5 மே, 2017

அப்பப்பா... அப்பா....

தந்தையாவது மிகவும் இலகுவானது. ஆனால்
தந்தையாகவே இருப்பது மிகவும் கடினமானது.

அப்பா...

  • ஒரு மனிதன்,பின்னாளில் தனக்குச் சொந்தமாக்கி வைத்திருக்கிற துணிச்சலும்,திடமும் அப்பா என்கிற அடிவேரிலிருந்து கிடைத்ததுதான்.
  • ஒரு குழந்தையின் நடத்தை, பழக்க வழக்கம், பண்பு எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான வழிகாட்டி தந்தையே.


  • கடவுள் மனித உயிர்களுக்கு அளித்த மிகப்பெரிய வெகுமதி தந்தை. 
  • ஒரு நல்ல தந்தை ஆயிரம் ஆசிரியர்களுக்குச் சமமாக இருப்பார். எப்போதும் மாணவர்களோடு இருந்து வழிகாட்டுகிற இந்த அகல்விளக்கின் தியாகம் அளப்பரியது.


  • தன் குழந்தையை வளர்த்து ஆளாக்க பொருளாதார ரீதியாக தந்தைமார் சுமக்கிற சிலுவைகள் கனமானது. அதற்காக அவர்கள் படுகிற பாடுகள் வலிமிகுந்தவை.


  • ஒரு நல்ல தகப்பனுக்குத் தம் குழந்தைகளின் வளர்ச்சி மீது இருக்கிற அக்கறையிலும், அங்கலாய்ப்பிலும் உள்ள தீவிரம் வேறெந்த உறவுகளிடமும் இருக்காது.
  • தம் குழந்தைகளின் எதிர்காலம் பற்றியே சதா சிந்திக்கும் அப்பாக்கள் அவர்களுக்காகவே தம் வாழ்க்கை முழுவதையும் தியாகம் செய்து விடுகின்றனர்.


  • அம்மா என்றால் அன்பு என்கின்றோம். ஆனால் வெளிக்காட்டிக் கொள்ளாத அப்பாக்களின் அன்பும் மிகுந்த ஆழமானதுதான். அவர்களின் பாசமும் ஈரமானது தான்.


  • தம் பிள்ளைகளை நல்வழிப்படுத்திக் கூட்டிச் செல்வதற்கு அவர்களுக்குக் கண்டிப்பு அவசியமாகிறது. அதனாலென்னவோ பல அப்பாக்கள் தம் பிள்ளைகள் மீது கொண்டிருக்கிற தாய்க்கு நிகரான நேசத்தை மிகவும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள்.


  • தந்தை என்கிற சூரியனின் வெளிச்சம் நன்றாகக் கிடைத்துவிட்டால் பிள்ளைத் தாவரங்கள் இயல்பாகவே செழித்து வளர்ந்து விடும். 
  • வாழ்வின் அனுபவப் பாடங்கள் அனைத்திலும் மிகச்சிறந்த ஆசானாக, ஒவ்வொரு இளைஞனுக்கும் யுவதிக்கும் அவரவர் அப்பாக்களே இருக்கிறார்கள்.

  • நாம் வாழும் சமூகத்திற்கு ஒரு நல்ல மனிதன் கிடைத்திருக்கிறான் என்றால் அவனுக்குப் பின்னால் ஒரு பொறுப்பு மிக்க தந்தையின் கடும் உழைப்பும் தியாகமும் இருந்திருக்கிறதென்றே அர்த்தம்.


  • யானையின் பலம் தும்பிக்கையிலே என்பது எவ்வளவு தூரம் உண்மையானதோ.. அதைவிட உண்மையானது ஒரு மனிதனின் பலம் நம்பிக்கையிலே என்பது. ஒவ்வொரு மனித மனசுக்குள்ளும் ஓடிக்கொண்டிருக்கும் அந்த நம்பிக்கை நதியின் நதிமூலம் அவரவர் அப்பாக்களே!


  • ஒரு குழந்தை அப்பாவின் கைப்பிடித்துக் கொண்டு எடுத்து வைக்கிற முதல் அடியே நம்பிக்கை விதையின் பதியமிடல் நிகழ்வு.


  • விழவும், எழவும், வலிகளையும் வடுக்களையும் தாங்கிக் கொண்டு நடக்கவும் ஒரு அப்பாவிடமிருந்து குழந்தை பெறுகிற பயிற்சி அவசியமானது.


  • இரு கைகள் தட்டி எழும் ஓசைபோல அம்மா அப்பா என்கிற இரு உறவுகளின் ஆரோக்கியமான இணைப்பும் பிணைப்பும் இல்லாமல் ஒரு நல்ல மனிதனை இந்தச் சமூகம் பெற முடியாது.


  • ஒரு தாய் தன் குழந்தை தன்னுடனேயே இருக்க வேண்டுமென்கிற அன்பின் உச்சத்தில் அதனை இடுப்பில் கெட்டியாகச் சுமக்கிறாள்.


  • தந்தையோ தன் குழந்தை தன்னைவிட உயர்ந்த நிலைக்குச் சென்றுவிட வேண்டுமென்ற துடிப்போடு தன் தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்.


  • ஒவ்வொரு அப்பாக்களும் பிள்ளைகளுக்காக, அவர்களுக்குக் கடைசிவரை தெரியாமலேயே இருந்துவிடுகிற எத்தனை துயரங்களைச் சந்தித்திருப்பார்கள்?


  • பிள்ளைகளின் நல்வாழ்வுக்காக எத்தனை பேரிடம் உதவி கேட்டு நடந்திருப்பார்கள்?


  • எத்தனை பேரிடம் கடன் வாங்கியிருப்பார்கள்? அதைக் கட்டிமுடிக்க எவ்வளவு போராடியிருப்பார்கள்?


  • எத்தனை இரவுகள் தூங்காது இருந்திருப்பார்கள்? எத்தனை பாரங்களை மனதில் சுமந்திருப்பார்கள்?


  • முடியுதிர்ந்த தலையில் வெய்யிலால்... வெடிப்பு விழுந்திருக்கும் பாதங்களில்... நரம்பு தெரியும் கைகளில் ... நரை விழுந்த மீசைகளில் அப்பாக்களின் உழைப்பின் வரலாறு அமைதியாய்க் குடிகொண்டிருக்கும்.

  • தன் பிள்ளைகள் தான் படும் துயரம் கண்டு வருந்திவிடக் கூடாதென்று அவர்களுக்கு முன்னால் தம் வலிகளை எப்படி மறைத்திருப்பார்கள்?


  • ஆசைப்பட்டு பிள்ளைகள் கேட்கிற பொருட்களுக்காக எத்தனை மணி நேரங்கள் கூடுதலாகத் தம் வியர்வை சிந்தியிருப்பார்?


  • மனைவி, பிள்ளைகளை ஏற்றிய குடும்ப வண்டியை இழுத்துச் செல்வதற்காக அப்பா என்கிற தியாகப் படைப்பு தம்முடலை எவ்வளவு தூரம் வருத்தியிருக்கக் கூடும்?


  • பிள்ளைகள் தூக்கத்திலிருக்கும்போது அவர்களின் தூக்கம் கலையாமல் முத்தமிட்டுக்கொண்டு, போர்த்திவிட்டு வேலைக்குப் போகிற அப்பாக்கள், பின்னர் பிள்ளைகள் தூங்கிவிட்ட பிறகு வீடு வந்து சேருகிறபோது எப்படி தாங்கிக் கொள்கிறார்கள்? எத்தனை முறை மௌனமாக அழுதிருக்கும் அவர்கள் இதயங்கள்?


  • இதற்கும் மேலாய் உழைப்புக்காகவே கடல் கடந்து சென்று கரைந்து போகும் அப்பாக்களின் அவல வாழ்க்கையை அவர்களால் எப்படி ஏற்றுக்கொள்ள முடிகிறது? வேலை இடைவெளிகளில் பிள்ளைகளின் குரல் கேட்டு உற்சாகம் ஏற்றிக்கொள்கிற அவர்களின் உழைப்பின் பின்னாலிருக்கிற உழைச்சலை எப்படிப் புரியவைப்பது?


  • படுக்கையறை கட்டிலின் தலைப்பகுதியில் தன் மனைவி பிள்ளைகளின் புகைப்படத்தை ஒட்டி வைத்துக்கொண்டு சதா வலியோடு வாழ்க்கையையும் சுமந்து செல்கிற இந்த அப்பாகளின் வாழ்க்கை எத்தனை கொடுமையானது?


  • வீரம்,துணிச்சல், விடாமுயற்சி, நம்பிக்கை,உழைப்பு இவைகள் ஒரு நல்ல அப்பாவிடமிருந்து இளைஞன் யுவதிகளுக்கு இயல்பாகவே கிடைத்து விடுகிற பெரிய வெகுமதிகள்.


  • ஒரு இளைஞனோ யுவதியோ வளர்ந்து பெரியவனான பிறகும், குழந்தைகளுக்குப் பெற்றோரான பிறகும் அவர்களின் தந்தை தன் பிள்ளைகளைச் சிறு பிள்ளைகளாகவே பார்க்கிறார். 
  • பிள்ளைகளுக்கும் அப்பாவின் ஆலோசனைகள், வழிகாட்டல்கள், அனுபவப்பாடங்கள் என எல்லாம் எப்போதும் தேவைப்படுகின்றன.


  • “எதுக்கும் பயப்படாதே”, “எல்லாம் வெல்லலாம்”, “மனசை தளரவிடாதே” “நான் இருக்கிறேன்” இவையெல்லாம் அப்பாக்கள் தம் பிள்ளைகளின் செவிகளுக்குள் கடைசிவரைக்கும் திரும்பத்திரும்பச் சொல்லுகிற நம்பிக்கை தரும் ஒற்றைக் கட்டளைகள். அவர்கள் வாய்களிலிருந்து பிள்ளைகளின் மனங்களுக்குக் கடத்தப்படுகிற இந்த வார்த்தைகளின் வீரியம் வலிமையானது.


  • தன் இயலாமையைத் தாம் உணர்கிற ஒரு காலத்திலும் தந்தைமார் இந்த உற்சாகம் நிறைக்கிற வார்த்தைகளைச் சொல்ல மறப்பதேயில்லை. அவர்களுக்கு நன்றாகவே தெரியும் தம் பிள்ளைக்குத் தமது குரலொன்றே போதுமென்பது.


அப்பாக்கள்....

         ➡ பிள்ளைகளின் சுமைதாங்கிகள்

        ➡ பிள்ளைகளின் நெம்புகோல்கள்

       ➡ பிள்ளைகளின் அச்சாணிகள்

       ➡ பிள்ளைகளின் சூரியன்கள்

      ➡ பிள்ளைகளின் திசைகாட்டிகள்

      ➡ பிள்ளைகளின் ஆசிரியர்கள்

     ➡ பிள்ளைகளின் நம்பிக்கைகள்


  • தூய்மையான  அன்பு
  • போலியற்ற அக்கறை
  • நேர்மையான வழிகாட்டல் 
  • நியாயமான  சிந்தனை
  • நேசிக்கத்தக்க உபசரிப்பு
  • மாறுதலில்லா நம்பிக்கை
  • காயங்களற்ற வார்தை
  • கம்பீரமான  அறிவுரை
  • கலங்கமில்லா சிரிப்பு
  • உண்மையான அழுகை 
என அத்தனையும் உளமகிழ்ந்து செய்து வளர்த்தவர்...





என்றென்றும்
தோழனுக்குத் தோழனாய்

தோள் கொடுப்பவர்
அப்பா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...