பயணம் புதிது
ஆண்டாள் பிறந்த பூமியான திருவில்லிபுத்தூரிலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் மம்சாபுரம் என்கிற அழகிய கிராமம் வரும். இந்த ஐந்து கிலோ மீட்டர் என்பது கரடு முரடான காட்டு வழிபோலத்தான் இருக்கும்.பாதையின் இரு மரங்கிலும் புளிய மரங்கள் புடைசூழ, இருளும் நிலவும்போல நிழலும் வெயிலுமாகக் காணல் நீர்நெளிய பாதையும் நெளிந்து செல்லும். பகலில் பயணிக்கும் யாவரும் தனித்துச் செல்ல சிறிது அச்சப்படுவர். காரணம் வழியெங்கும் எப்போதாவது ஒருவர் வருவார் போவார், மற்றபடி யாரையும் காண இயலாது. அதேற்போல் இரவுவேளையில் பெரும்பாலும் அவ்வழியே செல்வோர் யாரையும் காணமுடியாது. காரணம் ஐந்து கிலோ மீட்டரும் இருளில் மூழ்கி கிடக்கும். ஊதகாற்று மட்டும் உலவும்.
வழி நெடுக பனைமரம், பசுந்தளிர், தென்னை மரம், ஒன்றுவிட்டு ஒன்றாய் புளியமரம் இவை அனைத்தையும் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பகலில் பயணம் செய்வோர் அதுவும் அதிகாலையில் பயணம் செய்வோரின் கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்,
பரவிக்கிடக்கும் பசும் புல்வெளிகளில் நமது தேசிய பறவையான மயில்கள் கூட்டம் கூட்டமாக இரைதேடி அங்காங்கே உல்லாசமாய் திரியும். அதன் அகவு ஒலியும் மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் குளிர்காற்றும் அதிகாலைப் பொழுதை ரம்மியப்படுத்தும்.
இரண்டு கிலோ மீட்டர் கடந்ததும், கல்மண்டபம் என்றொரு இடம் வரும். அந்தக் காலத்தில் ஆண்டாள் கோயிலிருந்த யானையை இரவு வேளையில் இங்குவந்துதான் கட்டிப்போடுவார்களாம். கற்களால் மட்டுமே அந்த மண்டபம் எழுப்பப்பட்டிருக்கும். சிறியதுதான். பயணக் களைப்பில் வருவோர் போவோரெல்லாம் சற்று களைப்பாரட்டும் என்ற உயர்ந்த நோக்குக்காக இன்று அந்த மண்டபம் யானை இழந்து நிற்கிறது. வெட்டவெளியிலிருந்து வீசும் காற்றும், சுற்றிலும் இருக்கும் பனைமரத்தின் ஓலை அசையும் இசையாகக் கேட்க, சற்று அமர்ந்து செல்வர், நடைபயணமும் சைக்கிள் பயணமும் மேற்கொண்டவர்கள். சமீபத்தில் வெளிவந்த பூ திரைப்படத்தின் முகப்புப் பாடலை இந்த மண்டபத்தைச் சுற்றித்தான் எடுத்தார்கள். அவ்வளவு எளிமையான, அருமையான இடம் இந்தக் கல்மண்டபம்.
மம்சாபுரம்
மம்சாபுரம் எல்லைக்குள் நுழையும்போது நாம் முதலில் பார்க்கும் இடம் ஆரம்ப சுகாதார மையம். இதுதான் நாம் முதலில் காணும் ஆள் நடமாட்டம் உள்ள இடம். இனி அடுத்தடுத்து சிறு சிறு ஊர்களாய் மம்சாபுரம் விரிவடையும்.
முதலில் வருவது காந்திநகர். அதற்கடுத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் வெறும் வயல்வெளிதான். 15 மீட்டர் அளவுக்குத்தான் தார்ச்சாலைகள் நம்மை ஊருக்குள் அழைத்துச் செல்லும். அதுவும் முழுமை பெறாமல் குண்டும் குழியுமாய் இருக்கும். பேருந்தில் வந்தாலும், வேறெந்த வாகனத்தில் வந்தாலும் இந்த ஒரு கிலோ மீட்டர் பயணத்தில் உடம்பு நோகத்தான் செய்யும்.
வயல்வெளியின் ஓரமாய் ஊரின் கழிவுநீரும், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையால், சுற்றியுள்ள கம்மாய் நிரம்பியதுபோக எஞ்சிய நீரும் கலந்தோடும் சிறு ஓடை இருக்கும். இந்த ஓடையிலிருந்து வெளியேறும் மழைநீர் திருவில்லிபுத்தூரில் இருக்கும் தெப்பக்குளத்தில் நிரம்பி, மக்களின் அன்றாட தேவையைச் சமாளிக்க பெரிதும் உதவுகிறது.
மம்சாபுரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது
சிறப்புப் பேரூராட்சியின் அந்தப் பலகை நம்மை வரவேற்கும். மனிதர்களின் வாழ்வின் இறுதிநிலை இடமான இடுகாடுதான் மம்சாபுரம் ஊரின் முகப்பு. ஆம், இடுகாட்டைக் கடந்துதான் மம்சாபுரம் ஊருக்குள் செல்லமுடியும். மெயின் ரோட்டின் அருகிலேயே இடுகாடு இருப்பதால், இதற்கென்று தனியாகப் பேருந்து நிறுத்தமும் உண்டு. அதனைக் கடந்தால் கீழூர் வரும். அதனைக் கடந்தால், மம்சாபுரத்தின் மையப்பகுதி.
பேருந்து நிறுத்தம்
ஊர் மொத்தத்திற்கும் இந்த இடம்தான் பொது சந்திப்பு. இதன் நாலாபுறமாய் சாலைகள் பிரிந்து செல்லும். 1 கிலோ மீட்டருக்கு மேற்கு விரிந்து செல்லும், 1கிலோ மீட்டருக்கு வடக்கே பாதை பிரிந்து செல்லும், 0.5 கிலோ மீட்டருக்குத் தெற்குத் தெருவாகப் பிரியும்.
மேற்கே செல்லும் பாதை நீண்டுக்கொண்டே சென்று மேலும் மூன்று கிலோ மீட்டர் பயணத்தை உள்வாங்கிக்கொண்டு மேற்குத் தொடர்ச்சியின் அடிவாரத்தில்போய் முடியும். இதோடு மனிதர்கள் வாழும் நிலப்பரப்பின் எல்லை முடிவடையும்.
வடக்கே நீண்டு செல்லும் பாதை, மக்கள் வசிப்பிடம் போக, வயல்வெளி வரும். அதுவும் விரிந்துகொண்டே சென்று மேற்குத் தொடர்ச்சி மலையின் இன்னொரு பக்கத்தில் போய் முடியும்.
இராஜபாளையத்துக்கு வழி
பேருந்து நிறுத்தத்திலிருந்து தெற்கே செல்லும் பாதை இராஜபாளையம் என்னும் காட்டன் சிட்டிக்குச் சென்று, சங்கரன்கோவில், குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, நாகர்கோவில் போன்ற ஊர்களுக்குச் செல்ல வழிவகுக்கும்.
முகம்மதுசாகிப்புரம்
மத்திய அரசின் கெஜட்டில் மம்சாபுரத்திற்கு முகம்மதுசாகிப்புரம் எனப் பெயரிடப்பட்டிருக்கும். இன்றும் தபால் அலுவலகத்தில் இந்தப் பெயரில்தான் முத்திரை பதிக்கிறார்கள்.
முகப்பு இடுகாடாய் போயிற்றே, ஊருக்குள் எப்படி இருக்குமோ என்ற எண்ணம் வேண்டாம். ஏனெனில், மம்சாபுரம் ரொம்ப நல்ல ஊருங்க. எந்தக் காலத்துக்குப் போனாலும், அதாவது கோடைக்காலம், குளிர்காலம் இப்படிப்பட்ட காலங்களில் இங்கு வருபவர்களைப் பாந்தமாய், பாசமாய் பார்த்துக்கொள்ளும் பவ்வியமான ஊருங்க. அதிகாலையும் அந்திமாலை தொட்டு, இரவு முழுவதும் இதமான காற்றும், மென்மையான குளிருமாய் ஊரே அழகுற இருக்கும்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது இந்த மம்சாபுரத்தில் முஸ்லிம் தவிர்த்து எல்லா இன மக்களும் ஒன்றிணைந்து வாழ்கிறார்கள். மத்திய அரசு இவ்வூருக்கு வைத்த பேருக்கும் இங்கு வசிப்பவர்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால் முன்னொரு காலத்தில் அதாவது நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னர், இங்கே முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கலாம். அல்லது முஸ்லிம் ஆளுமைக்குள் இருந்திருக்கலாம்.
