24 ஆகஸ்ட், 2024

கேடு வெட்கக்கேடு

மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மதுரைக்கு சென்று அங்கிருந்து நெடுமாறனுடன் காரில் விருதுநகருக்குச் சென்றார் காமராஜர்.

வீட்டிற்குள் நுழைந்ததும், படுக்கையில் இருந்த காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் கண் விழித்துப் பார்த்தார். மகனைப் பார்த்ததும் நெகிழ்ந்து கண்ணீர் விட்டார் . அருகில் உட்கார்ந்த காமராஜர் அம்மாவிடமும், சகோதரியிடமும் விசாரித்து விட்டுக் கிளம்பினார் .

'' அப்போ... நான் வர்றேன். உடம்பை நல்லா பார்த்துக்க '' என்று கிளம்பிய போது, உலர்ந்த குரலில் சிவகாமி அம்மாள் சொன்னார், ''ஒரு வாய் சாப்பிட்டுட்டு போப்பா.''

''வேண்டாம்மா '' என்று முதலில் மறுத்தவர், ''சரி.. சரி.. சாப்பாடு எடுத்து வைங்க'' என்று கூறி, அடுக்களைக்குள் சென்று தரையில் அமர்ந்தார். 

அவருடைய சகோதரியின் மகள்கள் உணவு பரிமாறினார்கள். அவசரமாய்ச் சாப்பிட்டு விட்டு, அம்மாவைப் பார்த்து கை கூப்பினார் காமராஜர் .

''அப்போ நான் வரட்டுமா..? ''

சொந்த வீட்டில் இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தாயாரின் இறுதி காலத்தில் காமராஜர் வீட்டிற்கு வந்து சாப்பிட்டதாக எழுத்தாளர் சாவி எழுதியிருக்கிறார். 

''தாயாரின் மரணத்தின் போது இன்னொருவர் பணம் கொடுக்கிறார் . பல்லக்கு கட்டுகிறவர் இலவசமாக கட்டித் தருகிறார் . வந்தவர்களுக்கு ஒரு வேளை சோறு போட இடமும் இல்லை, அதற்கான பணமும் இல்லை. பத்து வருடம் இராஜாங்கம் நடத்தினான் மகன்..! பெற்ற தாய் வாழ்ந்த கதை இப்படி ! '' 
- என்று காமராஜரின் தாய் சிவகாமி அம்மாள் மறைந்த போது  கவிஞர் கண்ணதாசன் எழுதினார். 

விருதுநகரில் காமராஜர் வாழ்ந்த அந்த எளிய வீடு , இந்திரா காந்தியிலிருந்து லால்பகதூர் சாஸ்திரி வரை பலரும் வந்திருந்த அந்த வீடு, பிறகு அரசுடைமை ஆனது. 

"குமுதத்தில் எழுதுவதற்காக 1995ஆம்  ஆண்டில் விருதுநகரில் உள்ள காமராஜரின் வீட்டுக்கு போயிருந்தேன் . 

அருகில் இன்னொரு வாடகை வீட்டில், காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகளான கமலாதேவி வசிப்பதாகச் சொன்னதும் , அங்கு போனேன். மிகவும் எளிமையான வீடு. 

காமராஜர் மறைந்த பிறகு , பாரத ரத்னா கொடுக்கப்பட்ட போது , அதைப் பெற்று கொண்டவர்கள் நாகம்மாள் குடும்பத்தினர் தான் . 

அறுபத்து மூன்று வயதான ,
காமராஜரின் மருமகளான கமலாதேவி வறுமையில் ஒடுங்கிப் போயிருந்தார் . கணவர் இறந்துவிட , அவருடைய மகன்கள் தீப்பெட்டி ஆபிஸில் ஐநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்கள் . மிகக் குறைந்த வருமானம் , குடும்பத்தைத் தவிக்க வைத்திருந்தது .

'' நாங்க ஏழு பேர் இருக்கோம் . சாப்பிடவே கஷ்டமா இருக்குப்பா. கஷ்டம் தாங்காம கலெக்டர் காலில் கூட விழுந்து, அழுது கூட கேட்டுப் பார்த்துட்டேன். எந்த வேலையும் கிடைக்கலைப்பா." எதிரில் இருந்த நாகம்மாளின் குரல் ஏறி இறங்கியது. பெருமூச்சு விட்டார் .

"இப்போ பக்கத்து வீடுகளில் வேலை செய்றேன். கூட்டுறேன். இந்தா இருக்கு பாருப்பா (பக்கத்தில் இருக்கும் காமராஜரின் வீட்டைக் காட்டுகிறார்.)

"எங்க மாமா வீட்டிலே பெருக்கிற வேலையாவது கொடுக்கச் சொல்லுப்பா, உனக்கு புண்ணியமா போகும். அங்கே கூட்டினாலாவது கையில் ஐம்பதோ, நூறோ கூலியாய்க் கிடைக்குமில்லே. நான் அங்கே போய் பெருக்கினா அவமானம்னு சொல்றாங்க. நம்ம நிலைமை இப்படி இருக்கிறப்போ எங்க மாமா வீட்டைக் கூட்டிப் பெருக்கிறதில எனக்கு என்ன அவமானம் இருக்குப்பா?'' 
- என்று கசிந்து அழுதார். ஒரு முதல்வராக இருந்தவரின் மருமகள் . 

சேலை முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டார் .

'' மாமா இருக்கிற வரை அவருக்கும் சேர்த்துக்கல.. குடும்பத்துக்கும் சேர்த்து வைக்கல. இப்போ பாருப்பா.. விதவை பென்ஷனுக்கு மனு போடுற நிலைமையிலே இருக்கேன்.'' சொல்லும் போது கை கூப்பின காட்சி , முள்ளாய் உறுத்தியது .

அடுத்த வாரம் 1996 , மே மாதத்தில் குமுதத்தில் , '' வீட்டு வேலை செய்யும் காமராஜரின் மருமகள் '' என்ற தலைப்பில் என்னுடைய கட்டுரை வெளி வந்தது . வெளிவந்த மறுவாரத்தில் ஆச்சரியமான ஒரு மாற்றம்.

அன்றைய முதல்வர் ஜெயலலிதா , காமராஜரின் குடும்பத்திற்கு வீடும் , வேலை வாய்ப்பும் , வங்கியில் 11 லட்சம் ரூபாய் டெபாசிட்டும் பண்ணுவதாக அறிவிப்பு வெளியானது . 

அந்தத் தகவலைச் சொல்ல ,  மறுபடியும் விருதுநகரில் உள்ள கமலாதேவி வீட்டுக்குப் போன போது , அந்த அம்மையார் நெருங்கி வந்து கையைப் பிடித்துக் கொண்டார். கண்கள் ததும்பின. கனிந்த பார்வையில் நன்றி சொன்னார் கமலாதேவி அம்மாள்" என்று எழுத்தாளர் மணா எழுதியுள்ளார் .

இப்படியும் ஒரு மனிதர் தமிழகத்தில் முதல்வராக இருந்துள்ளார் என்பது தமிழுக்கும் , தமிழகத்துக்கும் பெருமை தான். 

மக்கள் நலனுக்காகவே கடைசி வரை தொலைநோக்கு பார்வையுடன் உழைத்த காமராஜரைத் தோற்கடித்தவரைக் தலைக்கு மேல் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறார்கள். இதைவிடக் கேவலம் வேறு என்ன இருக்க முடியும் ?

வெட்கக்கேடு. வேறு என்ன சொல்ல? 

20 மே, 2024

உறவுகள் மனித வாழ்வின் ஒரு வரம்

அண்ணா நகருக்குச் சென்று இருந்த நான் அங்கு வசிக்கும் என் நண்பர் ஒருவரின் நினைவு வர சந்திக்கலாம் என்ற ஆர்வத்தில் அவர் வீட்டுக்கு சென்றேன். மாலை நேரம். அவரோ தொலைக்காட்சியில் தோய்ந்து இருந்தார்.
என்னை பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைவார் என்று எதிர் பார்த்தேன். அவரோ தொலைபேசியில் சொல்லிவிட்டு வந்திருக்கலாமே என்பது போலப் பார்த்தார். "நான் இந்த வழியாக வந்தேன், வெறுமனே எட்டிப் பார்க்க நினைத்தேன்" என்று சமாளித்துத் திரும்பினேன்.
விருந்து என்பது தமிழகத்தில் வித்தியாசமான பதம். வீட்டுக்கு வருகிறவர் அனைவரும் விருந்தினர். இன்றோ உறவினர் மட்டுமே விருந்தினர். அதிலும் நெருங்கிய சொந்தம் மட்டுமே அடங்கும். ஒன்று விட்டவர்களைக் கழற்றி விட்டுப் பல நாட்களாகிறது..
அந்த காலத்தில் அனைவரும் உறவினர்கள். ஓர் ஊரில் இருக்கும் அனைவரும் முப்பாட்டன் வகையில் சொந்தமாய் இருப்பார்கள். திண்ணையில் அமர்ந்து இருக்கும் அனைவரும் உணவு வேளையில் உண்ண அழைக்கப்படுவார்கள். பின்னர், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் குடியேற நேர்ந்தாலும் அந்த நெருக்கம் நீடித்தது.
நகரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் செல்லாமல் வருவது மரியாதைக் குறைவு. அவர்களும் செய்தி தெரிந்தால் கோபப் படுவார்கள். நகரத்துக்கு செல்வது அரிது. கிராமத்தில் இருந்து பண்டிகைக்கு துணி எடுக்கவும், தீபாவளி ரிலீஸ் படம் பார்க்கவும் நகரத்துக்கு வருபவர்கள் திரும்பிச் செல்ல பேருந்து இல்லாமல் உறவினர் வீட்டில் தங்குவார்கள். வருவதை முன்கூட்டி சொல்லும் வசதிகள் அன்று இல்லை.
வருகிறவர்களை எந்நேரமானாலும் வரவேற்று, வீட்டில் இருப்பதைக் கொஞ்சம் சூடாக்கி அப்பளம் பொரித்தோ, பப்படம் சுட்டோ தட்டை நிரப்பி பரிமாறுவார்கள். இதற்காகவே சாப்பாடு போட பாக்கு மட்டை நீரில் நனைக்க பரணில் இருக்கும். எப்போதுமே கொஞ்சம் கூடுதலாக சமைப்பது அன்றைய வழக்கம்.
வருகின்ற உறவினர்கள் கூடமாட ஒத்தாசை செய்வார்கள். ஒருவர்உ காய்கறி நறுக்க, இன்னொருவர் வெங்காயம் உரிக்க, வெகு சீக்கிரம் மணக்க மணக்க சாப்பாடு தயாராகும். பாத்திரம் அலம்பி வைப்பது வரை உரிமையோடு உதவுவார்கள். தன்முனைப்பில்லா உறவுமுறை அது.
இன்று சொந்த வீட்டிலேயே சொல்லாமல் போனால் சோறு கிடைக்காது. அனைத்தையும் உண்டு கழுவி கவிழ்த்து வைப்பதே மாநகரங்களில் மாபெரும் சாதனை. பழையதை உண்ண இங்கு நாய்கள் கூடத் தயாராக இல்லை.
சொல்லி வந்தாலும் உறவினர் கால் மேல் கால் போட்டு களித்திருக்கும் காலமிது. அவர்களையும் அழைத்து கொண்டு உணவகம் செல்லும் நிலை. அல்லது, வெளியில் இருந்து தருவித்த பலகாரங்கள் சம்பிரதாயத்துக்காக பரிமாறப்படும். வந்தவர்கள் அவற்றை பார்வையிலேயே உண்டு முடித்து விடுவார்கள்.
எங்கள் சின்ன வயதில் மாமா மகனோ, அத்தையோ வருவது தெரிந்தால் வீட்டுக்குள் எப்போது நுழைவார்கள் என்று வழி மேல் விழி வைத்துப் பார்த்திருப்போம். சிலரிடம் மோட்டார் சைக்கிள் இருக்கும். அந்த காலத்தில் அது அரிது. மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டால் அவர்தான் வந்துவிட்டாரோ என வாசலுக்கு விரைந்து வந்து பார்ப்போம்.
அதில் கதை சொல்லும் அத்தை, மாமாக்கள் உண்டு. அவர்களுடன் யார் இரவில் படுத்துக் கொள்வது என்று போட்டி போடுவோம். அவர்கள் எது பேசினாலும் அது கதையாய் தோன்றும். வீட்டினர் அவர்களோடு பேசுவதை வாயைப் பிளந்து கேட்போம். விருந்தினர் வந்தால் படிப்பதில் இருந்து விடுதலை என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..
வருகிற உறவினர் இன்னொரு நாள் தங்க நேர்ந்தால் வீட்டில் இருக்கும் வேட்டி, புடவை அவர்களுக்கு மாற்று உடையாகப் பரிமாறப்படும். ஊரில் எந்த சொந்தக்காரர் திருமணம் என்றாலும் வந்து தங்குகிறார் உறவுகள் உண்டு.
வீட்டிலேயே பலகாரங்கள் செய்து உறவினர் வீட்டுக்கு எடுத்துச் செல்கிற கரிசனம் இருந்தது. அன்று கடையில் வாங்குவது கடைச் சரக்காகக் கருதப் பட்டது. உறவினருக்காக வீட்டில் செய்யும் விசேஷ பலகாரங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு குதூகலம் தரும்.
இன்று அக்கா, அண்ணனோடு மட்டும் உறவு முடிந்து விட்டது. அவர்களும் தங்குவதற்காக வருவதில்லை. திக் விஜயத்தோடு சரி. தங்காததற்கு காரணம் தங்கள் வீடே சொர்க்கம் என்ற நினைப்பு தான். கிடைக்கும் இடத்தில் பாயை விரித்துப் படுப்போர் இப்போது இல்லை.
இன்றைய குழந்தைகள் புதிதாக வரும் உறவினரிடம் புன்னகையோடு உபசரிப்பை முடித்து கொள்கின்றன. அருகில் சென்று ஆசையாய் பேசுவது இல்லை. அவர்களுக்குக் கதைகளை சொல்ல கணினி இருக்கிறது. கணினிக்கதைகளில் கரிசனம் இருக்குமா?
பொழுது போகாமல் அலைந்த தலைமுறை அது. இன்று மிடுக்குக் கைபேசியால் பொழுது போதாத தலைமுறை இது..
உறவு என்பது அன்று இருவழி போக்குவரத்து. எதையும் எதிர்பார்க்காமல் இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு தந்தார்கள். 'அல்ல அவசர' த்துக்கு ஓடி வந்து விடுவார்கள். உடல்நலம் சரியில்லை என்றால் உடனிருந்து பணிவிடை செய்வார்கள். அன்று உறவு உரிமையாய் இருந்தது; இன்று கடமையாய் தேய்ந்தது
எனக்குத் தெரிந்து பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்தவர்கள் உண்டு. வசதி இன்மையால் அத்தை வீட்டில் வசித்து கல்லூரியை கடந்தவர்கள் உண்டு. அன்றும் விடுதி வசதிகள் இருந்தன.
ஆனாலும் உறவினர் வீடு கற்களால் ஆகாமல் கனிவால் ஆனதால் கதவுகள் அனைவருக்கும் அகலத் திறந்திருந்தன. அனுசரித்தும் பொறுத்துக் கொண்டும் உறவுகளோடு கூடிக் களித்த காலமது.
விதவைத் தங்கையை தங்களுடன் வைத்துக் கொண்ட அண்ணன்கள் உண்டு. இன்றோ சென்னையிலேயே இருந்தாலும் எவ்வளவு வற்புறுத்தியும் தங்க மறுக்கும் நெருங்கிய சொந்தங்கள். இன்று சொந்தத்தைவிட சுதந்திரம் முக்கியம்.
காலாண்டு தேர்வுக்கும் முழுஆண்டுத் தேர்வுக்கும் பயிற்சி வகுப்புகள் நெறிக்காத விடுமுறை உண்டு.
அப்போது உறவினர் வீட்டுக்குக் குழந்தைகள் செல்வார்கள். அங்கு புதிய மனிதர்களோடு பழகி, புதியன கற்று திரும்புவார்கள்.
நான் ஐந்தாம் வகுப்பு விடுமுறையில் என் அத்தை வீட்டுக்குச் சென்று சதுரங்கம் கற்றேன், தேங்காய் எப்படி உரிப்பது என்று கற்றேன், நீச்சல் கற்றேன். இன்று எந்தக் குழந்தையும் தங்கள் வீட்டைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. அவர்கள் அறையை விட்டுக் கூட அகல விரும்புவதில்லை.
அடிக்கடி சந்திக்கும் நிலையில் இருந்து எப்போதாவது சந்திக்கும் சூழலுக்கு உறவுச் சங்கிலி மாறியதால் அதில் கணுக்கள் தோறும் விரிசல்கள்.
இன்று உறவு விட்ட இடத்தை நட்பு பிடித்துக் கொண்டது. அவசரமாகப் பணம் வேண்டும் என்றால் அன்று நெருங்கிய சொந்தம் நீட்டியது கை.
இன்று ஆத்ம நண்பர்கள் தான் ஆபத்துக்கு வருகிறார்கள். அவர்களே நம்வீட்டு திருமணத்தின் போது அத்தனை இடத்திலும் நின்று சேவகம் புரிகிறார்கள். உறவு மரபு ரீதியான வரவேற்பில் முடிந்து போகிறது.
எந்த நெருக்கமும் தொடராவிட்டால் தொய்ந்து போகும். இத்தனை மாற்றங்கள் நடுத்தர குடும்பங்களில் நடந்தாலும் இல்லாதவர்களிடம் இன்னமும் உறவின் செழுமை நீடிக்கிறது.
அவலம் என்றால் அழுகிற கண்களும், கவலை என்றால் துடைக்கிற கைகளும் ஏழைகளிடம் மிச்சம் இருக்கிறது. அவர்கள் இல்லம் சிறிதாக இருந்தாலும் இதயம் பெரிதாக இருக்கிறது.
அவர்கள் நமக்கு உறவின் மேன்மையை மௌனமாய் கற்றுத் தந்து கொண்டே இருக்கிறார்கள்....


(உறவின் நேர்த்தியை இதைவிட உருக்கமாகச் சொல்ல முடியுமா?)

பல நல்ல நல்ல பதிவுகளை காண தொடர்ந்து இணைந்திருங்கள்! உங்கள் நண்பர்களுக்கும் இதனை பகிர்ந்து அவர்களும் பயனடைய நீங்களும் உதவலாமே. 

28 ஜனவரி, 2023

படித்ததில் மனதில் பதிந்தது

அசோக மன்னர் வந்து கொண்டிருந்தார். அவருடன் அவரது ஆலோசகர்களும் அருகில் வந்தனர். அந்தச் சமயத்தில், எதிரில் ஒரு புத்தத் துறவி வந்தார். அவரைப் பார்த்ததும், அசோகர் ஓடிப் போய் அவர் காலில் விழுந்து வணங்கினார்.

அசோக மன்னரின் தலை அந்த புத்தத் துறவியின் பாதத்தில் பட்டது. பக்கத்தில் நின்று கொண்டிருந்த அமைச்சருக்கு அது சங்கடமாக இருந்தது. மிகவும் வருத்தப்பட்டார். நம் அசோகச் சக்கரவர்த்தி  எப்பேர்பட்டவர், அவருடைய தலை ஒரு சன்யாசியின் பாதத்தில் படுவதா? என்று நினைத்து மிகவும் கவலைபட்டார்.

அரண்மனைக்குத் திரும்பியதும் அமைச்சர் மெதுவாக ஆரம்பித்தார்.  "அரசே எனக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது" என்றார்.

எதற்காக? என கேட்டார் மன்னர்.

"அசோகச் சக்கரவர்த்தியின் சிரம் மதிப்பு மிக்க ஒன்று . அது ஒரு சந்நியாசியின் காலில் படுவதா?" என்றார்.

அசோகர் ஏதும் பேசவில்லை. சிரித்தார். 

அதன் பிறகு, ஒரு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் அமைச்சரைக் கூப்பிட்டார். "எனக்கு மூன்று சிரங்கள் வேண்டும். அதாவது, மூன்று தலைகள் வேண்டும்" என்றார்.

"இதோ கொண்டு வருகிறேன் அரசே" என்றார் அமைச்சர்.

ஒரு ஆட்டின் தலை, ஒரு புலியின் தலை, ஒரு மனிதனின் தலை. இதுதான் அசோகர் கேட்டது. 

"எங்கே இருந்தாலும் கொண்டு வாருங்கள்" என்றார்.

அமைச்சர் புறப்பட்டார். ஆட்டுத் தலை,  புலித் தலை கிடைத்து விட்டது. அதன் பிறகு, ஒரு சுடுகாட்டுக்குப் போய் ஒரு மனித தலையும் சேகரித்துக் கொண்டு இராஜாவிடம் வந்தார்.

"அரசே உங்கள் ஆணைப்படி மூன்று சிரசுகளைக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார்.

அசோகர் பார்த்தார். "மிகவும் நல்லது. இப்போது இது மூன்றையும் எடுத்துக் கொண்டு போய் சந்தையில் விற்றுவிட்டு வாருங்கள்" என்றார்.

அமைச்சர் அவற்றை எடுத்துக்கொண்டு சந்தைக்கு போனார். 

முதலில் ஆட்டுத் தலை விற்றாயிற்று. நல்ல விலை கொடுத்து வாங்கிக் கொண்டு போனார்கள். 

அடுத்தபடியாக, புலித் தலையை ஒருவர் வாங்கிக் கொண்டார். மனித தலையை மட்டும் வாங்குவதற்கு யாரும் முன் வரவில்லை. எல்லோரும் பார்த்துவிட்டு விலகிப் போனார்கள்.

அமைச்சர் திரும்பி வந்தார். "அரசே இந்த மனிதத் தலையை மட்டும் யாரும் வாங்க மாட்டேன் என்கிறார்கள்" என்றார்.

"சரி பரவாயில்லை. இதை இலவசமாகவே கொடுத்து விடுங்கள்" என்றார்.

அமைச்சர் மறுபடியும் சந்தைக்குப் போனார். "இலவசமாகத் தருகிறேன் இதை வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். 

அப்போதும் யாரும் வாங்கவில்லை. 

மறுபடியும் திரும்பி வந்து, மன்னரிடம் விஷயத்தைச் சொன்னார்.

