17 செப்டம்பர், 2013

பழமொழியைப் பகிர்வோம்!

“சொறிந்து தேய்க்காத எண்ணெய்யும்,
பரிந்துகூறாத விருந்தும் பயன்தராது”
என்பது பழமொழி.
முற்காலத்தில் எல்லாம் சனிக்கிழமை தோறும் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டுமென்று சொல்வார்கள். எண்ணெய்ச்சத்து உடம்பிற்குவேண்டும். அப்பொழுதுதான் மேனி மினுமினுப்பாக இருக்கும். குறிப்பாக, தலைமுடி அதிகம் இருப்பவர்கள் முடிக்காம்பு வழியாகத் தலைக்கு எண்ணெய் சேர்ந்து குளிர்ச்சியை உண்டாக்கவேண்டும் என்பதால், கைகளால் நன்கு சொறிந்து, அழுத்தித் தேய்க்கச் சொல்வார்கள்.
மேலோட்டமாகத் தேய்த்தால் உள்ளே எண்ணெய் சென்று சேராது, அதனால் பலன் நமக்குக் கிடைக்காது. சிலர் அவசர அவசரமாகக் ‘காக்கைக் குளியல்’ குளிக்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படும். அவசர வேலையின் காரணமாக அப்படிக் குளிப்பார்கள். தலையில் மட்டும் எண்ணெய்யைத் தேய்த்துக்கொண்டு குளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
எண்ணெய்ச்சத்து உடலில் இருந்தால்தான் தோலில் வறட்சி ஏற்படாது, சுருக்கம் ஏற்படாது, அரிப்பும் இருக்காது. அப்படிப்பட்ட எண்ணெய் நம் உடலுக்குள் செலுத்துவதற்குமசாஜ் செய்தல்’ என்று சொல்வார்கள். தலையில் எண்ணெயைத் தேய்க்கும்பொழுது அழுத்தித் தேய்க்கவேண்டும், சொறிந்து தேய்க்கவேண்டும். எண்ணெயை உடம்பில் மற்ற பகுதிகளைக் காட்டிலும் தலையில் தேய்ப்பதே முக்கியத்துவம் வாய்ந்தது. எனவேதான் சொறிந்து தேய்க்காத எண்ணெய் சுகத்தைக் கொடுக்காது’ என்றார்கள்.
பரிந்து ஊட்டாத விருந்தால் பலன் இல்லை என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். சிலர் நம்மை விருந்திற்கு அழைப்பார்கள். நாம் அவர் வீட்டிற்குச் சென்றால், கூட்டம் அதிகமாக இருக்கும். நம்மை அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். நம்மைக் காட்டிலும் கொஞ்சம் உயர்ந்த நிலையில் இருப்பவர்களை அவர்கள் விழுந்து விழுந்து உபசரிப்பார்கள். உடனே நமக்குக் கோபம் வரும். அதை அடக்கிக்கொண்டு அவர்கள் முன்னால் நாம் அமைதியாக இருப்போம்.
இப்படி ‘மதியாதார் வீட்டிற்கு நாம் ஏன் வந்தோம்’ என்று மனதிற்குள் அசைபோட்டுப் பார்ப்போம். எனவேதான், ‘மதியாதார் தலைவாசல் மிதியாதே’ என்று அவ்வை அன்றே சொல்லி வைத்தார். இருந்தாலும் கட்டுப்படுத்திக்கொண்டு விருந்தை உண்டுவிட்டு வீட்டிற்கு வந்துவிடுவோம்.
விருந்து வைக்க நினைப்பவர்கள் வீட்டிற்கு வந்தவர்களைப் பரிந்து உபசரிக்க வேண்டும். பக்கத்தில் நின்றுகொண்டு ‘இதைச் சாப்பிடுகிறீர்களா, அதைச் சாப்பிடுகிறீர்களா’ என்று பலகாரங்களை எடுத்து எடுத்து வைக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் மனம் திருப்திப்படும். ஏனோ, தானோ என்று நடந்துகொண்டால் இதயம் புண்படும். இந்தக் கருத்தையே பழமொழி வாயிலாக முன்னோர்கள் நமக்குப் பதித்துவைக்க விரும்பி, “சொறிந்து தேய்க்காத எண்ணெயும், பரிந்து அளிக்காத விருந்தும் பயனில்லை” என்று சொல்லி வைத்தார்கள்.
‘நாட்சென்ற கொடை நடை கூலியாகும்’ என்பது ஒரு பழமொழி.
ஒரு சிலர் 'கொடை வள்ளல்' என்று பெயர் எடுத்துக் கொண்டிருப்பர். ஆனால் கொடுக்கும் குணம் ஓரளவுக்குத்தான் இருக்கும். யாரேனும் உதவி கேட்டால் 'நான் கொடுப்பேன்' என்று மேடைகளில் சொல்வார்கள். பலர் கூடுகிற இடத்தில் விளம்பரப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் உதவி கேட்டால் அவர்களை அலைய விடுவார்கள். "திங்கட்கிழமை வாருங்கள் பணம் தருகிறேன்" என்பார்கள். சென்று கேட்டால், "அடுத்த திங்கட்கிழமை வாருங்கள்" என்று ஒத்திப்போடுவார்கள். அடுத்த திங்கட்கிழமை சென்றால், "வரும் வியாழக்கிழமை வாருங்கள்" என்பார்கள். அவர்கள் சொன்ன நேரத்திற்குச் சென்றுபார்த்தால் வெளியூருக்குச் சென்றிருப்பார்கள். அங்கிருந்து தொலைபேசிமூலம் தொடர்புகொண்டால், "வேலை நிமித்தமாகச் சென்னை வந்துவிட்டேன். வந்ததும் பார்க்கிறேன்" என்றும் சொல்வார்கள்.
இப்படியே நாளும் பொழுதும் ஓடிவிடும். நன்கொடை கேட்க வந்தவர் சலித்துப் போய்விடுவார். பிறகு, என்றைக்காவது ஒருநாள் அவர் உதவி செய்தாலும் அதனால் பலன் கிடைக்காது, அவசரத் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள இயலாது. எனவேதான், நாட்சென்ற நன்கொடை நடை கூலியாகக் கருதப்படுகிறது என்று சொல்லி வைத்தார்கள்.
நன்றி : தினத்தந்தி