மம்சாபுரத்தில் வாழும் மக்களுக்கிடையே அப்பப்ப சண்டை சச்சரவு எழுந்தாலும், நாளடைவில் மாறிபோகும். சாதி பாகுபாடின்றி வாழ்ந்தாலும், சிற்சில உள்பூசல்கள் அவ்வப்போது எழத்தான் செய்யும்.
காதல் புகா இடமுண்டோ?
ஊருக்குள் இளவட்டங்களுக்கிடையேயும் முதிர்ச்சிவடைந்தவர்களிடையேயும் காதல் பித்து வரும் போகும். சிலரது காதல் சீண்டப்பட்டு சின்னாபின்னாமாகவும் ஆகியிருக்கிறது. சிலரது காதல் அதிசயமாய்ப் பூத்து, பகைமை மறந்து பலரையும் இணைத்து வைத்திருக்கிறது.
சாதிவிட்டு சாதி காதலிப்பது, கல்யாணம் செய்துகொள்வது, பெத்தவங்க மனசு மாறுவாங்க என்கிற நினைப்பில் ரொம்ப தைரியமாய் உள்ளூரிலேயே இணைந்து வாழ்வது, இப்படி இன்றும் இங்கே காதல் வாழ்வு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் பழைமைவாதிகளான பெற்றோர்கள் மாறியதாய் தெரியவில்லை. இன்னும் பழைய பஞ்சாங்கமாகத்தான் இருக்கிறார்கள்.
தெரு எங்கும் திருவிழா
திருவிழாக் காலங்களில் ஊரே கூத்தாடும். ஒரு வாரம், பத்து நாள்கள் எனத் திருவிழாக்களின்போது குடும்பம் குடும்பமாய் கூடி கும்மாளமிடுவர். இந்த நாள்களில்தான் வெளியூருக்குப் போயிருந்தவர்கள் ஒன்றுகூடுவார்கள். நல்லது பொல்லது சமைப்பார்கள். துணி மணிகளை எடுப்பார்கள். எல்லார் முகத்திலும் மகிழ்ச்சி தாண்டவமாடும்.
அதேபோல் பணக்காரப் பொண்ணுகளை இந்தத் திருவிழாக் காலங்களில்தான் பார்க்க முடியும். ஒவ்வொரு பெண்களும் அழகுனா அழகு அவ்வளவு அழகாய், சினிமா நடிகைகள் தோற்று பளபளப்பாய் இருப்பார்கள். அந்தக் கிராமத்தில் அவ்வளவு உசத்தியான உடைகளை உடுத்தும் லட்சணமான பெண்களை வேறெங்கும் பார்க்க முடியாது. அவர்கள் அனைவரும் தாய் தகப்பனுக்குக் கட்டுப்பட்டவர்கள். அவர்கள் சொல்லுக்கு அடங்குவார்கள்.
கோழி எப்படி தன் குஞ்சுகளைப் பருந்துவிடமிருந்து காக்கிறதோ, அப்படித்தான் பொத்தி பொத்தி பெற்றோர்கள் கவனமாக வளர்ப்பார்கள். இளவட்ட ஆண்களும் சரி, கூடவே படிக்கிற பசங்களும் சரி, தம்மிடம் பேச மாட்டாளா என ஏங்கி இருந்த காலமும் உண்டு. அப்படிபட்ட தருணத்தில்கூட அந்த வீட்டுப் பெண்கள் காதல் வயப்பட்டு, பெற்றோரைக் கலங்கப்படுத்தியதில்லை.
திருவிழாக் காலங்களில்தான் கோயிலுக்கும், விளையாட்டு நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதற்கும் அவர்கள் அழைத்து வரப் படுவார்கள். அந்த வேளையில் இளைஞர்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கும். ஆளவட்டம் போட்டு அலைவார்கள், பேசுவதுபோல பாவணை செய்வார்கள். லந்து அடிப்பார்கள், சிந்து வடிப்பார்கள். அவர்களது காந்த விழிகளிடமிருந்து பெண்களைக் காப்பற்ற அந்தப் பெற்றோர்கள் படாது பாடு படுவார்கள்.
இம்மாதிரி பிள்ளைகளும் என்றைக்கும் இல்லாத திருநாளாய் அன்றைக்கு ரொம்பதான் பவுசு காட்டுவார்கள். ஆனால் இரவு வேளையில் சாமி வீதிஉலா வரும்போது சிலம்பம் ஆடி வரும் வாலிபர்களைத் தங்களுடைய வீட்டு மாடிகளிலிருந்து ஓரக்கண்ணால் ரசிக்கத் தவறமாட்டார்கள். ரசிப்பதோடு மட்டுமல்லாமல், ஆணழகர்களுக்கு மார்க்கும் போடுவார்கள். அதோடு சரி அவர்களது ரசனையும் லயப்பும், விடிந்தால் மாறிவிடும்.
சாரி ஓட்டம்
திருவிழாவில் களைகட்டுவது வெட்டுக்குதிரை என்கிற சாரி ஓட்டம்தான். அன்றைக்குச் சாமியை வீதி உலா கொண்டுவரும்போது, விடலை பசங்க ரொம்ப தெம்பாய் இருப்பார்கள். பூசாரியையும் சாமியையும் உண்டு இல்லை என ஆக்கிவிடுவார்கள். அலங்கரிக்கப்பட்ட சாமி, குதிரை சப்பரத்தில் ஒய்யாரமாய் எழுந்தருள, பூசாரியும் உடன் அமர்ந்திருப்பார். இந்தப் பக்கம் பத்துபேரு, அந்தப் பக்கம் பத்துபேரு பிடித்துக்கொண்டு சப்பரத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுவார்கள். ஒரே ஓட்டமாய் ஓடினாலும் பரவாயில்லையே... ஓடிய தெருக்களிலேயே மீண்டும் மீண்டும் பின்புறமாக வருவதும் போவதுமாக அலக்களிப்பார்கள். பார்ப்பதற்குக் கண்கொள்ள காட்சியாக இருந்தாலும், 'அம்மன் காத்திடுவாள்' என்கிற தைரியத்தில் பூசாரி கொலையப் பிடித்து உட்கார்ந்திருப்பார். எல்லரது தோள்பட்டைகளும் கண்ணிபோய் ரணப்படும். அன்றைக்கு மட்டும் சாமி கோயில் வந்து சேர, கோழி கூவிரும்.
ஒவ்வொரு நாள் திருவிழாபோதும் ஒவ்வொரு தலைக்கட்டுகாரர்களும் கோயில் பொறுப்பை எடுத்துக்கொண்டு சிறப்பாகச் செய்வார்கள். இதுபோக ஊர்மகமை வேறு தனிச்சிறப்பாக இருக்கும். அம்மன் வீதி உலா வரும் சம்பரம், இன்னும் பிற வாகனங்களை நல்லமுறையில் வடிவமைத்து, வண்ணம் தீட்டி இருப்பார்கள். இரவு வேளையில் பளிச்சிடும் சீரியல், விளக்கு வெளிச்சத்தில் அலங்கரிக்கப்பட்ட அம்மன், வீதி உலா வரும்போது பார்ப்போர் கையெடுத்துக் கும்பிட்டு, கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். அவ்வளவு பக்தியாய் இருக்கும் அந்த நாள்கள்.
பனைத்தொழில்
மம்சாபுரத்தில் வசிக்கும் அதிகம்பேர் நாடார் இன மக்கள்தான். இவர்களுக்குள் தெருத் தெருவாய் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு வகையறாக்களாய் இணக்கமாய் வாழ்கிறார்கள். வடக்குத் தெருவில் வசிப்பவர்கள் சிவந்திபட்டி என தங்கள் பகுதிக்குப் பெயரிட்டுள்ளனர். இவர்களது தொழில் பெரும்பாலும் பனைமரம் ஏறுதல், கருப்பட்டி செய்தல், பதநீர் விற்றல் இப்படியாக இருக்கும். சமீபத்தில் இவர்களெல்லாம் பிளாஸ்டிக், இரும்பு வியாபாரத்தில் முனைந்திருக்கிறார்கள்.
காரணம், தென்னைய வளர்த்தவன் தின்னுட்டு சாவான்; பனையை வைத்தவன் பார்த்து சாவான் என்பதுபோல, பனைத் தொழில் என்பது லேசுபட்டதில்லையே. அந்தத் தொழில் மிக உயர்ந்த தொழில்தான். நாட்டுக்கும் வீட்டுக்கும் வாழும் மக்களுக்கும் பயனுள்ள மரம் பனைமரம்தான். ஆனால் அதனைக் கட்டிக் காப்பதும், அதனைப் பயன்படுத்தித் தொழில் புரிவதும் லேசுபட்ட காரியமல்ல. மரமேறி மரமேறி அவர்கள் கை கால்கள் காய்த்து போயிருந்தாலும் அவர்களது மனம் பசு மாதிரி.
இணையதளத்தில் மம்சாபுரம்
சிவந்திபட்டி பகுதியில் வாழும் மக்கள்தான் புரட்டாசி மாதத்தில் உலகமே மெச்சுகிற அளவுக்குத் திருவிழா நடத்தி, இன்டர்நெட் வரைக்கும் அதனை விரிவுபடுத்தியிருக்கிறார்கள். ஆம், இணையதளத்தில் மம்சாபுரம் என தட்டச்சு செய்தாலே அங்கே விரிந்து கிடக்கும் படங்கள் அனைத்தும் மம்சாபுரத்தை இன்னும் மணக்கச் செய்யும்.
ஊர் பள்ளி
சிவந்திபட்டி மகமைக்குட்பட்ட பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இங்கு சாதி, மதம் பேதமில்லாம் எல்லா பிள்ளைகளும் படிக்கிறார்கள். இதன் ஆரம்ப காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் நேரில் வந்து மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். அதேபோல் எம்.ஜி.ஆர். இங்கு வந்து நாடகம் ஒன்று நடத்தி, அதன்மூலம் வசூலான பணத்தை இந்தப் பள்ளிக்காக உதவியிருக்கிறார். இந்தப் பள்ளியில் படித்த எத்தனையோ பேர், வெளிநாடுகளுக்குச் சென்று இன்று பெரிய பெரிய கம்பெனியில் இருக்கிறார்கள். சிலர் அரசியலில் நுழைந்து பெரிய பெரிய பதவி வகிக்கிறார்கள்.
ஊரைச் சுற்றி...
மம்சாபுரம் ஊரைச்சுற்றி யானைக் கூட்டம் பரந்து விரிந்து இருப்பதுபோல் மேற்குத் தொடர்ச்சி மலை விரிந்திருக்கும். இதுதான் ஊரை அரணாய் ... ஒரு தாயைப்போல பார்த்துக் கொள்கிறது. எந்த வித இயற்கை பேரழிவு இந்த ஊருக்குள் வந்ததில்லை. முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் மலையிலிருந்து வடிந்து வரும் மழை நீரைச் சேமிக்க சிறுசிறு கம்மாய்களாய் கட்டியுள்ளனர். மலையில் மழை பெய்தால் ஆறு, கிணறு, ஓடை என எங்கும் நீர் கரைபுரண்டோட ஆங்காங்கே வண்ணமலர்கள் பூத்தாடும். சில நேரங்களில் மலையிலிருந்து விநோதமான ஜந்துக்கள், மலைக்க வைக்கும் மலைபாம்புகள் தண்ணீரோடு தண்ணீராய் ஊருக்குள் வந்து மக்களைப் பீதிகொள்ளச் செய்யும்.கம்மாய் நிறைந்ததும் விதவிதமான பறவைகள் பறந்து திரியும். நிறைய மீன்கள் சலுகை விலைக்குக் கிடைக்கும். கிணறு நிரம்பி வழிவதால் சுண்டான் நண்டான் எல்லாம் நீச்சல் கற்றுக்கொண்டு, ஆனந்தப்படுவர். இப்படிப் பட்ட காலத்தில் வடிந்தோடும் தண்ணீரைச் சேமித்து வைத்து விவசாயத்திற்கு உதவும்படி செய்திருக்கிறார்கள். இன்றும் இந்தக் கம்மாய்கள் நிறைந்தால்தான் ஊருக்குள் தண்ணீர் பஞ்சம் தீரும். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைதான் இங்குள்ள விவசாயிகளின் வாழ்வாதாரமாய் இருந்து வருகிறது.
மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வீசும் தூயக் காற்றும், மூலிகை மணமும் அவ்வூர் மக்களை எந்த நோக்காடும் எதுவும் செய்யாதுபடிக்குக் குணப்படுத்துகிறது. செண்பகா நீர்வீழ்ச்சி, சறுக்காம்பாறை, காட்டழகர் கோயில், செண்பகத்தோப்பு இன்னும் பிற அரிய இடமெல்லாம் அங்குதான் உள்ளன. இந்த மலையில் விளைந்த மூலிகையைத்தான் ராமர்பிள்ளை மூலிகைப் பெட்ரோல் செய்ய பயன்படுத்தினார். இன்னும் அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை. வெளிநாட்டவர்போல் நாமளும் ஆராய்ச்சியில் இறங்கி செய்தால், நம் நாட்டுக்கும் நல்லதொரு பயன் கிடைக்க வழிப்பிறக்கும். இந்த இடங்களுக்கெல்லாம் சென்றுவர கண்டிப்பாக துணிவு வேண்டும், அவ்வளவு திகிலாய் இருக்கும்.
(தொடரும்)