இப்போது மன்னர் சொன்னார், "அமைச்சரே, உயிர் இருக்கிற வரைக்கும்தான் இந்தத் தலைக்கு மதிப்பு. உயிர் போன பிறகு அதன் மதிப்பும் போய் விடுகிறது. ஆகையால், மதிப்பு இருக்கும் போதே பெரியவர்கள் பாதம் பணிந்து, அந்தப் புனிதத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும்" என்றார்.

பணிவு என்பது வேறு. அடிமைத்தனம் என்பது வேறு.
பணிவது நமக்குப் பெருமை தரக்கூடிய விஷயம்தான். இருப்பினும், பணிவுக்கும் அடிமைத்தனத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். அதைப் புரிந்துகொண்டால் யார் காலில் விழ வேண்டும், யார் காலில் விழக்கூடாது, யாரைப் பணிய வேண்டும் என்பது தானாகப் புரிந்துவிடும்.

1 செப்டம்பர், 2022

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் - சுவாரஸ்யமான கதை

ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் - சுவாரஸ்யமான கதை

நடுமண்டல கோட்டை (ஸ்ரீவில்லிபுத்தூர் குட்டதட்டியில் இருந்தது) நெல்கட்டு பாளையக்காரான பூலித்தேவன் அவர்களிடம் இருந்து கைப்பற்றிய பின்பு கும்பனி பரங்கியர்கள் சிங்கம்மாள்புரம் கிழக்கு பகுதியில் குடியேறிய இடம்தான் அவுட்டன்புரம். (தற்போது நகராட்சி ஊழியர்கள் குடியிருந்து வருகின்றனர். ) 

அங்கிருந்து தான் கும்பனியர்கள்  வரி வசூல் செய்தனர். ஆனால் சரிவர நில உடைமையாளர்கள் வரி செலுத்தாமல் இருந்ததால் மேல்வார உரிமை திருவாங்கூர் சமஸ்தானத்திடம் கொடுத்தார்கள். அப்படி தான் ஆண்டாள் கோவில் உரிமையும் சமஸ்தானத்திடம் கொடுத்தார்கள்.

1857 ஆண்டில் ஏற்பட்ட முதல் சுதந்திர போராட்டத்திற்கு பின்பு கும்பனியின் அட்டுழியங்கள் முடிவுக்கு வந்ததால் ஆங்கில அரசு நேரடியாக  இந்தியாவில் ஆட்சி அதிகாரம் செய்ய ஆரம்பித்ததால் அவர்களுடைய நீதிமன்ற நடைமுறைகள் அமுலுக்கு வந்தது. அதற்கு முன்பு நீதிமன்றங்கள் இருந்தாலும் அது மக்களின் மன்றங்களாக இருந்து மக்களின் குறைகளை நீக்க பாரம்பரிய முறைப்படி விதிப்படி நடந்தது. 

ஆனால் ஆங்கிலேயர்களின் நீதிமன்றம் ஆட்சியாளர்களை காப்பாற்றவும் மக்களை ஓடுக்கவும் ஏற்படுத்தப்பட்டது. 

இந்த நீதிமன்றத்தில் ஆண்டாள் கோவில் நிர்வாகத்தில் இருந்து திருவாங்கூர் சமஸ்தானத்தை வெளியேற்ற நான்குநேரி வானமாமலை மடம் சார்பாக வழக்கு தொடரப்பட்டு அதில் வெற்றியும் பெற்றார்கள்.

இதனால் மடம், திருபாற்கடலில் உருண்டு போய் புதைந்து போன ஆண்டாள் கோவிலின் தேருக்கு பதில் தற்போது உள்ள தேரை தயார் செய்ததாகவும் செவி வழி செய்தி உள்ளது.

சுக

#சுகவின்_கிறுக்கல்கள்

12 மார்ச், 2022

தமிழ்ப் புத்தாண்டு

 *தமிழ்ப் புத்தாண்டு*

_சிறப்புப் பார்வை_ 


*சுறவம்* 

தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப்புத்தாண்டு என்று எடுத்து உரைத்தவர்கள் யாரெல்லாம் தெரியுமா?


01. மறைமலை அடிகளார் (1921)

02. தேவநேயப் பாவாணர்

03. பெருஞ்சித்திரனார்

04. பேராசிரியர் கா.நமசிவாயர்

05. இ.மு. சுப்பிரமணியனார்

06. மு.வரதராசனார்

07. இறைக்குருவனார்

08. வ. வேம்பையனார்

09. பேராசிரியர் தமிழண்ணல்

10. வெங்காலூர் குணா

11. கதிர். தமிழ்வாணனார்

12. சின்னப்பத்தமிழர்

13. கி.ஆ.பெ. விசுவநாதர்

14. திரு.வி.க

15. பாரதிதாசனார்

16. கா.சுப்பிரமணியனார்

17. ந.மு.வேங்கடசாமியார்

18. சோமசுந்தர் பாரதியார்

19. புலவர் குழுவினர் (1971)


மலையகத்தில்

01. கோ.சாரங்கபாணியார்

02. சா.சி. குறிஞ்சிக்குமரனார்

03. அ.பு.திருமாலனார்

04. பேராசிரியர் இர.ந. வீரப்பனார்

05. கம்பார் கனிமொழி குப்புசாமி

06. மணி. வெள்ளையனார்

07. திருமாறன்

08. இரெ.சு.முத்தையா

09. இரா. திருமாவளவனார்

10. இர. திருச்செல்வனார்


இவர்களோடு 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப்பிறப்பினை விடுத்து தை முதல் நாளே தமிழாண்டின் துவக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.


இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப்புத்தாண்டு அல்ல என்பதற்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும்.


1. பிரபவ 2. விபவ 3. சுக்கில 4. பிரமோதூத 5. பிரஜோத்பத்தி 6. ஆங்கீரஸ 7. ஸ்ரீமுக 8. பவ 9. யுவ 10. தாது 11. ஈஸ்வர 12. வெகுதான்ய 13. பிரமாதி 14. விக்கிரம 15. விஷு 16. சித்ரபானு 17.சுபாணு 18. தாரண 19. பார்த்திப 20. விய 21. சர்வகித்து 22.சர்வதாரி 23. விரோதி 24. விக்ருதி 25. கர 26. நந்தன 27. விஜய 28. ஜய 29. மன்மத் 30. துர்முகி 31. ஹேவிளம்பி 32. விளம்பி 33. விகாரி 34. சார்வரி 35. பிலவ 36. சுபகிருது 37. சோபகிருது 38. குரோதி 39. விசுவாசு 40. பராபவ 41. பிலவங்க 42. கீலக 43. செமிய 44. சாதரண 45. விரோதிகிருது 46. பரிதாபி 47. பிரமாதீச 48. ஆனந்த 49. ராஷஸ 50. நள 51. பிங்கள 52. காளயுக்தி 53. சித்தாத்திரி 54. ரெத்திரி. 55. துன்பதி 56. துந்துபி 57. ருத்ரோகாரி 58. ரக்தாஷி 59. குரோதன 60. அக்ஷய


இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை...


யாராவது சொல்ல முடியுமா?


தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரம்மிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். *ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாக* பிரித்து வைத்திருந்தார்கள். 


*வைகறை*

*காலை*

*நண்பகல்*

*எற்பாடு*

*மாலை*

*யாமம்*


என்று அவற்றை அழைத்தார்கள்.


அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் *அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள்*. அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். *ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்*.


அதாவது *பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அச்சாகப் பொருந்துகின்றன*. 


தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, _தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்_.


(1 நாழிகை - 24 நிமிடங்கள்

60 நாழிகை - 1440 நிமிடங்கள்

இதனை இன்றைய கிருத்தவ கணக்கீட்டின் படி பார்த்தால்

1440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்

24 மணித்தியாலங்கள் - 1 நாள்)


*பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள்*.


ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, *ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்*.


1. இளவேனில் - (தை---மாசி)

2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)

3. கார் - (வைகாசி - ஆனி)

4. கூதிர் - (ஆடி - ஆவணி)

5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)

6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)


மேற்கண்ட மாதக்கணக்கில் இளவேனில் என்பது சித்திரை-  வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறு.


சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும் தைமாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள். 


காலத்தை, அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான். 


இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்!


பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.


*தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்*.


தமிழர்கள்  நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! *இடையில் வந்த இடைச்செருகலால் வந்த வினை* இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப்  பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.


நித்திரையில் இருக்கும் தமிழா!

சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு

அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம்                                                  கற்பித்ததே

அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்

தரணி ஆண்ட தமிழனுக்கு

தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!

- *பாவேந்தர் பாரதிதாசன்*


ஆகவே, *தமிழன் என்றால்* , *தை முதல்* *நாளே தமிழ்ப் புத்தாண்டு!*

2 பிப்ரவரி, 2022

டண்ணகரம், றன்னகரம், தந்நகரம்

எழுத்துப் பிழை இல்லாமல் 

தமிழ் சொல்லி தர பிள்ளைகளுக்கு  சில விளக்கங்கள்...

"ண", "ன" மற்றும் "ந" எங்கெல்லாம் வரும்? 

ஒரு எளிய விளக்கம்

மூன்று சுழி “ண”, 

ரெண்டு சுழி “ன” மற்றும்

 "ந" என்ன வித்தியாசம்?

