபாவளி ரிலீஸ் படம் பார்க்கவும் நகரத்துக்கு வருபவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாமல் உறவினர் வீட்டில் தங்குவார்கள். வருவதை முன்கூட்டி சொல்லும் வசதிகள் அன்று இல்லை.
வருகிறவர்களை எந்நேரமானாலும் வரவேற்று, வீட்டில் இருப்பதைக் கொஞ்சம் சூடாக்கி அப்பளம் பொரித்தோ, பப்படம் சுட்டோ தட்டை நிரப்பி பரிமாறுவார்கள். இதற்காகவே சாப்பாடு போட பாக்கு மட்டை நீரில் நனைக்க பரணில் இருக்கும். எப்போதுமே கொஞ்சம் கூடுதலாக சமைப்பது அன்றைய வழக்கம்.
வருகின்ற உறவினர்கள் கூடமாட ஒத்தாசை செய்வார்கள். ஒருவர்உ காய்கறி நறுக்க, இன்னொருவர் வெங்காயம் உரிக்க, வெகு சீக்கிரம் மணக்க மணக்க சாப்பாடு தயாராகும். பாத்திரம் அலம்பி வைப்பது வரை உரிமையோடு உதவுவார்கள். தன்முனைப்பில்லா உறவுமுறை அது.
இன்று சொந்த வீட்டிலேயே சொல்லாமல் போனால் சோறு கிடைக்காது. அனைத்தையும் உண்டு கழுவி கவிழ்த்து வைப்பதே மாநகரங்களில் மாபெரும் சாதனை. பழையதை உண்ண இங்கு நாய்கள் கூடத் தயாராக இல்லை.
சொல்லி வந்தாலும் உறவினர் கால் மேல் கால் போட்டு களித்திருக்கும் காலமிது. அவர்களையும் அழைத்து கொண்டு உணவகம் செல்லும் நிலை. அல்லது, வெளியில் இருந்து தருவித்த பலகாரங்கள் சம்பிரதாயத்துக்காக பரிமாறப்படும். வந்தவர்கள் அவற்றை பார்வையிலேயே உண்டு முடித்து விடுவார்கள்.
எங்கள் சின்ன வயதில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழி மேல் விழி வைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்த காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம்.
அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு. அவர்களுடன் யார் இரவில் படுத்துக் கொள்வது என்று போட்டி போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..
வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்று உடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிறார் உறவுகள் உண்டு.
வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச் சரக்காகக் கருதப் பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷ பலகாரங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு குதூகலம் தரும்.
இன்று அக்கா, அண்ணனோடு மட்டும் உறவு முடிந்து விட்டது. அவர்களும் தங்குவதற்காக வருவதில்லை. திக் விஜயத்தோடு சரி. தங்காததற்கு காரணம் தங்கள் வீடே சொர்க்கம் என்ற நினைப்பு தான். கிடைக்கும் இடத்தில் பாயை விரித்துப் படுப்போர் இப்போது இல்லை.
இன்றைய குழந்தைகள் புதிதாக வரும் உறவினரிடம் புன்னகையோடு உபசரிப்பை முடித்து கொள்கின்றன. அருகில் சென்று ஆசையாய் பேசுவது இல்லை. அவர்களுக்குக் கதைகளை சொல்ல கணினி இருக்கிறது. கணினிக்கதைகளில் கரிசனம் இருக்குமா?
பொழுது போகாமல் அலைந்த தலைமுறை அது. இன்று மிடுக்குக் கைபேசியால் பொழுது போதாத தலைமுறை இது..
உறவு என்பது அன்று இருவழி போக்குவரத்து. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தந்தார்கள். 'அல்ல அவசர' த்துக்கு ஓடி வந்து விடுவார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் உடனிருந்து பணிவிடை செய்வார்கள். அன்று உறவு உரிமையாய் இருந்தது; இன்று கடமையாய் தேய்ந்தது
எனக்குத் தெரிந்து பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்தவர்கள் உண்டு. வசதி இன்மையால் அத்தை வீட்டில் வசித்து கல்லூரியை கடந்தவர்கள் உண்டு. அன்றும் விடுதி வசதிகள் இருந்தன.
ஆனாலும் உறவினர் வீடு கற்களால் ஆகாமல் கனிவால் ஆனதால் கதவுகள் அனைவருக்கும் அகலத் திறந்திருந்தன. அனுசரித்தும் பொறுத்துக் கொண்டும் உறவுகளோடு கூடிக் களித்த காலமது.
விதவைத் தங்கையை தங்களுடன் வைத்துக் கொண்ட அண்ணன்கள் உண்டு. இன்றோ சென்னையிலேயே இருந்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் தங்க மறுக்கும் நெருங்கிய சொந்தங்கள். இன்று சொந்தத்தைவிட சுதந்திரம் முக்கியம்.
காலாண்டு தேர்வுக்கும் முழுஆண்டுத் தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நெறிக்காத விடுமுறை உண்டு.
அப்போது உறவினர் வீட்டுக்குக் குழந்தைகள் செல்வார்கள். அங்கு புதிய மனிதர்களோடு பழகி, புதியன கற்று திரும்புவார்கள்.
நான் ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் என் அத்தை வீட்டுக்குச் சென்று சதுரங்கம் கற்றேன், தேங்காய் எப்படி உரிப்பது என்று கற்றேன், நீச்சல் கற்றேன். இன்று எந்தக் குழந்தையும் தங்கள் வீட்டைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அறையை விட்டுக் கூட அகல விரும்புவதில்லை.
அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்து எப்போதாவது சந்திக்கும் சூழலுக்கு உறவுச் சங்கிலி மாறியதால் அதில் கணுக்கள் தோறும் விரிசல்கள்.
இன்று உறவு விட்ட இடத்தை நட்பு பிடித்துக் கொண்டது. அவசரமாகப் பணம் வேண்டும் என்றால் அன்று நெருங்கிய சொந்தம் நீட்டியது கை.
இன்று ஆத்ம நண்பர்கள் தான் ஆபத்துக்கு வருகிறார்கள். அவர்களே நம்வீட்டு திருமணத்தின் போது அத்தனை இடத்திலும் நின்று சேவகம் புரிகிறார்கள். உறவு மரபு ரீதியான வரவேற்பில் முடிந்து போகிறது.
எந்த நெருக்கமும் தொடராவிட்டால் தொய்ந்து போகும். இத்தனை மாற்றங்கள் நடுத்தர குடும்பங்களில் நடந்தாலும் இல்லாதவர்களிடம் இன்னமும் உறவின் செழுமை நீடிக்கிறது.
அவலம் என்றால் அழுகிற கண்களும், கவலை என்றால் துடைக்கிற கைகளும் ஏழைகளிடம் மிச்சம் இருக்கிறது. அவர்கள் இல்லம் சிறிதாக இருந்தாலும் இதயம் பெரிதாக இருக்கிறது.
அவர்கள் நமக்கு உறவின் மேன்மையை மௌனமாய் கற்றுத் தந்து கொண்டே இருக்கிறார்கள்....


(உறவின் நேர்த்தியை இதைவிட உருக்கமாகச் சொல்ல முடியுமா?)

பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே. 

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...