20 ஏப்ரல், 2018


சமயபுரம் மாரியம்மன் சித்திரைப் பெருவிழா

2018-04-20@ 09:40:48
சமயபுரத்தில் உள்ள மாரியம்மன் கோயில், தமிழகத்தில் உள்ள சக்தி தலங்களில் முதன்மையானது. திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது சமயபுரம்.

கோயில் வரலாறு: 

திருக்கடையூரில் எமனிடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நினைத்த மார்க்கண்டேயர் சிவபெருமானிடம் சரணடைந்தார். ஈசனும் காலசம்கார மூர்த்தியாக அவதாரம் எடுத்து எமதர்மனை அழித்தார். இது உலகில் ஜனன மரணத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. நோய்களின் அதிபதியான மாயாசுரன் நோய்களைப் பரப்பினான். மக்களைத் துன்புறுத்தினான். இதைக் கண்டு கோபம் கொண்ட பார்வதி தேவி தன்வடிவமான மாரியம்மனை மாயாசுரனை வதம் செய்ய அனுப்பினாள். மாரியம்மன் மாயாசுரனையும், அவனது சகோதரர்களையும் வதம் செய்தாள். பின்னர் அவர்களின் தலையை ஒட்டியாணமாக அணிந்து நோய்களின் கொடுமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றி அருள் புரிந்தார். பின்பு ஈசனின் அருளுடன் தனது தமையன் ஸ்ரீரங்கநாதர் கோயிலில் முதலில் வைஷ்ணவி தேவியாக அமர்ந்தாள். பின்னாளில் சமயபுரத்தில் வந்து மாரியம்மனாக வீற்றிருக்கிறாள்.

மாரியம்மன் தனது எட்டுக் கரங்களில் இடப்புறமாக கபாலம், மணி, வில், பாசம், வலப்புறமாக கத்தி, சூலம், அம்பு மற்றும் உடுக்கை ஆகிய ஆயுதங்களைத் தாங்கியுள்ளாள். இடதுகாலை மடக்கி வைத்து வலது காலை தொங்கவிட்ட நிலையில் மாயாசுரனின்  தலைமீது கால் பதித்து,அமர்ந்து பக்தர்களின் குறைகளை தீர்த்து வருகிறாள். வேப்ப மர காட்டில் உருவான கோவில் என்பதால் தான் இப்போதும் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் தல விருட்சம் வேப்ப மரமாக உள்ளது.

கோயில் அமைப்பு: 

சமயபுரத்தாள் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு மேற்காக  280 அடி நீளத்துடனும் தெற்கு வடக்காக 150 அடி அகலத்துடனும் அமைந்துள்ளது. மூன்று திருச்சுற்றுகள் கொண்ட இந்தக் கோயில் முகப்பில் நீண்ட மண்டபம் ஒன்றுள்ளது. மூன்றாம் பிரகாரத்தில் பௌர்ணமி மண்டபம், நவராத்திரி மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன. 2ம் பிராகாரத்தில் விநாயகர், மாரியம்மனின் உற்சவ மூர்த்தி மற்றும் கருப்பண்ணசாமி ஆகியோரது சந்நிதிகள் உள்ளன.  இங்கு ஒரே சன்னதியில் மூன்று விநாயகர்கள் அருள் புரிகிறார்கள். ஞான சக்தி, இச்சா சக்தி, கிரியா சக்தி வடிவங் களாக மூன்று விநாயகர்களை பிரதிஷ்டை செய்தனர். அம்பாள் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள்.

சித்திரை பெருவிழா: 

உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் நலனுக்காகவும் சிவபெருமானை வேண்டி மாசி கடைசி ஞாயிறு முதல், பங்குனி கடைசி ஞாயிறு வரை, 28 நாட்கள் சமயபுரம் மாரியம்மன் பச்சைப்பட்டினி விரதம் மேற்கொள்கிறாள். விரத நாட்களில் அம்மனுக்கு வழக்கமான தளிகைக்குப் பதிலாக துள்ளு மாவு, வெள்ளரிப் பிஞ்சு, பாசி பருப்பு, இளநீர் வகைகளே படைக்கப்படுகின்றன. அம்மன் விரதம் இருக்கும் நாட்களில் அம்மன் மனதை குளிர்ச்சி செய்யவே பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது.

சித்திரை மாதத்தின் கத்திரி வெயிலில் அம்மை போன்ற நோய்கள் மக்களுக்கு ஏற்படும். அந்த வெப்பத்தைத் தான் ஏற்றுக் கொண்டு, மக்களை குளிர வைக்கும் அம்மன் உடல் வெப்பத்தை தணிக்கவே, பக்தர்கள் அம்பாளுக்கு பூமாரி பொழிந்து, அவளை குளிரச் செய்கிறார்கள். இத்தகைய சிறப்பு மிக்க பச்சை பட்டினி விரதம் பூரணமடைந்தவுடன் சிவபெருமானிடம் உள்ள சர்வ சக்தியையும் பெற்று, படைத்தல், காத்தல், அழித்தல்,  மறைத்தல், அருள்பாலித்தால் என்ற ஐந்து தொழில்களையும் சித்திரைப் பெருவிழா நாட்களில் இங்கு அம்மன் அருள்புரிகிறார் என்பது ஐதீகம். சித்திரை திருநாளில் சமயபுரத்து மாரியம்மனை தரிசிக்கும் பக்தர்களுடைய அனைத்து வேண்டுதல்களையும் தேர்த்திருநாளன்று அருள்பாலிப்பால் எண்ணிய காரியம் இனிதே ஈடேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
VIDEO : பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் விசாரணை தொடக்கம் | Professor Nirmala Devi case
பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் விசாரணை தொடக்கம் | Professor Nirmala Devi case
946 views
News

மேலும் செய்திகள்

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...