தமிழ் எழுத்துகளில் 

ரெண்டு சுழி "ன" என்பதும், மூன்று சுழி "ண" என்பதெல்லாம் வெறும் பேச்சு வழக்கு.

"ண" இதன் பெயர் டண்ணகரம்,

"ன" இதன் பெயர் றன்னகரம்,

"ந" இதன் பெயர் தந்நகரம் என்பதே சரி.

மண்டபம், கொண்டாட்டம் – என எங்கெல்லாம் இந்த மூன்று சுழி "ணகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "டண்ணகரம்" னு பேரு. (சொல்லிப் பாருங்களேன்!)

தென்றல், சென்றான் – என எங்கெல்லாம் இந்த ரெண்டு சுழி "னகர" ஒற்றெழுத்து வருதோ, அதையடுத்து வர்ர உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகத்தான் இருக்கும். இதனால இதுக்கு "றன்னகரம்" னு பேரு. (சும்மா சொல்லிப்பாருங்க!)

இது ரெண்டும் என்றுமே மாறி வராது..

நினைவில் கொள்க..

மண்டபமா? மன்டபமா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ட' இருக்கா,

அப்ப இங்க மூன்று சுழி 'ண்' தான் வரும்.

ஏன்னா அது "டண்ணகரம்".

கொன்றானா? கொண்றானா? சந்தேகம் வந்தா...

பக்கத்துல 'ற' இருக்கா

அப்ப இங்க ரெண்டு சுழி 'ன்' தான் வரும்.

ஏன்னா அது "றன்னகரம்"

என்று புரிந்து கொள்ளலாம்.

இதே மாதிரித்தான் 'ந' கரம் என்பதை, "தந்நகரம்" னு சொல்லணும்

ஏன்னா இந்த 'ந்' எழுத்தை அடுத்து 

வரக்கூடிய உயிர்மெய் 'த' மட்டுமே. (பந்து, வெந்தயம், மந்தை).

இந்த "ண", "ன" மற்றும் "ந" விளக்கம் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன்..........

அருமையான விளக்கம்  இதுவரை பலபேருக்கு தெரியாமல் இருந்தது. 

தமிழறிவோம் இதை பலபேருக்கு பகிர்வோம்.

4 ஆகஸ்ட், 2021

வே என்னும் ஒற்றைச் சொல்...

வே என்னும் ஒற்றைத் தமிழ் சொல்லிற்கு 'மறை' (மறைத்து வைத்தல்) என்பது பொருளாகும்.*

⚜ *தாவரங்களின் வேரானது, மண்ணுக்குள் ஓடி மறைந்து கிடப்பதாலேயே அது 'வே'ர் எனப்பட்டது.*

⚜ *மறைந்திருந்து தாக்குவதாலேயே அவன் 'வே'டன் எனப்பட்டான். வேட்டையும் அப்படித்தான்.* 

⚜ *சுற்றிலுமிட்டு மறைத்துப் பாதுகாப்பதாலேயே 'வே'லி எனப்பட்டது. வேய்தலும் அப்படித்தான்.*

⚜ *சுடுநீரில் மூலிகைகளையிட்டு, அடர்த்துணி கொண்டு நம்மை மூடிமறைத்து, அதனை முகர்ந்து நோய்போக்கும் நிகழ்வு 'வே'து பிடித்தல் எனப்பட்டது.*

⚜ *'வே'ய்ங்குழல் எனச் சங்க இலக்கியங்கள் முதல் போற்றும் பெண்ணில் அடர்க்கூந்தல், அப்படியே அவளது முழுவுடலையும் கவிழ்ந்து மறைக்கக் கூடியதாகையால் அவ்வாறு கூறப்பட்டது.*

⚜ *நம்முடலின் பாகங்களையும், மானத்தையும் மறைத்துக் காப்பாற்றுவதாலேயே அவ்வுடை 'வே'ட்டி எனப்பட்டது.*

⚜ *வேதத்தைக் கூட " மறை" என்றுதான் தனித் தமிழில் கூறுகிறோம்.*

⚜ *கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு மறைவாக விரைவாகச் செல்வதால் வே'கம் எனப்படுகிறது.*

⚜ *உண்மைத்தன்மை தெரியாமல் இருப்பதாலேயே அது வே'டம்.*

⚜ *கசப்பு வெளியே தெரியாமல் உள்ளே மறைவாக இருப்பின் அது வே'ம்பு.*

ஈராயிரம் ஆண்டுகள் வாழ்ந்திருக்கும் மொழி என்றால் சும்மாவா? தமிழைக் கொண்டாடுவோம்.


⚜ *வாழ்க தமிழ்!*✍

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...