முகலாயர்களின்
தீராத புறா காதல்
புறாக்களைப் பயிற்றுவிப்பதும் வளர்த்துப் பராமரிப்பதும் ஆதி காலத்திலிருந்தே புகழ்பெற்ற பொழுதுபோக்காக உலகம் முழுவதும் இருந்துவருகிறது. முகலாய மன்னர்களும் அதற்கு விதிவிலக்கல்ல. முகலாய அரண்மனைகளில் புறாக்கள் இனவிருத்தி செய்யப்பட்டதோடு, தூரதேசங்களிலிருந்து அவை இறக்குமதியும் செய்யப்பட்டுள்ளன. புறா வளர்ப்பில் திறமை பெற்ற ஹபிப் என்பவரும் வரவழைக்கப்பட்டுள்ளார்.
அக்பரின் புறாக்கள்
முகலாயர்களின் பூர்வீகமான மத்திய ஆசியப் பகுதியான பர்கானாவிலிருந்து அழகான சிறகுகளைக் கொண்ட புறாக்களை வரவழைத்து அக்பர் பராமரித்ததை, அவருடைய அரசவைக் கவிஞர் அபுல் பைசல் பதிவு செய்துள்ளார். பந்தயத்தில் புறாக்களைப் பறக்க விடுவதிலும் அக்பருக்கு ஈடுபாடு இருந்தது ‘அக்பர் நாமா’வில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
அபுல் பைசல் எழுதிய அயன்-ஐ-அக்பரியில், புறாப் பந்தயம், புறா இனவிருத்தி மற்றும் அரசவைப் புறாக்களின் வண்ணங்களைப் பற்றி பேசுவதற்காக ஒரு முழு அத்தியாயமே ஒதுக்கப்பட்டுள்ளது. அக்பரின் அரண்மனையில் 20 ஆயிரம் புறாக்கள் இருந்துள்ளன. அதில் 500 புறாக்கள் சிறப்பினங்களைச் சேர்ந்தவை.
புறா வித்தைகள்
பேரரசர் அக்பர் தனது முகாமை மாற்றும் போதெல்லாம் புறாக்களும் கூண்டுகளில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல், பல சிக்கலான வேலைகளைச் செய்யப் புறாக்கள் பழக்கப்படுத்தப்பட்டுள்ளன. பொதுவாக ஆண் புறா, தன் இணையைக் காதலுடன் ஒரு சுற்று சுற்றி வந்து குட்டிக்கரணம் அடிப்பது வழக்கம். தேர்ந்தெடுக்கப்பட்ட பறவைகளை வைத்து நடத்தப்பட்ட ஒரு காட்சி நிகழ்வில் 15 முறை சக்கரங்களைச் சுற்றுவது மற்றும் 70 முறை குட்டிக்கரணங்களை அடிக்கச் சில புறாக்களை முகலாயர்கள் பழக்கியுள்ளனர்.
“வேலையில் பொருந்தாத, ஈடுபாடில்லாத பணியாளர்களைக் கீழ்ப்படிய வைக்கவும், கூடுதல் உற்பத்தித் திறனும் நட்புணர்வும் கொண்டவர்களாகப் பணியாளர்களை மாற்றுவதற்கும் புறாக்களைப் பழக்கும் வேலை உதவியது” என்று அபுல் பைசல் எழுதியுள்ளார்.
செய்திகளை அனுப்புவதற்கும் புறாக்கள் பயன்பட்டுள்ளன. சில குறிப்பிட்ட இனப் புறாக்களுக்கு இதற்கென்றே பிரத்யேகமாகப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புறா அஞ்சல் சேவை 2002 வரை ஒடிசாவில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
புறாக்களுக்கு ஒரு புத்தகம்
முகலாயர் ஆட்சியில் கபூதர்நாமா (புறா புத்தகம்) என்ற பெயரில் ஓவியங்களுடன் கூடிய ஒரு புத்தகத்தையே சயித் முகமது முசாவி எழுதியுள்ளார். அவரது இன்னொரு பெயர் வாலிஹ். கபூதர்நாமா என்ற அந்தக் குறுங்காவியத்தில் 163 ஈரடிச் செய்யுள்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தக் காவியத்துக்கு உரைநடை விளக்கமும் சிறிய அளவில் எழுதப்பட்டுள்ளது. இந்தச் செய்யுள்களில் புறாக்களின் வகைகள், வண்ணங்கள் மற்றும் பண்புகளும், புறா பந்தயக் கலை பற்றிய விவரங்களும் பேசப்பட்டுள்ளன. மியான் குபான் என்பவரின் வேண்டுகோளை அடுத்து, இந்தச் செய்யுள்கள் எழுதப்பட்டுள்ளதாகப் பதிவு உள்ளது.
முகமது முசாவி வாலிஹ், இன்றைய ஈரானில் உள்ள குராசானில் பிறந்து ஹைதராபாத்துக்கு இடம்பெயர்ந்து, பிறகு தமிழகத்தில் உள்ள ஆர்க்காட்டில் குடியேறி அங்கேயே 1770-ல் காலமானவர். சேவல் சண்டை குறித்து ஒரு கவிதையையும் இவர் எழுதியுள்ளார்.
டார்வின் தொடர்பு
பரிணாமவியல் விஞ்ஞானி சார்லஸ் டார்வின் புறா விளையாட்டுகளில் ஈடுபாடுள்ளவர். அவர் வாழ்ந்த ‘டவுன்’ என்ற கிராமத்தில் புறாக்களை இனவிருத்தி செய்யும் கூட்டைப் பராமரித்தார். அக்காலகட்டத்தில் மெட்ராஸ் சிவில் சர்வீஸில் பணியாற்றிய இயற்கை விஞ்ஞானியும், இனவரைவியலாளருமான சர் வால்டர் எலியட்டுடன் தன் ஆய்வுக்காக டார்வின் தொடர்பு வைத்திருந்தார். புறாக்கள் குறித்து அபுல் பைசல் எழுதிய அத்தியாயம் பற்றி டார்வினுக்கு தெரிந்திருந்தது, எலியட்டுடனான கடிதப் போக்குவரத்தின் மூலம் தெரியவருகிறது.
“பாரசீக மொழியில் எழுதப்பட்ட அயின்-ஐ-அக்பரியில் புறாக்களைப் பற்றி எழுதப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். அது மொழிபெயர்க்கப்பட்டிருந்தால், இந்தியா ஹவுசில் (பிரிட்டிஷ் நூலகத் தொகுப்பின் ஒரு பகுதியாகத் தற்போது இருக்கும் இந்தியா ஆபிஸ் நூலகம்) தொடர்புகொண்டு கேட்கலாம்” என்று எலியட்டுக்கு எழுதிய கடிதத்தில் டார்வின் தெரிவித்திருக்கிறார்.
டார்வினின் பொக்கிஷம்
பல்வேறு இந்திய, பர்மியப் பறவைகளின் பதனிடப்பட்ட தோல்களை டார்வினுக்கு 1856-ல் எலியட் வழங்கியுள்ளார். அத்துடன் சயித் முகமது முசாவியினுடைய எழுத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் அனுப்பி வைத்துள்ளார். டார்வின் தனது நூலான The variation of animals and plants under domestication. London: John Murray, 1868 (vol. 1 pp.141 and 155) புத்தகத்தில் இந்தச் செய்தியை இரண்டு முறை குறிப்பிட்டுள்ளார்.
டார்வின் தான் சேகரித்த புறாக்களின் எலும்புக்கூடுகளையும், பதனிடப்பட்ட தோல் சேகரிப்புகளையும் 1867-ல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்குக் கொடையாக அளித்தார். அந்தச் சேகரிப்பு தற்போது இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் ‘மியூசியம் டிரெஷர்ஸ்’ என்ற பிரிவில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக