ஓர் ஊரில் ஒரு ராஜா இருந்தார். அவர் நாள்தோறும்
அதிகாலையில் மாறுவேடத்தில் சென்று யாராவது ஒருவரின் வீட்டுக்கதவைத் தட்டி, அந்த
வீட்டின் உரிமையாளருக்குப் பரிசுப்பொருள் வழங்குவது வழக்கம்.
ஒரு நாள் விவசாயி ஒருவரின் வீட்டுக்கதவைத்
தட்டினார் ராஜா. தூக்கத்தில் விவசாயி கதவைத் திறந்தவுடன் அவருக்குக் கை நிறைய
பொற்காசுகளை வழங்கினார் ராஜா.
இந்தப் பொற்காசுகளை வழங்கிவிட்டு ராஜா வெளியே
வந்தவுடன் மாடு ஒன்று, அவரை முட்டி கீழே தள்ளிவிட்டது. இதனால் ராஜாவுக்குத் தலையில்
காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்ததும் ராஜாவின் காவலாளிகள் ராஜாவை அரண்மனைக்கு
அழைத்துச் சென்றனர்.
இந்தத் தகவலை அமைச்சருக்குத் தெரிவித்த காவலாளிகள், ராஜா இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டதற்குக் காரணம் அந்த விவசாயிதான் என்றும், அந்த
விவசாயியை ராஜா பார்த்ததால்தான் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டது என்றும்
எடுத்துக் கூறினர்.
அமைச்சரும் அந்த விவசாயியை வரவழைத்து மன்னர் முன் நிறுத்தினார்.
மன்னர் அந்த விவசாயிக்கு மரண தண்டனை விதித்து
உத்தரவிட்டார்.
தனக்கு மரண தண்டனை என்று கேள்விபட்டதும் அந்த
மனிதர் சிரித்தார்.
உடனே மன்னர் “இன்று மாலை, உனக்கு மரண தண்டனை.
நீ இப்படி சிரிக்கிறாயே?” என்று அந்த மனிதரைப் பார்த்து வினவினார்.
அதற்கு அந்த மனிதர் நிதானமாகப் பதில் கூறினார்.
“நீங்கள் என்னைப் பார்த்ததால் உங்களுக்குத் தலையில் அடிபட்டுவிட்டது. அப்படிப்பட்ட
சனியன் பிடித்த முகம் எனக்கு. என்னைப் பார்த்ததால் இந்த அளவோடு போய்விட்டது. ஆனால்,
நான் இன்றைக்கு முதல் தடவையாக உங்கள் முகத்திலே முழித்தேன். அதன் பலன் என்ன? என்
உயிரே போகப் போகிறது. இதுதான் மன்னராகிய உங்களின் முக லட்சணம்!” என்று கூறினான்
அந்த மனிதன்.
இதைக் கேட்ட ராஜாவின் முகம் மாறியது. அந்த
மனிதருக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்துசெய்து உத்தரவிட்டார். ராஜாவையே
எதிர்த்து கேட்கக்கூடிய துணிச்சல் அந்த மனிதருக்கு இருந்ததால் அவர் உயிர்
பிழைத்தது.
(2013 ஆகஸ்ட் 23 அன்று காவலர்களுக்கு விருது வழங்கும் விழாவில்
முதல்வர் ஜெயலலிதா சொன்ன கதை) நன்றி : தினத்தந்தி
முதல்வர் ஜெயலலிதா சொன்ன கதை) நன்றி : தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக