20 பிப்ரவரி, 2013

லண்டன் பண்பலையில் ஒலிவந்த கவிதைகள்


கவிதை : அவலக்குரல்


அவலக்குரல்
அபயக்குரல்
அலறல் அது!

ஒருவரின் நிலை
உறுத்தல் உள்ளவரின்
கருணையால்
கரை கடந்தும் ஒலிக்கும்
அவலக்குரலாய்...!

ஒருவரின் கீழ்நிலை கண்டு
அவரை ஏவல் செய்வதும்,
ஏகமாய் கொக்கரிப்பதும்,
ஏக்கமாய் சித்தரிப்பதும்
இழிவான செயல்!

காப்பாற்றுங்கள் எனக்
கை உயர்த்தி
சரண் அடைந்தபின்
அவர் மேல் கருணை பிறப்பு
மனிதக் குணம்

பலநாள் பட்டினியை
ஏக்கம் கொண்ட ஒரு கனம் பார்வை
சாப்பிட்டுவிடும்
ஒரு நாடே
நாதியற்று கிடந்தது;
நலம் விளையும் எனக்
காத்துக் கிடந்தது!

உறவுகளை உச்சரித்தது
பிழைப்புக்காக
சதா நச்சரித்தது
எல்லாம் மென்று
தண்ணீர் குடித்தாயிற்று!
இலவு அரக்கனுக்கு
தாரை வார்தாயிற்று!

மனிதம் பிழைக்கட்டும்
என மன்றாடினால்
புத்தி மலிங்கியாய் போய்விடும்
புத்தியைத் தீட்டியவன்
கத்தியையும் தீட்டி
கக்கத்தில் வைத்திருப்பான்
என யார் கண்டது?

குரல் வளை உடைய
கூப்பாடு போட்டால்
வந்தவன்
குரல் வளை அறுப்பான்
என எவர் கண்டார்?

தனி ஒரு மனிதன்
கலக்கம் கொண்டால்
கண்டுகொள்ள
ஆள் ஏது?

ஒரு குடும்பமே
குலை பட்டினியில்
சுருண்டு கிடந்தாலும்
சொல்லுக்குக் கூட
நலம் விசாரிக்க
யார் இருக்கா இந்த உலகில்?

அவனவனுக்கு ஒரு கொள்கை
இலவு காத்த கிள்ளைபோல்
மரணத்தைச் சுமந்தே திரிகிறான்
கூப்பிட்டக் குரலுக்கு
ஏவல் செய்யும்
காலம் கனியாதா?

எடுப்பார் கைப்பிள்ளை
என்ற எண்ணம்தான்
இவைகளுக்கெல்லாம் காரணம்

யாரையும் யாரும்
கிள்ளுக்கீரையாக எண்ணலாகாது

வயிற்றுப் பசி
அடங்கியதும்
உறவுப் பசி தொடங்கும்

உறவுப் பசி அடங்கியதும்
ஊர் பசி தொடங்கனும்
அதுதான் மனிதம்

ஊர் பசி அடங்கியதும்
உலகத்தின் பசியைக்
கவனிக்கனும்
அதுதான் உத்தமம்

இவ்வுலகில் உள்ள
ஒவ்வொரு நாட்டோடும்
ஒப்பிடமுடியாது
ஒப்பிட்டு யாரும்
தப்பிவிட முடியாது!

ஒன்றுக்கொன்று
இளச்சதும் இல்ல
குறைஞ்சதும் இல்ல

வீதியில் ஒருவன்
கூப்பாடு போடுகிறான்
அவனை அறட்டவேண்டாம்
அன்பாய் சொல்லலாமே?

அவன் பைத்தியமாய்
இருந்தாலும்
அன்பு அவனையும்
அணைக்கும்

அவன் முரனடாய்
ஊதாரியாய்...
குடிகாரனாய்
எதுவாக இருந்தாலும்
அன்பு வளையும்
அத்தனைபேரையும் வளைக்கும்

சகோதர, சகோதரிகளே
சாணக்கியத்தனத்தோடு...
சௌக்கியமா எனச் சொல் இலகுவானது
எதிர்படுவர்களை சாப்பிட்டாச்சா எனக்
கேட்டுப் பாருங்கள்
அவர் சாப்பிடவில்லை என்றாலும்
சாப்பிட்டேன் என்பார்
அதுதான் உள்ளன்பு; நல்ல அன்பு

இலகுவான அந்தக் குரலுக்கே
அத்தனை மகிமை இருக்கும்போது
அடிவயிறு கிழிக்க...
உயிரே உருக...
ரத்த நானமெல்லாம் வெடிக்க...
அத்தனை தசைகளும் பிளக்க...
அவலக்குரல்
அவயமாய் ஒலிக்கும்போது
உள்வீட்டிற்குள் தாழிட்டு
தண்ணீர் அடிக்கும்
குணசாலிகளை என்ன சொல்ல?

அவர்களைக் காப்பாற்ற வேண்டாம்
அவர்களைக் கரைசேர்க்க வேண்டாம்
அவலக் குரலுக்கு
ஆதரவுக் குரல் கொடுக்கலாமே?

ஒருவர் குரல் கொடுக்க
மற்றொருவர் குரல் எடுக்க
இப்படி இரட்டிப்பாகுமே...?

குரலின் தன்மை ஓங்கி ஒலிக்கும்போது
அவலம், அபயம் இல்லாமல் போகுமே?

இப்படி ஆளே இல்லாமல்
போகாது போயிருக்குமா?

கிணற்றுக்குள் இருந்துகொண்டு
குரல் கொடுத்தால்
யார் செவிக்கு அதுபோய் சேரும்?

பூமி தாயே
உன் புதல்வர்களின்
அறிவைப் பார்த்தாயா?
உன் தெளிவு
அவர்களுக்குக் கொடு
உருப்படியான
வேலை செய்யட்டும்
இனி யாரையும்
உதவாக்கரை என
உதைக்காது இருக்கட்டும்

எவர் ஒருவருக்கும்
அவலம் வேண்டாம்
அந்த நிலை வேண்டவே வேண்டாம்
அதற்குப் பதில்
உபயம் கொடுங்கள்
உபத்தரம் கொடுக்காதீர்கள்
உதவி செய்யுங்கள்
உதவி எதிர்பார்க்காதீர்கள்

எங்கோ கடைகோடியில்
நான் எழுப்பும்
இந்த அவலக்குரலுக்கு
உலகத்தாரின்
செவியெல்லாம் நிறைந்தொழுக
எம் தமிழே நான்
என்ன தவம் செய்தேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...