17 ஆகஸ்ட், 2020

கவிப்பேரரசு காலக் கவிதை

 #அந்தந்த_வயதில்


#இருபதுகளில்


எழு!

உன் கால்களுக்கு

சுயமாய் நிற்கச் சொல்லிக் கொடு!

ஜன்னல்களைத் திறந்து வை!

படி! எதையும் படி!

வாத்சாயனம் கூடக்

காமமல்ல, கல்விதான்...

படி!

பிறகு

புத்தகங்களை எல்லாம்

உன்

பிருஷ்டங்களுக்குப்

பின்னால் எறிந்துவிட்டு

வாழ்க்கைக்கு வா...


உன் சட்டைப் பொத்தான்,

கடிகாரம்,

காதல்,

சிற்றுண்டி,

சிற்றின்பம்

எல்லாம்

விஞ்ஞானத்தின் மடியில்

விழுந்து விட்டால்,

எந்திர அறிவு கொள்!

ஏவாத ஏவுகணையினும்

அடிக்கப்பட்ட ஆணியே பலம்.

மனித முகங்களை

மனசுக்குள் பதிவு செய்!

சப்தங்கள் படி!

சூழ்ச்சிகள் அறி!

பூமியில் நின்று

வானத்தைப் பார்!

வானத்தில் நின்று

பூமியைப் பார்!

உன் திசையைத் தெரிவு செய்!

நுரைக்க நுரைக்க காதலி!

காதலைச் சுகி!

காதலில் அழு!

இருபதுகளின் இரண்டாம் பாகத்தில்

மணம் புரி!

பூமியில் மனிதன்

இதுவரை துய்த்த இன்பம்

கையளவுதான்...


மிச்சமெல்லாம் உனக்கு!

வாழ்க்கையென்பது

உழைப்பும் துய்ப்புமென்று உணர்!

உன் அஸ்திவாரத்தை ஆழப்படுத்து!

இன்னும்... இன்னும்...

சூரியக் கதிர்கள்

விழமுடியாத ஆழத்தில்...


#முப்பதுகளில்


சுறுசுறுப்பில்

தேனீயாயிரு!

நிதானத்தில்

ஞானியாயிரு!

உறங்குதல் சுருக்கு!

உழை!

நித்தம் கலவி கொள்!

உட்கார முடியாத ஒருவன்

உன் நாற்காலியை

ஒளித்து வைத்திருப்பான்...

கைப்பற்று!


ஆயுதம் தயாரி...

பயன்படுத்தாதே.

எதிரிகளைப் பேசவிடு!

சிறுநீர் கழிக்கையில் சிரி!

வேர்களை,

இடிபிளக்காத

ஆழத்துக்கு அனுப்பு..

கிளைகளை,

சூரியனுக்கு

நிழல் கொடுக்கும்

உயரத்தில் பரப்பு..

நிலை கொள்.


#நாற்பதுகளில்


இனிமேல்தான்

வாழ்க்கை ஆரம்பம்..

செல்வத்தில் பாதியை

அறிவில் முழுமையை

செலவழி...


எதிரிகளை ஒழி!

ஆயுதங்களை

மண்டையோடுகளில் தீட்டு!

ஒருவனைப் புதைக்க

இன்னொருவனைக்

குழிவெட்டச் சொல்!

அதில்

இருகையால் ஈட்டு..

ஒரு கையாலேனும் கொடு...

பகல் தூக்கம் போடு.

கவனம்!

இன்னொரு காதல் வரும்!

புன்னகைவரை போ...

புடவை தொடாதே.

இதுவரை இலட்சியம் தானே

உனக்கு இலக்கு!

இனிமேல்

இலட்சியத்துக்கு நீதான்

இலக்கு...


#ஐம்பதுகளில்


வாழ்க்கை, வழுக்கை

இரண்டையும் ரசி..

கொழுப்பைக் குறை..

முட்டையின் வெண்கரு

காய்கறி கீரைகொள்!

கணக்குப்பார்!

நீ மனிதனா என்று

வாழ்க்கையைக் கேள்...

இலட்சியத்தைத் தொடு

வெற்றியில் மகிழாதே!

விழா எடுக்காதே!


#அறுபதுகளில்


இதுவரை

வாழ்க்கைதானே உன்னை வாழ்ந்தது..

இனியேனும்

வாழ்க்கையை நீ வாழ்...


விதிக்கப்பட்ட வாழ்க்கையை

விலக்கிவிடு...


மனிதர்கள் போதும்.

முயல் வளர்த்துப் பார்!

நாயோடு தூங்கு!

கிளியோடு பேசு!

மனைவிக்குப் பேன் பார்!

பழைய டைரி எடு

இப்போதாவது உண்மை எழுது..


#எழுபதுக்கு_மேல்


இந்தியாவில்

இது உபரி...

சுடுகாடுவரை

நடந்து போகச்

சக்தி இருக்கும்போதே

செத்துப்போ...

ஜன கண மண...


- கவிப்பேரரசு -

3 ஜூலை, 2020

தேவதை என் மகள்

என் மகள் மீனாட்சிக்கு ஐந்து வயதானது. என் ஒரே மகள். அவள் பிறந்தநாளுக்காக என் நண்பன் கேசவனிடன் வாங்கிய கடனில்,  
200 ரூபாய் ஃபிராக், 20 ரூபாய் கேக், 10 ரூபாய் சாக்லேட், 20 ரூபாய் பொம்மை மட்டும் வாங்க முடிந்தது.

வீட்டிற்கு வந்தபோது அவள் தோழி பொன்னியுடன் விளையாடிக் கொண்டிருந்தாள். 

நான் வீட்டிற்குள் நுழைந்ததும்,

''ஐ... அப்பா '' என்று ஓடி வந்து என்னைக் கட்டிக்கொண்டாள். 

அவளிடம் உடை மற்றும் பொம்மையைக் கொடுத்தேன்.

''புடிச்சிருக்கா..., மீனு'' என்றேன்.

''எனக்கு இந்தப் பொம்மை வேண்டாம்பா.''

''ஏன் வேண்டாம் மீனு. இது நல்லா  இல்லையா ''

''இதைக் கடையில திருப்பி கொடுத்துட்டு, பொன்னி போட்டிருக்காலே அதே மாதிரி  ஜல் ஜல் கொலுசு வாங்கிட்டு வாங்கப்பா. ''

''அது வேண்டாம் மீனு. கால்ல குத்தி  புண்ணு வந்துடும். இந்தப் பொம்மை அழகா இருக்கு பாரு. பாப்பா மாதிரி வச்சு விளையாடு. ''

''எனக்கு அதுதான் வேணும்'' என்று அழத் தொடங்கினாள்.

 ''நாளைக்கு வாங்கிட்டு வரேன் செல்லம். ''

'' இன்னைக்கே கொலுசு வேணும்'' என்று கத்தி அழுதாள்.

''எதுக்கு அவளைப் பிறந்தநாள் அதுவுமா அழ வச்சுட்டு இருக்கீங்க ''  மனைவியின் குரல்.

''சரிமா, வாங்கிட்டு வரேன்'' என்று வெளியே கிளம்பினேன்.

அப்போதும் என்னிடம் சரியாக 30 ரூபாய் தான் இருந்தது. 

வெள்ளிக் கொலுசின் விலை கேட்டேன், 2000 என்றார்கள். வெள்ளி அல்லாத போலி கொலுசு கூட 100 ரூபாய்க்குமேல் சொன்னார்கள்.  

கடைவீதியில் மண் உண்டியல் 30 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டு வீடு வந்தேன். 

மீனு தூங்கி இருந்தாள் .

விடிந்ததும் ''ஜல் ஜல் கொலுசு வேணும்பா '' என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள்.

''நான் ஒரு மேஜிக் பொருள் வாங்கிட்டு வந்திருக்கேன். அதை வச்சு நாம என்ன வேணாலும் வாங்கலாம். தெரியுமா ?'' 

''என்ன மேஜிக் பா... ''

''இங்க பாரு உண்டியல் ''

''இதுல இருந்து கொலுசு வருமா ''

''ஆமா மீனு. இதை சாமி பக்கத்துல வச்சிடனும். தினசரி உள்ளே காசு போடணும்.  நிறைந்ததும் இதை உடைத்தால் நிறைய காசு கிடைக்கும்.  நமக்கு என்ன வேணுமோ வாங்கிக்கலாம்.''

எங்கள் கம்பெனியில் மாலை 4 மணி ஆனதும், கேசவன் டீ குடிக்கக் கூப்பிடுவான். அவன் சிகரெட் பிடித்து விட்டு டீ  குடிப்பான். நானும் டீ குடித்துவிட்டு 10 ருபாய் கொடுத்துவிடுவேன்.  

உண்டியல் வாங்கிய மறுநாள் என்னைக் கூப்பிட்டான்.

''அருண், டீ குடிக்கப் போகலாம் வா...''

'' இல்ல கேசவன். டீ குடிக்கறதை நிறுத்த போறேன். அடிக்கடி தலை சுத்தற மாதிரி இருக்கு.'' 

''சரிப்பா, விட்டுடு . அதுவும் நல்லது தான்.''

டீ குடிக்காமல் வைத்திருந்த காசை வீட்டுக்கு வந்து மீனுவின் கையால் உண்டியலில் போடச் செய்வேன். 

அந்த சில்லரைகள் 'க்ளிங்' என்ற சத்தத்துடன் விழுவதைக் கேட்டு சிரிப்பாள்.

இது தினமும் நடந்தது. நாட்கள் கடந்தன. 

கேசவன் வேறு கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டான். 

நான் டீ குடிக்காமல் சேமித்த காசுகள் உண்டியலில் நிறைந்தன. மீனு உண்டியலைக் குலுக்கி அந்தச் சத்தத்தைக் கேட்டு ரசிப்பாள் . 

''இந்தச் சத்தம் கூட ஜல் ஜல் கொலுசு சத்தம் மாதிரியே கேக்குதுப்பா.  பொன்னி போட்டு நடக்கற மாதிரி எனக்கும் வாங்கிக் கொடுங்கப்பா.''

''உண்டியல் நிறையட்டும் மீனு. நாம் காசை எடுத்துட்டு போய் வாங்கிக்கலாம். ''

அது தோராயமாக 2000 ரூபாய் வந்திருக்கும் என்று ஒரு நாள்  தோன்றியது.

''மீனு உண்டியலை உடைச்சு எண்ணி பாக்கலாமா.''

''ஐ... ஜாலி, ஜல் ஜல் கொலுசு வாங்கப் போறேனே... ''

உடைத்து எண்ணினேன். 2030 ருபாய் இருந்தது. 

நானும் மீனுவும் கிளம்பினோம். 2000 சில்லரையை, ஒரு மாளிகைக் கடையில் கொடுத்து 2000 ரூபாய் நோட்டாக மாற்றிக்கொண்டோம்.