படித்துச் சுவைத்தது!

உதவி செய்வதே உயர்ந்த பக்தி!
அயோத்தி ராமர் கோயில் திருவிழா கோலாகலமாக நடந்துகொண்டிருந்தது. ராம பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். அப்போது பக்தர்களின் மத்தியில் ஒரு தேவன் தோன்றினான். அவன் கையில் ஒளிவீசும் பொன் தட்டு ஒன்று இருந்தது.
யார் உண்மையான ராம கைங்கர்யம் செய்பவரோ அவர்களுக்கே இந்தப் பொன் தட்டு சொந்தம். உண்மையான ராம பக்தர் இந்தத் தட்டைத் தொடும்போது அது மேலும் ஒளி பொருந்தியதாக மாறும். அதுவே மற்றவர்கள் தொட்டால் ஒளியிழந்து பித்தளையாகி விடும்” என்று கூறி, அந்தப் பொன் தட்டை ராமர் பாதத்தில் வைத்துவிட்டு மறைந்து விட்டான்.
தங்களுக்குத் தெரிந்தே பல குற்றங்களைச் செய்தவர்கள் தாமாகவே விலகிக்கொண்டனர். ஆனால் பெரும் செல்வந்தர்கள், ‘ஆயிரக்கணக்கானவர்களுக்கு அன்னதானம் செய்யும், தான தருமங்கள் செய்யும் நம்மைவிடச் சிறந்த ராம பக்தன் எப்படி இருக்கமுடியும்என்ற எண்ணத்தில் அந்தப் பொன் தட்டைத் தொட்டனர். அது அப்போதே ஒளியிழந்து பித்தளையானது. அர்ச்சகர்கள்முதல் ஆசை விடாதவர்கள்வரை அனைவரும் அதனைத் தொட்டுப் பார்த்தனர். எவருக்கும் அது கிடையாது என்பது தெரிந்து போயிற்று.
அந்த ஊரில் ஏழை விவசாயி ஒருவர் இருந்தார். அவர் அன்றைய தினம் உழவுக்காகக் கலப்பையுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒருவர் வழியில் மயங்கிக் கிடந்தார். அவர் பட்டினியால் மயக்கம் அடைந்திருப்பதை அறிந்த உழவன், தன் வீட்டிற்கு அவரைத் தூக்கிச் சென்று, உணவு அளித்தார்.
பின்னர் அந்த வழிப்போக்கனை ஓய்வெடுக்க கூறிவிட்டு, உழவுக்காகச் செல்ல புறப்பட்டார். ஆனால் வழிப்போக்கனோ, அந்த விவசாயியை விடவில்லை. “தாங்கள் என்னுடன் அயோத்தி கோயிலுக்கு வரவேண்டும். அங்கு ஓர் அதிசயம் உள்ளது. அதனைத் தாங்கள் பார்க்க வேண்டும்” என்று அழைத்தார்.
ஐயா! எல்லாக் கோயில்களிலும் ஓர் அதிசயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் எனக்கு உழவுத் தொழில்தான் தெய்வம். அதைத் தவிர்த்து ராம பகவானை எண்ணவோ, வழிபடவோ எனக்கு நேரம் இல்லை. நான் இதுவரை கோயிலுக்குச் சென்றதில்லை. ராமநாமம் ஜபம் அறிந்தது இல்லை. வழிபாட்டு முறையும் நான் அறியவில்லை. நிலம் காயும் முன் நான் உழவு செய்ய வேண்டும்” என்று கூறி மறுத்தார் விவசாயி.
ஆனால் எப்படியோ வற்புறுத்தி விவசாயியைத் தம்முடன் ராமர் கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டார் வழிப்போக்கன்.
அங்குச் சென்றதும், ‘இந்த ஏழை விவசாயியை அந்தத் தட்டை தொட அனுமதிக்க வேண்டும்என்று, கோயில் அர்ச்சகரிடம் வழிப்போக்கன் கேட்டுக் கொண்டார்.
அங்கிருந்தவர்கள் விவசாயியின் கந்தலான உடையையும், தோற்றத்தையும் கண்டு விலகினர். ‘பல தான தர்மங்கள் செய்த நமக்கே அந்தத் தட்டு சொந்தமில்லை. நெற்றியில் திருநாமம்கூட இல்லாத, தனக்கே அடுத்த வேளை உணவு இல்லாத இந்த ஏழை விவசாயிக்கா அது கிடைக்கப் போகிறதுஎன்று செல்வந்தர்கள் எண்ணிக்கொண்டனர்.
ஆனால் அடுத்த சில நொடிகளில் அங்குக் கூடியிருந்த அனைவரும் அதிர்ச்சியின், ஆச்சரியத்தின் எல்லையில் நின்றுகொண்டிருந்தனர். ஆம்! ஏழை விவசாயி தொட்டதும் பித்தளையாக இருந்த அந்தத் தட்டு, பொன் தட்டாக மாறி முன்னிலும் கூடுதலாக ஒளிவீசியது.
ஏழை விவசாயியுடன் வந்திருந்த வழிப்போக்கன் மறைந்திருந்தார். வந்தவர் ராமர் என்பதை அனைவரும் அறிந்துகொண்டனர். அங்கு ராம நாமம் திக்கெட்டும் திகைக்கும் வகையில் முழங்கத் தொடங்கியது.
பணம் செலவழிப்பதால் அவர் தர்மவான் ஆக முடியாது. அன்னதானம் செய்வதால் அவர் அறம் செய்தவர் ஆக முடியாது. நெற்றியில் திருமண் இட்டவர் எல்லாம் ராம பக்தரும் இல்லை. பலர் பகட்டுக்காகவும், நானும் பக்திமான் என்பதை வெளிக்காட்டுவதற்காகவும், பெருமைக்காகவும் இறை வழிபாட்டில் ஈடுபடுகின்றனர். ஆனால் ஏழைகளின் தொண்டே இறைவனின் தொண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.

ஒருவர் துன்பப்படும்போது அவருக்குத் துணை நின்று, அவர் உயிர் காப்பதே ராம கைங்கர்யம். உதவி செய்பவர் ஏழையாக இருக்கலாம். நெற்றியில் திருமண் இடாதவராக, பஜனை, ஜெபம், வழிபாடு அறியாதவராக இருக்கலாம். இருப்பினும், ஒருவர் துன்பப்படுவதைப் பார்த்து துயர் துடைக்க முன்வருவாரே ஆயின், அவரே உண்மையான உயர்ந்த பக்தர்.
- நன்றி : தினத்தந்தி

16 செப்டம்பர், 2013

நீதிக் கதைகள்

குருவியும் குரங்குகளும்
காட்டில் குளிர்காலம். அந்தக் காட்டில் வாழ்ந்துகொண்டிருந்த குரங்குகள் தாளமுடியாத குளிரால் தவித்துத் தத்தளிக்கும்போது, அவை இருந்த இடத்தில் ஒரு மின்மினிப் பூச்சி வந்து சேர்ந்தது. உடனே குரங்குகள் தாவிச் சென்று அந்த மின்மினிப் பூச்சியைப் பிடித்தன. அதை ஓர் இடத்தில் விட்டு, அதன்மேல் இலைச் சருகுகளைக் குவித்தன. ஒரு குரங்கு மின்மினிப் பூச்சியை வாயால் ஊதி அதன் உதவியால் இலைச் சருகுகளைப் பற்றவைக்க முயன்றது. ஊதி ஊதி மூச்சுச் திணறியது.
ஒரு குரங்கால் முடியாதபோது, மற்றொரு குரங்கு மின்மினித் தீயை ஊதிக் கொழுந்துவிட்டு எரிய விடும் முயற்சியில் ஈடுபட்டது. இவ்விதமே குரங்குகள் எல்லாம் மின்மினித் தீயின் உதவியால் தீ மூட்டிக் குளிர்காயும் பணியில் ஈடுபட்டிருந்தன.
இதனைக் கண்ட ஒரு குருவி மின்மினிப் பூச்சியின் ஒளியை நெருப்பு என நினைத்து குரங்குகள் குளிர்காய முயல்வதை உணர்ந்தது. இம்மூடர்களுக்கு உண்மையை விளக்க எண்ணிய குருவி, தான் இருந்த மரத்திலிருந்து கீழே இறங்கி குரங்குகளை அணுகியது.
"நன்பர்களே நீங்கள் ஊதுவது தீப்பொறி அல்ல. மின்மினியின் ஒளி. இந்த ஒளி தீ இல்லாத ஒளி. இதைக்கொண்டு ஒரு பொழுதும் உங்களால் தீ மூட்டவே முடியாது. ஏன் வீண் வேலையில் ஈடுபட்டு வருகிறீர்கள்?" என்று எடுத்துக் கூறியது குருவி.
மூடக் குரங்குகள் குருவியின் பேச்சைக் கேட்கவே இல்லை. தீ மூட்டும் வேலையை முன்பைவிட முனைப்பாகச் செய்தன.
புத்தி புகட்ட வந்த குருவியோ இடைவிடாமல் "மின்மினி தீ பற்றாது, பாடுபட்டுப் பலன் இல்லை" என்று கூறிக்கொண்டே இருந்தது. இதனால் அந்த முரட்டுக் குரங்குகளுக்கு ஆத்திரம் பொங்கி எழுந்தது. அவை துள்ளிக் குதித்துப் பறவையைப் பிடித்து, " இனி அயலார் அலுவலில் தலையிடாதே!" என்று அதன் தலையைத் திருகி எறிந்தன.
மதி கெட்ட மந்திகளுக்குப் புத்தி புகட்ட முயன்றதன் பலனாக அப்பாவிக் குருவி தன் உயிரையே இழக்க நேர்ந்தது!

- விக்கிநூல்களில் இருந்து...

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...