20 ஆகஸ்ட், 2017

இந்தியாவில் எங்குமே காணப்படாத அதிசயம் தேரிக்காடு

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று, தேரிக்காடு.

தமிழகத்தின் வேறு பகுதி மட்டும் அல்ல, இந்தியாவில் எங்குமே பார்க்க முடியாத விசித்திரமான பூமி, தேரிக்காடு.

கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே செம்மணல்.

கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில், மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கும்.

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும்போது,  திசையன்விளை வழியாகச் சென்றால் தேரிக்காட்டை அடையலாம்.

தாமிரபரணி ஆற்றின் தென்கரைப் பகுதியில் கடம்பாகுளத்திற்கு தெற்கே, நாலுமாவடி, புதுக்குடி, சோனகன்விளை, நாதன்கிணறு, காயாமொழி, பரமன்குறிச்சி, நாசரேத் ஆகிய ஊர்களுக்கு இடைப்பட்ட பகுதியில் தேரிக்காடு விரிந்து, பரந்து கிடக்கிறது.

இந்த தேரிக்காட்டின் மொத்த பரப்பளவு 12 ஆயிரம் ஏக்கர் என்று கணக்கிடப்பட்டு இருக்கிறது.

கடல் மட்டத்தில் இருந்து 15 மீட்டர் உயரத்தில் இருக்கும் இந்த தேரிக்காட்டில் உள்ள மணல் மேடு சில சமயம், கடல் மட்டத்தில் இருந்து 25 மீட்டர் உயரம் வரை உயர்ந்துவிடும்.

ஒரு சமயம் உயரம் குறைவாக இருக்கும் இடம், காற்றின் போக்கு காரணமாக அடுத்த சில மணி நேரங்களில் பெரிய மணல் மேடாக மாறிவிடும்.

அப்போது அந்த மணல் குன்றுகளே மெதுவாக இடம் மாறி நகர்ந்து செல்வதுபோலத் தோன்றும்.

தென் மேற்கு பருவ மழை காலமான மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை அங்கு பலத்த காற்று வீசும்போது இதுபோன்ற மணல் குன்றுகள் இடம் விட்டு இடம் மாறும் மாயா ஜாலங்கள் அடிக்கடி அரங்கேறும்.

நிமிடத்துக்கு ஒருமுறை அங்கு காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்த தேரிக்காட்டில் திசை கண்டுபிடித்துச் செல்வது என்பது மிகவும் சிரமம்.

திரும்பிய இடம் எல்லாம் மணல் மேடாக இருப்பதால், இது விவசாயம் செய்வதற்கு ஏற்ற இடம் அல்ல.

ஆனால் மழை காலங்களில், அங்குள்ள பள்ளங்களில் தேங்கும் நீர் செயற்கை ஏரிபோல உருவாகும். அதுபோன்ற இடம் தருவை என்று அழைக்கப்படுகிறது. அந்தப் பகுதியில் தண்ணீர் இருக்கும் காலங்களில் நெல் அல்லது வேறு ஏதாவது பயிரிடுவார்கள்.
.

இதில் ஆச்சரியம் என்ன என்றால், அங்கே இருப்பது போன்ற செக்கச்செவேல் என்ற மணல் பகுதி, அந்த மாவட்டங்களின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படவில்லை என்பது தான்.

அங்கு இருப்பது ஆற்று மணல் அல்ல. இதனால் அவை தாமிரபரணி நதியால் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவை அல்ல.

அதேபோல அவை கடல் மண்ணும் அல்ல. எனவே கடல் பொங்கி வந்து இந்த மணல் மேடு ஏற்பட்டது என்று சொல்வதற்கும் வாய்ப்பு இல்லை.

அப்படியானால் இந்த அதிசய மணல் மேடு எப்படித் தோன்றியது? வேறு எங்குமே இல்லாத வகையிலான மணல் எங்கு இருந்து எப்படி வந்தது? என்பது போன்ற வினாக்கள் இன்னும் விடைதெரியாத புதிராகவே இருக்கின்றன.

ஏதோ ஒரு மிகப்பெரிய இயற்கை விளைவு நிகழ்ந்து, அதன் காரணமாக அந்தப் பகுதியில் மட்டும் தேரிக்காடு உருவாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அந்த இயற்கை நிகழ்வு என்ன என்பது மர்மமாகவே இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...