 ''அப்பா இந்த ஒரே ஒரு பிங்க் கலர் பேப்பர் காசு கொடுத்தா, ஜல் ஜல் கொலுசு கொடுப்பங்களா...''

''ஆமாம் மீனு ''

''இதை நானே, பத்திரமா வச்சுகிறேன். கடையில் இருக்கிற அங்கிள் கிட்ட நானே கொடுக்கறேன்.''

''சரி செல்லம், பத்திரமா வச்சுக்கோ.''

தன் ஸ்கர்ட் பாக்கெட் உள்ளே வைத்துக்கொண்டாள்.

பேருந்து நிறுத்தம் சென்று காத்திருந்தோம். 

எங்களைக் கடந்து சென்ற ஆட்டோவில், தெரிந்த முகம். கேசவன்.

சிறிது தூரம் சென்ற ஆட்டோ அங்கேயே நின்றது. நான் மீனுவை அழைத்துக்கொண்டு ஆட்டோக்கு அருகில் சென்றேன்.

கேசவன் இறங்கினான்.

''கேசவா, புது வேலைக்குப் போனதும் மறந்துட்டியே. போன் பண்ணறதுக்குக் கூட நேரம் இல்ல உனக்கு. நான் ஒரு நாள் பண்ணேன். அப்பவும் எடுக்கல நீ... ''

''இல்ல அருண். போன் பண்ணனும் தான் நினைப்பேன். அந்த நேரம் வேற ஏதாவது வேலை வந்துடும். அப்புறம் பேசிக்கலாம்னு விட்டுடுவேன். மீனு குட்டி நல்லா இருக்கியா... ''

''நல்லா இருக்கேன் அங்கிள் ''

''ஆட்டோல யாரு. ஹரிணியா. எப்படி இருக்க ஹரிணி.''

''நல்லா இருக்கேன் அங்கிள் ''

''மீனு ஹரிணி அக்காக்கு ஹாய் சொல்லு.''

''ஹாய் அக்கா எப்படி இருக்கீங்க.''

''நான் நல்லா இருக்கேன் மீனு. நீ எப்படி இருக்க.''

''நல்லா இருக்கேன் அக்கா. ''

ஹரிணி மீனுவை விட மூன்று வயது பெரியவள்.

''அருண், ஒரு பிரச்சினை ஆயிடுச்சு. ஒரு ஆக்ஸிடெண்ட் '' 

''என்ன ஆக்சிடென்ட், யாருக்கு, என்ன ஆச்சு ''

''ஹரிணியோட வலது கால்ல ஒரு கார்காரன் ஏத்திட்டு போயிட்டான்.  ஒரு மாசம் முன்னாடி ''

கேசவன் ஹரிணியின் வலது காலை காட்டினான். முழங்கால் பகுதியில் இருந்து அவள் கால் இல்லை. 

அதிர்ச்சியாக இருந்தது.

''செக்கப் தான் போயிட்டு வர்ரோம்.  அந்தக் கால் மாதிரி அளவெடுத்து செஞ்சு ஹாஸ்பிடலியே கொடுப்பாங்களாம். கொஞ்சம் பணம் தேவைப்படுது. உன்கிட்ட இருந்தா கடனா தரமுடியுமா ?''

''கேசவா, இப்படிக் கேட்டுட்டியே. உன்கிட்ட எத்தனை முறை கடன் வாங்கி இருக்கேன். என்கிட்ட இருந்தா கொடுக்காம இருப்பேனா?''

நான் மீனுவைப் பார்த்தேன்.  மீனு என்னைப் பார்த்தாள்.

தன் ஸ்கர்ட் பாக்கெட்டில் இருந்து 2000 ரூபாயை கேசவனிடம் நீட்டினாள். 

''அங்கிள் இந்தக் காசை டாக்டர் கிட்ட கொடுத்து, ஹரிணி அக்கா கால் சரி பண்ண சொல்லுங்க அங்கிள்'' என்றாள். 

''தேங்க்ஸ் மீனு , தேங்க்ஸ் அருண்.  எவ்ளோ சீக்கிரம் முடியுமோ திருப்பி கொடுத்துடறேன்.''

''அப்புறம் பாத்துக்கலாம் கேசவா.  மெதுவா கொடு.''

அவர்கள் ஆட்டோ கிளம்பி சென்றது.

''மீனு, நீ ரொம்ப நல்ல பெண்ணாய் ஆயிட்டே... ''

''ஹரிணி அக்கா பாவம் பா...  அதான் கொடுத்தேன். உங்க கிட்ட 30 ரூபாய் இருக்குலே. அதுல மேஜிக் உண்டியல்  வாங்கி, டெய்லி காசு சேர்த்து ஜல் ஜல் கொலுசு வாங்கிக்கலாம்'' என்றாள். 

''ஓகே டா... செல்லம் ''

கடைவீதியில் மீண்டும் ஒரு மேஜிக் உண்டியல் வாங்கிகொண்டு வீடு வந்து சேர்ந்தோம்.

எழுதியவர் : தமிழ்ச்செல்வன்

30 ஜூன், 2020

புதுமைப்பித்தன்

புகழ்பெற்ற சிறுகதை மன்னன் என்றழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்களின் நினைவுநாள் அவரைப்பற்றிய சில குறிப்புகள் 
தொடக்கக் கல்வியை செஞ்சி, கள்ளக்குறிச்சி, திண்டிவனத்தில் பயின்றார். நெல்லை இந்துக் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார். 

உலக இலக்கியங்களை தேடித் தேடி வாசித்தார். இவரது முதல் படைப்பான ‘குலாப்ஜாமூன் காதல்’ 1933-ல் வெளிவந்தது. இவரை பத்திரிகை உலகுக்கு அழைத்து வந்தவர் வ.ராமசாமி. 

சென்னையில் 1934-ல் குடியேறினார். ‘ஊழியன்’ பத்திரிகையில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். ‘மணிக்கொடி’ இதழில் இவரது படைப்புகள் பிரசுரமாகின. அதில் வெளியான இவரது முதல் சிறுகதை ‘ஆத்தங்கரைப் பிள்ளையார்.’

‘மணிக்கொடி’, ‘கலைமகள்’, ‘ஜோதி, ‘சுதந்திரச் சங்கு’, ‘ஊழியன்’, ‘தமிழ்மணி’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளிவந்தன. 

‘புதுமைப்பித்தனின் கதைகள்’ என்ற தொகுப்பு 1940-ல் வெளியானது. ‘கிராம ஊழியன்’, ‘சிவாஜி’ போன்ற சிற்றிதழ்களில்பணம் பெற்றுக் கொள்ளாமல் எழுதினார். 

‘தினமணி’, ‘தினசரி’ பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.
எழுத்துப் பணியில் 15 ஆண்டுகளுக்கும் குறைவாகவே ஈடுபட்டார். அதற்குள் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 100-க்கும் மேற்பட்ட கட்டுரைகள், 15 கவிதைகள், சில நாடகங்கள், எண்ணற்ற மொழிபெயர்ப்புகள், புத்தக விமர்சனங்கள் எழுதினார்.

சென்னை, தஞ்சாவூர் அல்லாத பிற வட்டார வழக்கு தமிழில் எழுதிய முதல் எழுத்தாளர் இவர். இவரது கதாபாத்திரங்கள் பெரும்பாலும் நெல்லைத் தமிழ் பேசின. மாக்சிம் கார்க்கி, எர்னஸ்ட் டோலர், ஷேக்ஸ்பியர் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற படைப்பாளிகளின் 50-க்கும் மேற்பட்ட படைப்புகளை தமிழில் மொழிபெயர்த்தார்.

இவர் சிறந்த இலக்கிய விமர்சகரும்கூட. சொ.வி., ரசமட்டம், மாத்ரு, கூத்தன், நந்தன், கபாலி, சுக்ராச்சாரி, இரவல் விசிறிமடிப்பு ஆகிய புனைபெயர்களில் எழுதினார். இலக்கியத்தின் பல துறைகளிலும் எழுதினாலும், சிறுகதைகள்தான் இவருக்கு தனியிடம் பெற்றுத் தந்தன. 

‘காஞ்சனை’, ‘நாசகாரக் கும்பல்’, ‘மனித யந்திரம்’, ‘பொன்ன கரம்’, ‘இது மிஷின் யுகம்’, ‘சாபவிமோசனம்’, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’, ‘ஒருநாள் கழிந்தது’, ‘சிற்பியின் நரகம்’, ‘செல்லம் மாள்’ முதலான அற்புதமான படைப்புகள் சாகாவரம் பெற்றவை. 

திரைப்படத் துறையிலும் ஆர்வம் செலுத்தினார். சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, திரைப்படம் தயாரிக்க முயன்றார். அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. 

19 ஜூன், 2020

தமிழ்த்தாய் வாழ்த்து

தமிழ்த்தாய் வாழ்த்து 
50ஆம் ஆண்டு நிறைவு
(1970-2020)

அரசு விழாக்களிலும், பொது விழாக்களிலும், இறை வணக்கப் பாடலாக 'கஜவதனா கருணாகரனா', 'வாதாபி கணபதே' போன்ற விநாயகர் பாடல்களே பாடப்பட்டது. சிலர் தெலுங்கு கீர்த்தனைகளைப் பாடினார்கள்.

1970 மார்ச் 8, சர்வதேச மகளிர் தினத்தன்று, சென்னையில் நடைபெற்ற திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில், "நீராருங் கடலுடுத்த' பாடலே இனிமேல் அரசு விழாக்களில் பாடவேண்டும்" என முதல்வர் கலைஞர் அறிவித்தார்.

கலைஞர் இதை அறிவித்தவுடன் 'கலைமகள்' மாத இதழின் ஆசிரியர் கி.வா.ஜெகநாதன் எதிர்ப்புத் தெரிவித்தார். கடவுளும், தமிழ்த்தாயும் ஒன்றல்ல என்றும், அதற்குப் பதிலாகத் தாயுமானவர் எழுதிய 'அங்கிங்கெனாதபடி' என்ற பாடலையே பாட வேண்டும் என்றார்.

பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை, ம.பொ.சி., டாக்டர் மு.வரதராசன் உள்ளிட்டோர் கலைஞரின் முடிவை வரவேற்றனர். எதிர்ப்புகள் அடங்கிப் போனது.

"தேசிய கீதம் இருக்கும் போது, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடுவது சரியல்ல என்றும், இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது" என்று சமர்குஹா என்பவர் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இது இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்று அன்றைய துணை உள்துறை அமைச்சர் கே.ஆர்.இராமசாமி பதிலளித்தார்.

1970 ஜூன் 17, அரசு உத்தரவாக வெளியிடப்பட்டது. 1970 நவம்பர் 23 முதல் அமல்படுத்தப்பட்டது.

'நீராருங் கடலுடுத்த
நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத்
திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ் மணக்க
இருந்த பெரும் தமிழணங்கே
தமிழணங்கே
உன் சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே!

திருநெல்வேலி இந்துக் கல்லூரி முதல்வராக இருந்த சுந்தரம் பிள்ளையின் 'மணோன்மனீயம்' நாடகத்தில் இடம்பெற்ற பாடலே 'நீராருங் கடலுடுத்த' எனத் தொடங்கும் இந்தப் பாடல். எம்.எஸ்.விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டு, டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலாவால் பாடப்பட்டு, இசைத்தட்டுகள் வெளியிடப்பட்டன.

இந்தப் பாடல் 50 ஆண்டுகளாக தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. பாடலை எழுதிய மணோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களையும், அதைத் தமிழகமெங்கும் பாட வைத்த  கலைஞரையும் இந்நாளில் நன்றியுடன் நினைவு கூற வேண்டும்.

தகவல் : மா.ஆவுடையப்பன்

5 மே, 2020

புத்தக வாசிப்பு

மாணவர்களின் புத்தக  வாசிப்புக்குப் புதுமுறையைக் கையாளலாமே!


புத்தக வாசிப்பில் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவது என்பது அவர்களின் வளமான எதிர்காலத்துக்கு அஸ்திவாரம் இடும்.

இவ்விஷயத்தில் கல்வித் துறையும் புதிய முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். பாடப் புத்தகத்தைத் தவிர ஏதாவது நல்ல புத்தகம் ஒன்றை, மாணவர்களின் வயது, வாசிக்கும் திறன், அவர்களை ஈர்க்கக்கூடிய துறை ஆகியவற்றுக்கு ஏற்பத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதங்களுக்கு ஒரு புத்தகம் என்று கொடுத்து வாசிக்கச் சொல்லலாம்.

 என்ன வாசித்தோம் என சிறு கட்டுரை எழுதித்தரச் சொல்லலாம். இதற்கு மதிப்பெண், தேர்வு என்றெல்லாம் அச்சமூட்டக் கூடாது.

முன்பெல்லாம் குடிமைப் பயிற்சி அல்லது நன்னெறி வகுப்பு என்று வாரத்துக்கு ஒன்று அமைத்ததைப் போல மாதத்துக்கு ஒன்றாகக்கூட நூல் வாசிப்புக்கு ஒதுக்கலாம்.

புத்தகத்தில் கவனிக்க வேண்டியவை குறித்தும், வாசிக்கும் விதத்தையும் பொதுவாகச் சொல்லித்தர வேண்டும். ஆறாவது வகுப்பு முதல் எட்டாவது வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குச் சித்திரக் கதைகளுடன் உள்ள புத்தகங்களைத் தரலாம்.

முதலில் பாடப்புத்தகம் தவிர்த்து பிற புத்தகங்களும் உள்ளன என்ற அறிமுகமே மாணவர்களுக்கு மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிக்கும். வாசித்துப் பழகி ருசி ஏற்பட்டுவிட்டால் பிறகு தன்னம்பிக்கை பிறக்கும். இதனால், தாங்களாகவே அடுத்த கட்டத்துக்கு நகர்வார்கள்.

பட்டிமன்றம், பேச்சுப்போட்டி என்று ஏதாவது ஒரு தலைப்பில் பேசச் சொல்வதைப் போல, ஒரு புத்தகத்தைப் பற்றி திறனாய்வு அல்லது குழு விவாதத்துக்கு ஏற்பாடுசெய்தால் நன்கு வாசித்த மாணவர்களின் பேச்சு, மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் தூண்டுதலாகவும் அமையும்.

ஆசிரியர்களுக்கே மாணவர்களின் கற்றல் திறனையும் விவாதிக்கும் திறனையும் இதர ஆற்றல்களையும் தொடக்கத்திலேயே அடையாளம் காணும் வாய்ப்பாக அமையும்.

கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பாடங்களுக்கான எளிய அறிமுக நூல்களைக்கூட இப்படிச் சுற்றுக்குவிட்டு படிக்கவைப்பதன் மூலம் அந்தந்தப் பாடங்களில் லயிப்பைக் கூட்டவும், சந்தேகங்களைத் தெளிந்துகொள்ளவும் வழிவகுக்கலாம்.

ஆசிரியர்களே உடனிருந்து வரிக்கு வரி சொல்லித்தந்து புரியவைக்கும் முறைக்குப் பதிலாக, தாங்களே படிக்கவும், சந்தேகம் வரும்போது ஆசிரியரிடம் கேட்டு மேற்கொண்டு தொடரவும் இந்தப் பயிற்சி உதவும். ஆசிரியர்கள் மட்டுமே தங்களுடைய பொறுப்பாகக் கருதாமல் வகுப்புத் தலைவன் போன்ற மாணவர் குழுவையும் இணைத்துக்கொண்டால் குழு இயக்கமாக மலரும்.

பாடப்புத்தக வாசிப்பைவிட பிற நூல்களை வாசிக்கும் மாணவர்களுக்குக் கற்பனைத்திறனும் தானாகவே வாக்கியங்களை அமைக்கும் லாகவமும் கூடிவிடும். கற்பித்தல் என்ற கடமை ஆசிரியர்களுக்கு எளிதாகிவிடும்.

வெறும் பாடப்புத்தகம் எனும்போது தோன்றும் கடமையுணர்ச்சி, அதைத் தாண்டிய படிப்பு எனும்போது ஆர்வத்தையும் உற்சாகத்தையும் நிரம்ப ஊட்டும். ஆசிரியர்கள் கண்காணிப்பில் அவர்களுடைய வழிகாட்டலில் நல்ல நூல்களைத் தாங்களாகப் படிக்கும் மாணவர்கள், நடந்து செல்லும் மாணவர்கள் மிதிவண்டியை ஓட்டப் பழகும்போது அடையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையையும் அடைவார்கள்!

1 மே, 2020

அம்மணி அம்மாள்

அம்மணி அம்மாள் கோபுரம்


ஒரு பெண் தன்னந்தனி ஆளாக நின்று, 171 அடி உயரத்துக்கு பிரமாண்டமான ஒரு ஆலய கோபுரத்தைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல.
அதுவும் 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் ஆட்சி நடந்தபோது இந்த சாதனையை அந்த பெண் நிகழ்த்தியது பிரம்மிக்கத்தக்கது.

அந்தப் பெண் சாதாரணப் பெண் அல்ல. அவர் ஒரு சித்தப் புருஷர். சிவபெருமானால் ஆட்கொள்ளப்பட்டு உயர் சித்த நிலைப் பெற்றவர். பொதுவாக ஒவ்வொரு சித்தருக்கும் குரு என்று யாராவது இருப்பார்கள். ஆனால் இந்தப் பெண்ணுக்கு சிவபெருமானே குருவாக இருந்தார். குரு என்று வேறு யாரையும் தேடாமல் பிறவியிலேயே சிவன் மீது சித்தம் வைத்த அந்தப் பெண் நடத்திய அற்புதங்கள் ஏராளம்.

அந்தப் பெண்ணின் பெயர் அம்மணி அம்மாள். பஞ்சப் பூதத் தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலையில் அவர் வாழ்ந்தார் என்று சொல்வதை விட அற்புதங்களை நிகழ்த்தி அருளாளராகத் திகழ்ந்தார் என்றே சொல்லலாம். அந்த ஆலயத்தில் வடக்குப் பகுதி கோபுரம் மட்டும் கட்டப்படாமல் இருந்தது.
அதாவது கோபுரம் கட்ட அடித்தளம் போடப்பட்டு, பிறகு ஏனோ கட்டப்பட முடியாமல் அப்படியே மொட்டையாக நின்று போனது. எத்தனையோ பேர் முயன்றும் அந்த கோபுரத்தைக் கட்ட இயலவில்லை.

ஈசனுக்குத் தெரியும், எந்த வேலையை, யாரிடம் கொடுத்து, எப்படி முடிக்க வேண்டும் என்று. அதன்படி திருவண்ணாமலை ஆலய வடக்குக் கோபுரத்தைக் கட்ட அம்மணி அம்மாளை ஈசன் தேர்வு செய்து அருள் புரிந்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள சென்னசமுத்திரத்தில் கோபால் பிள்ளை- ஆயி தம்பதிக்கு 1735-ம் ஆண்டு மார்கழி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் அம்மணி அம்மாள் பிறந்தார். அவரது உண்மையான பெயர் அருள்மொழி.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த அவருக்கு சிறு வயதிலேயே திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டது.
தங்கள் மகள் எப்போதும் அருணாசலேஸ்வரர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து பயந்து போன அவர் பெற்றோர் திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். சொந்த மாமன் மகனை மணமகனாகப் பேசி முடித்தனர்.

இதை அறிந்த அம்மணி அம்மாள், “நான் இதற்காக பிறவி எடுக்கவில்லை” என்று கூறி, வேதனைத் தாங்காமல் சுமார் 1 மைல் தொலைவில் உள்ள கோமுட்டி குளத்துக்குள் குதித்து விட்டார். ஊரே திரண்டு வந்து குளத்துக்குள் இறங்கித் தேடினார்கள். அம்மணி அம்மாளை காண முடியவில்லை. மூன்றாவது நாள் குளத்தில் இருந்து அம்மணி அம்மாள் வெளியில் வந்தார். ஊரே திரண்டு ஆச்சரியப்பட்டது.

குளக்கரை மண்ணை எடுத்து அவர் கொடுக்க, அது அவல் பொரியாக மாறியது. அம்மணி அம்மாள் சித்தப்புருஷராக மாறி இருப்பது அப்போதுதான் அவர் பெற்றோருக்கும், ஊருக்கும் தெரிய வந்தது. தினமும் அண்ணாமலையாருக்கு தொண்டு செய்வதும், கிரிவலம் செல்வதுமாக இருந்த அவருக்கு ஒருநாள், “வடக்குக் கோபுரத்தை கட்டும் பணியைத் தொடங்கு” என்று ஈசன் உத்தரவிட்டார். அம்மணி அம்மாள் சித்தர் சக்தி பெற்றிருந்தாலும் முதலில் அவருக்கு பிரமிப்பாகத்தான் இருந்தது.

அம்மணி அம்மாளின் ஆற்றலை அறிந்து வியந்த வணிகர்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதைக் கொடுத்தனர். இப்படி சேர்ந்த பணத்தைக் கொண்டு கோபுரம் கட்டும் வேலையை அவர் மேற்கொண்டார். கோபுரம் ஒவ்வொரு நிலையாக கட்டி முடிக்கப்பட்டது. ஒன்று முதல் ஐந்து நிலைகள் வரை கட்டி முடிக்கப்பட்டபோது, அம்மணி அம்மாளுக்கு மீண்டும் பணம் தேவைப்பட்டது.

பொது மக்களிடமும், வணிகர்களிடமும் திரும்ப, திரும்ப எத்தனைத் தடவைதான் பண உதவியும், பொருள் உதவியும் கேட்க முடியும்? எனவே மைசூர் மகாராஜாவிடம் போய் பொன் பொருள் உதவிகள் கேட்க அவர் தீர்மானித்தார். மறுநாளே மைசூருக்கு பயணமானார். அரண்மனையை அடைந்தபோது வாசலில் நின்ற வாயிற்காப்பாளன் அவரை உள்ளே விட மறுத்தான்.

அம்மணி அம்மாளின் எளிமையானக் கோலத்தைப் பார்த்து சந்தேகம் அடைந்த வாயிற்காப்பாளன் அவரை ஒரு ஓரமாக உட்கார வைத்தான். காலையில் வந்தவர் மதியம் வரை அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை உள்ளே தர்பார் மண்டபத்தில் ஒரு சுவாரசியம் நடந்து கொண்டிருந்தது. லகிமா ஆற்றலால் உலகின் எந்தப் பகுதிக்கும் சென்று வந்து விடும் சக்தியைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். பொதுவாக சித்தர்களுக்கு ஒரே நேரத்தில் 2 அல்லது 3 இடங்களில் தோன்றும் ஆற்றல் உண்டு.

இந்த ஆற்றலைப் பயன்படுத்தி அம்மணி அம்மாள் அரண்மனைக்குள் சென்றிருந்தார். அதே சமயத்தில் அரண்மனை வாசலில் வாயில் காப்பாளனால் தடுக்கப்பட்ட இடத்திலும் அம்மணி அம்மாள் இருந்தார். உரிய அனுமதியின்றி ஒரு பெண் தன் அருகே வந்து நிற்பதைக் கண்டதும் மகாராஜா மிகவும் ஆச்சரியமடைந்தார். “நீ யார்? எப்படி உள்ளே வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார்.

அம்மணி அம்மாள் தன்னைப் பற்றியும், திருவண்ணாமலை ஆலயத்தில் கோபுரம் கட்டி வரும் தகவலையும் சொல்லி, அந்த கோபுரப் பணியை நிறைவு செய்ய பொன்னும், பொருளும் கேட்க வந்திருப்பதாக கூறினார். மேலும் வாயிற்காப்பாளன் தன்னை உள்ளே விட மறுத்ததால், ஒரே நேரத்தில் 2 இடங்களில் தோன்றும் சித்தாடல் மூலம் உள்ளே வந்ததாக தெரிவித்தார். இதைக் கேட்டதும் மைசூர் மகாராஜா நம்ப முடியாமல் பார்த்தார்.

பிறகு வாயிற்காவலனை வரச் சொல்லி உத்தரவிட்டார். மகாராஜா இருக்கும் அவைக்குள் வந்த வாயிற் காவலன், சற்று அதிர்ச்சியுடன் அம்மணி அம்மாளைப் பார்த்து, “உங்களை நான் உள்ளே விடவில்லையே. வெளியில்தானே அமர்ந்திருந்தீர்கள். உள்ளே எப்படி வந்தீர்கள்?” என்றான். உடனே மகாராஜா, நீண்ட நேரமாக அந்த அம்மாளுடன் தான் பேசிக் கொண்டிருப்பதாக கூறி விட்டு, வாயிற் காவலனுடன் விறுவிறுவென வாசல் பகுதிக்கு வந்தார்.

அங்கும் ஒரு ஓரமாக அம்மணி அம்மாள் அமர்ந்திருந்தார். அவரை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, சபைக்குள்இருந்த அம்மணி அம்மாள் மாயமாய் மறைந்திருந்தார். உடனே வந்திருப்பவர் சாதாரண பெண் அல்ல என்பதை மகாராஜா புரிந்து கொண்டார். அம்மணி அம்மாள் வடிவில் அண்ணாமலையாரே வந்து விட்டதாக கருதினார். நன்கு உபசரித்தார். பட்டுச்சேலை ஒன்று பரிசளித்தார். பிறகு தனது பட்டத்து யானை மற்றும் குதிரைகள், ஓட்டகங்களில் நிறைய பொன்னும், பொருளும் ஏற்றி கோபுரத்தைக் கட்டி முடிக்குமாறு அம்மணி அம்மாளை மகாராஜா அனுப்பி வைத்தார்.

மைசூர் மகாராஜா கொடுத்த பொன், பொருட்களைக் கொண்டு கோபுரத்தின் 6-வது மற்றும் 7-வது நிலைகளை எளிதாகக் கட்டி முடித்தார். இன்னும் 4 நிலைகள் கட்ட வேண்டும். பணத்துக்கு என்ன செய்வது என்று தவித்தார். அண்ணாமலையாரே வழி காட்டுங்கள் என்று ஆழ்ந்த தவத்தில் அமர்ந்து விட்டார். அப்போது அண்ணாமலையார், அவர் கனவில் தோன்றி, “கோபுர வேலையைத் தொடங்கு. தினமும் வேலை முடிந்ததும் பணியாளர்களுக்கு விபூதியை அள்ளிக் கொடு. நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

அதன்படியே கோபுர வேலை நடந்தது. தினமும் மாலை பணியாட்களுக்கு சம்பளத்துக்கு பதில், அம்மணி அம்மாள் திருநீறை அள்ளிக் கொடுக்க, அது அவரவர் செய்த வேலைக்கு ஏற்ற கூலியாக மாறியது. இப்படி கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. இதன் மூலம் மனதில் துணிச்சலும், இறை அருளும் இருந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதை அம்மணி அம்மாள் தெளிவுபடுத்தினார். அவரது விடாமுயற்சியைக் கண்டு ஆங்கிலேயர்களும் வியந்து நின்றனர்.

171 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட அந்த கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அம்மணி அம்மன் கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே மாதிரி தலா 13 கலசங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தெற்கில் உள்ள திருமஞ்சன கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள பே கோபுரமும் (144 அடி) வடக்கு கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

திருவண்ணாமலை ஆலயத்தில் ராஜகோபுரத்துக்கு அடுத்தப்படியாக பெரிய கோபுரத்தைக் கட்டி சாதனை படைத்ததால் அந்த கோபுரத்தை எல்லோரும் “அம்மணி அம்மன் கோபுரம்” என்று அழைக்க நாளடைவில் அது நிலைத்துப் போனது. இந்தக் கோபுரம் கட்டி முடித்ததும், கோபுரத்துக்கும், ஆலயத்துக்கும் அம்மணி அம்மாள் தாமே முன்நின்று கும்பாபிஷேகத்தை நடத்தினார்.

பிறகு துறவி போல வாழ்ந்த அவர் பல்லாயிரக்கணக்கான வர்களுக்கு திருநீறு கொடுத்து நோய் தீர்த்தார்.  திருநீறு மூலம் அற்புதங்கள் செய்து புகழ் பெற்ற அம்மணி அம்மாள் தன் 50-வது வயதில் 1875-ம் ஆண்டு தைப்பூசம் தினத்தன்று பரிபூரணம் அடைந்தார். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 8-வது லிங்கமான ஈசான்ய லிங்கம் எதிரில் அவருக்கு ஜீவசமாதி அமைக்கப்பட்டுள்ளது. அங்கு வழங்கப்படும் விபூதிப் பிரசாதம் மிகவும் புகழ் பெற்றது. மனக் கவலைகளை விரட்டும் மகத்துவம் அந்த ஜீவ சமாதி திருநீறுக்கு உண்டு.

அம்மணி அம்மாள் ஈசனோடு கலந்து சுமார் 150 ஆண்டுகள் ஆகி விட்ட போதிலும் தன்னை நம்பும் பக்தர்களுக்கு அருவமாக வந்து தேவையான உதவிகளை செய்து கொடுக்கிறார். குறிப்பாக கிரிவலம் வரும் பக்தர் களிடம் அவர் பேசுவதாக, அறிவுரைகள் சொல்வதாக நம்பப்படுகிறது. அவர் ஜீவ சமாதியில் சிறிது நேரம் தியானம் செய்தாலே மனம் லேசாவதை உணரலாம்.

ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய
ஓம் நமசிவாய

கட்டுரை தந்துதவியவர்
குரு மனோகர வேல்

29 ஏப்ரல், 2020

ஓர் இரவு

சிறுகதை

 ஓர் இரவு


*மம்சை செல்வக்குமார்

பழைய நினைவுகள் துளிர்க்க
அந்தப் படபடப்பில் வியர்க்க
தூக்கம் போய் விளிப்பு வந்தது.

ஊரெங்கும் மழை
உள்ளூரில் வெயில்
உள்ளறைவரை அனல்
பிசுபிசுத்தது உடல்.

"அப்பாவுக்கு என்னாச்சுமா
அடிக்க வர்றார்
இப்படி அவர் இருந்ததில்லையே?"

"நீ அவர்கிட்ட போகாதே"
என்னைச் சமாதானம் செய்ய
இப்படியொரு வார்த்தை
அவள் சொல்லியிருக்கக் கூடாது.

பிள்ளைகள் அம்மாவிடவும்
அப்பாவிடவும் அண்டாம இருக்க முடியுமா...

இப்பவே என்னைப் பிரித்துப் பார்த்தால் என் எதிர்காலம்...
என் மகனின் எதிர்காலம்...

"ஒருவர் முகத்தை
ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தால் போரடிக்குதுமா..."
மகன்தான் ஆரம்பித்தான்.

"அப்படின்னா, அய்யாமையையோ
அம்மாச்சியையோ கூப்பிட்டுக்க வேண்டியதுதான்" நான் ஆறுதலுக்காகச் சொன்னேன்.

"அப்போ எங்க அப்பாவ என்ன செய்ய...?" 
மனைவியின் கேள்வி என்னை
வேறு யோசனைக்குக் கொண்டு போனது.

"நாம இருக்கிற நிலைமையில்
யாரையாவது கூட வச்சிக்க முடியுமா..."
என் பொருளாதார நிலை விளித்துக் கொண்டது.

"என்ன செய்வது...
அப்ப இப்படியே இருக்க வேண்டியதுதான்..."
எழுந்து சமையல் கட்டுக்குள் போனாள் மனைவி.

"அப்ப அவரையும் கூப்பிடுவோம்"
அப்பப்ப கடைத்தீனி வாங்கித் தருவார்ல என்பதுபோல்
இருந்தது மகனின் பார்வை.

"அய்யாமை ஒத்தையில இருக்காங்க அவங்கமேல இரக்கம் வரலையா உனக்கு..." வார்த்தை நாக்கு வரை வந்தது, விழுங்கிக் கொண்டேன்.

சிறிது நேரம் ஏதும் பேசாம
அவரவர் வேலையில் இருந்தோம்.

"ஏம்பா இப்படிச் செய்தால் என்ன..."
மகன்தான் மறுபடியும்.

"அவங்க வரவேண்டாம்,
நாம அங்க போனால் என்ன..."
சொல்லி விட்டு ஓரக்கண்ணால் என்னை ஏறிட்டான்.

"போகலாம். ஆனால் இரண்டு மூனு நாள்ல நாம திரும்பனுமே...
அப்பா வேலைக்குப் போகனுமே..."
மனைவியின் திட்டம் புரிந்தது.

"எங்கே போனாலும் குடும்பமாய்ப் போனால் நல்லது. அதென்ன நீங்கமட்டும் தனியே போவது."

"ஆமா... நீங்க வந்திர கிந்திர போறீங்க..." மனைவியின் குத்தல் வலித்தது.

"ஆமப்பா... எப்பப் பாரு வேல வேலன்னுக்கிட்டு. என்னைக்காவது நாம சேர்ந்து ஊருக்குப் போயிருக்கோமா?"
இவனும் அடிபோடுறானே...
எண்ணம் எழுந்து கொண்டது.

"இந்தப் பேச்சை இத்தோடு விடுவோம். டேய்... நாளைக்கு உனக்கு ஸ்கூல் இருக்லே... போய் படு" என்றதும், என்னை முறைத்து விட்டுப் போனான்.

எல்லா வேலையும் முடித்து,
அவரவர் படுக்கைக்குப் போய் விழுந்தாச்சு.

மகனும் மனைவியும் உள்ளறையில் முனுமுனுக்கும் சத்தம்.

"என்ன அங்கே சத்தம்?"

"ஒன்னும் இல்லே..."
மனைவியின் குரல்.

"இப்படி வீட்டுக்குள்ளே இருப்பது போரடிக்குது அப்பா..."

"விடிந்ததும் ஸ்கூலுக்குப் போற,
முடிந்ததும் வீட்டுக்கு வர்ற...
இதுல உங்களுக்குப் போரடிக்குதோ..."

"ஸ்கூல்தான் முடிய போகுதே..."
மனைவிதான் மீண்டும் தூண்டுறா...
என்னை என்னுள் நோன்டுறா...

'ஆமா... முழுப் பரீட்சை முடிய போகுது. அதுக்குத்தான் இந்த அட்சாரம்...'
எண்ணவோட்டத்தை நிறுத்திவிட்டுச் சொன்னேன்,

"வருஷவருஷம் இரண்டு மாதம் என்னை அம்போன்னுவிட்டுப் போறீகளே, என் கஷ்டம் உங்களுக்குப் புரியாதா...
தனியாய் இருந்து, சமைத்து சாப்பிட்டு வேலைக்குப் போறதும், துணிமணிகளைத் துவைக்கிறதும் எவ்வளவு கஷ்டம் தெரியுமா..."

"அப்படித்தானே இருந்தீங்க..."

"அப்போ தனியாய் இருந்தேன்,
இப்ப கல்யாணமாகி ஒரு குடும்பமாய் இருக்கேன்ல..."

"அப்பா நீங்களும் லீவு போட்டு எங்கக் கூட வரலாமிலே..."

"எங்க வர்றது. வீட்டு வாடகை, மாதச் சாப்பாட்டுக்கு, அடுத்த வருஷ உன் ஸ்கூல் பீஸ்ஸுக்குப் பணம் யார் கொடுப்பா..." கொஞ்சம் கடுப்பாகிப் போனேன்.

"வருஷத்துக்கு ஒருக்கா ஊருக்குப் போவது உங்களுக்குப் பொறுக்காதே..."

"வருஷத்துக்கு ஒருக்காவா... புரட்டாசி மாதத் திருவிழாவுக்கு இரண்டு வாரம். ஐப்பசி மாத தீபாவளிக்கு ஒரு வாரம். அப்புறம் நல்லது கெட்டதுக்குன்னு போனதில்லே..." லேசாய்க் குரலை உயர்த்தினேன். அப்பவாவது அடங்கும் என நினைத்தேன்.

"ஆமா... போனது வந்ததுக்கெல்லாம் கணக்கு பாருங்க..." விசும்பல் சத்தம் உள்ளிருந்து வந்தது.

அவா போறதுன்னு முடிவு பன்னிட்டால், போகுறவரைக்கும் விடமாட்டாள். மகனைக் கொம்பு வீசிகிட்டே இருப்பாள்.

"சரி போறதுதான் போறீங்க, அப்படியே நம்ம ஊருக்கும் போய், எங்க அம்மா கூட ஒரு பத்து நாள் இருங்க."

"நீங்களும் கூட வர்றதா இருந்தால் அங்கே போவோம்."

"அங்கே போனா ஒரே போர்..."

"ஏலேய்... நீ இன்னும் தூங்கலையா... இந்தா வாரேன்.
அது நம்ம சொந்த ஊர்லேய். நம்ம மண்ணு. உங்க மூதாதையர் வாழ்ந்த பூமி. நாம எங்குட்டுத் திரிஞ்சாலும் நம்மள அரவணைக்கிற உறவுகள் எல்லாம் அங்கதாம்லேய் இருக்காங்க. அதுமட்டுமல்ல, உங்க அய்யாமை, என்னைய பெத்த அம்மா அங்கே தனியாய் இருக்குலேய்... உம்மேல அம்முட்டு பிரியமாய் இருப்பாங்கலேய்..."

"போங்கப்பா அது ஒரு ஊர்... அங்க யாரு போவா, இல்லமா..."

"ஆமா அந்த ஊரை அவர்தான் மெச்சுக்கனும்..." சுதியை ஏற்றினாள்.

விளம் வந்தவனாய் அவனை மிரட்ட கையை ஓங்கினேன்.

"இவரு ஒருத்தரு அடிக்க வர்றாரு. சும்மா இரும். இப்ப என்னத்த சொன்னான். அவன் சொன்னது நெசம் தானே. அங்கே ஆறு இருக்கா. உங்க அம்மா ஒருத்தகதான் இருக்காக... வேற யாரு இருக்கா கூடமாட ஓத்தாசைக்கு. போரும், போய்ப் படும். நீவேற எதுக்குல அவர்கிட்ட வாய்க் கொடுக்கே" அவனைச் செல்லமாய் ஒரு சாத்து சாத்தி, என்னை முறைத்தாள்.

சர்வமும் இத்துப் போன தேக்கு மரமாய் நான் ஆடிப்போனேன்.

அங்கே... அந்த ஊர்ல... நான் பிறந்த மண்ணுல... எங்க அம்மா மட்டுமா இருக்காக... அவுக பிறந்து வளர்ந்த வரலாறு இருக்கு... நான் தவிழ்ந்து திரிந்தோடிய வீதியிருக்கு... நான் படித்த பள்ளியிருக்கு... பள்ளிக்கால அடையாளம் இருக்கு, அதற்கொரு வரலாறு இருக்கு... என் இதயம் முழுக்கப் பரவி கிடக்கும் என் எண்ணம் யாவும் அங்கே சிதறிக் கிடக்கு... இவையெல்லாம் போக்கக் கூடியதா, போகக் கூடியதா... நினைவிழந்தவன் போல் கண்ணயர்ந்தேன், மனசு விளித்துக் கொண்டது.

14 ஏப்ரல், 2020



கலைஞர் ஏன் தை முதல் நாளை தமிழர் புத்தாண்டு தினமாக அறிவித்தார் என்பதை விவரிக்கிறது இக்கட்டுரை.



தமிழர்களின் புத்தாண்டு தை முதல் நாளா அல்லது சித்திரை முதல் நாளா என்ற விவாதம் நீண்ட காலமாகவே நடைபெற்று வந்தது. தை 1ஆம் தேதியையே தமிழ்ப் புத்தாண்டு என்று தமிழறிஞர்கள் வலியுறுத்தி வந்தனர். அதனையடுத்து, 2008ஆம் ஆண்டு தை 1ஆம் தேதியைத் தமிழ்ப் புத்தாண்டு என்று தி.மு.க. அரசு அரசாணை பிறப்பித்தது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு அதனை ரத்து செய்தது.

தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு தினமாக கலைஞர் ஏன் அறிவித்தார் என்பதை இக்கட்டுரை விவரிக்கிறது.
மறைமலை அடிகளார், தேவநேயப் பாவாணர், பெருஞ்சித்திரனார், பேராசிரியர் கா.நமசிவாயர், இ.மு.சுப்பிரமணியனார், மு.வரதராசனார், இறைக்குருவனார், வ.வேம்பையனார், பேராசிரியர் தமிழண்ணல், வெங்காலூர் குணா, கதிர். தமிழ்வாணனார், சின்னப்பத்தமிழர், கி.ஆ.பெ.விசுவநாதர், திரு.வி.க., பாரதிதாசனார், கா.சுப்பிரமணியனார், ந.மு.வேங்கடசாமியார், சோமசுந்தர பாரதியார், தமிழ்ப்புலவர் குழுவினர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் தை முதல்நாளே தமிழர்களுக்குத் தமிழ்ப் புத்தாண்டு என்று எடுத்துரைத்தனர்.
மலையகத்தில் கோ.சாரங்கபாணியார், சா.சி.குறிஞ்சிக்குமரனார், அ.பு.திருமாலனார், பேராசிரியர் இர.ந. வீரப்பனார், கம்பார் கனிமொழி குப்புசாமி, மணி. வெள்ளையனார், திருமாறன், இரெ.சு.முத்தையா, இரா.திருமாவளவனார், இர.திருச்செல்வனார் உள்ளிட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கூடி விவாதித்து ஆரிய திணிப்பான சித்திரை வருடப் பிறப்பினை விடுத்து, தை முதல் நாளே தமிழாண்டின் தொடக்கம் என்று முடிவு செய்து அறிவித்தார்கள்.
இன்று பிறக்கும் புத்தாண்டு தமிழ்ப் புத்தாண்டு அல்ல என்பதற்கான விளக்கம் :
1. பிரபவ, 2. விபவ, 3. சுக்கில, 4. பிரமோதூத, 5. பிரஜோத்பத்தி, 6. ஆங்கீரஸ, 7. ஸ்ரீமுக, 8. பவ, 9. யுவ, 10. தாது, 11. ஈஸ்வர, 12. வெகுதான்ய, 13. பிரமாதி, 14. விக்கிரம, 15. விஷு, 16. சித்ரபானு, 17.சுபாணு, 18. தாரண, 19. பார்த்திப, 20. விய, 21. சர்வகித்து, 22.சர்வதாரி, 23. விரோதி, 24. விக்ருதி, 25. கர, 26. நந்தன, 27. விஜய, 28. ஜய, 29. மன்மத், 30. துர்முகி, 31. ஹேவிளம்பி, 32. விளம்பி, 33. விகாரி, 34. சார்வரி, 35. பிலவ, 36. சுபகிருது, 37. சோபகிருது, 38. குரோதி, 39. விசுவாசு, 40. பராபவ, 41. பிலவங்க, 42. கீலக, 43. செமிய, 44. சாதரண, 45. விரோதிகிருது, 46. பரிதாபி, 47. பிரமாதீச, 48. ஆனந்த, 49. ராஷஸ, 50. நள, 51. பிங்கள, 52. காளயுக்தி, 53. சித்தாத்திரி,54. ரெத்திரி, . 55. துன்பதி, 56. துந்துபி, 57. ருத்ரோகாரி, 58. ரக்தாஷி, 59. குரோதன, 60. அக்ஷய,
இந்த அறுபதில் எது தமிழ் வார்த்தை, யாராவது சொல்ல முடியுமா?
தமிழர்கள் காலத்தை வகுத்த விதம் பிரமிப்பானது. தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு காலத்தைப் பிரித்தார்கள். ஒரு நாளைக்கூட ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்து வைத்திருந்தார்கள். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை அழைத்தார்கள்.
அதுமட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைகள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.
அதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாள் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1,440 நிமிடங்களோடு, அதாவது 24 மணிநேரத்தோடு அப்படியே பொருந்துகின்றன.
தமிழர்கள் ஒரு நாள் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.
1 நாழிகை - 24 நிமிடங்கள்
60 நாழிகை - 1,440 நிமிடங்கள்
இதனை இன்றைய கிருத்துவ கணக்கீட்டின் படி பார்த்தால், 
1,440 நிமிடங்கள் - 24 மணித்தியாலங்கள்
24 மணித்தியாலங்கள் - 1 நாள்)
பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக வகுத்தார்கள். ஆனால், பண்டைக்காலத் தமிழர்களோ தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.
  1. இளவேனில் - (தை-மாசி)
  2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை)
  3. கார் - (வைகாசி - ஆனி)
  4. கூதிர் - (ஆடி - ஆவணி)
  5. முன்பனி (புரட்டாசி - ஐப்பசி)
  6. பின்பனி (கார்த்திகை - மார்கழி)
மேற்கண்ட மாதக் கணக்கில் இளவேனில் என்பது சித்திரை - வைகாசி மாதங்களுக்கு உரிய காலம் என சிலர் வாதிடுகிறார்கள். ஆனால், அது முற்றிலும் தவறு.
சித்திரை மாதத்தில் (வேனில்) வெயில் தன் அதிகபட்ச உக்கிரத்தை அடைவதால் அதை முதுவேனில் என்றும், தை மாதத்தில் தொடங்கும் வெயிலை 'இளவேனில்' எனவும் பண்டைத் தமிழர்கள் அழகாகப் பகுத்திருந்தார்கள்.
காலத்தை அறுபது நாழிகைகளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன், தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் (தை) தொடங்குகின்றான்.
இங்கே ஒரு மிக முக்கியமான செய்தியை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமைகொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள்.
தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினை கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

தமிழர்கள் நாம் மட்டும் ஆரியப் பழக்கத்துக்கு மாறிவிட்டோம்! இடையில் வந்த இடைச் செருகலால் வந்த வினை இது. நம் இளவேனில் காலம் தை மாதம் தான். அதனால்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டு என்கிறோம். தமிழர்க்கு எதிரான சக்திகளின் சூழ்ச்சிக்குப் பலியாகாமல், தமிழின், தமிழரின் பெருமையைப் பாதுகாக்கும் பொருட்டுத் தமிழர் யாவரும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடி மகிழ்வோம். இதுகுறித்துப் பாவேந்தர் பாரதிதாசன் நமக்குத் தரும் அறிவுரையைக் கேளுங்கள்.
நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை இல்லை உனக்குப் புத்தாண்டு
அண்டிப்பிழைக்க வந்த ஆரியக்கூட்டம் கற்பித்ததே
அறிவுக்கொவ்வா அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழனுக்குத்
தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு!
- பாவேந்தர் பாரதிதாசன்
அப்படி இந்த நாளை கொண்டாடித்தான் ஆகவேண்டுமெனில், சித்திரை திருநாளாகக் கொண்டாடுங்கள். பகுத்தறிவு என்பது கடவுளை மறுப்பதுமட்டும் அல்ல, பகுத்து அறிவது நான் பகுத்தறிவு.
(இக்கட்டுரை இணையம் வழங்கியது கலைஞர் செய்திகள்)




Righ

6 பிப்ரவரி, 2020


தமிழர்களாகிய நாம்
பெருமிதம் கொள்வோம்



கீழ்க்காணும் இவை அனைத்தையும் படித்து முடிக்க ஒரு பிறவி போதாது!


1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் "எட்டுத்தொகை" சங்க நூல்கள்.. !

1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் "பத்துப்பாட்டு" சங்க நூல்கள்....!

1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.இன்னிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்...!

1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி போன்ற ஐம்பெருங்காப்பியங்கள்... !

1.அகத்தியம்  2.தொல்காப்பியம்
3.புறப்பொருள்
வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் மற்றும்
6.இறையனார் களவியல் உரை எனும் உரைநூல்..!

1.கம்பராமாயணம்-வழிநூல்.

1.தேவாரம் 2.திருவாசகம், 3.திருவருட்பா, 4.திருப்பாவை 5.திருவெம்பாவை 6..நாச்சியார் திருமொழி 7. ஆழ்வார் பாசுரங்கள் போன்ற மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்..!

1.முத்தொள்ளாயிரம் 2.முக்கூடற்பள்ளு 3.நந்திக்கலம்பகம் 4.கலிங்கத்துப்பரணி
5.மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்...!

ஒரு மொழியின் மிகச்சிறந்த பண்பே செம்மொழிக்கான கீழ்க்கண்ட பதினோரு தகுதி
களைக் கொண்டிருப்பதுதான்..

1.தொன்மை 2.தனித்தன்மை (தூய்மைத் தன்மை) 3.பொதுமைப் பண்புகள் 4.நடுவுநிலைமை 5.தாய்மைத் தன்மை 6.கலை பண்பாட்டுத் தன்மை 7.தனித்து இயங்கும் தன்மை 8.இலக்கிய இலக்கண வளம் 9.கலை இலக்கியத் தன்மை 10.உயர் சிந்தனை 11.மொழிக் கோட்பாடு
இந்தப் பதினோரு பண்புகளையும் கொண்ட உலகின் மிக மூத்த மொழி என் தாய்மொழி தமிழ்..!

தமிழ் பெரும் புலவர்கள் பட்டியல்..!
------------------------------------------------------------
அகம்பன் மாலாதனார்
அஞ்சியத்தை மகள் நாகையார்
அஞ்சில் அஞ்சியார்
அஞ்சில் ஆந்தையார்
அடைநெடுங்கல்வியார்
அணிலாடு முன்றிலார்
அண்டர் மகன் குறுவழுதியார்
அதியன் விண்ணத்தனார்
அதி இளங்கீரனார்
அம்மூவனார்
அம்மெய்நாகனார்
அரிசில் கிழார்
அல்லங்கீரனார்
அழிசி நச்சாத்தனார்
அள்ளூர் நன்முல்லையார்
அறிவுடைநம்பி
ஆரியன் பெருங்கண்ணன்
ஆடுதுறை மாசாத்தனார்
ஆதிமந்தி
ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக்கண்ணத்தனார்
ஆலங்குடி வங்கனார்
ஆலத்தூர் கிழார்
ஆலம்பேரி சாத்தனார்
ஆவூர்கிழார் மகனார் கண்ணனார்
ஆவூர் காவிதிகள் சகாதேவனார்
ஆவூர்கிழார்
ஆலியார்
ஆவூர் மூலங்கீரனார்
இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார்
இடைக்காடனார்
இடைக்குன்றூர்கிழார்
இடையன் சேந்தன் கொற்றனார்
இடையன் நெடுங்கீரனார்
இம்மென்கீரனார்
இரணியமுட்டத்து பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார்
இருங்கோன் ஒல்லையன் செங்கண்ணனார்
இருந்தையூர்க் கொற்றன் புலவன்
இரும்பிடர்தலையார்
இளங்கீரந்தையார்
இளங்கீரனார்
இளநாகனார்
இளந்திரையன்
இளந்தேவனார்
இளம்புல்லூர்க் காவிதி
இளம்பூதனார்
இளம்பெருவழுதி
இளம்போதியார்
இளவெயினனார்
இறங்குடிக் குன்றநாடன்
இறையனார்
இனிசந்த நாகனார்
ஈழத்துப் பூதந்தேவனார்
உகாய்க் குடிகிழார்
உக்கிரப் பெருவழுதி
உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்
உம்பற்காட்டு இளங்கண்ணனார்
உருத்திரனார்
உலோச்சனார்
உவர்கண்ணூர் புல்லங்கீரனார்
உழுந்தினைம் புலவர்
உறையனார்
உறையூர் இளம்பொன் வாணிகனார்
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்
உறையூர்ச் சல்லியங் குமரனார்
உறையூர்ச் சிறுகந்தனார்
உறையூர்ப் பல்காயனார்
உறையூர் மருத்துவன் தாமோதரனார்
உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
ஊட்டியார்
ஊண்பித்தை
ஊண்பொதி பசுங்குடையார்
எயிற்றியனார்
எயினந்தையார்
எருமை வெளியனார்
எருமை வெளியனார் மகனார் கடலனார்
எழூப்பன்றி நாகன் குமரனார்
ஐயாதி சிறு வெண்ரையார்
ஐயூர் முடவனார்
ஐயூர் மூலங்கீரனார்
ஒக்கூர் மாசாத்தனார்
ஒக்கூர் மாசாத்தியார்
ஒருசிறைப் பெரியனார்
ஒரூத்தனார்
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்
ஓதஞானி
ஓதலாந்தையார்
ஓரம்போகியார்
ஓரிற்பிச்சையார்
ஓரேர் உழவர்
ஔவையார்
கங்குல் வெள்ளத்தார்
கச்சிப்பேடு இளந்தச்சன்
கச்சிப்பேடு காஞ்சிக்கொற்றனார்
கச்சிப்பேடு பெருந்தச்சனார்
கடம்பனூர்ச் சாண்டில்யன்
கடலூர்ப் பல்கண்ணனார்
கடியலூர் உருத்திரங்கண்ணனார்
கடுந்தொடைக் காவினார்
கோவர்த்தனர்
கோவூர்க் கிழார்
கோவேங்கைப் பெருங்கதவனார்
கோழிக் கொற்றனார்
கோளியூர்க் கிழார் மகனார் செழியனார்
கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரன்
சங்கவருணர் என்னும் நாகரியர்
சத்திநாதனார்
சல்லியங்குமரனார்
சாகலாசனார்
சாத்தந்தந்தையார்
சாத்தனார்
சிறுமோலிகனார்
சிறுவெண்டேரையார்
சிறைக்குடி ஆந்தையார்
சீத்தலைச் சாத்தனார்
செங்கண்ணனார்
செம்பியனார்
செம்புலப்பெயல்நீரார்
செயலூர் இளம்பொன்சாத்தன் கொற்றனார்
செய்திவள்ளுவன் பெருஞ்சாத்தன்
செல்லூர்கிழார் மகனார் பெரும்பூதன் கொற்றனார்
செல்லூர்க்கோசிகன் கண்ணனார்
சேந்தங்கண்ணனார்
சேந்தம்பூதனார்
சேந்தங்கீரனார்
சேரமானெந்தை
சேரமான் இளங்குட்டுவன்
சேரமான் கணைக்கால் இரும்பொறை
சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை
சோனாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
சோழன் நலங்கிள்ளி
சோழன் நல்லுருத்திரன்
தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்
தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார்
தனிமகனார்
தாமாப்பல் கண்ணனார்
தாமோதரனார்
தாயங்கண்ணனார்
தாயங்கண்ணியார்
தாயுமானவர்
திப்புத்தோளார்
திருத்தாமனார்
தீன்மதிநாகனார்
தும்பிசேர்கீரனார்
துறைக்குறுமாவிற் பாலங்கொற்றனார்
துறையூர்ஓடைக்கிழார்
தூங்கலோரியார்
தேய்புரி பழங்கயிற்றினார்
தேரதரன்
தேவகுலத்தார்
தேவனார்
தொடித்தலை விழுத்தண்டினர்
தொண்டி ஆமூர்ச்சாத்தனார்
தொல்கபிலர்
நக்கண்ணையார்
நக்கீரர்
நப்பசலையார்
நப்பண்ணனார்
நப்பாலத்தனார்
நம்பிகுட்டுவன்
நரிவெரூத்தலையார்
நரைமுடி நெட்டையார்
நல்லச்சுதனார்
நல்லந்துவனார்
நல்லழிசியார்
நல்லாவூர்க் கிழார்
நல்லிறையனார்
நல்லுருத்திரனார்
நல்லூர்ச் சிறுமேதாவியார்
நல்லெழுநியார்
நல்வழுதியார்
நல்விளக்கனார்
நல்வெள்ளியார்
நல்வேட்டனார்
நற்சேந்தனார்
நற்றங்கொற்றனார்
நற்றமனார்
நன்பலூர்ச் சிறுமேதாவியார்
நன்னாகனார்
நன்னாகையார்
நாகம்போத்தன்
நாமலார் மகன் இளங்கண்ணன்
நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்
நெடுங்கழுத்துப் பரணர்
நெடும்பல்லியத்தனார்
நெடும்பல்லியத்தை
நெடுவெண்ணிலவினார்
நெட்டிமையார்
நெய்தற் கார்க்கியார்
நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர்க்கிழார்
நெய்தற்றத்தனார்
நொச்சி நியமங்கிழார்
நோய்பாடியார்
பக்குடுக்கை நன்கணியார்
படுமரத்து மோசிகீரனார்
படுமரத்து மோசிக்கொற்றனார்
பதடிவைகலார்
பதுமனார்
பரணர்
கடுந்தொடைக் கரவீரன்
கடுவன் இளமள்ளனார்
கடுவன் இளவெயினனார்
கடுவன் மள்ளனார்
கணக்காயன் தத்தனார்
கணியன் பூங்குன்றனார்
கண்ணகனார்
கண்ணகாரன் கொற்றனார்
கண்ணங்கொற்றனார்
கண்ணம் புல்லனார்
கண்ணனார்
கதக்கண்ணனார்
கதப்பிள்ளையார்
கந்தரத்தனார்
கபிலர்
கம்பர்
கயத்தூர்கிழார்
கயமனார்
கருங்குழலாதனார்
கரும்பிள்ளைப் பூதனார்
கருவூர்க்கிழார்
கருவூர் கண்ணம்பாளனார்
கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார்
கருவூர் கலிங்கத்தார்
கருவூர் கோசனார்
கருவூர் சேரமான் சாத்தன்
கருவூர் நன்மார்பனார்
கருவூர் பவுத்திரனார்
கருவூர் பூதஞ்சாத்தனார்
கருவூர் பெருஞ்சதுக்கத்துப் பூதனார்
கல்பொருசிறுநுரையார்
கல்லாடனார்
கவைமகன்
கழாத்தலையார்
கழார்க் கீரனெயிற்றியனார்
கழார்க் கீரனெயிற்றியார்
கழைதின் யானையார்
கள்ளிக்குடிப்பூதம்புல்லனார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கைப்பாடினடியார் நச்செள்ளையார்
காசிபன் கீரன்
காட்டூர்கிழார் மகனார் கண்ணனார்
காப்பியஞ்சேந்தனார்
காப்பியாற்றுக் காப்பியனார்
காமஞ்சேர் குளத்தார்
காரிக்கிழார்
காலெறி கடிகையார்
காவட்டனார்
காவற்பெண்டு
காவன்முல்லையார்
காவிரிப் பூம்பட்டினத்துக் கந்தரத்தனார்
காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் செங்கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார்
காவிரிப் பூம்பட்டினத்துப் பொன்வாணிகனார் மகனார் நப்பூதனார்
கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார்
கிடங்கி்ல் காவிதிப் பெருங்கொற்றனார்
கிடங்கில் குலபதி நக்கண்ணனார்
கிள்ளிமங்கலங்கிழார்
கிள்ளிமங்கலங்கிழார் மகனார் சேரக்கோவனார்
கீரங்கீரனார்
கீரந்தையார்
குடபுலவியனார்
குடவாயிற் கீரத்தனார்
குட்டுவன் கண்ணனார்
குட்டுவன் கீரனார்
குண்டுகட் பாலியாதனார்
குதிரைத் தறியனார்
குப்பைக் கோழியார்
குமட்டூர் கண்ணனார்
குமுழிஞாழலார் நப்பசலையார்
குழற்றத்தனார்
குளம்பனார்
குளம்பாதாயனார்
குறமகள் இளவெயினி
குறமகள் குறியெயினி
குறியிறையார்
குறுங்கீரனார்
குறுங்குடி மருதனார்
குறுங்கோழியூர் கிழார்
குன்றம் பூதனார்
குன்றியனார்
குன்றூர்க் கிழார் மகனார்
கூகைக் கோழியார்
கூடலூர்க் கிழார்
கூடலூர்ப பல்கண்ணனார்
கூவன்மைந்தன்
கூற்றங்குமரனார்
கேசவனார்
கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார்
கொட்டம்பலவனார்
கொல்லன் அழிசி
கொல்லிக் கண்ணன்
கொள்ளம்பக்கனார்
கொற்றங்கொற்றனார்
கோக்குளமுற்றனார்
கோடைபாடிய பெரும்பூதன்
கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்
கோட்டியூர் நல்லந்தையார்
கோண்மா நெடுங்கோட்டனார்
கோப்பெருஞ்சோழன்
பராயனார்
பரூஉமோவாய்ப் பதுமனார்
பறநாட்டுப் பெருங்கொற்றனார்
பனம்பாரனார்
பாண்டரங்கண்ணனார்
பாண்டியன் ஆரியப்படைகடந்த நெடுஞ்செழியன்
பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
பாண்டியன் பன்னாடு தந்தான்
பாண்டியன் மாறன் வழுதி
பாரதம் பாடிய பெருந்தேவனார்
பாரிமகளிர்
பார்காப்பான்
பாலைக் கௌதமனார்
பாலை பாடிய பெருங்கடுங்கோ
பாவைக் கொட்டிலார்
பிசிராந்தையார்
பிரமசாரி
பிரமனார்
பிரான் சாத்தனார்
புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழார்
புல்லாற்றூர் எயிற்றியனார்
பூங்கணுத் திரையார்
பூங்கண்ணன்
பூதங்கண்ணனார்
பூதபாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு
பூதம்புல்லனார்
பூதனார்
பூதந்தேவனார்
பெருங்கண்ணனார்
பெருங்குன்றூர்க் கிழார்
பெருங்கௌசிகனார்
பெருஞ்சாத்தனார்
பெருஞ்சித்திரனார்
பெருந்தலைச்சாத்தனார்
பெருந்தேவனார்
பெருந்தோட் குறுஞ்சாத்தன்
பெரும் பதுமனார்
பெரும்பாக்கன்
பெருவழுதி
பேயனார்
பேய்மகள் இளவெயினி
பேராலவாயர்
பேரிசாத்தனார்
பேரெயின்முறுவலார்
பொதுக்கயத்துக் கீரந்தை
பொதும்பில் கிழார்
பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணி
பொதும்பிற் புல்லாளல் கண்ணியார்
பொத்தியார்
பொய்கையார்
பொருந்தில் இளங்கீரனார்
பொன்மணியார்
பொன்முடியார்
பொன்னாகன்
போதனார்
போந்தைப் பசலையார்
மடல் பாடிய மாதங்கீரனார்
மதுரை அளக்கர் ஞாழற் கவிஞர் மகனார் மள்ளனார்
மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்
மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார்
மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார்
மதுரை இனங்கௌசிகனார்
மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்
மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்
மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகனார்
மதுரைக் கணக்காயனார்
மதுரைக் கண்டராதித்தனார்
மதுரைக் கண்ணத்தனார்
மதுரைக் கவுணியன் பூதத்தனார்
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்
மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்
மதுரைக் காருலவியங் கூத்தனார்
மதுரைக் கூத்தனார்
மதுரைக் கொல்லன் புல்லன்
மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்
மதுரைச் சுள்ளம் போதனார்
மதுரைத் தத்தங்கண்ணனார்
மதுரைத் தமிழக்கூத்தனார் நாகன் தேவனார்
மதுரைத் தமிழக் கூத்தனார்
மதுரைப் படைமங்க மன்னியார்
மதுரைப் பாலாசிரியர் சேந்தங்கொற்றனார்
மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்
மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்
மதுரைப் புல்லங்கண்ணனார்
மதுரைப் பூதனிள நாகனார்
மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார்
மதுரைப் பெருங்கொல்லன்
மதுரைப் பெருமருதனார்
மதுரைப் பெருமருதிளநாகனார்
மதுரைப் போத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்
மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்
மதுரை மருதங்கிழார் மகன் இளம்போத்தன்
மதுரை வேளாசன்
மருங்கூர்கிழார் பெருங்கண்ணனார்
மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்
மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்
மருதம் பாடிய இளங்கடுங்கோ
மருதனிளநாகனார்
மலையனார்
மள்ளனார்
மாங்குடிமருதனார்
மாடலூர் கிழார்
மாதீர்த்தன்
மாமிலாடன்
மாமூலனார்
மாயேண்டன்
மார்க்கண்டேயனார்
மாலைமாறன்
மாவளத்தன்
மாறோக்கத்துக் காமக்கண்ணியார்
மாறோக்கத்து நப்பசலையார்
மாற்பித்தியார்
மிளைக் கந்தன்
மிளைப் பெருங்கந்தன்
மிளைவேள் பித்தன்
மீனெறி தூண்டிலார்
முக்கல் ஆசான் நல்வெள்ளையார்
முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்
முடத்தாமக்கண்ணியார்
முடத்திருமாறன்
முதுகூத்தனார்
முதுவெங்கண்ணனார்
முப்பேர் நாகனார்
முரஞ்சியயூர் முடிநாகராயர்
முள்ளியூர்ப் பூதியார்
முலங்கீரனார்
மையோடக் கோவனார்
மோசிக்கண்ணத்தனார்
மோசிக்கீரனார்
மோசிக்கொற்றன்
மோசிக்கரையனார்
மோசிசாத்தனார்
மோசிதாசனார்
வடநெடுந்தத்தனார்
வடவண்ணக்கன் தாமோதரன்
வடமோதங்கிழார்
வருமுலையாரித்தி
வன்பரணர்
வண்ணக்கன் சோருமருங்குமரனார்
வண்ணப்புறக் கந்தரத்தனார்
வாடாப்பிராந்தன்
வாயிலான் தேவன்
வாயிலிலங்கண்ணன்
வான்மீகியார்
விட்டகுதிரையார்
விரிச்சியூர் நன்னாகனார்
விரியூர் நன்னாகனார்
வில்லக விரலினார்
விழிகட்பேதை பெருங்கண்ணனார்
விற்றூற்று மூதெயினனார்
விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்
வினைத் தொழில் சோகீரனார்
வீரை வெளியனார்
வீரை வெளியன் தித்தனார்
வெண்கண்ணனார்
வெண்கொற்றன்
வெண்ணிக் குயத்தியார்
வெண்பூதன்
வெண்பூதியார்
வெண்மணிப்பூதி
வெள்ளாடியனார்
வெள்ளியந்தின்னனார்
வெள்ளிவீதியார்
வெள்வெருக்கிலையார்
வெள்ளைக்குடி நாகனார்
வெள்ளைமாளர்
வெறிபாடிய காமக்கண்ணியார்
வேட்டகண்ணன்
வேம்பற்றூர்க்கண்ணன் கூத்தன்
வேம்பற்றுக் குமரன்

மற்றும் பெண்பாற்புலவர்கள்:
---------------------------------------------------

அச்சியத்தை மகள் நாகையார்
அள்ளுரர் நன்முல்லை
ஆதிமந்தி - குறுந் 3
இளவெயினி - புறம் 157
உப்பை ஃ உறுவை
ஒக்கூர் மாசாத்தியார்
கரீனா கண்கணையார்
கவியரசி
கழார் கீரன் எயிற்றியார்
கள்ளில் ஆத்திரையனார்
காக்கை பாடினியார் நச்செள்ளையார்
காமக்கணிப் பசலையார்
காரைக்காலம்மையார்
காவற்பெண்டு
காவற்பெண்டு
கிழார் கீரனெயிற்றியார்
குட புலவியனார்
குமிழிநாழல் நாப்பசலையார்
குமுழி ஞாழல் நப்பசையார்
குறமகள் ஃ இளவெயினி
குறமகள் ஃ குறிஎயினி
குற மகள் இளவெயினியார்
கூகைக்கோழியார்
தமிழறியும் பெருமாள்
தாயங்கண்ணி - புறம் 250
நக்கண்ணையார்
நல்லிசைப் புலமை மெல்லியார்
நல்வெள்ளியார்
நெட்டிமையார்
நெடும்பல்லியத்தை
பசலையார்
பாரிமகளிர்
பூங்கண்ணுத்திரையார்
பூங்கண் உத்திரையார்
பூதபாண்டியன் தேவியார்
பெண்மணிப் பூதியார்
பெருங்கோப்பெண்டு
பேய்மகள் இளவெயினி
பேயனார்
பேரெயென் முறுவலார்
பொத்தியார்
பொன்மணியார்
பொன்முடியார்
போந்தலைப் பசலையார்
மதுவோலைக் கடையத்தார்
மாற்பித்தியார்
மாற்பித்தியார், இயற்பெயர் பித்தி
மாறோக்கத்து நாப்பசலையார்
முள்ளியூர் பூதியார்
முன்னியூப் பூதியார்
வரதுங்க ராமன் தேவியார்
வருமுலையாருத்தி
வில்லிபுத்தூர்க் கோதையார்
வெண்ணிக் குயத்தியார்
வெள்ளி வீதியார்
வெறிபாடிய காமக்கண்ணியர்.

சித்தர்கள்: பதினெண் சித்தர்:

1. திருமூலர்,   2. இராமதேவர், 3. கும்பமுனி,  4. இடைக்காடர்,
5. தன்வந்திரி,  6. வான்மீகி, 7. கமலமுனி, 8. போகநாதர், 9. குதம்பைச் சித்தர், 10. மச்சமுனி,  11. கொங்கணர், 12, பதஞ்சலி,  13. நந்திதேவர், 14. போதகுரு, 15. பாம்பாட்டிச் சித்தர்.   16. சட்டைமுனி,   17. சுந்தரானந்த தேவர்,   18. கோரக்கர்.

இது ஒரு பட்டியல்.

1. அகப்பேய் சித்தர்,  2. அழுகணிச் சித்தர், 3. ஆதிநாதர் வேதாந்தச் சித்தர், 4. சதோகநாதர்,  5.இடைக்காட்டுச் சித்தர்,  6. குதம்பைச் சித்தர், 7. புண்ணாக்குச் சித்தர்.  8. ஞானச்சித்தர், 9.மௌனச் சித்தர், 10. பாம்பாட்டிச் சித்தர், 11. கல்லுளி சித்தர், 12, கஞ்சமலைச் சித்தர். 13. நொண்டிச் சித்தர், 14. விளையாட்டுச் சித்தர்,   15. பிரமானந்த சித்தர்,   16. கடுவெளிச் சித்தர், 17. சங்கிலிச் சித்தர், 18.திரிகோணச்சித்தர்.

இது  மற்றொரு  பட்டியல்.  இந்தப்  பட்டியலில் நவநாத சித்தர்களும்
அடங்குவர்.

1. வான்மீகர், 2. பதஞ்சலியார்,  3. துர்வாசர், 4. ஊர்வசி,  5. சூதமுனி,
6. வரரிஷி,  7. வேதமுனி,  8. கஞ்ச
முனி,  9. வியாசர், 10. கௌதமர் - இது இன்னொரு  பட்டியல்.

பெரிய  ஞானக்கோவை சித்தர்கள் நாற்பத்தெண்மர் என்று இதனிலும் மாறுபட்ட ஒரு பட்டியலைத் தருகின்றது.

1. காலாங்கி, 2. கமலநாதர், 3. கலசநாதர், 4. யூகி, 5. கருணா
னந்தர், 6. போகர்,  7. சட்டைநாதர்,  8. பதஞ்சலியார்,  9. கோரக்கர், 10. பவணந்தி, 11. புலிப்பாணி 12.அழுகணி.13. பாம்பாட்டி,  14. இடைக்காட்டுச் சித்தர்,  15. கௌசிகர், 16. வசிட்டர், 17. பிரம்மமுனி, 18. வியாகர், 19. தன்வந்திரி, 20. சட்டைமுனி, 21. புண்ணாக்கீசர், 22. நந்தீசர்,  23, அகப்பேய்,  24. கொங்கணவர், 25. மச்சமுனி, 26. குருபாத நாதர், 27. பரத்துவாசர், 28. கூன் தண்ணீர், 29. கடுவெளி, 30. ரோமரிஷி, 31. காகபுசுண்டர்,  32. பராசரர். 33. தேரையர், 34. புலத்தியர், 35. சுந்தரானந்தர், 36. திருமூலர், 37. கருவூரார், 38, சிவவாக்கியர், 39. தொழுகண், 40. நவநாதர்
(அ. சத்ய நாதர்,  ஆ. சதோக நாதர்,  இ. ஆதி நாதர், ஈ. அனாதி நாதர், உ.
வகுளி நாதர்,  ஊ. மதங்க நாதர்,  எ. மச்சேந்திர நாதர், ஏ. கஜேந்திர நாதர், ஐ. கோரக்க நாதர்) 41. அஷ்ட
வசுக்கள், 42. சப்த ரிஷிகள்.

இப்படிச்  சித்தர்கள் பட்டியல்  கணக்கில்லாமல் பெருகிக்கொண்டே செல்கிறது.  கிடைத்தவை இவைமட்டுமே.

 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எம் முன்னோர்கள் பேசிய மொழி என் தாய்மொழி தமிழ்..!

இவ்வளவு சிறப்பு வாய்ந்த நம் மொழியை எவராலும் அழிக்க இயலாது...
பெருமை கொள்வோம் தமிழரென்று.

10 ஜனவரி, 2020

”வரவர மாமியார் கழுதை போல் ஆனாளாம்”

இந்த பழமொழியில் வரும் கழுதை என்ற சொல் உண்மையில் கயிதை என்பதாகும்.

சென்னை தமிழில் கழுதையை கயிதை என்று சொல்வதால் யாரோ,  ’வரவர மாமியார் கயிதை போல ஆனாளாம்” என்ற சுத்தமான தமிழ் பழமொழியை கொச்சைத் தமிழ் என்று நினைத்து ”வரவர மாமியார் கழுதை போல ஆனாளாம்’ என்று மாற்றியிருக்க வேண்டும்!

கயிதை என்பது ஊமத்தங்காயைக் குறிக்கும். ஊமத்தையானது செடியில் பூவாக மலரும் பொழுது கொள்ளை அழகாக வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும். சிறிது நாட்களில் அது காயாக மாறும்பொழுது அதைச் சுற்றிலும் பயமுறுத்தும் முட்கள் முளைத்து பிறகு கொடிய விஷம் கொண்ட காயாக மாறும். அதுபோலவே திருமணம் ஆன புதிதில் மாமியார் கல்கண்டாக பேசுவார் பிறகு முள்ளாக குத்துவார் என்பதுதான் இந்த பழமொழியின் பொருளாகும்.

இருந்தாலும் மருமகனை கவனிக்கும் அளவிற்கு மருமகளை மாமியார் கவனிப்பதில்லை என்பதால் இந்தப் பழமொழி மருமகள்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்தப் படத்திற்கும் இந்த பழமொழிக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லைதான்.  இருந்தாலும் மாமியார் பற்றி சொல்லவருவதால் இந்த பழமொழி என் நினைவுக்கு வந்தது.

தகவல் பெரியாண்டவன், ஈரோடு

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...