புனிதம் பெற்ற கொடிக்கம்பம்!
புதுப்பாளையம்
கிராமம் திருச்செங்கோடில் இருந்து 11 கி.மீ. தூரத்தில்
உள்ளது. இங்கு 06-02-1925இல் மூதறிஞர் ராஜாஜியால்
காந்தி ஆசிரமம் நிறுவப்பட்டது. 1925,1934ஆம் ஆண்டுகளில் இங்கு
வருகை தந்த காந்திஜி, ஒவ்வொருமுறையும்
மூன்று நாட்கள் தங்கி இருந்தார்.
அவர் சர்வ மத பிரார்த்தனை
செய்த கொடிக்கம்பம் இன்றும் புனிதப் பொருளாகப்
பாதுகாக்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்,
நேரு, வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி,
சி.சுப்பிரமணியம், காமராஜர், ம.பொ.சி.,
சி.ஆர்.வெங்கட்ராமன் போன்ற
அரசியல் தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். கைவினைஞர்கள்,
காந்தி ஆசிரமம் மூலம் வேலைவாய்ப்பு
பெற்று வருகின்றனர்.
இளநீர் பருகிய மகாத்மா!
1925ஆம் ஆண்டு காந்திஜி
புதுப்பாளையம் வந்திருந்தபோது, ரத்தினசபாபதி கவுண்டரின் தோட்டத்துக்குச் சென்றார். அங்கிருந்த விவசாயிகள் செவ்விளநீரை வெட்டி அன்போடு கொடுத்தனர்.
இரண்டு இளநீரைப் பருகிய காந்திஜி, "சுவை
மிகவும் நன்றாக இருக்கிறது!' என்றார்.வேகவேகமாக மேலும் ஒரு இளநீரை
வெட்டினர். அதை வாங்க மறுத்த
காந்திஜி, "அளவுக்குமேல் சேமிப்பவன் மட்டுமல்ல; சாப்பிடுபவனும் திருடன்தான்'' என்றார்.
தமிழில் கையெழுத்து போட்ட காந்தி!
காந்திஜி 1937ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். நாகர்கோவில், நாகராஜா கோயிலில் வழிபட்ட
அவர், சுசீந்திரத்தில் உள்ள எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப்
பள்ளிக்குச் சென்றார். அங்கிருந்த பார்வையாளர் கையேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். அவரது
தமிழ் கையெழுத்து இன்றளவும் அந்தப் பள்ளியில் பொக்கிஷமாகப்
பாதுகாக்கப்பட்டு வருகிறது.
நடிக்க முடியாது!
காந்தியடிகள் பார்த்த ஒரே படம்
"ராம் ராஜ்யா' என்ற இந்திப்
படம். காந்தியடிகள் சினிமாவில் தோன்றவும் ஒரே ஒருமுறை அழைக்கப்பட்டார்.
அழைத்தவர் பிரபல இயக்குநர் வி.சாந்தாராம். காந்தியடிகளிடம், "கைராட்டையைச் சுற்றுவதுபோல் ஒரேயொரு காட்சியில் தோன்றினால்
போதும். ராட்டையின் முக்கியத்துவத்தைப் பரப்ப இது உதவும்''
என அவர் கூறினார். "நான் வெளிநாட்டில்
இருந்தபோது, ஒரு ரிகார்ட் எடுக்கச்
சம்மதித்து தவறிப்போய் ஒரு பாவம் செய்துவிட்டேன். மறுபடியும் அப்படி ஒரு பாவத்தைச்
செய்யமாட்டேன்'' எனக் கூறி கடைசிவரை
காந்தியடிகள் நடிக்க மறுத்துவிட்டார்.
நன்றி : தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக