12 ஆகஸ்ட், 2017

அறியாமை தந்த ஆபத்து
தி இந்து 八月. 12 2017 12:38



ம் நாடு 2020-ல் அதிக இளைஞர்களைக் கொண்டுள்ள நாடாகத் திகழப்போகிறதோ இல்லையோ அதிக உடல் உபாதைகளைக் கொண்ட இளைஞர்கள் நிறைந்த நாடாக விரைவில் மாறிவிடுமோ என்ற அச்சம் அதிகரித்துவருகிறது. இதற்கு அடிப்படைக் காரணம் நம் உணவில் ஏற்பட்ட பிறழ்வு.
இந்தப் பிறழ்வு காரணமாக, பள்ளிகளில் பாலியல் கல்வி அவசியம் என வலியுறுத்தப்படுவதுபோல உணவு சார்ந்த கல்வியும் விழிப்புணர்வும் அவசியமாகிவிடும் தேவை உருவாகியுள்ளது. குழந்தைகளுக்கு மட்டுமல்ல; வளர்ந்த பெரியவர்களுக்கும் உணவு சார்ந்த விழிப்புணர்வைப் பரவலாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இன்றைக்குப் பெரும்பாலானோரின் உணவுப் பழக்கம் மிகவும் மோசமான நிலையில் இருப்பதே இதற்குக் காரணம்.
மைதா என்னும் மாயை



தற்போதய பரவலான ‘ட்ரெண்டு’ மைதா மாவில் செய்யப்பட்ட உணவு வகைகளை அதிகம் உண்பதே. நாம் தற்போது அதிகமாக உண்ணும் பல உணவுப் பொருட்கள் மைதாவால் உருவாக்கப்பட்டவை என்பதை அறியாமல் உள்ளோம். மைதாவால் உருவாக்கப்படும் உணவுப் பொருட்கள் பட்டியலைப் பரோட்டா, பீட்சா, பர்கர் என நீட்டிக்கொண்டே போகலாம். பெரும்பாலான பேக்கரி, சிற்றுண்டி உணவு வகைகள் மைதாவால் தயாரிக்கப்பட்டவையே.
சாதாரண செரிமானத் தொந்தரவில் ஆரம்பித்து நாளடைவில் நீரிழிவு நோய், இதயம் தொடர்பான பெரும் பிரச்சினைகளுக்கு மைதா காரணமாகும். பலருக்கும் மைதா எப்படி உருவாக்கப்படுகிறது என்பதும் தெரியாது. கோதுமையின் சத்து நிறைந்த மேற்பகுதி நீக்கப்பட்டு, மாவுச்சத்தை மட்டுமே கொண்ட சக்கை மட்டுமே மைதாவுக்கு மூலப்பொருள். இந்த மைதாவை மென்மைப்படுத்த ‘அல்லோக்சான்’, பளிச்சென்றிருக்க ‘பென்சொயிக் பெராக்சைடு’ எனப் பல ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பென்சாயிக் பெராக்சைடு புற்றுநோய்க் காரணியாகக் கருதப்படுகிறது.
அஜினமோட்டோ ஆபத்து



இன்றைக்குப் பரவலாகப் பயன்படுத்தப்படும் மற்றொரு ரசாயன உணவுச் சேர்மானம் அஜினமோட்டோ. மோனோசோடியம் குளுட்டமேட் என்ற வேதியியல் பெயரைக் கொண்ட அஜினமோட்டோ திரும்பத் திரும்ப உண்ணத் தூண்டும் தன்மையைக் கொண்டது. சுவையூட்டியான இது நூடுல்ஸ், ஃபிரைடு ரைஸ் போன்றவை மட்டுமின்றி மிக்சர், சாஸ், சாம்பார் எனப் பல உணவுப் பொருட்களிலும் இன்றைக்குக் கண்மூடித்தனமாகச் சேர்க்கப்படுகிறது. இது சுவையை மட்டும் கூட்டுவதில்லை, உடலுக்கு வரும் நோய்களையும் அதிகரிக்கிறது. அஜினமோட்டோ மூளை நரம்புகளைத் தேவையின்றித் தூண்டக்கூடிய தன்மையைக் கொண்டது. இது நரம்பியல் சார்ந்த பல்வேறு நோய்களுக்குக் காரணமாக அமைவதற்கான சாத்தியம் அதிகம் உண்டு. மது, புகையிலையைப் போல் உணவு அடிமைத்தனத்துக்கு இந்த அஜினமோட்டோ காரணமாக இருக்கிறது. இதுபோல உடலுக்குத் தீமை தருகிற உணவுச் சேர்மானங்கள் அயல் உணவு வகைகளில் அதிகம்.
மைதா உணவுப் பொருட்கள், அஜினமோட்டோ உள்ளிட்ட பல்வேறு ரசாயனப் பொருட்களால் புளிச்சேப்பம், நெஞ்செரிச்சல், குடல் எரிச்சல் நோய் (Irritable Bowel Syndrome), நீரிழிவு நோய் உள்ளிட்ட பல நோய்கள் அதிகரித்துவருகின்றன. நம்முடைய மரபு சார்ந்த உணவு, உணவு முறைக்கு மாறாக நவீன உணவுக் கலாச்சாரத்தை நாடிப்போனதுதான் உணவில் ஏற்பட்ட பிறழ்வுக்கு அடிப்படைக் காரணம்.
மரபுக்கு மாறுவோம்


உடலில் வரும் பெரும்பாலான நோய்களுக்கு முதல் காரணம் மலக்கட்டு, செரிமானக் கோளாறுகள்தான். இவை வராமல் காத்துக்கொள்ள ரசாயனம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது மட்டுமில்லாமல், சரியான நேரத்துக்குச் சரியான உணவை உண்ணவும் பழக வேண்டும்.

காலம் தவறிய உணவுப் பழக்கம், நெறிமுறையற்ற உணவு முறை, அயல் உணவு வகைகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடிமையானால், பல நோய்களுக்கு நாமே வழி அமைத்துக்கொள்வோம்.
ரசாயனம் சேர்க்கப்பட்ட உணவுப் பொருட்களை இவ்வளவு காலம் அறியாமையால் உண்ணப் பழகிவிட்டோம். இனிமேலாவது இவற்றைத் தவிர்க்கவும் குறைத்துக் கொள்ளவும் வேண்டும். நம் குழந்தைகளுக்கு இவற்றைத் தவிர்த்துவிட்டு, சிறு வயதிலிருந்தே மரபு உணவு வகைகளையும் விதை உள்ள பழங்களையும் கொடுத்துவர வேண்டும். இதன் மூலம் திடமான, நோய் எதிர்ப்பாற்றல் நிறைந்த இளைய சமுதாயத்தை உருவாக்க முடியும்.
கட்டுரையாளர், சித்த மருத்துவர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கேடு வெட்கக்கேடு

த மிழகத்தின் முதலமைச்சராக காமராஜர் ஒன்பதரை ஆண்டுகள் இருந்த நேரம் .காமராஜரின் தாயார் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாக தகவல் வந்தது . உடனே மது...