10 ஆகஸ்ட், 2017

சர்க்கரை வாங்க கடைக்குப் போக வேண்டாம்... வீட்டிலே வளரும் சீனித்துளசி!
Vikatan
மாடித்தோட்டத்தில் விதவிதமான பழங்களையும், காய்கறிகளையும் வளர்ப்பது வழக்கம்தான். கொஞ்சம் வித்தியாசமாக, தனது வீட்டில் 100 சீனித்துளசி செடிகளை வளர்த்து வருகிறார், சென்னை, முகப்பேரைச் சேர்ந்த ஜஸ்வந்த் சிங். இவர் முன்பிருந்தே சந்தன மரங்கள் வளர்ப்பது முதல் பயோகேஸ் தயாரிப்பது வரை வீட்டிலே செய்துவந்தவர். வீட்டில் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தவரை சந்தித்தோம். காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறிது நேரம் கழித்து தேநீருடன் வந்தவர், நம்மிடம் பருக கொடுத்தார். சுவை நாட்டுச் சர்க்கரையை ஒத்திருந்தது.


"ஸ்டிவியா (Stevia) என்று சொல்லப்படும் 'இனிப்புத் துளசி அல்லது சீனித்துளசி' மூலிகைப் பயிர் வகையைச் சேர்ந்தது. இத்துளசியின் தாயகம் பராகுவே நாடு. ஜப்பான், கொரியா, சீனா மற்றும் கனடாவிலும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. ஏற்றுமதி விஷயத்தின் சீனாதான் சீனித்துளசியின் கில்லி. இந்தியாவில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இப்பயிர் பரவலாக வளர்க்கப்பட்டு வருகிறது. மனிதன் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் முக்கியமானது இனிப்புதான். அதிகமாக வெள்ளைச் சர்க்கரை வாங்க ஆரம்பித்த பின்னர்தான் சர்க்கரை நோய் மனிதனுக்கு வர ஆரம்பித்தது. ஆனால், கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்படும் நாட்டுச் சர்க்கரையை விட, வெள்ளைச் சர்க்கரை மனிதனை அதிக நோய்களுக்கு ஆளாக்குகிறது. நாட்டுச் சர்க்கரை வாங்க முடியாதவர்கள் சீனித்துளசி செடிகளை வளர்க்கலாம். நான்கு பேர் அருந்த நான்கு இலைகளை சர்க்கரைக்குப் பதிலாக பயன்படுத்தலாம். இதனால் வெள்ளைச் சர்க்கரை வாங்கவும் தேவையில்லை, நோய்வாய்ப்பு ஏற்படும் அபாயத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். இந்தச் செடிகளை எளிதாக வீட்டில் வளர்க்கலாம். மற்ற செடிகளைப் போல இதற்கும் கவனிப்பு இருந்தாலே போதுமானது" என்றவர், சீனித்துளசி வளர்ப்பைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.
’’சீனித்துளசியை நாற்றுப் பண்ணைகளிலும், நர்சரிகளிலும் வாங்கி வளர்க்கலாம். மாடித்தோட்ட தொட்டியிலோ அல்லது வீட்டின் தரைதளத்தில் உள்ள இடங்களிலோ வளர்க்கலாம். காலை, மாலை என இருவேளைகளிலும் தண்ணீர் ஊற்றவேண்டும். மண் ஈரமாகும் அளவுக்கு மட்டும் தண்ணீர் ஊற்றலாம். அதிக தண்ணீர் தேவையில்லை. 40 டிகிரி வெப்பம் வரை உள்ள பகுதிகளிலும் சீனித்துளசி செடியை வளர்க்க முடியும். செடிகளில் இலைகள் சற்று திடமாக வளர ஆரம்பிக்கும். அப்போதிருந்தே பறித்துப் பயன்படுத்தலாம். தேநீர் தவிர, வீட்டில் தயாரிக்கும் தின்பண்டங்கள் வரை இச்செடியின் இலைகளைப் பயன்படுத்தலாம். செயற்கையாகச் சேர்க்கப்படும் ரசாயன இனிப்பு வகைகளுக்கும் இது மாற்றாக இருக்கும். இச்செடியின் இலைகளைப் பறித்து காயவைத்து பொடியாக்கி சேமித்தும் பயன்படுத்தலாம். இதற்கு மருத்துவர்களிடமும் நல்ல வரவேற்பு உண்டு. முதலில் இதுபற்றி மருத்துவர்களிடம் விசாரித்தப் பிறகுதான் சீனித்துளசி செடியை வளர்க்க ஆரம்பித்தேன்.


கரும்பின் சர்க்கரையை விட 20 சதவிகிதத்துக்கும் மேல், இனிப்புச் சுவை அதிகமாக உள்ளது. மேலும், இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் குறிப்பிட்ட அளவு உள்ளன. சீனித்துளசி ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை. இதனால் சர்க்கரை நோயாளிகளும் இனிப்பு துளசியின் பொடியை தேநீர், குளிர்பானங்கள் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தலாம். இதனால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. துளசி என்றாலே மகத்துவம் வாய்ந்தது என்றுதான் பொருள். ஆனால், இந்தச் செடிகளை கவனமாகப் பராமரிக்க வேண்டும். 2 அடி முதல் 3 அடி உயரம் வளரக்கூடிய இத்துளசி, இயற்கை உரம் மற்றும் மக்கிய தொழு உரத்தில் மட்டுமே வளரும். இது மிட்டாய் இலை, இனிப்பு இலை மற்றும் சர்க்கரை இலை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்டு வருகிறது" என்றார்.
"நீங்கள் சொன்னதுபோலவே தேநீர் சுவையாகத்தான் இருந்தது" என அவரிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...