ஓர் ஆணின் பிரசவ வலி
மகனே நீ பிறந்ததும்
எங்கே இருக்கிறாய் மகனே...
பெற்றவளைவிட அதிக பூரிப்படைந்தேன்...
மூத்தவனைவிட
மூக்கும் முழியுமாய்
இருந்தாய்...
ஆண் பிள்ளை என
மூத்தவனுக்கு முணுமுணுத்த
நம் சொந்தங்கள்...
இரண்டாவதும்
ஆண் என்றதும் அப்பா மீது
இலட்சணப் பார்வை பட்டது.
நீ வளர ஆரம்பித்தாய்
நான் மலர்ந்தேன்...
நீ தவழ்தாய்
நான் நிமிர்தேன்...
உன் மழலை
என்னை மயங்கச் செய்தது
புத்தியை மழுங்கச் செய்தது...
சாதித்து விட்டோம்
என்றிருந்த என்னை
ஒரு நொடியில்
சாய்த்து விட்டாய்...
இல்லை இல்லை
சாய்ந்து விட்டேன் மகனே...
ஊர் கண், உறவு கண்
நல்ல பார்வை, கெட்ட பார்வை
பட்டதோ உன்மேல்
வினை தொட்டதோ என்மேல்...
வினை
நன்றாய்தான் இருந்தாய்...
மூத்தவனைவிட எதிலும்
முனைப்பாய்...
பெற்ற எங்களைவிட
உன்னுடன் பழகும்
எல்லாரையும் அப்போதே
இனம் கண்டாய்...
குரல் கேட்டதும்
ஓடி வருவதும்...
ஆள் வாடை பட்டதும்
ஆடி வருவதும்...
மகனே உன் அருகிலேயே
என்னை இருக்க வைத்தாய்...
என்னை இறுக வைத்தாய்...
அதெப்படி...
என்னை உனக்குத் தெரியும்?
என் வாடை உனக்குப் புரியும்?
விவரமானாய் நீ...
வீட்டினுள் நான் நுழைந்ததும்
எங்கிருந்தாலும் ஓடி வருவாய்...
கை இரண்டையும் தூக்கிக்கொண்டு
ஏங்கி வருவாய்... கண்கள் தானே பனிக்கும்
நான் வீட்டினிலேயே இருந்தால்
என்னைவிட்டு விலக மாட்டாய்
வேறெவரிடமும் ஓட மாட்டாய்...
உன்னை ஒவ்வொரு கணமும்
நினைக்கையில் கடவுள் மீது
பயமும் பக்தியும் கூடியது...
வீட்டில் அத்துணைபேருக்கும்
முன்னால் விழித்திடுவாய்...
இரவில் அவர்களுக்குப் பின்தான்
தூங்குவாய்...
நாம் தூங்கும்போது
நான் ஓர் அறை
நீ உள்ளறை
நான் தூங்கி விட்டேனா என
நீ பார்ப்பாய்...
நீ தூங்கி விட்டாயா என
நான் பார்ப்பேன்...
நம்மை யாரும் பார்க்க மாட்டார்கள்...
கட்டிலிலிருந்து
தலையை உயர்த்திப் பார்ப்பாய்...
தலையை உயர்த்திப் பார்ப்பாய்...
நான் பார்த்ததும்
கவிழ்ந்துகொண்டு குலுங்குவாய்
கவிழ்ந்துகொண்டு குலுங்குவாய்
கொலுசொலி சினுங்கும்...
நான் பார்வையை எட்டிப் போடுவேன்...
நீ கவிழ்ந்து கொள்வாய்
மகிழ்ச்சியில் குலுங்குவாய்
மெத்தை அதிரும்...
உன்னை பார்க்கும் பொழுதெல்லாம்
இவ்வாறுதான் நினைக்கத் தோன்றும்...
முன் ஜென்மத்தில்
இவ்வாறுதான் நினைக்கத் தோன்றும்...
முன் ஜென்மத்தில்
நான் பிள்ளை நீ அப்பா
இந்த ஜென்மத்தில்
நீ பிள்ளை நான் அப்பா
எப்போது வருவாய்...
வந்துவிடு சீக்கிரம்
நொந்துவிடும் என் மனம்
உன் வருகைக்காகக் காத்திருக்கிறேன்
வருடமெல்லாம்...
நீ வந்தால்தான் வசந்தமெல்லாம்...காத்திருப்போர் பட்டியலில்
உன் அப்பா
மம்சை செல்வகுமார்
(குறிப்பு - மூளையில் கட்டியென வைத்தியம் செய்தோம். ஒன்றரை வயதிலேயே அவனைப் பறிக்கொடுத்தோம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக