ராபர்ட் கால்டுவெல்: திராவிட மொழியியல் ஆய்வின் முன்னோடி
Published : 27 Aug 2017 11:33 IST
Updated : 27 Aug 2017 11:33 IST
த
மிழருக்கும் ஐரோப்பியருக்கும் ஏற்பட்ட சமய, வாணிப மற்றும் அரசியல் தொடர்புகளால் தமிழில் சில மாறுதல்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டன. தமிழ் மொழிக்கு ஏற்பட்ட மாறுதல் அல்லது வளர்ச்சி பெரும்பாலும் ஐரோப்பியப் பாதிரியார்களால் உண்டானவையே என்று மயிலை சீனி. வேங்கடசாமி அவரது ‘கிறித்தவமும் தமிழும்’ என்ற நூலில் கூறுகிறார். இப்படி, கிறிஸ்தவ சமயத்தைப் பரப்புவதற்காகத் தமிழகம் வந்து, தமிழுக்குத் தொண்டாற்றிய ஐரோப்பியர்களுள் ராபர்ட் கால்டுவெல் குறிப்பிடத் தக்கவர்.
அயர்லாந்தில் பிறந்த கால்டுவெல், லண்டன் மிஷனரி சங்கத்தில் சேர்ந்தார். பின்னர் அந்த சங்கத்தின் சார்பாக கிளாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பயின்றார். அங்கு கிரேக்க மொழியைப் பயிற்றுவித்த பேராசிரியர் சாண்ட்ஃபோர்டு என்பவர் மொழிநூல் முறை குறித்தும், ஒப்பிலக்கணத்தின் வாயிலாக மொழியின் தன்மையை உணர்ந்துகொள்ளும் முறை குறித்தும் ஆற்றிய உரைகள், அவருக்கு மொழியியலின்மீது ஆர்வத்தைத் தூண்டியது. பின்னாளில் அவர் தென்னிந்திய மொழிகளின் ஒப்பிலக்கணம் குறித்த நூலை எழுதுவதற்கு அடித்தளமிட்டவர் இந்தப் பேராசிரியரே என்று கால்டுவெல் கூறியுள்ளார்.
தென்திசை நோக்கிய பயணம்
1838-ல் லண்டன் மிஷனரி சங்கத்தின் சார்பாக, சமயப் பணிபுரிவதற்காக சென்னை துறைமுகம் வந்து சேர்ந்தார் கால்டுவெல். சென்னையில் தங்கி மூன்றாண்டுகள் தமிழைக் கற்றுக்கொண்டு, அங்கிருந்து திருநெல்வேலிக்குக் கால்நடையாகவே பயணம் மேற்கொண்டார். இந்த மண்ணையும் மக்களையும் அறிந்துகொள்ளும் பொருட்டு அவர் தேர்ந்தெடுத்த இந்தப் பயணம், தமிழர் வாழ்க்கை முறைமீது அவருக்குப் பேரார்வத்தை ஏற்படுத்தியது. திருநெல்வேலியில் உள்ள இடையன்குடியில் வசிக்கத் தொடங்கிய கால்டுவெல், சமயப் பணியோடு தமிழ்ப் பணியையும் தொடர்ந்தார்.
திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில், திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் ஆகிய நூல்களைக் கற்றுணர்ந்தார் கால்டுவெல். தமிழில் உள்ள கிறிஸ்தவ மதப் பிரார்த்தனை நூலையும், புதிய ஏற்பாட்டையும் திருத்தி வெளியிட்ட குழுவில் உறுப்பினராக இடம்பெற்றார். தமிழ்ப் பணியோடு வரலாற்று ஆய்வுகளிலும் ஈடுபட்ட கால்டுவெல், ‘திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ (A Political and General History of Tinnevely)என்னும் நூலைப் படைத்தார்.
ஒப்பியல் ஆய்வு
கால்டுவெல்லின் பணிகளுள் தலையாயதாகப் போற்றப்படுவது, திராவிட மொழிக் குடும்பம் குறித்த அவரது ஆய்வுகளே. இந்தியாவில் உள்ள மொழிகள் அனைத்தும் வடமொழிக் குடும்பத்தைச் சேர்ந்ததே என்னும் கருத்து வலுப்பெற்றிருந்த காலம் அது. 1838-ல், கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பேராசிரியர் எல்லிஸ் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளுக்கு இடையேயுள்ள தொடர்பைச் சுட்டிக்காட்டி, இவை நான்கும் ஒரு தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கூறினார். சென்னையில் உள்ள எல்லிஸ் சாலை இவரது பெயராலேயே அமைந்துள்ளது.
இவரைத் தொடர்ந்து கிறித்தவ லாசர், வில்லியம் கேரி, ஸ்டீவன்சன் போன்ற பலரும் தமிழ், மலையாளம் போன்ற மொழிகள் தனிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றும், வட இந்திய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்றும் நிறுவ முயன்றனர்.
பண்டைய தமிழ்ச்சொற்களைப் பழங்கன்னடச் சொற்களோடும், பண்டைய தெலுங்குச் சொற்களோடும் ஒப்பிட்ட கால்டுவெல், நூற்றுக்கணக்கான இயற்சொற்களின் வேர்கள் இம்மூன்று மொழிகளிலும் ஒன்றுபட்டு இருப்பதைக் கண்டார். ஐரோப்பிய மொழி நூல்களில் உள்ள ஆராய்ச்சி முறைகளின் துணையோடு, தென்னிந்திய மொழிகளை ஆராய்ந்தார் கால்டுவெல். 15 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில், தென்னிந்திய மொழிகளின் இலக்கணக் கூறுகளும், சொல்லாக்க முறைகளும் அடிப்படையான ஒற்றுமை உடையதாக விளங்குவதைக் கண்டார்.
தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு ஆகிய ஆறு மொழிகளைத் திருந்திய மொழிகள் என்றும், துதம், கோதம், கூ, கோண்ட், பிராகுய் உள்ளிட்ட மொழிகளைத் திருத்தமடையாத மொழிகள் என்றும் வகைப்படுத்தினார். இம்மொழிகளைத் திராவிடம் என்னும் பெயரால் அழைத்தார். இந்திய மொழிகளில் திராவிட மொழிகள் ஒரு தனிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்றும், அவை இந்தோ – ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையவை அல்ல என்றும் பல்வேறு சான்றுகளோடு நிறுவினார். தனது ஆய்வை 1856–ல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
தனித்தியங்கும் தமிழ்
திராவிட மொழிகளுக்கே உரித்தான கூறுகளைத் தமது நூலில் விளக்கியுள்ள கால்டுவெல், பெயர்களை உயர்திணை என்றும், அஃறிணை என்றும் திராவிட இலக்கண ஆசிரியர்கள் வகுத்த முறை உலகத்தில் வேறெந்த மொழி நூலிலும் காணப்படாத சிறந்த முறை என்று போற்றியுள்ளார்.
தென்னிந்திய மொழிகளுள் மலையாளம் தமிழோடு நெருங்கிய தொடர்புடையதாக வழங்கிவந்ததாகவும், பின்னாளில் வடமொழிச் சொற்களைத் தழுவிய காரணத்தால், முற்கால மலையாளத்திலிருந்து வேறுபட்டு வழங்கலாயிற்று எனவும் குறிப்பிடும் கால்டுவெல், அவ்வாறே தெலுங்கும் கன்னடமும் வடமொழிச் சொற்களை அளவின்றி ஏற்று வழங்கத் தொடங்கியதால், இருமொழிகளும் வடமொழி உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றலை இழந்துவிட்டதாகவும் கூறுகிறார்.
தமிழ் நூல்களை இயற்றிய புலவர்கள் இயன்றவரை தமிழ்ச் சொற்களையே நூல்களில் கையாண்டதாலும், இன்றியமையாத வடமொழிச் சொற்களை ஏற்கும்போதும் அவற்றைத் தமிழுக்கேற்ற வகையில் மாற்றியமைத்து வழங்கிவந்ததாலும் இன்றளவும் தமிழ்மொழி அதன் திறம் குன்றாது வழங்கிவருகிறதெனவும், தமிழில் இன்று வழங்கும் வடமொழிச் சொற்களை அகற்றினாலும் தமிழ் தனித்து இயங்கவல்லதென்றும் தனது ஆராய்ச்சியில் நிறுவியுள்ளார்.
கால்டுவெல் ஒப்பிலக்கணம் எழுதிய காலத்தில்இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம் தவிர்த்த ஏனைய மொழிக் குடும்பங்களில் ஒப்பியல் ஆய்வு போதிய அளவு வளர்ச்சியடையவில்லை. மேலும் ஒலியியல் ஆய்வு, கால்டுவெல்லின் காலத்தில் அறிவியல் கண்ணோட்டத்துடன் மிகுந்த வளர்ச்சியைப் பெறவில்லை. இவ்வாறு ஒப்பியல் ஆய்வும் ஒலியியல் ஆய்வும் மிகவும் பின்தங்கியிருந்த காலத்தில் குறைந்த வசதிகளோடு சிறந்த ஆய்வை அவர் மேற்கொண்டு பல அரிய செய்திகளை வெளிக்கொண்டுவந்தார் என்பதுதான் அவரது பெருமுயற்சியின் தனிச்சிறப்பு.
-செ. விஜய்கிருஷ்ணராஜ்,
முதுநிலை ஆய்வாளர், கூட்டுறவுத் துறை.
தொடர்புக்கு: svijaykrishnaraj@gmail.com
ஆகஸ்ட் 28: கால்டுவெல் நினைவு தினம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக