24 ஆகஸ்ட், 2013

யாவரையும் பிரண்ட் பிடிக்கும் பிரண்டை!

  • பிரண்டைத் துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும். செரிமானக் கோளாறைப் போக்கும். மலச்சிக்கலை நீக்கும். குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும். உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
  • பிரண்டைக் கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு. பிரண்டை, நரம்புத்தளர்ச்சியைப் போக்குகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. பசியைத் தூண்டிவிடுவதில் இதற்குத்தான் முதலிடம்.
  • பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டுவந்தால் கப நோய்கள் நீங்கும்.
  • பிரண்டைகளில் ஓலைப் பிரண்டை, உருட்டுப் பிரண்டை, முப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம் பிரண்டை, புளிப்பிரண்டை எனப் பல பிரிவுகள் உண்டு. முப்பிரண்டை கிடைப்பது அரிது.
  • களிப்பிரண்டையைக் கணு நீக்கி மிளகு, உப்பு ஆகியவற்றைச் சேர்த்து உணவாகப் புசித்து வந்தால், பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.
  • பிரண்டையின் அடிவேரை நீர்விட்டு நன்றாக அலம்பி, அதை வெயிலில் உலர்த்திப் பொடிசெய்து வைத்துக்கொண்டு 10 குன்றி மணி எடை, சாப்பிட எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும். 
  • பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்துச் சுண்டைக்காய் அளவு, தினந்தோறும் இரண்டுவேளை சாப்பிட சுவாச காசம் (ஆஸ்துமா) சாந்தப்படும்.
  • வேகவைத்த பிரண்டையை உப்பிட்ட மோரில் போட்டு உலர்த்தி வற்றலாகச் செய்வார்கள்.
  • பிரண்டையை நெய்விட்டு அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு, தினமும் காலை, மாலை என்று இருவேளையும் (எட்டு நாள்) சாப்பிட ஆசனத்தினவு, ரத்தமூலம் ஒழியும்.
  • பிரண்டைத் தண்டுகளைச் சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் குடித்தால் எலும்புகள் பலம் பெறும். முறிந்த எலும்பு விரைவில் கூடும். ஒரு மாதம் பிரண்டை ரசம் குடிக்கவேண்டும். 
  • பிரண்டையை இடித்துச் சாறு பிழிந்து கொள்ளுங்கள். இத்துடன் புளி, உப்பு சேர்த்துக் காய்ச்சுங்கள். குழம்பு பதத்தில் கெட்டியானதும், அடுப்பிலிருந்து இறக்கிச் சூடு தாங்கும் அளவுக்குப் பற்றுபோட வேண்டும். இப்படிச் செய்தால் சுளுக்கு, சதை பிரளுதல், எலும்பு முறிவினால் ஏற்பட்ட வீக்கம் ஆகியவை குணமாகும். ஒரு நாளில் சரி ஆகுமா? குணமாகும் வரை வைத்தியத்தைத் தொடருங்கள்.
  • பிரண்டை உப்பு பல நோய்களைப் போக்கும் வல்லமை கொண்டது. பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துகள் உள்ளன. பிரண்டை ஆண்மை சக்தியைப் பெருக்கும்.
  • உங்கள் வீட்டில் மண் தொட்டியை வைத்து பிரண்டையை வளர்க்க முயற்சி செய்யுங்கள். இதனுடைய தண்டுப் பகுதி நான்கு பட்டைகளுடன் சதைப் பற்று நிறைந்திருக்கும். இதனுடைய இலைகள் தடித்து நீர் மிகுந்து இருக்கும்.
நன்றி : தினமணி

நீ எதைச் செய்கிறாயோ அதுவாகி விடு!

ர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரைத் தேடி சில பேர் சென்றார்கள்.
என்ன சுவாமி? எப்படி இருக்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
அதற்கு அந்த ஞானிநான் ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்துஎன்றார்.
கொண்டிருக்கிறேன்
உங்கள் கொள்கை என்ன?” என்று ஞானியிடம் கேட்டனர்.
தியானம் செய்வது, பசி எடுத்தால் சாப்பிடுவது. தூக்கம் வந்தால் தூங்குவது. இதுதான் என் கொள்கைஎன்றார் ஞானி.
இதைக் கேட்டவுடன் அந்த நபர்களுக்கு ஆச்சரியம். “என்ன சுவாமி இப்படிச் சொல்கிறீர்கள்? உங்கள் செயலில் எந்தத் தனித்தன்மையும் இருப்பதாகத் தெரியவில்லையே?” என்று கேட்டனர்.
ஆமாம்என்றார் அந்த ஞானி.
என்னங்க இது? பசித்தால் சாப்பிடுவது, தூக்கம் வந்தால் தூங்குவது என்பது எல்லோரும் செய்வது தானே?” என்று அந்த நபர்கள் கேட்டனர்.
இதைக் கேட்டதும் ஞானி சிரித்தார்.
 “நீங்கள் சாப்பிடும்போது, உங்கள் மனது சாப்பாட்டில் இருக்காது. நடந்ததையும், நடக்கப் போவதையும் நினைத்துக்கொண்டு சாப்பிடுவீர்கள். உங்கள் மனம் அலைபாயும். நான் அப்படி இல்லை. தியானம் செய்யும்போது எனது மனம் தியானத்தில்தான் இருக்கும். சாப்பிடும்போது எனது சிந்தனை சாப்பாட்டில்தான் இருக்கும். அதேபோல் தூங்கவேண்டும் என்றால் தூங்குவேன். எதைச் செய்கிறேனோ நான் அதுவாகி விடுவேன். அதுதான் என் இயல்பு. இதுதான் எனக்கும், மற்றவர்களுக்கும் இருக்கிற வேறுபாடுஎன்று கூறினார் ஞானி.

இதிலிருக்கும் நீதி என்னவென்றால், செய்யும் தொழிலில் நாம் ஒன்றிப்போய்விடும்போது அந்தத் தொழில் முழுமை பெறுகிறது. அந்தத் தொழிலில் உள்ள சுமை, சுமையற்றதாகி அதுவே இனிமையானதாகி விடுகிறது.
(2013 ஆகஸ்ட் 23 அன்று காவலர்களுக்கு விருது வழங்கும் விழாவில்
முதல்வர் ஜெயலலிதா சொன்ன கதை) நன்றி : தினத்தந்தி

முகத்திலே முழித்தேன்... பிடித்தது பீடை!

ர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும் அதிகாலையில் மாறுவேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக்கதவைத் தட்டி, அந்த வீட்டின் உரிமையாளருக்குப் பரிசுப்பொருள் வழங்குவது வழக்கம்.
ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக்கதவைத் தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்குக் கை நிறைய பொற்காசுகளை வழங்கினார் ராஜா. 
இந்தப் பொற்காசுகளை வழங்கிவிட்டு ராஜா வெளியே வந்தவுடன் மாடு ஒன்று, அவரை முட்டி கீழே தள்ளிவிட்டது. இதனால் ராஜாவுக்குத் தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் ராஜாவின் காவலாளிகள் ராஜாவை அரண்மனைக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தத் தகவலை அமைச்சருக்குத் தெரிவித்த காவலாளிகள், ராஜா இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டதற்குக் காரணம் அந்த விவசாயிதான் என்றும், அந்த விவசாயியை ராஜா பார்த்ததால்தான் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது என்றும் எடுத்துக் கூறினர். 
அமைச்சரும் அந்த விவசாயியை வரவழைத்து மன்னர் முன் நிறுத்தினார்.
மன்னர் அந்த விவசாயிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
தனக்கு மரண தண்டனை என்று கேள்விபட்டதும் அந்த மனிதர் சிரித்தார்.
உடனே மன்னர் “இன்று மாலை, உனக்கு மரண தண்டனை. நீ இப்படி சிரிக்கிறாயே?” என்று அந்த மனிதரைப் பார்த்து வினவினார்.
அதற்கு அந்த மனிதர் நிதானமாகப் பதில் கூறினார். 
“நீங்கள் என்னைப் பார்த்ததால் உங்களுக்குத் தலையில் அடிபட்டுவிட்டது. அப்படிப்பட்ட சனியன் பிடித்த முகம் எனக்கு. என்னைப் பார்த்ததால் இந்த அளவோடு போய்விட்டது. ஆனால், நான் இன்றைக்கு முதல் தடவையாக உங்கள் முகத்திலே முழித்தேன். அதன் பலன் என்ன? என் உயிரே போகப் போகிறது. இதுதான் மன்னராகிய உங்களின் முக லட்சணம்!” என்று கூறினான் அந்த மனிதன்.

இதைக் கேட்ட ராஜாவின் முகம் மாறியது. அந்த மனிதருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்து உத்தரவிட்டார். ராஜாவையே எதிர்த்து கேட்கக்கூடிய துணிச்சல் அந்த மனிதருக்கு இருந்ததால் அவர் உயிர் பிழைத்தது.
(2013 ஆகஸ்ட் 23 அன்று காவலர்களுக்கு விருது வழங்கும் விழாவில்
முதல்வர் ஜெயலலிதா சொன்ன கதை) நன்றி : தினத்தந்தி

21 ஆகஸ்ட், 2013

படித்துச் சுவைத்தவை!

புனிதம் பெற்ற கொடிக்கம்பம்!
புதுப்பாளையம் கிராமம் திருச்செங்கோடில் இருந்து 11 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு 06-02-1925இல் மூதறிஞர் ராஜாஜியால் காந்தி ஆசிரமம் நிறுவப்பட்டது. 1925,1934ஆம் ஆண்டுகளில் இங்கு வருகை தந்த காந்திஜி, ஒவ்வொருமுறையும் மூன்று நாட்கள் தங்கி இருந்தார். அவர் சர்வ மத பிரார்த்தனை செய்த கொடிக்கம்பம் இன்றும் புனிதப் பொருளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், நேரு, வல்லபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி, சி.சுப்பிரமணியம், காமராஜர், .பொ.சி., சி.ஆர்.வெங்கட்ராமன் போன்ற அரசியல் தலைவர்கள் இங்கு வந்துள்ளனர். கைவினைஞர்கள், காந்தி ஆசிரமம் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
இளநீர் பருகிய மகாத்மா!

1925ஆம் ஆண்டு காந்திஜி புதுப்பாளையம் வந்திருந்தபோது, ரத்தினசபாபதி கவுண்டரின் தோட்டத்துக்குச் சென்றார். அங்கிருந்த விவசாயிகள் செவ்விளநீரை வெட்டி அன்போடு கொடுத்தனர். இரண்டு இளநீரைப் பருகிய காந்திஜி, "சுவை மிகவும் நன்றாக இருக்கிறது!' என்றார்.வேகவேகமாக மேலும் ஒரு இளநீரை வெட்டினர். அதை வாங்க மறுத்த காந்திஜி, "அளவுக்குமேல் சேமிப்பவன் மட்டுமல்ல; சாப்பிடுபவனும் திருடன்தான்'' என்றார்.

தமிழில் கையெழுத்து போட்ட காந்தி!
காந்திஜி 1937ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். நாகர்கோவில், நாகராஜா கோயிலில் வழிபட்ட அவர், சுசீந்திரத்தில் உள்ள எஸ்.எம்.எஸ்.எம். மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றார்அங்கிருந்த பார்வையாளர் கையேட்டில் தமிழில் கையெழுத்திட்டார். அவரது தமிழ் கையெழுத்து இன்றளவும் அந்தப் பள்ளியில் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

நடிக்க முடியாது!
காந்தியடிகள் பார்த்த ஒரே படம் "ராம் ராஜ்யா' என்ற இந்திப் படம். காந்தியடிகள் சினிமாவில் தோன்றவும் ஒரே ஒருமுறை அழைக்கப்பட்டார். அழைத்தவர் பிரபல இயக்குநர் வி.சாந்தாராம்காந்தியடிகளிடம், "கைராட்டையைச் சுற்றுவதுபோல் ஒரேயொரு காட்சியில் தோன்றினால் போதும். ராட்டையின் முக்கியத்துவத்தைப் பரப்ப இது உதவும்'' என அவர் கூறினார். "நான் வெளிநாட்டில் இருந்தபோது, ஒரு ரிகார்ட் எடுக்கச் சம்மதித்து தவறிப்போய் ஒரு பாவம் செய்துவிட்டேன்மறுபடியும் அப்படி ஒரு பாவத்தைச் செய்யமாட்டேன்'' எனக் கூறி கடைசிவரை காந்தியடிகள் நடிக்க மறுத்துவிட்டார்.

நன்றி : தினமணி

17 ஆகஸ்ட், 2013

அறிஞர்களின் பொன்மொழிகள்

  • பகைவனின் புன்சிரிப்பைவிட
    நண்பனின் கோபம் மேலானது. - ஜேம்ஸ் ஹோபெல்
  • நல்ல யோசனை தோன்றும்போது அதை உடனே செய்து முடியுங்கள்; வெற்றி உங்கள் பக்கம்! - ஸ்டோன்
  • எந்தத் தொழிலும் இழிவில்லை. தொழில் எதுவும் செய்யா திருப்பதுதான் இழிவு.
    - டால்ஸ்டாய்
  • தன் கால்களால் பறவைகள் வலையில் சிக்கிக்கொள்ளும்; தன் நாவால் மனிதன் துன்பத்தில் சிக்கிக்கொள்வான்.
    - தாமஸ் புல்லர்
  • யாரிடம் உன் எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியுமோ, அவனே உன் உண்மையான நண்பன். - எமர்சன்
  • அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம். - டீச்சர்
  • தன்னந்தனியே எவனொருவன் நிற்கத் துணிகிறானோ,
    அவனே உலகில் வலிமைமிக்க மனிதன். - மாத்யூஸ்
  • பொறுமை இல்லாதவர்கள் நீதிமான்களாக இருக்க முடியாது. - மார்க்ஸ்
  • அளவில்லாத சோதனைகளைத் தாங்கிச்
    சாதனை படைக்கிறவன்தான் மேதை. - ஹோம்கின்ஸ்
  • உயர்ந்த எண்ணங்களை உடையோர்
    ஒருநாளும் துன்பம் அடையார். - மகாத்மா காந்தி

முத்தான கதை ஒன்று


நல்ல ஊர் எது?

வெளியூரிலிருந்து பிழைப்பு தேடி அந்த ஊருக்கு இளைஞன் ஒருவன் வந்தான். அந்த ஊர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.
அங்கிருந்த பெரியவர் ஒருவரிடம், "ஐயா, நீங்கள் இந்த ஊரிலேயே பிறந்து வளர்ந்தவர் என்று நினைக்கிறேன். உங்கள் அனுபவத்தைச் சொல்லுங்கள். இந்த ஊர் நல்ல ஊர்தானே? நான் இங்கேயே தங்கி விடலாமா?'' என்று கேட்டான்.
அவனை மேலும் கீழும் பார்த்த பெரியவர், ""வாயும் கையும் ஒழுங்காக இருந்தால் எந்த ஊரும் நல்ல ஊர்தான்'' என்று பதில் சொன்னார்.
"ஐயா, நீங்கள் சொல்வது எனக்கு விளங்கவில்லையே?'' என்று கேட்டான் அந்த இளைஞன்.
அதற்கு அவர், ""வாய், கடுஞ்சொற்களைப் பேசாமல் இனிய சொற்களையே எப்பொழுதும் பேசுமானால், கை திருடாமல் உண்மையாக உழைத்தால் எல்லா ஊரும் நல்ல ஊர்தான்'' என்று விளக்கம் அளித்தார்.
இளைஞன் தெளிவு பெற்று அந்த ஊரிலேயே தங்கி, பெரியவர் கூறியபடி நடந்து வாழ்க்கையில் முன்னேறினான்.

(உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதைகள் என்ற நூலிலிருந்து தந்தவர் - என்.கணேசன், வேலூர்.)
நன்றி : தினமணி

பள்ளி மாணவருக்குப் பாடம் புகட்டும் பாடல்

விரைந்து வா தம்பீ! 

 துள்ளிக் குதிக்கும் மீனாகத்
 துடிப்பு மிகுந்த மானாகப்
 பள்ளி நோக்கித் தானாகப்
 பாய்ந்து வாடா என்தம்பீ!
 
 புத்த கங்கள் சீருடைகள்
 பொலிவு மிகுந்த காலணிகள்
 சத்து நிறைந்த சுவையுணவு
 சகல பொருளும் உனக்குண்டு!
 
 விலை யில்லாத பயணத்தில்
 வீட்டி லிருந்து பள்ளிவரை
 அலையாய்ச் சென்று திரும்பிடலாம்
 அறிஞ னாக அரும்பிடலாம்!
 
 நடந்த கால்கள் வலிமறக்க
 நல்கு வார்கள் மிதிவண்டி
 தொடர்ந்து படித்து மேல்வகுப்பைத்
 தொட்டால் உனக்கு மடிக்கணினி!
 
 மாதக் கணக்கில் உழைக்கின்ற
 மழையில் நனைந்தும் நிலைக்கின்ற
 சேத மாகாப் புத்தகப்பை
 சிந்தா மணியே உனக்கிருக்கு!
 
 கணித அளவுக் கருவிகளும்
 குறிப்பு வரைய ஏடுகளும்
 அணிய ணியாகப் பெற்றிடுவாய்
 அழியாக் கல்வி கற்றிடுவாய்!
 
 பெற்றோர் போல அன்போடு
 பெரிதும் ஆர்வம் பொங்கிடவே
 கற்றுக் கொடுப்போம் கடலளவு
 காற்றாய் வாடா என்தம்பீ!

- அணைக்குடி சம்பத் (நன்றி : தினமணி)

தமிழால் இணைவோம்!

வில்லிப்புத்தூரார் என்னும் புலவர், நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர்.
அவர் வருவோர், போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில் தோற்பவர் பாடு திண்டாட்டம்தான். அவரிடம் தோற்றுவிட்டால், தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் தொரண்டியால் ஒட்ட அறுத்து விடுவார். இதனால் காது இல்லாதவரைக் கண்டால், இவர் வில்லிப்புத்தூராரிடம் வாதத்தில் தோற்றவர் என தெரிந்துகொள்ளலாம். இதனால் புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சினார்கள்.
எந்த வில்லனுக்கும் ஆதிவில்லன் ஒருவன் இருப்பார் இல்லையா? வில்லிபுத்தூராருக்கும் அப்படி ஒருத்தர் இருந்தார்.
வில்லிப்புத்தூராரின் ஆணவம் அழியும் காலம் வந்தது.
தமிழ் அழகன் முருகனைப் பாடும் அருணகிரிநாதர் அந்த ஊருக்கு வந்தார். ஒரு புலவர் வந்தது அறிந்த வில்லிப்புத்தூரார் அருணகிரிநாதரையும் வாதத்திற்கு அழைத்தார்.

அருணகிரிநாதர் சம்மதித்தார். ஒரு புது கட்டளையும் போட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். வென்றவர் தொரண்டியை வைத்து ஒரு இழுப்பு,. தோற்றவர் காது அறுந்திடும்.
வில்லிப்புத்தூராருக்குக் கிலி வந்துவி்ட்டது. வெளிக்காட்டிக் கொள்ளாமல் சம்மதித்தார்.
போட்டி ஆரம்பமானது.
54வது பாடலை அருணகிரிநாதர் பாடினார்.

"
திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"
எனப் பாடி முடித்ததும், அதன் பொருளைக் கேட்டார்.
வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போனார்.
எத்தனை பாடலைப் பாடியிருப்போம்? எத்தனை பேரின் காதை அறுத்திருப்போம்?
ஆனால், இவர் பாடல் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை. தோல்வியைச் சம்மதிப்பதைத் தவிர  வேறு வழியில்லை. காதை இழக்கப்போவது உறுதி.
அவரது ஆணவம் அழிந்தது. தோல்வியை ஒப்புக்கொண்டார். பாடலுக்கு விளக்கம் கேட்டார்.
அருணகிரிநாதரோ போட்டிவிதி்ப்படி அவர் காதை அறுக்கவில்லை. தோற்றாலும் மேன்மக்கள் மேன்மக்களே!
அந்தப் பாடலுக்கான விளக்கம் :

திதத்தத் தத்தித்த        -         திதத்தத் தத்தித்த என்னும் தாளமானங்களை,
திதி                                     -          திருநடனத்தால் காக்கின்ற
தாதை                              -          பரமசிவனும்
தாத                                   -          பிரமனும்
துத்தி                                 -          படப்பொறியினையுடைய
தத்தி                                  -          பாம்பினுடைய
தா                                       -          இடத்தையும்
தித                                     -          நிலைபெற்று
தத்து                                  -         ததும்புகின்ற
அத்தி                                 -         சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி                                     -          தயிரானது
தித்தித்ததே                   -          தித்திக்கின்றதென்று
து                                         -          உண்ட கண்ணனும்
துதித்து                            -          துதி செய்து வணங்குகின்ற
இதத்து                             -          பேரின்ப சொரூபியான
ஆதி                                   -          முதல்வனே!
தத்தத்து                           -         தந்தத்தையுடைய
அத்தி                                 -         அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை                              -         கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத                                   -          தொண்டனே!
தீதே                                   -          தீமையே
துதை                                -          நெருங்கிய
தாது                                  -          சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து                             -         மரணத்தோடும்
உதி                                    -          ஜனனத்தோடும்
தத்தும்                              -         பல தத்துக்களோடும்
அத்து                                -          இசைவுற்றதுமான
அத்தி                                 -         எலும்புகளை மூடிய
தித்தி                                 -          பையாகிய இவ்வுடல்
தீ                                          -          அக்கினியினால்
தீ                                          -          தகிக்கப்படுகின்ற
திதி                                     -          அந்நாளிலே
துதி                                    -          உன்னைத் துதிக்கும்
தீ                                          -          புத்தி
தொத்தது                        -          உனக்கே அடிமையாகவேண்டும்

இவ்வகைப் பாடல்கள் "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். ஏகம் என்றால் ஒன்று. அக்ஷரம் என்றால் எழுத்து. ஓரெழுத்து பாடல் என்பது இதன் பொருளாகும்.

அப்பாடல் அருணகிரிநாதரின் கந்தர் அந்தாதியின் 54வது பாடல்.
அதிசயம்! இதுபோன்ற ஒரு பாடலை நாம் பாடப் புத்தகங்களில் காணப்படாதது வருத்தமே. தமிழின் பெருமையை எல்லாரும் அறிந்துகொள்வதற்கு இதுபோன்ற பாடல்களை மதம், மொழி, இனப் பேதமில்லாது அனைவரையும் சென்றடையவேண்டும்.
தயவுசெய்து இதைப் படித்துவிட்டுக் கடைகோடித் தமிழன்வரை பகிரவும்.

நன்றி : நாகராஜன், மம்சாபுரம், ஶ்ரீவி.

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...